பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி/பிற்சேர்க்கை

விக்கிமூலம் இலிருந்து

பிற்சேர்க்கை

மூன்று சொற்பொழிவுகளிலும் எடுத்துக்காட்டின போக, இங்கே தனியாக அவற்றேடு பொருந்திய ஒருசில எடுத்துக்காட்டுகளை இணைத்துள்ளேன். இவை போன்று இன்னும் எத்தனை எத்தனையோ வகைகளில் தமிழ் உரை நடையில் பலநூல்கள் சென்றநூற்றாண்டில் வெளி வந்துள்ளன. அவற்றுள் மிகச்சிலவே நாம் இங்கே கண்டவை. ஒவ்வொரு துறையிலும் ஆயிரக்கணக்கான மேற்கோள் காட்டலாம். எனினும் எல்லை கருதிச் சொற்பொழிவில் வந்தனபோக ஒரு சிலவற்றை ஈண்டு இணைத்துள்ளேன். மேலும் வேண்டுபவர் அவ்வத்துறை நூல்களை ஆராய் வாய்ப்பு உண்டு.

1. தமிழறியு மடந்தை கதை; 2. விக்ரமாதித்த கதை; 3. தேரூர்ந்த சோழன் கதை, 4. மாட்டு வைத்தியம்; 5. வைத்திய அட்டவணை; 6. கயிலை வாசகம்; 7. மதுரைச் சங்கத்தார் சரித்திரம்;8. சிவகங்கை மறவர் சாதி விளக்கம்; 9. தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு; 10. பிரசித்த பத்திரிகை; 11. திராவிடப்பிரகாசிகை; 12. பெரிய புராண வசனம்; 13. மெய்ஞ்ஞான பானு: 14. பஞ்சபத மகா வாக்கியம்; 15. துறவற உத்தியானம்; 16. அத்வைத தூஷண பரிகாரம்; 17. திருவருட்பா—உபதேசப் பகுதி; 18. நித்திய ஒழுக்கம் என்னும் உலகியல்; 19. குறள் மூலமும் சுகாத்தியர் பொழிப்புரையும்;20 இஸ்தியார் நாமா.

1. தமிழறியு மடந்தை கதை-வசனம்: - ஏடுகள் 35 அச்சிடப் பெற்றுள்ளன. ஆண்டு (ஆங்கிரசு) 1812 ஆம் ஆண்டு ஆடி ௴ 32 ௳ தமிழறிவான் கதை எழுதி முகிழ்ந்தது முற்றும்:-சிவகாமி அம்மை துணை-இராம செயம்.

நூல் முடிவில்:—விறகு தலையனென்கிற பேருமாற்றி அவனுக்கு உறையூர்க் குமாரனென்கிற பட்டமும் கட்டிவித்து அவளுக்கு தமிழறியும் பெருமானென்கிற பேருமாத்தித் தில்லைப் பெருமானென்கிற பட்டமும் கட்டுவித்து அவளுக்கு வரிசை மானியமும் உம்பிளிக்கையும் கட்டளையிடுவித்து நக்கீரதேவரை ஆனை மத்தகத்திலே வைத்துப் பட்டணம் பிரவேசமாக வரச் சொல்லி வந்தபிறகு சோழனாலு நக்கீரதேவர்க்கும் பல்லக்குமிட்டு வெகுமானத்துடனே மதுரைக்கனுப் பினர். நக்கீர தேவரும் மதுரையில் சென்று பாண்டியுனுக்கு சங்கத்தார்க்கும் தமிழறி மடந்தையின் வர்த்தமான மெல்லாஞ்சொல்லி இருந்தாரென்ற வரலாறு.

2. விக்கிரமாதித்தன் கதை—வசனம் (ஏடுகள் முடியவில்லை) முடிவு:—மற்றப் பெண்களோடே வந்த சீதனங்களோடே தோழிப்பெண்கள் ஆனை குதிரையுள்படக் கூட்டிக்கொண்டு தன்னுடையசேனதிபதிகளும் மந்திரிமாரும் சதுரங்கசேனைகளும் தரும துரைமார்களும் புரோகிதரும் வேவுகாரரும் வரிசை ஊதியக்காரருமாகப் பட்டி சொற்படி உக்கிரமாகாளிப் பட்டணத்திலே வந்து திருவிராச்சியம் பண்ணிக்கொண்டிருந்தான். அந்த விக்கிரமாதித்தன் சிங்காசனம் நீயோ ஏறுகிறவனென்று போசராசாவோடே அந்தப் பதுமைகள் சொல்லிச் சிங்காசனமேறாதபடி விலக்கின கதை.
இராம செயம். ஆறுமுகம் துணை.

3. தேரூர்ந்த சோழன் கதை: முடிபு:—அன்பு சோதிக்க வந்தோர் ராசாவே நீரும் தேவியும் குமாரனும் மந்திரியும் கயிலாயமே வாருங்கோளென்று இந்திர விமானத்தி லேற்றிக்கொண்டு பரமேச்சுவரனும் பார்வதியாரும் கயிலாயமே எழுந்தருளினர்கள். ஆகையினலே இந்தத் திருவிளையாடலை(ப் பார்த்த) பேர் கேட்டப்பேர் இந்த ராசாவும் தேவியும் குமாரனும் ம்ந்திரியும் பெத்த பேறு பெறுவார்களென்றவாறு.

4. மாட்டு வைத்தியம்: முடிவு:— உழக்குவேப் பெண்ணை கொண்டு வந்து மூணுவிரல் அகலம் சீலை கிழித்து அந்த எண்ணையில் நனைத்து அந்த மாட்டுக் கொம்பிலே சுத்திக் கொளுத்தி விடவும். ஒருவே கண்ட கொம்பினqலே வெந்த உடனே அவிக்கப் போடவும். கொம்பில்லாத மாட்டுக்கு வேப்பெண்ணை உச்சியிலே காய்ச்சி விடவும்.

5. வைத்திய அட்டவணை

சகம்.1722 இரவுத்திரி ஸ்ரீ மார்கழி 21 சுச்கிலவாரம்.

78
------------
1800 (கி. பி)
----------

முடிவு: ராசமாணில ராசபுஸ்ரீ சரபோசி மகாராசா சாயபு அவர்கள் அக்ஞாபிச்ச பிரகாரம் கலாகிக் கணக்கு வெங்கடேசம் பிள்ளை குமாரன் சுப்பராயன் வைத்திய சாஸ்திரம் அட்டவணை எழுதி முகிந்தது முற்றும் குருவே துணை—

சக்தி குன்மம் 18-க்கும்:

ஒரு தேங்காய் கொண்டு வந்து கண் திறந்து தண்ணீர் ஊத்திப்போட்டு உழக்கு எருக்கம்பால் கறந்து தேங்காயிலடைத்துக் கண்ணுமடைத்து ஒரு அடுக்கில் ஒடு கருகச்சுட்டு அரைச்சு ஒரு பாக்களவு தின்னப் பதினெட்டுகுன்மமும் பொருமலும்நிற்கும்.

—கை கண்டது

6. கயிலை வாசகம் (காளயுக்தி தை-1) 1818:—என்னுடைய சரீரத்து மாங்கிஷத்தைப் புசித்தும் பசியாறுமையா என்று வேண்டிக் கொள்ள, இப்படிப் பசுவும் புலியும் வாதாடிக்கொண்டிருக்கிற சமயத்திலே ரிசப வாகனத்திலே கைலாச வாசனாயிருக்கப்பட்ட ஆதி பரமேசுவரன்........ பிரம விஷ்ணு முதலான பேருடன் வந்து காட்சி கொடுத்தார்.

7. மதுரைச் சங்கத்தார் சரித்திரம்

முடிவு:நான் வள்ளுவன், பரதேசி, மயிலாப்பூரில் தினம் இரண்டு பணத்துக்குக் கூலி பு(பிடை)டவை நெய்து சீவனம் பண்ணிக்கொண்டிருக்கிறவன். எனக்கு நான் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிர இரண்டு பணம் போதுமே யல்லாது இந்த இராசத் திரவிய மெல்லாம் வேண்டியதில்லை யென்று சொல்லுமிடத்தில் பாண்டியன் நிரம்பவும் வேண்டிக் கொண்டான். அப்போது அதில் கொஞ்சம் எடுத்துக்கொண்டு வெளியே வந்து, பரதேசிகள் பிராமணர்க (ணா)ளுக்குக் கொடுத்துப் போட்டு, பாண்டியனிடத்தில் சொல்லிக்கொண்டு மயிலாப்பூருக்கு வந்துவிட்டார்.

—இது சங்கத்தார் சரித்திரம்.

8. சிவகங்கை மறவர் ஜாதி விளக்கம். (ஏழுவகை)

இந்த மறவர் தாயார் கிளையிலே கலியாணம் பண்ணக் கூடாது. தகப்பன் கிளையிலே சித்தப்பன் பெரியப்பன் முதலான தாயாதக்காரருடைய பிள்ளை பெண்களைக் கலியாணம் பண்ணிக்கொள்ளுகிறது.தகப்பன் கோத்திரத்திலே கலியாணம் பண்ணக் கூடாது. இந்தச் செம்பி நாட்டு மறவரில் சேதுபதி உடையாத் தேவர் கலியாணம் பண்ணியிருக்கிற பெண் பிள்ளைகள் மட்டும் புருஷன் மிருதன் ஆனால் புருஷனோட கூட அக்கினிப் பிரவேசம்.

9. தஞ்சை மராட்டிய (மகாராஷ்டிர) மன்னர் வரலாறு.
தஞ்சை மராட்டி மன்னர் வரலாறு:— ஸ்ரீமத் போசல வமிசத்தின் ஆதிமூல புருஷர் ஶ்ரீமத் நாராயணன்............

முடிவு: காராசாவுடைய இராச்சிய பாரத்தில் ”பாஜ” என்கிற குருவி இந்தத் தேசத்துக்கும் என்றைக்கும் வராத அபறுப(அபூர்வ)மான குருவி வந்து இருந்தது.

இப்போது ‘சரபோசி மகராஜா’ சகல சனத்தையும் சகல மதஸ்தரையும் வைம்மியம் அன்றியில் சந்தோஷமாய் அந்தந்த மதத்து வேதத்தின்படியே நடப்புவித்துச் சகல சனத்துக்கும் விசனம் வாராமல் படிக்கு யுக்தமார்க்கமாய்ப் பரிபாலனம் பண்ணிக் கொண்டு எப்போதும் சிவபூஜை பண்ணிக்கொண்டு சிவபுராணங்கள் முதலான உத்தம சரித்திரங்களைக் கேட்டுக் கொண்டு யாத்திரிகளையும் பண்ணிக் கொண்டு சன்மார்க்கத்திலே இருக்கிறார்.

நூற் குறிப்பு:

ஸ்ரீமத் போசல வமிசத்தின் பூர்ண சந்திரன் இந்துபதி கிரேஷ்டராய் இருக்கப்பட்டவர். ஸ்ரீ சாம்பசிவ பிரசாத பிரபாவத்தினாலே அடையப்பட்ட பிரதாபத்ததினாலே டில்லி, சாத்தூர்ப் பாகத்துக்குச் சுவாதந்திரியர் டில்லியுடைய ராஜாவுக்கு விபஷ்சத்து யோக்கியம் சராவ பெளம ராஜாக்களுக்கெல்லாம் சோபாயமானர். மகாராஷ்டிர தேசம், சோள தேசம், அதிபதியாயிருக்கப்பட்ட புண்ணிய சுலோக ராஜாக்களுடைய சரித்திரம்:— சகல மனோபிஷ்டத்தையும் கொடுக்கப்பட்டதை மகாராஷ்டிர பிராமண சாதி (யார்) இப்போது சோழ தேசாதிபதி ஸ்ரீமத் க்ஷத்திரியபதி மகாராஜா, ராஜஸ்ரீ “சரபோஜி ராஜா சாயபு’ அவர்களுடைய கிஜசேவகன் “கிட்டின” சாலிவாகன சகம் ௲௭௱௨௰௫௵ உருதிரோத்காரி ௵ சித்திரை ௴ A, D. 1803 ௵ மார்ச்சு ௴ ௨௰௫௳

10. பிரசித்த பத்திரிகை

புதுவையிலச்சிற் பதிப்பித்து வெளிப்படுத்தின புஸ்தகங்களாவன.


புதுவையில் —மற்றவிடங்கள்
ரூ. ரூ,
ஞானாமிர்த தடாகம்
வேத விளக்கம்
சுவிசேஷம்
இலத்தீன் பிரஞ்சு தமிழ் அகராதி
ஆதும சோதனை
வால்ர் பொக்கிஷம் (தோற் கட்டடிடம்)
வாலர் கணிதம் (")

இப்படி 86 நூற்கள்
தோற் கட்டிடம் |
அரைக்கட்டிடம் | என விளக்கங்கள்
விவரம்;-இப்புஸ்தகங்களைப் புதுவையினின்று மற்ற ஊர்களுக்குக் கொண்டு போகிற செலவைப் பற்றிப் புதுவைக்கும் மற்றவிடங்களுக்கும் வெவ்வேறு விலை குறிக்கப்பட்டது.


குருபாதம்

”தருமபுரி ஆதீன நூல் நிலைய நூல்களின் சாரம்” 11. திராவிடப் பிரகாசிகை - சபாபதி நாவலர் செவிப்புலன் ஓசை, எழுத்தோசை, இசையோசை என இருபாற்படும். இகழ், இமிழ். உமிழ், கவிழ், குமிழ், சிமிழ் என ழகரப் பேறு பெற்ற பதங்கள் போலத் தமிழ் என்னும் சொல் தனிமைப் பொருள் குறித்த தமியென்னும் வினையடியாற் பிறந்து வினை முதற் பொருளுணர்த்திய விகுதி குன்றி முகரம் விரிந்து தனக்கிணையிலாப் பாடை யென்னும் பொருள் பயக்கும். இலக்கண மரபியலில் அகத்தியத்துள் இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத்தமிழ் என்னும் முத்தமிழ் இலக்கணங்கள் விரவிக் கூறப்பட்டன. இயல், இசை, நாடகத் தமிழ் முறையே சத்த நூல், கீத நூல், கூத்து நூல்களை ஒக்கும். தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் அதிகாரங்களை உடையது. ஒவ்வொரு அதிகாரமும் பல உட்பிரிவுகள் கொண்டது. இலக்கிய மரபியலில் திருமுறை யிலக்கியங்கள் சங்க ஞான்று அவதரித்தல் பற்றியும், அவை யெல்லாந் திருவருள் ஒத்துக்களாதற் பற்றியும் அவற்றின் சிறப்பு, வரலாறு முதற்கண் தந்து சொல்லுதும். தேவாரந் திருவாசகம் திருக்கோவை திருவிசைப்பாத் திருப்பல்லாண்டு திருமந்திரந் திருமுகப் பாசுரம் முதலிய நாற்பான் பிரபந்தங்களென்னும் இவை தம்மை அபயகுலசேகர சோழவரசர் பெருமான் வேண்டித் திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி பதினொரு திருமுறைகளாக வகுத்தார். ஆரிய நான்மறை உபநிடதங்களும் தமிழ் வேதம் முதலிய திருமுறைகளும் மொழியான் வேறுபடினும், பொருளான் ஒற்றுமையுடைய சுருதிகளாம். அது.

"தேவர் குறளும் திருநான்மறை முடிவு
மூவர் தமிழு முனிமொழியுங் கோவை
திருவா சகமுந் திருமூலர் சொல்லு
மொரு வாசக மென்றுணர்

என்னும் ஒளவை வாக்கால்
உணரலாம். தமிழ் வேதம் முதலிய திருமுறைகள் ‘திருச்சிற்றம்பலம்’ எழுவாயாகவும் இறுவாயாகவும் ஓதற்பாலன. ஏன்? திருச்சிற்றம்பலம் பிரணவ உறையுள். யாங்ஙனம்? இச்சரீரம் பிரமபுரம், பிரமம்-பரமான்மா. ஆன்மாவின் இச்சை, அறிவு, தொழில்களுக்கு பரமான்மா அவசியம். அம்பரம்-சித்து, இது சிதம்பரம், இதுவே தில்லைத் திருச்சிற்றம்பலம். இது பர மாதாரப் பொதுவாதலின் திருச்சிற்றப்பலம் பிரணவ உறையுளாகும்.

12. பெரிய புராண வசனம், ஆறுமுக நாவலர்: ஸ்ரீமுக. பெரிய புராணத்தில் சொல்லப்பட்ட 63 நாயன்மார்கள் திருவவதாரத்திற்கு முன்பே அவர்கள் வரலாறு பரமேதி காசமாகிய சிவ ரகசியத்திலே ஒன்பதாம் அமுசத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அவ்வாறு சொல்லியவர் சிவபெருமானே! அதனைக் கேட்டவர் அருட்சத்தியாகிய பார்வதிதேவியாரே! சாதியினும் சமயமே அதிகம். அதை மறுத்தல் சுருதி, யுத்தி, அநுபவம் மூன்றுக்கும் முழுமையும் விரோதம். உலக வழக்கில் உள்ள சாதி போலச் சைவசமயத்திலும் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து என ஐவகைச் சாதிகள் உள்ளன. சிவஞானிகள் முதற்சாதி, சிவயோகிகள் இரண்டாம் சாதி, சிவக்கிரியாவான்கள் மூன்றாம் சாதி, சிவாசரியவான்கள் நான்காம் சாதி, இந்நெறியில் வாராது, இவர்களை நிந்தித்து இந்நெறி பிறழ்ந்து நடப்போர் ஐந்தாம் சாதி, சைவசித்தாந்த நூல்களாகிய சிவஞான நூல்களை ஓதிப் பதி பசு பாசம் என்னும் திரிபதார்த்தங்களின் இலக்கணத்தையறிந்த ஒரு சைவருக்கு யாரும் சமமாகார். அறுபத்து மூன்று நாயன்மார்கள் குருவருளால் பன்னிருவரும், சிவலிங்கத்தால் முப்பதின்மரும், சிவனடியாரை வழிபட்டு பத்தொன் பதின்மரும் முத்தி பெற்றுள்ளனர்.

13. மெஞ்ஞான பானு: சபாபதி முதலியார் 1891

மெய்ப்பொருள் கூறுதலானும், இதுவோ அதுவோ பொருள் என்னும் மயக்கரு விருளை ஒழித்தலானும், இரு சிறந்த புலவர்களால் எழுதப்பட்ட ஞானபோத விளக்கம் ஞான சூடாமணியென்னும் உரைகளாகிய விளக்கினொளியும், மணியினொளியுந் தன் பேரொளியினடங்குமாறு கோடலானு மிவ்வுரை மெஞ்ஞானபானு என்னும் பெயர்வுடைத்தாயிற்று. ஞானத்தைப் பகுத்தல், பயனே இம்மை, மறுமை, எனவிரண்டையும். இம்மை, உம்மை, அம்மை என மூன்றாயும். அறம், பொருள், இன்பம், வீடு என நான்காயும், முத்தியைப் பரமுத்தி, பதமித்திஎன இரண்டாயும், சாலோக சாமீப சாரூப சாயுச்சியம் என நான்காயும் வகுப்பது போல்வது.

14. பஞ்சபத மகாவாக்கியம் தெளட சுவாமிகள் (1862)

பிரமரனந்த சுகத்தை வித்துவான்களைப் போல் துதிக்கின்றதே முத்தி. வேதாகம சாத்திரங்களனைத்தும் ஆராய்ந்து அவற்றில் சொல்லுகிற நிலைகளையெல்லாம் ஏகமாய் அவிரோதமாய் சித்தாந்தப்படுவதே முத்தி. சுருதி வாக்கியங்களில் விளங்கும் பொருளே முத்தி. வாக்கியத்தைக் கொண்டு பொருள் நிச்சயம் செய்தலே முத்தி

15. துறவற உத்தியானம்; முதற்காண்டம், மொழிபெயர்ப்பு: (1896) புதுவை.

இல்லறந் துறவறம் என்னும் இரண்டுவகை யறமுண்டென்று யாவர்க்குந் தெரியுமே. இல்லறமென்பது இல்லிடத்தி லனுசரிக்கத்தகுஞ் சுகிர்தலொழுக்கமாம். உலக சஞ்சாரத்திலும் விசேஷமாய்ச் சமுசார அந்தஸ்திலு முற்பட்டிருக்கிறவர்கள் அநுசரிக்கத்தகுங் கடமைகளும் புண்ணியங்களு மதிலே யடங்கியிருக்கும்.

துறவறமோவெனில் உலகத்தைத் துறந்து விட்டவர்கள் அநுசரிக்க வேண்டிய சுகிர்த வொழுக்காமே. குருக்களுஞ் சந்நியாசிகளுங் கன்னியாஸ்திரிகளும் நிறைவேற்ற வேண்டிய கடமைகளும் புண்ணியங்களும் அதிலே யடங்கியிருக்கும். ஏனெனில் குருக்களுக்குஞ் சந்நியாசிகளுக்கும் பல காரியங்களிலே வித்தியாசமுண்டானாலும் குருக்களும் உலோகத்தைத் துறந்து விட்டு விரத்தராயிருக்க வேண்டியதினாலும் அநுசரிக்க வேண்டிய மற்ற பற்பல புண்ணியங்களிலுைம் இவைமுதலிய பல சம்பந்தத்தினாலும் இவர்களுந் துறவறத்துக்குட்பட்டவர்கள் தானே.

ஆதலா லிப்பிரபந்தத்திற் சொல்லும் பிரதான விஷயங்களெல்லாம் விசேஷமாய்ச் சந்நியாசிகளையுங் கன்னியா ஸ்திரீகளையுங் குறித்துச் சொல்லியிருந்தாலும் பெரும்பான்மையாய்க் குருத்துவத்துக் குள்ளாரையுஞ் சாரும். அவர்களைச் சேராத சில காரியங்களைக் குறிப்போம்.

16. அத்வைத தூஷண பரிகாரம்; ஓர் இந்து (1894)

உலகு சத்து மல்ல. அசத்து மல்ல. சதசத்து மல்ல. அநிர்வசனியம் பிரமம் எல்லாமாய் விரிந்ததென்னின் பொருளாய் விரிந்ததென்பது அத்வைதிகளுடைய சித்தாந்தமன்று. கயிறு அரவாயிற்று, கானனீராயிற்று என்பதில் கயிறு முதலியன அரவு முதலியனவாதல் தோற்றமேயன்றிப் பொருளல்ல. இதுதான் அத்வைதிகளுடைய சித்தாந்தம். கானல்நீர் விஷயத்திலும் இவ்வாறே, அம்மனத்தில் ஓர் சக்தியுள்ளது- அது அவாந்தர சக்தி; அன்றிப் பின்னா சக்தி. அந்தச் சக்தி மனத்திற்கு வேறுமல்ல. மனமுமல்ல. அச்சக்தி சத்துமல்ல. அசத்து மல்ல. சதசத்துமல்ல. அனிர்வசனியமாம். கடவுள் இந்திரியத்திலுைம், மனத்திலுனும், ஜீவான்மாவிலுைம் காணப்படாதவர். இதனால் கடவுள் அபரி பூரணர்.

17. திரு அருட்பா உபதேசப் பகுதி: ஆர். பாலகிருஷ்ணபிள்ளை பதிப்பு (1932) வள்ளலார்.

இந்த உபதேசப் பகுதியில் அடங்கியுள்ளவற்றில் பெரும்பாலான, சுவாமிகள் தம்மை அடுத்த அன்பர்களுக்கு வாய்மொழியாக வடலூர் தருமச்சாலையிலும் மேட்டுக்குப்பம் சித்திவளாகத்திலும் உபதேசம் செய்தவற்றை, அவ்வன்பர்களில் ஒருசிலர் எழுதிவைத்த குறிப்புகளாகும். ஒர்ஓர் இடத்தில் அங்ஙனம் உபதேசித்த அல்லது எழுதிய தேதியும் இடமும் காணப்படுகின்றன. ஆனால் ஓரிடத்திலாவது இவற்றில் ஒன்றையோ பலவற்றையோ எழுதிய பேரன்பர்களின் பெயர்கள்முதலியன குறித்திருக்கக் காணப்படவில்லை.

18. நித்திய ஒழுக்கம் என்னும் உலகில் 1. சாதாரண கித்திய கரும விதி. அருட்பெருஞ்சோதி.

சூரியோதயத்திற்கு முன் நித்திரை நீங்கி எழுந்து விபூதி தரித்துச் சிறிதுநேரம் உட்கார்ந்து, கடவுளைத் தியானம் செய்தல் வேண்டும்.

பின்பு களிப்பாக்கு மிகுதியாகவும் வெற்றிலை சுண்ணாம்பு குறைவாகவும் போட்டுக்கொண்டு, முன் ஊறுகிற ஜலத்தை உமிழ்ந்து, பின்வரும் ஜலத்தை யெல்லாம் உட்கொள்ளல் வேண்டும், பின்பு எழுந்து உள்ளே சற்றே உலாவுதல் வேண்டும், பின் மலஜல வுபாதிகளைக் கழித்தல் வேண்டும்.

19. குறள் மூலமும் சுகாத்தியர் (Scott) இயற்றிய கறாத்துர யட்டவணயும் பொழிம்புரயும் இதிலச்சிடலாயிற்று.

printed at the Lawrence Asylum Press,
Mount Road, Madras.
By G. W. Taylor, 1899
உரயாசிரியர் கோட்பாடு

வடமொழி எழுத்தாகிய ஐ, ஒள எனப்படு மெழுத்துக்கள் தமிழில் காரணமின்றிச் சேர்த்துளவாதலாலும் அவற்றுள் (ஒள) இந்நூலுளெவ்விடத்தும் வரப் பெறாமயாலும் (ஐ)க்கு வடமொழிக் குரிய வரிவடிவமொழித் துத் தமிழ் முறய மயக்கிணங்க அகர யகர வடிவடிவாகவும் ககரவோசயய்த் தழுவி முப்புள்ளி வடிவினதாய் வழங்கிய ஆய்தவெழுத்துத் தமிழோசய்க்கு வேண்டு வதின்மயா லதற்குரித்தான ககர வடிவாகவும் வரய்த லாயின.

திருவள்ளுவநாயனாரிந் நூலிலருளிய பயனய்உலகி லுள்ளாரெல்லாம் அடைந்துய்யுமாறு பதிகங்களய் முறப்ப் படுத்தி அவற்றின் கருத்து விளங்கும்படி யிட்ட பெயர்ப் பொருளதிகார வுரயிற்றுலக்கி எதுகய் மோனய்வழுக்களைக் களப்ந்து ஒவ்வொரு திருக்குறளின் சிறந்த பொருளுயுந் தோன்றத் தந்து செந்தமிழ் ஆதிமுறைப்படி வரய்ந் தச்சிற்பதிப்பித்தனம்.

மதுரய்

இங்ஙனம்,

கி. ஆ. 1889௵

சுகாத்தியர்.

20. இஸ்தியார் நாமா:

14–8–37.


சகலமான ஜனங்களுக்கும் தெரியப்படுத்துவதுவ தென்னவென்றால்,

மஞ்சவாடி கணவாயின் பேரில்-போகுற பாட்டை யிப்போ முடிவாயிருக்குது மேலும் சேலத்திலிருந்து திருப்பத்தூருக்குப் போகு மார்க்கம் முழுதிலும் பாட்டை நன்றாய் செய்யப்பட்டிருக்கிறது.


இதனால் அறிவிக்கிறதென்னவென்றால்,பட்டணத்தில் எடுக்கப்பட்ட குப்பைகளை-ஒரு வருஷ கால வரைக்கும்-விற்பனை செய்துக் கொள்ளும்படியான தற்காஸ்து காகிதங்களை-வருகிற செப்டம்பர்௴ மாதம் ௱௨௨ வரைக்கும் (Jastice in session) கெஷ்ட்டயிசு செஷன் துரையவர்கள் வாங்கிக் கொள்வதற்குச் சித்தமாயிருக்கிறார்கள்.

1837 ஆகஸ்டு ௨௰௨

உத்திரவின் பிறகாரம்.