பனம்பாரனார் பாயிரம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

பனம்பாரனார் தொல்காப்பிய நூலுக்குப் பாயிரம் தந்துள்ள புலவர். தொல்காப்பியருக்குச் சமகாலத்தவர். தொல்காப்பியரும் பனம்பாரனாரும் ஒருசாலை மாணாக்கர் என்றும் கூறப்படுகிறது.

பனம்பாரனார் தொல்காப்பியத்துக்குத் தந்துள்ள சிறப்புப் பாயிரம்[தொகு]

வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து
வழக்கும் சொல்லும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலம் தொகுத் தோனே போக்கறு பனுவல்
நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அறங்கறை நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி
மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமை யோனே.

பனம்பாரனார் சொல்லும் செய்திகள்[தொகு]

தமிழ்கூறு நல்லுலகம்[தொகு]

வடக்கில் வேங்கடமலைக்கும், தெற்கில் குமரிமுனைக்கும் இடையில் பரந்துகிடப்பது.

தொல்காப்பியத்துக்கு முதல்[தொகு]

தமிழ் கூறு நல்லுலகத்தில் நிலவிவந்த வழக்கு மொழியும், செய்யுள் மொழியும்.

தொல்காப்பியர் ஆராய்ந்து பார்த்தது[தொகு]

  1. தமிழ் நூல்கள் பயன்படுத்திய எழுத்து
  2. பேச்சிலும் எழுதப்பட்ட நூலிலும் அமைந்திருந்த சொல்லமைதி
  3. பேச்சும் நூலும் உணர்த்திய பொருளமைதி

செந்தமிழ் இயற்கை சிவணிய நிலம்[தொகு]

செந்தமிழ் இயல்பாகப் பேசப்படும் நிலத்துக்கு அண்மையதாய்ப் பொருந்தியிருக்கும் நிலத்தில் நிலவிவந்த தமிழும் தொல்காப்பியரால் ஆராயப்பட்டது.

முந்துநூல்[தொகு]

தொல்காப்பியருக்கு முன் தோன்றி நிலவிவந்த இலக்கண, இலக்கியங்கள். இவற்றைத் தொல்காப்பியர் கண்டறிந்தார். அவற்றை முறைப்படுத்தி எண்ணிப் பார்த்தார்.

புலம்[தொகு]

மொழிப்புலம். Field of the Language. தொல்காப்பியர் மொழிப்புலம் தொகுத்துத் தந்தார்.
  • போக்கு = மனம் போன போக்கு, குற்றம்
  • பனுவல் = (பன் = பஞ்சு, பனுவல் = பஞ்சை நூலாக்கி ஆடை நெய்வது) நூல் - இது எழுத்து என்னும் பஞ்சைச் சொல் என்னும் நூலாக்கிப், பொருள் என்னும் ஆடையாக்கிக் கொள்வது. நூல் - ஆகுபெயர்.
மனம் போன போக்கில் எழுதாமல், மொழியமைதியைத் தழுவியே பனுவல் செய்தார்.

அரங்கேற்றம்[தொகு]

நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையில் (தமிழ்ச்சங்கத்தில்) அரங்கேற்றப்பட்டது.

தமிழவைத் தலைமை[தொகு]

தொல்காப்புயர் தொல்காப்பியத்தை அரங்கேற்றியபோது அவைக்குத் தலைமை தாங்கியவர் அதங்கோட்டாசான் (அதங்கோட்டு ஆசான்). இவரது நாவில் அறநெறி கரைந்த சொல் வெளிப்படும். இவர் நான்மறையை முற்றக் கற்றவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பனம்பாரனார்_பாயிரம்&oldid=1474554" இருந்து மீள்விக்கப்பட்டது