பல்லவப் பேரரசர்/போர்ச் செயல்கள்

விக்கிமூலம் இலிருந்து

4. போர்ச் செயல்கள்
சுற்றுப்புற நாடுகள்

மேலைச் சாளுக்கியர்

சிம்மவிஷ்ணு பல்லவ அரசனாக இருக்கையில், கி.பி. 610-இல் இரண்டாம் புலிகேசி என்பவன் சாளுக்கியப் பேரரசன் ஆனான். அவன் தன் பெருநாட்டிற்குத் தெற்கே இருந்த கதம்பர், கங்கர் என்போரையும் கிழக்கே இருந்த சாலங்காயனரையும் வென்றான்; கோதாவரிக்கும் கிருஷ்ணைக்கும் இடைப்பட்ட வேங்கைநாட்டை வென்று, அங்குத் தன் தம்பியான விஷ்ணுவர்த்தனனை அரசன் ஆக்கினான். இந்த விஷ்ணுவர்த்தனனை அரசன் ஆக்கினான். இந்த விஷ்ணுவர்த்தனனே கீழைச் சாளுக்கிய முதல் அரசன் ஆவன். இவன் கி.பி. 614-ல் அரசன் ஆனான். இவன் மரபினரே கீழைச் சாளுக்கியர் எனப்பட்டனர்.

கங்கர்

இவர்கள் முன் சொன்னவாறு காவிரிக்குத் தெற்கே குடகுமலை நாட்டை ஆண்டவர்கள். இவர் தலைநகரம் தழைக்காடு என்பது. இவர்களுள் சிம்மவிஷ்ணு காலத்து அரசன் துர்விநீதன் என்பவன்.

சோழர்

இக்காலத்துச் சோழன் பெரியபுராணத்துட் கூறப்படும் மங்கையர்க்கரசியார் தந்தையாவன். அவன் பாண்டிய அரசனுடன் உறவுகொண்டிருந்தான்.

பாண்டியர்

சிம்மவிஷ்ணு சோழநாட்டைக் கைப்பற்றிய அதே சமயத்தில் கடுங்கோன் என்ற பாண்டிய மன்னன் களப்பிரரை விரட்டிப் பாண்டியநாட்டைக் கைப்பற்றினான். அவனுக்குப் பின் அவன் மகனான மாறவர்மன் அவனி சூளாமணி (கி.பி. 600-625) அரசன் ஆனான். இப்பாண்டியர் தெற்கில் உரிமைபெற்று வாழ்ந்த பேரரசர் ஆவர்.

பல்லவர்-சாளுக்கியர் போர்

கீழைச்சாளுக்கிய நாட்டை ஏற்படுத்திய இரண்டாம் புலிகேசி தெற்கே இருந்த பல்லவப் பேரரசன் பலத்தை ஒடுக்க விரும்பினான்; அதனாற் பெரும்படை திரட்டிப் பல்லவ நாட்டின்மீது படையெடுத்தான், “அழுக்கற்ற வெண்சாமரங்களையும் நூற்றுக்கணக்கான கொடிகளையும் - குடைகளையும் பிடித்துக்கொண்டு புலிகேசியின் படைகள் சென்றன. அப்பொழுது கிளம்பின தூளியானது எதிர்க்க வந்த பல்லவனது ஒளியை மங்கச் செய்தது. புலிகேசியின் பெரிய படைக்கடலைக் கண்டு அஞ்சிய காஞ்சி மன்னன் காஞ்சிபுரக் கோட்டைக்குள் புகுந்து கொண்டான்.” என்று புலிகேசியின் பட்டயம் புகழ்கின்றது. பல்லவர் பட்டயங்கள் மஹேந்திரன் வெற்றி பெற்றான் என்று கூறுகின்றன. போரின் முடிவில் பல்லவர்க்கு எந்த விதமான நாட்டு இழப்பும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஆதலால், இப்போரினால் சாளுக்கியர்க்கு முயற்சி நஷ்டமும் ஆள் நஷ்டமும் பொருள் நஷ்டமும் உண்டாயின என்னலாம். எனினும், போர் எவ்வாறு நடந்து முடிந்தது என்பதைக் காண்போம்:

“துள்ளிவிழும் கயல் மீன்களைக் கண்களாகக் கொண்ட காவிரி, சாளுக்கியனுடைய யானைகளின் மதநீர் விழுந்ததால் ஒட்டம் தடைப்பட்டுக் கடலிற் கலக்க இயலாததாயிற்று. புலிகேசியும் பல்லவனாகிய - பனியைப்போக்கும் பகலவனாய்ச் சேர-சோழ-பாண்டியரைக் களிப்புறச் செய்தான்.” என்று . சாளுக்கியன் பட்டயம் கூறுகின்றது.

சாளுக்கியர் பட்டயம் கூறும் இரண்டு குறிப்புகளாலும், மஹேந்திரன், இரண்டாம் புலிகேசியை எதிர்த்துப் போரிட முடியாமல் காஞ்சிபுரக் கோட்டைக்குள் ஒளிந்துகொண்டான் என்பதும், அச்செயல் தமிழ் அரசரை மகிழ்வித்தது என்பதும் தெரிகின்றனவே தவிர, பல்லவன் தோற்றுவிட்டான் என்பதோ, நாட்டை இழந்துவிட்டான் என்பதோ தெரியவில்லை.

போர் நடந்த முறை

இரண்டாம் புலிகேசி முதலில் காஞ்சியைக் கைப்பற்ற முயன்றான்; மஹேந்திரனது கோட்டை மதில் பகைவரால் ஏற முடியாதது. மஹேந்திரன் கோட்டைக்குள் ஒளிந்து கொண்டான். அவனை வென்று கைப்பிடியாகப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் பெருமிதம் கொண்ட புலிகேசி, பல்லவ நாட்டின் தென் எல்லையான காவிரியாறுவரை சென்றான்.

அவன் மீட்டும் திரும்பிக் காஞ்சியை நோக்கி வருவதற்குள், மஹேந்திரவர்மன் பெரும்படையைத் திரட்டித் தயாராகக் காத்திருந்தான்; புலிகேசி காஞ்சிக்கு அருகில் வெற்றித்திமிருடன் அசட்டையாக வந்து கொண்டிருக்கையில் திடீரெனத் தாக்கினன். தனக்கஞ்சிக் கோட்டைக்குள் புகுந்துகொண்ட மஹேந்திரன், எதிர்பாராவிதமாக இங்ஙனம் வன்மை மிக்க படைகொண்டு தாக்குவான் என்று புலிகேசி கனவிலும் கருதவில்லை. புள்ளலூர் என்னும் இட்த்தில் நடந்தது. அது காஞ்சிக்குப் பத்துக்கல்.தொலைவில் உள்ளது. எதிர்பாராத எதிர்ப்பைக் கண்டதும் சாளுக்கியர் படை திகைத்தது. அதனால் அது வெற்றிகரமாகப் போராடக்கூடவில்லை. பல்லவர் படை வீராவேசத்துடன் போராடியது. இறுதியில் மஹேந்திரவர்மன் படை சாளுக்கியர் படையைத் துரத்திச் சென்றது. இரண்டாம் புலிகேசி உயிருடன் சாளுக்கிய நாட்டை அடைந்ததே பெரிதாயிற்று.

பல்லவர் - கங்கர் போர்

இரண்டாம் புலிகேசியின் தம்பியும் கீழைச்காளுக்கிய முதல் அரசனுமான விஷ்ணுவர்த்தனனுக்குக் கங்க அரசனான துர்விநீதன் தன் மகளை மணம் செய்து தந்தான். அந்த உறவினால் அவன் இரண்டாம் புலிகேசிக்கும் உறவினன் ஆனான். கீழைச் சாளுக்கிய அரசு சாலங்காயனரை விரட்டி ஏற்படுத்தப்பட்டது என்பது முன்னரே குறிக்கப்பட்டதன்றோ? அச்சாலங்காயனர் மஹேந்திர வர்மனுக்கும் அவனுடைய முன்னோர்க்கும் கொள்வனை கொடுப்பனையில் உறவுகொண்டோர் ஆவர். ஆதலின், தனக்கு வேண்டிய அரசமரபினரை ஒழித்து, இரண்டாம் புலிகேசி தன் ஆதிக்கத்தைப் பெருக்க ஏற்பாடு செய்ததை மஹேந்திரன் பார்த்துக்கொண்டிருக்க விரும்பவில்லை. அதனால் அவன், விஷ்ணுவர்த்தனன் இறந்தவுடன் அவன் மகன் பட்டம் பெறுவதைத் தடுத்துச் சாலங்காயன அரசன் பட்டத்துக்கு வர உதவிசெய்தான். அதனாற் சினங்கொண்ட துர்விநீதன் என்ற கங்க அரசன் மஹேந்திரனைத் தாக்கத் துணிந்தான். அதுவே தக்க சமயம் என்று இரண்டாம் புலிகேசியும் முனைந்தான்.


புலிகேசி முன் சொன்னபடி வடக்கே படையெடுத்து வருகையில், துர்விந்தன் பல்லவ நாட்டின் மேற்கே படையெடுத்தான். அந்தரி, ஆலத்தூர், பெருநகரம், புள்ளலூர் என்ற இடங்களில் போர் நடைபெற்றது என்று கங்கர் கல்வெட்டே கூறுகின்றது. அக்கல்வெட்டு மேலும், “துர்விநிதன் காடுவெட்டியை (பல்லவனைப் போரில் வென்று, தன் மகள் வயிற்றுப் பெயரனைச் சாளுக்கிய அரசு கட்டிலில் அமர்த்தினான்” என்று குறிக்கின்றது. இதனாலும் முன்சொன்ன சாளுக்கியின் நடத்திய போராட்டத்தாலும் மஹேந்திரன் முயற்சி பலிக்கவில்லை. என்பது தெரிகிறது; மஹேந்திரனைக் கங்கனும் சாளுக்கியனும் எதிர்த்தனர் என்பதும், அவன் இருவரையும் சமாளித்துத் துரத்தி அடித்தான் என்பதும் அறியக் கிடக்கின்றன.