பழைய கணக்கு/கடன் வாங்கி கடன் தீர்த்தேன்!

விக்கிமூலம் இலிருந்து



கடன் வாங்கி கடன் தீர்த்தேன்!

னக்கு என்றுமே காமராஜர் மீது அளவு கடந்த மரியாதையும் மதிப்பும் உண்டு. காந்திஜிக்கு அடுத்தபடியாக நான் மதித்த தலைவர் அவர் ஒருவர்தான். அவரோடு நான் பல இடங்களுக்குச் சுற்றுப் பயணம் செய்திருக்கிறேன். அம்மாதிரி நேரங்களில் அவருடன் நிறையப் பேசி அவர் உள்ளத்தைப் புரிந்து கொண்டிருக்கிறேன். அவருடைய எளிமை, நேர்மை, ஏழைகளின் மீது காட்டிய கருணை போன்ற உயர்ந்த பண்புகள் அவரை உயரத்தில் கொண்டு வைத்து விட்டன. பயணங்களின் போது பேச்சு வாக்கில் என்னைப் பற்றி எப்போதாவது அவர் விசாரிப்பதுண்டு. அவரிடம் நான் என்றைக்கும் எந்தவிதமான சொந்த ஆதாயத்தையும் எதிர்பார்த்ததில்லை. இதை அவர் நன்கு அறிந்து கொண்டிருந்ததால்தான் என்னை அத்தனை நெருக்கமாகப் பழகுவதற்கு அனுமதித்தார்.

ஒரு நாள் அவர் என்னைக் கேட்டார்:

“என்ன, சொந்தமா வீடு கீடு ஏதாவது வச்சிருக்கீங்களா?”

“இல்லை.”

“இப்படியே இருந்தா எப்படி? நீங்க வெங்கட்ராமனைப் பாருங்க” என்றார் அவராகவே.

அப்போது திரு ஆர். வெங்கட்ராமன் அவர்கள் வீட்டு வசதி அமைச்சராக இருந்தார். நான் காமராஜர் சொன்னார் என்பதற்காக வெங்கட்ராமனைப் போய்ப் பார்க்கவில்லை.

ஆனாலும் ஒருநாள் அவரைப் பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் வேறு காரணமாக ஏற்பட்டது. ‘சத்ய சபா’ என்ற அமைப்பை ஏற்படுத்தி. அதற்கு நான் செயலாளராக இருந்த போது ஒருநாள் திரு வெங்கட்ராமனைப் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதன் நிகழ்ச்சிகள் தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் நடைபெற வேண்டியிருந்ததால் அந்த இடத்தை டிராக்டர்கள் கொண்டு மேடு பள்ளம் நிரவி சுத்தப்படுத்தித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காக அவரிடம் போயிருந்தேன்.

இந்த விஷயத்தை நான் அவரிடம் சொல்லப் போயிருந்த போது அவர் “வாங்க, இந்த ஃபாரத்தைப் பூர்த்தி செய்து கொடுங்க” என்று ஒரு விண்ணப்பத்தாளைத் தம் மேஜை டிராயரிலிருந்து எடுத்து என்னிடம் தந்தார். பார்த்தால் ஹவுஸிங் போர்டு அப்ளிகேஷன்.

காமராஜர், ஏதோ என்னிடம் ஒப்புக்காகச் சொல்லாமல் உடனடியாக திரு வெங்கட்ராமனையும் கூப்பிட்டுச் சொல்லியிருக்கிறார் என்பதை அப்போது தெரிந்து கொண்டேன். ஃபாரத்தை நிரப்பிக் கொடுத்தேன். சில நாட்களில் எனக்கு அண்ணா நகரில் ஒரு வீட்டு மனை ஒதுக்கப்பட்டது.

சரி, மனை கிடைத்தாயிற்று. வீடு கட்டுவது எப்படி? என்னால் அது முடிகிற காரியமாகத் தோன்றவில்லை. காலி மனையை அப்படியே விட்டு வைத்திருந்தேன். பணம் சேர்த்து வீடு கட்டி முடிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்படாததால் நான் அந்தப் பணக்காரக் கனவைக் காண்பதே இல்லை.

இதற்குச் சில ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி மாறி தி. மு. க. பதவிக்கு வந்தது. வீட்டு வசதி அமைச்சராக திரு க. ராசாராம் பதவி ஏற்றார். அண்ணா நகரிலுள்ள தமிழ்வாணன் வீட்டு கிரகப் பிரவேசத்துக்கு வத்திருந்த திரு ராசாராம் அங்கே என்னைக் கண்டு விட்டு, “நீர் எப்போது வீடு கட்டப் போகிறீர்?” என்று கேட்டார். என் வளர்ச்சியில் அக்கறை காட்டியவர்களில் அவரும் ஒருவர் என்பதை இந்த நேரத்தில் நன்றியோடு கூறக் கடமைப் பட்டிருக்கிறேன்.

ஏற்கனவே எனக்கு மனை ஒதுக்கப்பட்டாயிற்று. ஆனாலும் என்னால் வீடு கட்ட முடியாத நிலையில் இருக்கிறேன் என்று அவரிடம் கூறினேன். “அப்படியா?” என்று கேட்டவர் தாமாகவே முன் வந்து ஹவுஸிங் போர்டு மூலம் வீட்டைக் கட்டி முடிக்க ஏற்பாடு செய்து கொடுத்தார்.

“முதலில் எவ்வளவு பணம் கட்ட முடியும்?” என்று கேட்டார்.

“பணமா? அது எங்கே இருக்கிறது?” என்று கேட்டேன். சிரித்து விட்டு, சரி, நீர் வாங்கி வைத்துள்ள நிலத்தின் மதிப்பையே கட்ட வேண்டிய முன் பணத்துக்கு ஈடாக வைத்துக் கொண்டு வீட்டை முடித்துத் தர ஏற்பாடு செய்கிறேன்” என்று சொல்லி விட்டுப் போனார். அப்புறம் சில மாதங்களுக்குள்ளாவே வீட்டையும் கட்டிக் கொடுத்து விட்டார்.

பின்னர் மாதா மாதம் என் தவணைத் தொகையைத் தவறாமல் கட்டி வந்தேன். சில மாதங்களுக்கு முன்புதான் சீட்டுக் கம்பெனி, ஒன்றில் கடன் வாங்கிப் பாக்கித் தொகை முழுவதையும் கட்டித் தீர்த்தேன்.

என் வீட்டைப் பொறுத்தவரை காமராஜர், ஆர். வெங்கட்ராமன், ராசாராம் இம்மூவருக்கு நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். பாக்கியைக் கட்டி முடிக்க எனக்குப் பண உதவி செய்த அந்த வங்கிக்குக் கடன்பட்டிருக்கிறேன்.