பழங்காலத் தமிழர் வாணிகம்/பிறநாட்டு வாணிகர்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

5. பிறநாட்டு வாணிகர்

ழங்காலத்துத் தமிழர் தரை வழியாகவும் கடல்வழியாகவும் பாரதநாடு முழுவதும் சென்று வாணிகம் செய்தார்கள், உஞ்சை (உச்சயினி), கலிங்கப்பட்டினம், காசி (வாரணாசி), பாடலி (பாடலிபுரம்) முதலான இடங்களிலும் கடல் கடந்த நாடுகளாகிய காழகம் (பர்மா தேசம்) அருமணவன் (Rāmañña), தக்கோலம் (Takkolas), கிடாரம் (கடாரம்), சாவகம் (கிழக்கித்தியத் தீவுகள்) முதலான இடங்களுக்கும் சென்று வாணிகஞ் செய்ததை முன்னமே கூறினோம்.

தமிழ் வாணிகர் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இலங்கைக்குச் சென்று அங்கே அநுராதபுரத்தில் தங்கி வாணிபம் செய்திருந்தனர் என்பது, சமீப காலத்தில் அந்நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பிராமி எழுத்துக் கல் வெட்டினால் அறியப்படுகிறது என்பதையும் கூறினோம்.

தமிழக வாணிகர் அயல் நாடுகளுக்குச் சென்று வாணிகம் செய்தது போலவே அயல்நாட்டு வாணிகரும் தமிழகத்துக்கு வந்து வாணிகஞ் செய்தார்கள். அக்காலத்தில் வாணிகத்தில் உலகப் புகழ்பெற்ற காவிரிப்பூம்பட்டினத்துத் துறைமுகத்திலே அயல் நாடுகளிலிருந்து கப்பலோட்டி வந்த வேறு பாஷைகளைப் பேசின மக்கள் தங்கியிருந்ததைர் சிலப்பதிகாரம் கூறுகிறது.

'பயனற வறியா யவனர் இருக்கையும்
கலந்தரு திருவிற் புலம் பெயர் மக்கள்
கலந்தினி துறையும் இலங்கு நீர் வரைப்பும்.'

(சிலம்பு, 5:10-12)

'மொழி பெயர் தேத்தோர் ஒழியா விளக்கம்'

(சிலம்பு, 6:43)

'மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்
புலம் பெயர் மாக்கள் கலந்தினி துறையும்
முட்டாச் சிறப்பிற் பட்டினம்.'

(பட்டினப்பாலை, 216-218)

அரபு வாணிகர்

தமிழ் நாட்டுக்கு வடமேற்கிலிருந்து வந்த அராபிய வாணிகர் சேர நாட்டின் முசிறித் துறைமுகத்துக்கு வந்து வாணிகஞ் செய்தார்கள். முசிறியில் அவர்கள் வாணிகஞ் செய்த இடத்துக்குப் பந்தர் என்று பெயரிட்டிருந்தார்கள். பந்தர் என்றால் அரபு பொழியில் கடை வீதி என்பது பொருள். முசிறித் துறைமுகத்துப் பந்தரில் முத்துக்களும் விலையுயர்ந்த நகைகளும் விற்கப்பட்டன. பதிற்றுப்பத்து 6 ஆம் பத்தில் (செய்யுள் 5) நன்கல வெறுக்கைத் துஞ்சும் பந்தர் என்றும் , 7 ஆம் பத்து 7 ஆம் செய்யுளில் , பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர் என்றும், 8 ஆம் பாத்து 4 ஆம் செய்யு வில், பந்தர்ப் பயந்த பலர் புகழ் முத்தம் என்றும் பத்தர் அங்காடி கூறப்படுகிறது. அரபியர் தமிழ் நாட்டோடு வாணிகத் தொடர்பு கொண்டிருந்தபடியால் அரிசி என்னுந் தமிழ்ச் சொல் அரபு மொழியில் சென்று ஒருஜ் என்று வழங்குகிறது. அராபியர், அக்காலத்தில் தமிழ் நாடாக இருந்த சேர நாட்டிலிருந்து மூங்கிலைக் கொண்டுபோய் அரபி நாட்டில் வளர்த்தார்கள். அராபியர், தமிழ் நாட்டுப் பொருள்களை, முக்கியமாகச் சேர நாட்டு மிளகைக் கொண்டு போய்ச் செங்கடல் துறைமுகங்களிலும் எகிப்து நாட்டில் நீல நதி, கடலில் கலக்கும் இடத்திலிருந்த அலக்சாந்திரியத் துறைமுகப் பட்டினத்திலும் விற்றார்கள், அங்கிருந்த பொருள்களைக் கொண்டுவந்து தமிழ் நாட்டில் விற்றார்கள். அக்காலத்தில் அராபியர் கிழக்கிந்தியத் தீவுகளுக்குச் சென்று வாணிகம் செய்யவில்லை. தமிழர் கிழக்கித்தியத் தீவுகளுக்குப் போய் அங்கிருந்து கொண்டு வந்த பொருள்களை இங்கிருந்து அரபியர் வாங்கிக் கொண்டுபோய் வெளிநாடுகளில் விற்றார்கள் . தூரக் கிழக்கு நாடுகளில் உண்டான பொருள்களை மேற்கு நாடுகள் வாங்கிக் கொண்டு போவதற்கும் தமிழ் நாடு அக்காலத்தில் பத்திய வாணிக இடமாக அமைந்திருந்தது.

யவன வாணிகர்

கிரேக்க நாட்டாரும் உரோம் நாட்டாரும் அக்காலத்தில் யவனர் என்று சிறப்புப் பெயர் பெற்றிருந்தார்கள். உரோம் சாய்ராச்சிய காலத்தில், கி.மு., முதலாம் நூற்றாண்டில், எகிப்து தேசத்தை உரோமர் கைப்பற்றிக் கொண்டார்கள். அக்காலத்தில் எகிப்து நாட்டில் மத்திய தரைக் கடல் ஓரத்திலிருந்த அலக்சாந்திரியத் துறைமுகப்பட்டினம், ஆசியா-ஐரோப்பாக் கண்டங்களின் மத்தியத் துறைமுகப் பட்டினமாக இருந்தது. அலக்சாந்திரியத் துறைமுகப் பட் டினத்தில், உலகத்தின் பல பாகங்களிலிருந்து பலநாட்டு வாணிகர் வந்தனர். ரோமாபுரியிலிருந்து யவன வாணிகர் அங்கு வந்து தங்கி வாணிகஞ் செய்தார்கள், உரோமர் எகிப்து நாட்டைக் கைப்பற்றின பிறகு அவர்கள் அரபியரின் வாணிகத்தையும் கைப்பற்றினார்கள். அரபியர் வாணிகஞ் செய்திருந்த செங்கடல் துறைமுகப் பட்டினங்களைக் கைப்பற்றி அரபியரின் வாணிக ஆதிக்கத்தை ஒழித்தார்கள். செங்கடல் வாணிகத்தைக் கைப்பற்றின யவனர், செங்கடலைக் சுடந்து வந்து ஆப்பிரிக்கா கண்டத்தின் கிழக்குக் கரைப் பட்டினங்களிலும், பாரசீகக் குடாக் கடலிலும் கப்பலில் சென்று வாணிகஞ் செய்தார்கள். யவனர் செங்கடலுக்கு இட்ட பெயர் எரித்ரைக்கடல் (Mauris erythraei) என்பது. எரித்ரை என்னும் கிரேக்க மொழிச் சொல்லுக்குச் செங்கடல் என்பது பொருள் . பாரசீகக்குடாக் கடலில் வந்து வாணிகஞ் செய்தபோது அந்தக் குடாக்கடலுக்கும் எரித்ரைக் கடல் என்று பெயரிட்டனர். அக்காலத்தில் அவர்கள் நடுக்கடலில் கப்பல் பிரயாணஞ் செய்யாமல் கரையோரமாகவே பிரயாணஞ் செய்தார்கள். சில காலஞ்சென்ற பிறகு யவனர் பாரசீகக் கடலிலிருந்து சிந்து, கச்சு, குஜராத்தி நாடு களுக்குக் கடல் வழியே வந்து வாணிகஞ் செய்தார்கள். பிறகு இந்தியாவில் மேற்குக் கரைத் துறைமுகங்களுக்கும் சேர நாட்டு முசிறிப் பட்டினத்துக்கும் வந்தார்கள். அவர்கள் அரபிக் கடலுக்கு வந்து வாணிகஞ் செய்தபோது அரபிக் கடலுக்கும் எரித்ரைக்கடல் (செங்கடல்) என்றே பெயர் கூறினார்கள். பிறகு குமரிக்கடல், வங்காளக் குடாக்கடல் ஆகிய கடல்களுக்கு வந்து தமிழகத்தின் கிழக்குக் கரையிலும் வாணிகஞ் செய்தார்கள். அவர்கள் , குமரிக் கடலுக்கும் வங்காளக் குடாக்கடலுக்கும் எரித்ரைக்கடல் (செங்கடல்) என்றே பெயரிட்டழைத்தார்கள்.

யவனர் அக்காலத்தில் நடுக்கடலில் பிரயாணஞ் செய்யாமல் கடற்கரை ஓரமாகவே பிரயாணம் செய்தபடியால், அவர்கள் முசிறி முதலான தமிழ் நாட்டுத் துறைமுகங்களுக்கு வந்து போகப் பல மாதங்கள் சென்றன. அவர்கள் அரபிக் கடலின் ஊடே நடுக்கடலில் பருவக்காற்றின் உதவியினால் பிரயாணஞ் செய்ய அக்காலத்தில் அறியவில்லை. ஆனால், பருவக்காற்றின் உதவியினால் வெகு விரைவில் நடுக் கடலினூடே பிரயாணஞ் செய்யத் தமிழரும் அராபியரும் அறிந்திருந்தார்கள். பருவக் காற்றின் உதவியை அறியாத காரணத்தினால் யவனர் முசிறித் துறைமுகப் பட்டினத்துக்குக் கரையோரமாக வந்து போக நெடுங்காலஞ் சென்றது. கடைசியாகக் கி.பி. முதல் நூற்றாண்டில் ஹிப்பலஸ் என்னும் பெயர் கொண்ட கிரேக்க மாலுமி, பருவக்காற்றின் உதவியினால் முசிறித் துறைமுகத்துக்கு நேரே நடுக்கடல் வழியாக விரைவில் பிரயாணம் செய்யும் இரகசியத்தைக் கண்டுபிடித்தான். அதுமுதல் யவனக் கப்பல்கள் விரைவாகவும் அதிகமாகவும் சேர நாட்டு முசிறித் துறைமுகத்துக்கு வந்து சென்றன, அந்தப் பருவக் காற்றுக்கு யவனர், அதைக் கண்டுபிடித்தவன் பெயராகிய ஹிப்பலஸ் என்னும் பெயரையே சூட்டினார்கள், ஹிப்பலஸ் பருவக்காற்று கண்டுபிடிக்கப்பட்ட பிறகு யவனக் கப்பல்கள் நேராகத் தமிழ் நாட்டுத் துறைமுகப் பட்டினங்களுக்கு வந்தன. அதனால் யவனக் கப்பல் வாணிகம் பெருகிற்று. இந்தக் கடல் வாணிகம் கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி. மூன்றாம் நூற் றாண்டு வரையில் நடந்தது. கி.மு. முதல் நூற்றாண்டின் தொடக்கத்தில் உரோம் சாம்ராச்சியத்தை யரசாண்ட அகஸ்தஸ் சீஸர் அரசன், யவன-தமிழர் வாணிகத்தை விரிவுபடுத்தினான். உரோமாபுரி அரசர்களின் உருவ முத்திரை இடப்பட்ட பழைய நாணயப் புதையல்கள் தமிழ் நாட்டில் சில இடங்களில் சமீபகாலத்தில் பூமியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டன. அந்தப் பழங்காசுகள் சங்க காலத்தில் நடந்த தமிழர்-யவனர் வாணிகத் தொடர்புக்குச் சான்று பகர்கின்றனர். அக்காலத்தில் நடந்த தமிழர்-யவனர் வாணிகத் தொடர்பைப் பற்றி பிளைனி, தாலமி முதலான யவனர்கள் எழுதிய நூல்களிலிருந்து அறிகிறோம். ஒரு யவனர் , கிரேக்க மொழியில் எழுதிய செங்கடல் வாணிகம் என்று பெயருள்ள ஒரு நூல் உண்டு . (Periplus of the Erythraei) அதை எழுதியவர் பெயர் தெரியவில்லை . அந் நூலில் தமிழ் நாட்டுத் துறைமுகங்களில் யவன வாணிகர் செய்த வாணிகத்தைப் பற்றிக் கூறப்படுகிறது. உரோம் சாம்ராச்சியத்தையாண்ட அகஸ்தஸ் சக்கரவர்த்திக்கு மதுரையிலிருந்து ஒரு பாண்டியன் தூதுவரையனுப்பினான்.

வாணிகத்தின் பொருட்டு வந்த யவனர் துறைமுகங்களுக்கு அருகில் தங்கியிருந்தார்கள். ஏற்றுமதி இறக்குமதி முடிந்தவுடன் அவர்கள் திரும்பிப் போய் விட்டார்கள். யவனர் சிலர் தமிழ்நாட்டிலே தங்கித் தொழில் செய்தார்கள். அவர்கள் தச்சுத் தொழிலில் தேர்ந்தவர்கள், யவனத் தச்சர் என்று மணிமேகலை (19:108) கூறுகிறது. புதுச்சேரிக்குத் தெற்கே (அரிக்கமேடு என்னும் இடத்தில்) இருந்த யவனப் பண்டகசாலையில் யவனத் தொழிலாளிகள் சிலர் கண்ணாடி மணிகளைச் செய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள் என்று அங்கு நடந்த அகழ்வாராய்ச்சியினால் தெரிகிறது.

பாண்டி நாட்டின் தலைநகரான மதுரை அக்காலத்தில் கோட்டை மதிலுக்குள் இருந்தது. கோட்டை. வாயில்களில் யவன வீரர்கள் காவல் இருந்தனர். கோவலன் மதுரைக்குச் சென்றபோது கோட்டை வாயிலை யவன வீரர்கள் காவல் காத்திருந்தனர் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.

'கடிமதில் வாயில் காவலிற் சிறந்த
அடல்வாள் யவனர்க்கு அயிராது புக்கு'

(சிலம்பு, ஊர்காண். 66-67)

பாண்டியனுடைய பாசறையில் யவன வீரர்கள் இருந்ததை முல்லைப்பாட்டு கூறுகிறது. முழங்கால் வரையில் குறுகிய பாவாடை போன்ற ஆடை (வட்டுடை) அணிந்து உடம்பில் மெய்ப்பை (சட்டை) அணிந்து குதிரையோட்டும் பாத்திகையை (சம்மட்டியை)க் கையில் வைத்திருந்தனர். அவர்களுடைய தோற்றம் அச்சஞ்தருவதாக இருந்தது.

'மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவுடை
மெய்ப்பை புக்கு வெருவருந் தோற்றத்து
வலிபணரி யாக்கை வன்கண் யவனர்'

என்று முல்லைப் பாட்டு (அடி, 59-61) கூறுகிறது.

யவன-தமிழர் வாணிகத் தொடர்பின் காரணமாகச் சில கிரேக்க மொழிச் சொற்கள் தமிழில் கலந்துவிட்டன, மத்திகை, சுருங்கை, கலம், கன்னல் முதலாக கிரேக்க மொழிச் சொற்கள் தமிழில் கலந்து விட்டன. சங்கச் செய்யுட்களிவே இந்தச் சொற்கள் இடம் பெற்றுள்ளன.

மத்திகை என்பது குதிரை ஓட்டும் சம்மட்டி, இச்சொல் முல்லைப் பாட்டு 59 ஆம் அடியில் பயிலப்பட்டுள்ளது.

சுருங்கை என்பது கிரேக்க மொழிச் சொல், சுரங்கம் என்றும் கூறப்படும். இது தரைக்குள் அனமக்கப்படுவது. 'சுருங்கை நெடுவழி' (பரிபால். 20:104) 'சுருங்கை வீதி' (சிலம்பு. 14:65) சுருங்கை -சுரந்துறை ஒழுகுநீர் புகுகையை ஒருத்தருமறியாதபடி மறைத்துப் படுத்த வீதி என்று அரும்பதவுரையாசிரியர் கூறுகிறார்.

கலம் என்னுஞ் சொல் கிரேக்கம், தமிழ் என்னும் இரண்டு மொழிகளுக்கும் உரிய சொல், கிரேக்க மொழியில் (Kalom) கலம் என்னும் சொல்லுக்கு மரவீடு என்பது பொருள். இந்தச் சொல்லை யவனர் கப்பல்களுக்கும் பெயராக வழங்கினார்கள். யவனர் வாணிகத்தின் பொருட்டுத் தமிழ்நாட்டுக்கு வந்தபோது இச்சொல்லைத் தமிழர் அறிந்தனர். அறிந்து செய்யுட்களிலும் பயன்படுத்தினார்கள். "யவனர் தந்த வினைமான் நன்கலம் " (அகம், 149), "யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல்" (புறம் , 56). தமிழிலும் கலம் என்னுஞ் சொல் உண்டு. இத்தமிழ்ச் சொல்லுக்குப் பானை, சட்டி என்பது பொருள், ஒரே ஓசையுள்ளதாக இந்தச் சொல் இருந்தபடியால் தமிழர் அடைமொழி கொடுத்து இச்சொல்லை வெவ்வேறு பொருளில் பயன்படுத்தினார்கள். கிரேக்கச் சொல்லை மரக்கலம் என்றும் தமிழ்ச் சொல்லை மட்கலம் என்றும் கூறினார்கள்.

கன்னல் என்னுஞ் சொல்லும், கிரேக்க மொழியிலிருந்து தமிழில் கொள்ளப்பட்ட சொல். காலத்தையளக்குங் கருவிக்குக் கன்னல் என்று பெயர். மேலுங் கீழுமாக இரண்டு பாத்திரங்களை ஒன்றாக அமைத்து அதன் நடுவில் இருந்த சிறுதுளை வழியாக மேல் பாத்திரத்திலிருந்து நீர் கீழ்ப் பாத்திரத்தில் சொட்டுச் சொட்டாக விழும்படியமைப்பார்கள். விழுந்த நீரின் அளவைக் கொண்டு காலத்தையறிந்தார்கள். கன்னல் என்னும் இந்தக் கருவி யவன நாட்டிலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்தது.

'பொழுதளந்து அறியும் பொய்யா மாக்கள்
குறுநீர்க் கன்னல் இனைத்தென் நிசைப்ப'

(முல்லைப்பாட்டு , 55-58)

தமிழ் இலக்கியங்களில் பயிலப்படுகிற ஓரை என்னுஞ் சொல் கிரேக்க மொழிச்சொல் என்று சிலர் கூறுவர். அவர் கூற்று தவறு. தொல்காப்பியத்திலும் சங்கச் செய்யுட்களிலும் ஓரை என்னும் சொல் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இது தமிழ்ச் சொல். கிரேக்க மெரிச் சொல் அன்று. கிரேக்க மொழியில் வானநூல் சம்பந்தமான ஹோரா என்னும் சொல் உண்டு. அது தமிழில் 'ஓரை' என்று வழங்கியதாகச் சிலர் கருதுகின்றனர். முகுர்த்தம் என்னும் பொருளில் ஓரை என்னும் சொல் தமிழில் வழங்கவில்லை. தமிழில் வழங்கும் (ஓரை மகளிர்) ஓரை என்னும் சொல் கிரேக்க மொழிச் சொல் அன்று, தமிழ் இலக்கியங்களில் பயிலப்படுகிற ஓரை என்னுஞ் சொல் கிரேக்க ஹோரா என்பதன் திரிபு என்று கருதுவது உண்மையறியாதார் கூற்று. இது பற்றி விரிவாக அறிய விரும்புவோர், இந்நூலாசிரியர் எழுதிய "சங்க காலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள்" என்னும் நூலில் 20-34 ஆம் பக்கங்களில் காண்க.

அரிசி என்னும் தமிழ்ச் சொல் கிரேக்க, இலத்தீன் மொழிகளில் ஒரிஜா (Oryza) என்று வழங்கப்படுகிறது. இச்சொல்லை யவனர் தமிழிலிருந்து எடுத்துக் கொண்டனர். யவன வாணிகர், தமிழ்நாட்டு ஊர்களான சோபட்டினத்தைச் சோ பாட்மா என்றும் காவிரியைக் கபிரிஸ் என்றும் முசிறியை முசிரிஸ் என்றும் கருவூரைக் கரோரா என்றும் மதுரையை மதோரா என்றும் ஆய்நாட்டை ஆமோய் என்றும் கூறினார்கள்.

அந்தக் காலத்தில் எல்லா நாடுகளிலும் என்ணெய் விளக்கு உபயோகிக்கப்பட்டது. மண்ணால் செய்த அகல் விளக்கையும் இரும்பினால் செய்த விளக்கையும் (இரும்பு செய் விளக்கு, நெடுநல்வாடை, 42) தமிழர் உபயோகித்தார்கள். யவன நாட்டிலிருந்து வந்த அன்னப் பறவையின் உருவமாக அமைக்கப்பட்ட 'ஓதிம' விளக்கையும், பெண் வடிவமாக அமைத்த 'பாவை' விளக்கையும் தமிழர் உபயோகித்தார்கள். இவ்விளக்கைச் செல்வர் வாங்கி உபயோகித்தார்கள்.

'யவனர் இயற்றிய வினைமாண் பாவை
கையேத் தையகல் நிறைய நெய் சொரிந்து
பரூஉத்திரி கொளீஇய குரூஉத்தலை நிமிர் எரி'

என்றும் (நெடுநல் வாடை, 101:103), "பாவை விளக்கின் பரூஉச்சுடர் அவிழ" என்றும் (முல்லைப்பாட்டு, 85) பாவை விளக்கு கூறப்படுகிறது. சிலப்பதிகாரமும் (5:154) மணி மேகலையும் (1:45) பாவை விளக்கைக் கூறுகின்றன. "யவனர் ஓதிய விளக்கை"ப் பெரும்பாணாற்றுப் படை கூறுகிறது (வரி 316-317). யவன வாணிகர் பொற்காசுகளையும் வெள்ளிக்காசுகளையும் கொடுத்துத் தமிழ் நாட்டுப் பண்டங்களை வாங்கிக் கொண்டு போனார்கள். யவனக் காசுகள் தமிழ் நாட்டிலே பல இடங்களில் கிடைக்கின்றன. அந்தப் பழங்காசுகள் தற்செயலாகப் பூமியிலிருந்து அண்மைக் காலத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்டன.

பழைய தமிழ் நாடான சேர நாட்டிலே திருவனந்தபுரத்துக்கு வடக்கே 150 மைல் தூரத்தில் உள்ள பூஞ்சாரிலும் திருச்சூருக்கு வடமேற்கே 22 மைல் தூரத்திலுள்ள எய்யலிலும் 1945 -ஆம் ஆண்டில் உரோம தேசத்துப் பழம் காசுகள் கிடைத்தன. கொங்கு நாட்டில் கரூர், காட்டன்கன்னி, குளத்துப்பாளையம், பென்னார், பொள்ளாச்சி, வெள்ளலூர் முதலான இடங்களிலும் பாண்டி நாட்டில் மதுரை, கலியம்புத்தூர், கரிவலம் வந்த நல்லூரிலும், புதுக்கோட்டையைச் சேர்ந்த கருக்காக் குறிச்சியிலும் , தஞ்சாவூர், மகாபலிபுரம் முதலான ஊர்களிலும் யவன நாணயங்கள் (உ.ரோமாபுரிப் பழங்காசுகள்) கிடைத்துள்ளன. இக்காசுகள். அக்காலத்தில் நடந்த தமிழ் யவன வாணிகத்துக்குச் சான்றாக இருக்கின்றன.

சாவகம்

தமிழகத்துக்குக் கிழக்கே நெடுந்தூரத்தில் ஆயிரம் மைலுக்கப்பால் கிழக்கிந்தியத் தீவுகள் உள்ளன. அந்தத் தீவுக் கூட்டத்தில் மிகப் பெரியவையும் சிறியவையும் மிக நுண்மையுமான தீவுகள் ஆயிரத்துக்கு மேற்பட்டவையுள்ளன. சங்க காலத் தமிழர் அக்காலத்தில் அந்தத் தீவுகளுக்குக் கடல் கடந்துபோய் வாணிகஞ் செய்தார்கள், அவர்கள் அந்தத் தீவுகளுக்குச் சாவக நாடு என்று பெயரிட்டிருந்தார்கள், மணிமேகலை காவியம் சாவக நாட்டைக் கூறுகிறது. அந்தத் தீவுகளிலே சில தீவுகளில் மட்டும் நாகரிகம் அடைந்த மக்கள் அக்காலத்தில் இருந்தனர். பெரும்பான்மையான தீவுகளில் இருந்தவர் அக்காலத்தில் நாகரிகம் பெறாதவர்களாக இருந்தார்கள், நாகரிகம் பெற்றிருந்த தீவுகளில் முக்கியமானது சாவகத் தீவு. இந்தத் தீவின் பெயரைத்தான் அக்காலத் தமிழர் அங்கிருந்த எல்லாத் தீவுகளுக்கும் பொதுப் பெயராகக் கூறினார்கள். சாவகத் தீவில்தான் தமிழர் முக்கியமாக வாணிகம் செய்தார்கள். சாவகத் தீவையரசாண்ட அரசர்கள் வாணிகத்துக்கு ஆதரவு கொடுத்தார்கள்.

இதைச் சூழ்ந்திருந்த மற்றத் தீவுகளில் உற்பத்தியான பொருள்கள் எல்லாம் சாவகத் தீவுக்குக் கொண்டு வரப்பட்டு விற்கப்பட்டன. தமிழ் நாட்டிலிருந்து சென்ற தமிழ வாணிகரும் வட இந்தியாவிலிருந்து சென்ற இந்திய வாணிகரும் சீன நாட்டிலிருந்து சென்ற சீன வாணிகரும் சாவகத் தீவுடன் வாணிகஞ் செய்தார்கள், அக்காலத்தில் சாவகம் சீன நாட்டுக்கும் இந்திய தேசத்துக்கும் இடையே மத்திய வாணிக நிலையமாக இருந்தது.

இந்தத் தீவுகளில் எரிமலைகள் அவ்வப்போது நெருப்பையும் சாம்பலையும் கக்கின. இந்தச் சாம்பல் அந்தப் பூமிக்கு வளத்தையும் செழிப்பையும் தந்தது. அக்காலத்தில் மற்ற நாடுகளில் கிடைக்காத பொருள்கள் (இலவங்கம், சாதிக்காய், குங்குமப்பூ, பளித வகை (கர்ப்பூர வகை) முதலான வாசப் பொருள்கள்) அங்கு உண்டாயின.

சாவா தீவின் வடக்கே அதையடுத்து 'மதுரா' என்னும் சிறு தீவு இருக்கிறது. பாண்டி நாட்டு மதுரையிலிருந்து போய்க் குடியேறின அக்காலத்துத் தமிழர் தங்கி இருந்த இடமாகையால் இதற்கு இப்பெயர் உண்டாயிற்று. சாவா தீவில் மலைகளிலிருந்து தோன்றி வடக்கே ஓடி கடலில் விழுகிற ஆறுகளில் ஒன்றின் பெயர் ஸோலோ என்பது. ஸோலோ ஆறு மதுரா தீவுக்கு அருகில் கடலில் விழுகிறது. இந்த ஆற்றின் கரையில் சில ஆண்டுகளுக்கு முன், மிகப் பழைய மனிதனுடைய எலும்புக்கூடு அகழ்ந்தெடுக்கப்பட்டது. அது 15,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் எலும்பு என்று கூறுகிறார்கள், இந்த எலும்புக்கூடு எடுக்கப்பட்ட இடத்துக்கு அருகிலேயே இன்னொரு எலும்புக் கூடு கண்டுபிடிக்கப்பட்டது. அது முன்னைய எலும்புக் கூட்டைவிட மிகப் பழமையானது என்று கூறப்படுகிறது. அந்த எலும்புக் கூட்டுக்கு 'ஜாவா மனிதன்' என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

தமிழர் சாவகம் என்று பெயரிட்ட இந்தத் தீவை வட நாட்டார் யவ தீவம் சான்று பெயரிட்டிருந்தார்கள். அக் காலத்துச் சீனர் இந்தத் தீவை 'யெ தீயவோ' என்று பெயரிட்டழைத்தார்கள், 'யவ தீபம்' என்பதைத் தான் சீனர் 'யெ தீயவோ' என்று கூறினார்கள். சீன நாட்டார் யவ தீவுடன் (சாவா தீவுடன்) இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, கிருஸ்து சகாப்தத்தின் தொடக்கத்திலேயே வாணிகத் தொடர்பு கொண்டிருந்தார்கள்.

சங்க காலத்துத் தமிழர் அக்காலத்திலேயே சாவகத் தீவுடன் நெருங்கிய வாணிகத் தொடர்பு கொண்டிருந்தார்கள். சாவகத் தீவை அவர்கள் ஆபுத்திர நாடு என்றும் கூறினார்கள் என்பதை மணிமேகலைக் காவியத்திலிருந்து அறிகிறோம். ஜாவா தீவின் தலைநகரம் நாகபுரம் என்றும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் சாரகத்தை யரசாண்ட அரசன் பூமிசந்திரனுடைய மகனான புண்ணியராசன் என்றும் இந்த அரசர் பரம்பரை இந்திய அரசர் பரம்பரை என்றும் மணிமேகலை கூறுகிறது.

'நாக புரமிது நன்னகர் ஆள்வோன்
பூமிசந்திரன் மகன் பண்ணிய ராசன்'

(மணி, 24: 179-180)

நாகபுரத்து அரண்மனையைச் சார்ந்த சோலையில் தருமசாரணர் என்னும் பௌத்த சமயத் துறவி இருந்தார். (மணி, 25:2) காவிரிப்பூம் பட்டினத்திலிருந்த மணிமேகலை (கோவலன் - மாதவியின் மகள் ) பௌத்த மதத்தைச் சார்ந்து பிக்குணியான பிறகு, அப்பட்டினத்திலிருந்து சாவகத் தீவின் தலைநகரமான நாகபுரத்துக்குப் போய் அங்கிருந்த தருமசாரணரை வணங்கி அங்குச் சிலநாள் தங்கியிருந்தாள். அவள் புண்ணியராசனைக் கண்டு பிறகு திரும்பி வந்தாள் என்று மணிமேகலை காவியம் கூறுகிறது. மாதவி மகன் மணிமேகலைச் சாவகத்துக்குப் போனதும் அங்கிருந்து திரும்பி வந்ததும் ஆகாயத்தின் வழியாக என்று மணிமேகலைக் காவியம் கூறுகிறது, (மணிமேகலை 25 ஆம் காதை) மணிமேகலை சாவகத்துக்குப் போனது கடல்வழி யாகக் கப்பலிலேதான். ஆனால் அவள் ஆகாய வழியாகப் பறந்து சென்றாள் என்று காவியங் கூறுகின்றது. ஏன் அப்படிக் கூறுகின்றது என்பதை விளக்கி இந்நூலாசிரியர் எழுதியுள்ள 'மணிமேகலையின் விண் வழிச் செலவு' என்னும் கட்டுரையில் காண்க).[1]

கி.பி. இரண்டாம் நாற்றாண்டில் சாவகத்தீவை யர சாண்ட புண்ணியராசன், அக்காலத்தில் சோழ நாட்டுக் காவிரிப்பூம் பட்டினத்தையும் அதனைச் சூழ்ந்த நெய்தலங்கானலையும் அரசாண்ட நெடுமுடிக்கிள்ளியிடம் (இவனுக்கு கிள்ளிவளவன் என்றும் வடிவேற்கிள்ளி என்றும் பெயர் உண்டு) தூது அனுப்பினான். அந்தத் தூது வாணிகத் தொடர்பான தூதாக இருக்கக் கூடும். சாவகத்திலிருந்து பூம்புகாருக்குக் கப்பலில் வந்த தூதர் சோழனைக் கண்டனர். பிறகு அந்நகரத்தில் பௌத்த விகாரையின் தலைவராக இருந்த அறவண அடிகளையும் கண்டு, திரும்பிச் சென்றார்கள். இதனை மணிமேகலைக் காவியமே கூறுகிறது.

'கிள்ளி வளவனோடு செழுதகை வேண்டிக்
கள்ளவிழ் தாரோய்! கலத்தொடும் போகிக்
காவிரிப் படப்பை நன்னகர் புக்கேன்
மாதவன் அறவணன் இவள் பிறப் புணர்ந்தாங்கு
ஓதினன் என்றியா னன்றே யுரைத்தேன்'

( மணி, 25: 14-19)

இவ்வாறு சோழ அரசனுக்கும், சாவக அரசனுக்கும் நல்லுறவும் நட்பும் இருந்தபடியால் இரு நாடுகளுக்கும் வாணிகம் செவ்வையாக நடந்து வந்தது.

குறிப்பு: பிற்காலத்தில், இரு நாடுகளுக்கும் நிகழ்ந்த அரசியல் போர்களைப் பற்றி இங்குக் கூறவில்லை. இங்கு இப்போது நாம் எழுதுவது சங்க காலத்து வாணிகத்தைப் பற்றி மட்டுமே.

சோழ நாட்டிலிருந்தும் பாண்டி நாட்டிலிருந்தும் அக்காலத் தமிழ் வாணிகர் சாவக நாட்டுக்குச் சென்று வாணிகஞ் செய்தது போலவே , சாவகத் தீவிலிருந்த சாவக வாணிகரும் தமிழ் நாட்டுக்கு வந்து வாணிகம் செய்தனர் என்பதில் ஐயமில்லை. பல நாட்டுக் கப்பல் வாணிகர், அக்காலத்தில் உலகப் புகழ் பெற்றிருந்த காவிரிப்பூம் பட்டினத்திலே வந்து தங்கியிருந்ததைத் தமிழ் நூல்கள் கூறுகின்றன. (பட்டினப்பாலை, 21-218, சிலப்பதிகாரம், இந்திரவிழா, 9-12, கடலாடுகாதை, 130-131) அங்கு வந்திருந்த அயல் நாட்டு வாணிகரில் சாவகத் தீவிலிருந்து வந்தவர்களும் இருந்தனர் என்று கருதலாம்.

அக்காலத்தில் சாவகத் தீவின் வாணிகர் கப்பல்களிலும் குறும் படகுகளிலும் பல கடல்களைக் கடந்து சென்றார்கள், பசிபிக் மகாசமுத்திரத்தில் வாழ்ந்த அவர்கள் வங்காளக் குடாக்கடலைக் கடந்து தமிழ்நாட்டுத் துறை முகங்களுக்கு வந்தனர். பிறகு குமரிக்கடலைக் கடந்து ஆப்பிரிக்கா கண்டத்தின் கிழக்கே கடல் நடுவிலிருந்த மடகாஸ்கர் தீவுக்கும் சென்றார்கள்', மடகாஸ்கர் தீவு அக்காலத்தில் மனிதர் இல்லாத வெறுந்தீவாக இருந்தது. அந்தத் தீவில் சாவகத்து வாணிகக் கப்பலில் வந்து தங்கித் தங்கள் நாட்டுப் பொருள்களை விற்றார்கள். அத்தீவுக்கு மேற்கிலிருந்து ஆப்பிரிக்க மக்களும், வடக்கே இருந்து அரபியர்களும் வந்து அவர்களுடைய பொருள்களை வாங்கிக் கொண்டு போனார்கள். இவ்வாறு மடகாஸ்கர் தீவை மையமாகக் கொண்டு சாவக வாணிகர் வாணிகஞ் செய்தார்கள். அவர்களில் பலர் அந்தத் தீவிலேயே நிலையாகத் தங்கி விட்டனர். பிற்காலத்தில் ஆப்பிரிக்கா கண்டத்தின் கிழக்குக் கரையிலிருந்து ஆப்பிரிக்க மக்களும் மடகாஸ்கர் தீவுக்கு வந்து அத்தீவின் வடக்கில் குடியேறினார்கள். அவர்கள் சாவகர் பேசின மடகாசி மொழியையே பேசக் கற்றுக் கொண்டு அந்த மொழியையே பேசினார்கள், இப்போதும் மடகாஸ்கர் தீவில் பேசப்படுகிற மொழி மலகாசி மொழியே. மடகாஸ்கர் நீவு இப்போது மலகாசிக் குடியரசு நாடு என்று பெயர் பெற்றிருக்கின்றது.

சங்க காலத்திலே தமிழ் நாட்டோடு வாணிகஞ் செய்த வேற்று நாட்டார் அராபியர், யவனர், சாவகர் என்று தெரிகின்றனர். அக்காலத்தில் சீன வாணிகர் தமிழகத்துக்கு (இந்தியாவுக்கு) வந்து வாணிகஞ் செய்யவில்லை. வட இந்தியாவில் கங்கை நதிப் பிரதேசத்திலிருந்தும் கலிங்க நாட்டிலிருந்தும் கப்பல் வாணிகர் தமிழகத்துக்கு வந்து வணிகஞ் செய்தார்கள்.

  1. பக்கம் 176-192 கட்டுரைப் பொரில் மணிவிழா மலர், கரந்தைத் தமிழ்ச் சங்கம், 1973.