பல்லவப் பேரரசர்/முதற்கால இடைக்காலப் பல்லவர்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

2. கி.பி. 600-க்கு முற்பட்ட பல்லவர்
(கி.பி. 300-600)

முதற்காலப் பல்லவர் (கி.பி. 300-340)

பிராக்ருத மொழிகளில் தங்கள் பட்டயங்களை வெளியிட்ட பல்லவர் முதற்காலப் பல்லவர் ஆவர். இவர்கள் பட்டயங்களைக் கொண்டு முதற்காலப் பல்லவர் பெயர்கள் கீழ்வருவன என்று கூறலாம்.

சிவஸ்கந்தவர்மன் தந்தை

|
சிவஸ்கந்தவர்மன்
|
விஜயஸ்கந்தவர்மன்
|
இளவரசன் புத்தவர்மன்
|

புத்யங்குரன்.

சிவ ஸ்கந்தவர்மன்

இவன் தன் தந்தையின் காலத்தில் இளவரசனாகக் காஞ்சியில் இருந்து, பல்லாரி ஜில்லாவில் உள்ள ‘விரிபரம்’ என்ற கிராமத்தை மறையவர் இருவர்க்குத் தானமாக விட்டான். இச்செய்தியைக் கூறுவதே ‘மயிதவோலுப் பட்டயம்’ என்ற முதல் பிராக்ருதப் பட்டயமாகும். அப்பொழுது இவன்தந்தை பல்லவ மஹாராஜன் என்பதும், இவன் இளமஹாராஜன் என்பதும், இவனது நாடு வடக்கே துங்கபத்திரையாறுவரை பரவி இருந்தது என்பதும், இவன் காஞ்சியிலிருந்து இப் பட்டயம் விடுத்ததால் இவன், புதிதாகப் பல்லவ அரசன் வென்ற தொண்டை நாட்டை இளவரசனாக இருந்து ஆண்டுவந்தான் என்பதும் இப் பட்டயத்தால் ஊகிக்கத் தக்க செய்திகள் ஆகும்.

மஹா ராஜாதிராஜன்

இவன் பட்டம் பெற்ற எட்டாம் ஆண்டில் விடப்பட்ட பட்டயம் ‘ஹிரஹதகல்லிப் பட்டயம்’ என்பது. ஹிரஹதகல்லி பல்லாரி ஜில்லாவில் உள்ள சிற்றுார் ஆகும். தானமாக விடப்பட்ட கிராமத்தோட்டம் சாதவாஹன ராஷ்டிரத்தில் உள்ளது. சாதவாஹனர்க்குச் சொந்தமாக இருந்த நாட்டில் உள்ள ஊர்த் தோட்டத்தைப் பல்லவன் தானம் கொடுத்தான் எனின், சாதவாஹன ராஷ்டிரம் பல்லவன் ஆட்சிக்கு மாறிவிட்டது என்பது தெளிவாகத் தெரிகிறதன்றோ? இதனால், சிவஸ்கந்தவர்மன் வடக்கே தனது நாட்டை விரிவாக்கியிருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது. இப்பட்டயத்தில் சிவஸ்கந்தவர்மன் தன்னைத் தர்ம-மஹா ராஜாதிராஜன் என்று குறித்திருக்கிறான். இதனால், இவன் அரசர் பலரை வென்று பல்லவநாட்டை விரிவாக்கினவன் என்பது புலனாகும். இவன் அக்நிஷ் டோமம், வாஜபேயம், அஸ்வமேதம் என்ற பெரு வேள்விகளைச்செய்தவன் என்று இப்பட்டயம் கூறுகின்றது. இவற்றுள் அக்நிஷ்டோமம் என்பது வசந்த காலத்தில் பலநாள் தொடர்ந்து செய்யப்படும் வேள்வியாகும்: வாஜபேயம் என்பது உயர்ந்த அரசநிலை, எய்தற்பொருட்டுச் செய்யப்படும் வேள்வியாகும்; அஸ்வமேதம் என்பது பேரரசன் என்பதைப் பிற அரசர் பலரும் ஒப்புக்கொண்ட மைக்கு அறிகுறியாகச் செய்யப்படும் பெரு வேள்வியாகும். சிவஸ்கந்தவர்மன் இவை மூன்றையும் வெற்றிகரமாகச் செய்து, அறநெறி பிறழாமல் நாட்டை ஆண்டு, தானும் நேரிய வாழ்க்கை வாழ்ந்தமையாற்போலும் தன்னைத் ‘தர்மமஹா ராஜாதிராஜன்’ என்று அழைத்துக் கொண்டான்!

நாட்டுப் பிரிவுகள்

சிவஸ்கந்தவர்மன் காலம் ஏறத்தாழக் கி.பி. 300-325 என்னலாம். அக்காலத்தில் வேங்கடத்திற்கு அப்பாற்பட்ட தெலுங்கு நாடு பல ராஷ்டிரங்களாக (மாகாணங்களாக)ப் பிரிக்கப்பட்டிருந்தது என்பது மேற்சொன்ன பட்டயங்களிலிருந்து தெரிகிறது. அவை முண்டராஷ்டிரம், வெங்கோ (வேங்கி) ராஷ்டிரம், சாதவாஹன ராஷ்டிரம் முதலியனவாகும். இராஷ்டிரங்கள் பல விஷயங்களாகப் (கோட்டம் அல்லது ஜில்லா) பிரிக்கப்பட்டிருந்தன. தொண்டை நாடு பல்லவர்க்கு முற்பட்ட சோழர் காலத்தில் இருந்தவாறே இருபத்துநான்கு கோட்டங்களாகப் பிரிக்கப் பட்டிருந்தன. மாகாணத் தலைவர்களும் பிற அரசியல் உத்யோகஸ்தர்களும் இருந்தார்கள்.

விஜய ஸ்கந்தவர்மன்

இவன் விஜய ஸ்கந்தவர்ம மஹாராஜன் என்று கூறப்பட்டவன். இவன் ஆட்சிக்காலத்தில் இளவரசனாக இருந்தவன் புத்தவர்மன் என்பவன். அவன் மனைவி பெயர் சாருதேவி என்பது; மகன் பெயர் புத்யங்குரன் என்பது. இச்சாருதேவி என்பவள் தெலுங்க நாட்டில் தாலூராக் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்கு நிலதானம் செய்தனள். அதனைத் தெரிவிப்பதே ‘குணப தேயப் பட்டயம்’ என்பது.

இம்மூன்று பட்டயச் செய்திகளைத் தவிர இப் பல்லவரைப் பற்றிக் கூறத்தக்க வேறு சான்றுகள் இல்லை. ஆதலால் இவர்களது அரச முறை-வரலாறு இன்ன பிறவும் முறையாகக் கூறமுடியவில்லை.

இடைக்காலப் பல்லவர்
(கி.பி. 340-600)

இக்காலப் பல்லவர் தங்கள் பட்டயங்களை வடமொழியில் வெளியிட்டனர். இவர்களுக்கும் முன் சொன்ன பல்லவர்க்கும் என்ன உறவு என்பது தெரியவில்லை. இவர்கள் வெளியிட்ட பட்டயங்களைக் கொண்டு கீழ்வரும் பெயர்களையுடையவர் இக்காலத்தவராகக் கூறலாம்.

குமார விஷ்ணு I
ஸ்கந்தவர்மன் I
விரகூர்ச்சவர்மன்
ஸ்கந்தவர்மன் II
(இவன் மக்கள் மூவர்)
சிம்மவீர்மன் I இளவரசன்
விஷ்ணுகோபன்
குமாரவிஷ்ணு II
ஸ்கந்தவர்மன் III சிம்மவர்மன் II புத்தவர்மன்
நந்திவர்மன் I விஷ்ணுகோபவர்மன் குமாரவிஷ்ணு III
சிம்மவர்மன் III
சிம்மவிஷ்ணு
(இவன் தம்பி பீமவர்மன்)

சுற்றுப்புற நாடுகள்

இக்காலப் பல்லவர் ஓயாத போர்களில் ஈடுபட்டனர். அவர்கள் யாருடன் இங்ஙனம் ஒய்வின்றிப் போரிட்டனர்? பல்லவ நாட்டைச் சுற்றியிருந்த பல நாட்டரசருடன் போர் செய்தனர். அவ்வாறு பல்லவ நாட்டைச் சுற்றியிருந்த நாடுகள் எவை?

சாலங்காயனர்: கோதாவரி, கிருஷ்ணை ஆறுகட்கு இடையில் உள்ள நாட்டின் பெயர் வேங்கை (வேங்கி) நாடு என்பது. அதனைச் சாலங்காயனர் என்ற அரச மரபினர் (கி.பி. 320-600) ஆண்டுவந்தனர்.

இக்ஷ்வாகர்: குண்டூர், கிருஷ்ணா ஜில்லாக்களை இக்ஷ்வாகர் என்பவர் ஆண்டுவந்தனர்; பிறகு அதனைப் பல்லவர் கைப்பற்றின. பின்னர் அதனை ஆனந்தர் என்ற மரபினர் கைப்பற்றி (கி.பி.500-600) ஆண்டனர்.

கதம்பர்: கிருஷ்ணை, துங்கபத்திரை ஆறுகட்கு இடைப்பட்ட நாடு கதம்ப நாடு ஆகும். அதன் தலைநகரம் வனவாசி என்பது. இம்மரபின் முதல் அரசன் மயூரசர்மன் என்ற மறையவன். அவன் பல்லவர்க்குக் கொடிய பகைவன். அவன் காஞ்சியில் இருந்த வடமொழிக் கல்லூரிக்குப் படிக்கச் சென்று, பல்லவன்பால் வெறுப்புற்று, இந்நாட்டைத் தோற்றுவித்தான்; பல்லவர்க்குப் பல தொல்லைகளை விளைவித்தான். அவன் மரபினர் பல்லவரைப் பகைவராகக் கருதியே போரிட்டு வந்தனர். இக்கதம்பர் ஆட்சி ஏறக்குறைய இரண்டரை (கி.பி.350-600) நூற்றாண்டுகள் இருந்தது என்னலாம்.

கங்கர்: இவர்கள் காவிரிக்குத் தெற்கே குடகு நாட்டையும் மைசூரின் ஒரு பகுதியையும் ஆண்டுவந்தவர். இவர்கள் பல்லவர்க்கு நண்பராகவே இருந்து வந்தனர்.

தமிழ் அரசர்

பல்லவர் தொண்டை நாட்டைக் கைப்பற்றிய பொழுது திருப்பதி, காளத்தி முதலிய மலைப்பகுதிகளில் வாழ்ந்த களப்பிரர் மரபினர் தெற்கு நோக்கிச் சென்று சோழ, பாண்டிய நாடுகளைக் கைப்பற்றி ஆளலாயினர்; அங்கு நிலையாக இருந்த சோழ, பாண்டியர் இக்களப்பிரருடன் போரிட்டனர். இவரனைவரும் சேர்ந்தும் சேராமலும் இடைக்காலப் பல்லவர்க்குத் தொல்லை கொடுத்து வந்தனர்.

பல்லவர் - தமிழர் போர்

இடைக்காலப் பல்லவ அரசர் பலர் காஞ்சியில் இருந்து பட்டயங்கள் விடுக்கவில்லை; அவர்கள் நெல்லூர், கடப்பை ஜில்லாக்களில் இருந்தே காலங்கழித்தனர். அவர்களில் இரண்டாம் ஸ்கந்தவர்மன் காஞ்சியைக் கைப்பற்றியதாகக் கூறிக்கொள்கிறான். ஆனால், அவனுக்குப்பின் காஞ்சி மீட்டும் பல்லவர் கையிலிருந்து நழுவி விட்டது. அதனைப் பின் சிம்மவிஷ்ணு என்பவன் ஏறத்தாழக் கி.பி.575-இல் மீளவும் கைப்பற்றினான். இக்குறிப்புகளை நோக்கக் காஞ்சி உள்ளிட்ட தொண்டை நாடு இந்த இடைக்காலப் பல்லவர் காலத்தில், தெற்கே இருந்த களப்பிரர்.சோழர் கைகட்கு அடிக்கடி மாறிக்கொண்டிருந்தது என்னலாம். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் புத்தவர்மன் என்பவன் கடல்போன்ற சோழர் படையுடன் போரிட்டான் என்று பல்லவர் பட்டயம் பகர்கின்றது. சிம்மவிஷ்ணு சோழர், களப்பிரர், பாண்டியர் இவர்களுடன் போர் செய்தான் என்று பல்லவர் பட்டயம் சான்று பகர்கின்றது. இவற்றால், தெற்கே தமிழரசர் பல்லவர்க்கு ஒயாத்தொல்லைகள் கொடுத்து வந்தனர் என்பதை அறியலாம்.

பல்லவர்-கதம்பர் போர்

கதம்பர் தமக்குத் தெற்கே இருந்த கங்க நாட்டைக் கைப்பற்றப் பலமுறை முயன்றனர். கங்கர், பல்லவர் துணையை நாடினர். பல்லவ அரசர் படைகளுடன் சென்று கங்கருடன் கலந்து கதம்பரை வென்றனர். இங்ஙனம் பல்லவர்க்கும் கதம்பர்க்கும் நடந்த போர்கள் பலவாகும்.

சாளுக்கியர்

ஏறத்தாழக் கி.பி. ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கதம்ப நாட்டிற்கு வடக்கே சாளுக்கியர் என்னும் மரபினர் தோன்றினர். அவருள் முதல் அரசன் விஜயாதித்தன் என்பவன். அவன் தலைநகரம் வாதாபி என்பது. விஜயாதித்தன், அவன் மகனான ஜயசிம்மன், அவன் மகனான இரணதீரன், அவன் மைந்தனான முதலாம் புலிகேசி ஆகியோர் அனைவரும் இவ்விடைக்காலப் பல்லவருடன் போரிட்டவண்ணம் இருந்தனர்.

குழப்பமான காலம்

இவ்வாறு பல்லவர் தெற்கே சோழர், களப்பிரரிடத்தும் வடக்கே ஆனந்தர், இக்ஷ்வாகரிடத்தும்: வடமேற்கில் கதம்பர், சாளுக்கியரிடத்தும் ஓயாது போரிட வேண்டியவர் ஆயினர்; அதனால், பல சமயங்களில் தொண்டைநாட்டை இழந்தனர்; பெருந்துன்பப்பட்டனர்; போர்முனைகளிலேயே தம் வாழ்நாட்களைக் கழித்தனர். இந்நிலைமையில் அவர்கள் விட்ட பட்டயங்களைக் கொண்டு அவர்களது அரசமுறை, அரசியல் முதலிய செய்திகளைக் கூறக்கூடவில்லை.
பல்லவப் பேரரசர்.pdf

குழப்பகால முடிவு

இக்குழப்பமான நிலைமை சிம்மவிஷ்ணு என்ற பல்லவ அரசன் காலமுதல் மறைந்துவிட்டது. அவன் காலம் முதல் பல்லவர் வரலாற்றில் தெளிவு ஏற்பட்டுவிட்டது. பல்லவர் ஆட்சியும் காஞ்சியில் நிலைபெற்றுவிட்டது. பல்லவர் ஒரு பெருநாட்டைக் கட்டியாளத் தொடங்கினர்.