உள்ளடக்கத்துக்குச் செல்

பழைய கணக்கு/எழுத்துச் சண்டை

விக்கிமூலம் இலிருந்து



எழுத்துச் சண்டை ஏற்படுத்திய பரபரப்பு

கல்கியின் எழுத்தில் நான் மனதைப் பறிகொடுத்தவன், அதன் பயனாக அவரை என் மானசீக குருவாகக் கொண்டவன். அவருடைய எழுத்தும், எதையும் நகைச்சுவையோடு சொல்லுகின்ற பாணியும், சரளமான நடையும் என்னைக் கவர்ந்ததன் பயனாக, அந்தப் பாதிப்பு என் எழுத்துக்களில் பிரதிபலித்தது. போகப்போக கல்கியின் நடையைப் போலவே என் எழுத்தும் அமைந்து விட்டது. அது அத்தனை ஆரோக்கியமானதல்ல என்பதை நான் அறிந்திருந்த போதிலும், ஒரு மாபெரும் எழுத்தாளரைப் போலவே நமக்கும் எழுத வருகிறதே என்கிற பெருமையில் மூழ்கிப் போயிருந்தேன்.

அவருடைய ‘வீணை பவானி’ புத்தகத்துக்கு நான் பதிப்பாளர். சின்ன அண்ணாமலைக்கு எழுதித் தந்த முன்னுரை ஒன்றைப் படித்துப் பார்த்த கல்கி அவர்கள் என்ன அழைத்து, “பேஷ் ரொம்ப நன்றாக எழுதியிருக்கிறாய். இதைப் படித்த போது ‘நான் இதை எப்போது எங்கே எழுதினேன்?’ என்று எனக்கே சந்தேகம் வந்து விட்டது” என்றார்.

‘விஷயமறிந்த வட்டாரத்துக்கு’ என்ற தலைப்பில் நான் ஒரு சமயம் எழுதிய நகைச்சுவைக் கட்டுரையைப் படித்த ராஜாஜி அவர்கள் என்னிடம், “நீங்க கிருஷ்ணமூர்த்தி (கல்கி) மாதிரியே எழுதரீங்க” என்று பாராட்டினார். அதை நான் கிடைத்தற்கரிய ஒரு பாராட்டாகக் கருதிப் பூரிப்படைந்தேன்.

நாளாக ஆக இது போன்று ஒருவர் பாணியைப் பின்பற்றி எழுதுவது ஓர் எழுத்தாளனின் தனித் தன்மையை அழித்து விடும் என்பதை உணர்ந்து கொண்டு மெல்ல மெல்ல அந்தப் பாதிப்பிலிருந்து என்னை நானே விடுவித்துக் கொண்டேன்.

1944-ல் கல்கியிடம் உதவி ஆசிரியராகச் சேர்ந்ததும் எல்லோரையும் போல நானும் ஒரு கதை எழுதிக் கொண்டு போய் அவர் மேஜை மீது வைத்தேன். அப்போது கல்கி சொன்னர் :

“முதலில் நீ இந்தக் கதை எழுதும் ஆசையை விட்டுவிடு. கதை எழுதுகிறவன்தான் உதவி ஆசிரியராக வர முடியும் என்கிற பிரமை விலக வேண்டும். வெளியிலே இருந்து ஆயிரம் பேர் கதை எழுதுகிறார்கள். அவற்றிலிருந்து வேண்டிய கதைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டியதுதானே?

உதவியாசிரியர் என்பவருக்கு முக்கியமாக ப்ரூஃப் திருத்தத் தெரிந்திருக்க வேண்டும். அரசியல், கலை விமரிசனம், பயணக் கட்டுரை, விகடத் துணுக்கு இதெல்லாம் எழுதத் தெரிய வேண்டும். சுருக்கமாகவும், தெளிவாகவும் எழுதுவது ரொம்ப முக்கியம். இவை எல்லாவற்றையும் விடக் கதைகளைப் படித்துத் தேர்ந்தெடுத்து அவற்றைக் குறைத்துக் கூட்டி ‘எடிட்’ செய்யும் திறமை ரொம்ப ரொம்ப முக்கியம்.”

அன்று முதல் கல்கியின் இந்த அறிவுரையை நான் ஒரு வேத வாக்காக மதித்துச் செயல்பட்டேன்.

சொல்வதைச் செயலிலும் காட்டியவர் கல்கி. கதையை அவர் ‘எடிட்’ செய்வதைப் பார்ப்பதே ஒரு பல்கலைக் கழகத்தில் படிப்பது மாதிரி. ஒரு கதையிலோ கட்டுரையிலோ அவர் தேவையில்லாத வரிகளை, அல்லது பாராக்களை வெட்டி விடுவார். அங்கே ஒரே ஒரு வரி எழுதிச் சேர்ப்பார். பிறகு படித்துப் பார்த்தால் அந்தக் கதைக்கே ஒரு புதிய ஜீவன் பிறந்திருக்கும். அவர் எடுத்து விட்ட அந்தச் சில வரிகள் பயனற்றதாகி அந்த ஒரு வரி அத்தனை சமாசாரத்தையும் சொல்லியிருக்கும். கயிற்றின் முனையில் லூஸாகப் பிரிந்து கிடக்கும் சில நூல்களைச் சேர்த்துத் திரித்து விட்டால் அந்தக் கயிறு முழுவதும் எப்படி முறுக்கேறி ‘சிக்’கென்று ஆகிவிடுகிறதோ, அத்தகைய பலத்தை அந்த ஒரு வரி உண்டாக்கி விடும். இந்தக் கலையில் கல்கி ஒரு மாமன்னன்.

ஒருமுறை அவர் சொன்னர்: “சினிமா விமரிசனம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? நாம் எழுதும் விமரிசனத்தைப் படித்ததும் வாசகர்கள் படத்தைப் பற்றிப் பேசுவதை மறந்து நமது விமரிசனத்தைப் பற்றியே பேச வேண்டும்.”

நந்தனார் படம் வெளியானதும் கல்கி அதற்கு ஒரு விமரிசனம் எழுதினர். விமரிசனம் வெளியானதும் எல்லாரும் படத்தை மறந்து விட்டு விமரிசனத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள்! அதே போல அவரது ‘தியாக பூமி’ கதை படமாக வெளியான போது விமரிசகர்களின் பேனா கல்கியைக் கொஞ்சம் கடுமையாகவே விமரிசித்தது. இவரும் விடவில்லே. அவற்றுக்குச் சுடச்சுடப் பதில் தர ஆரம்பித்தார். விமரிசகர்களும் கல்கியும் மாறி மாறிப் போட்ட எழுத்துச் சண்டை அப்போது வாசகர்களிடையே பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதைக் காட்டிலும் சுவாரசியம் மிக்க ஒரு ‘காண்ட்ரவர்ஸி’யை நான் அப்புறம் பார்க்கவில்லை.

என்னுள் நகைச்சுவை உணர்ச்சி இருப்பதைக் கண்டுபிடித்து என்னை முதன் முதல் ஊக்குவித்தவர் கல்கி அவர்களே. ஒரு முறை கல்கி தோட்டத்தில் அவர் உலவிக் கொண்டிருந்த போது என்னை அழைத்து, “நீ ஒரு ஹாஸ்யத் தொடர் எழுத முயற்சி பண்ணலாமே. உனக்கு ஹ்யூமர் சரளமாக வருகிறதே” என்றார்.

ஓர் இன்ப அதிர்ச்சிக்கு நான் ஆளானேன். கல்கியே என்னைப் பற்றி இப்படி ஒரு கணிப்பு வைத்திருந்தது எனக்கு மிகப் பெரிய வியப்பாயிருந்தது.

உடனடியாக நான் எனது அந்தத் திறமையைச் சோதித்துப் பார்க்கவில்லை யென்றாலும் கல்கியின் வார்த்தை மனதின் ஒரு மூலையில் வேலை செய்து கொண்டேயிருந்தது. அந்தத் தெம்பு தான் பின்னொரு காலம் என் கற்பனையில் ‘வாஷிங்டனில் திருமண’த்தை உருவாக்கித் தந்தது. ‘வாஷிங்டனில் திருமணத்’தைப் படித்து விட்டு என்னைப் பாராட்டாதவர்களே இல்லை எனலாம். ஆனாலும் எத்தனை பேர் பாராட்டினாலும் எனக்கு ஒரு பெரிய குறை இன்னமும் இருந்து கொண்டிருக்கிறது. அது. "நகைச்சுவையுடன் எழுது” என்று என்னை எழுதத் தூண்டிய கல்கி அவர்கள் ‘வாஷிங்டனில் திருமண’த்தைப் படித்துப் பார்க்க உயிரோடு இல்லாமல் போய் விட்டாரே என்பதுதான். யார் புகழ்ந்தாலும் கல்கி பாராட்டுவதற்கு இணையாகுமா?