பழைய கணக்கு/சத்ய சபாவில் கற்ற பாடம்

விக்கிமூலம் இலிருந்து



சத்ய சபாவில் கற்ற பாடம்

“பக்திச் சொற்பொழிவுகள் மூலமே நாட்டு மக்களை நல்வழிப் படுத்த முடியும். அரிச்சந்திரன் நாடகம் பார்த்து விட்டுத்தான் காந்திஜி கூட சத்திய விரதம் மேற்கொண்டார். ஆகையால் ‘சத்ய சபா’ என்ற பெயரில் ஒரு சங்கம் ஆரம்பித்து வாரியார் சுவாமிகளைக் கொண்டு தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் ராமாயணம் சொல்ல ஏற்பாடு செய்யுங்ளேன்?” என்று ஒருநாள் பேச்சுவாக்கில் காமராஜிடம் கூறினேன்.

“அதை நீங்களே செய்யுங்களேன்” என்றார் காமராஜ்.

“தாங்கள் ஒப்புதல் அளித்தால் செய்கிறேன்” என்றேன்.

“நடத்துங்க. ஒரு கமிட்டி போட்டுக்குங்க. ஆனால் அந்தக் கமிட்டியில காங்கிரஸ் காரங்களைச் சேர்த்துடாதீங்க. அரசியல் கலந்துடும்” என்றார்.

எஸ். ஜி. ரத்னம் அய்யர், நல்லி ரங்கசாமி செட்டியார், லிஃப்கோ சர்மா, எஸ். வி. சகஸ்ரநாமம் போன்ற ஆத்திகம் பிரமுகர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்தோம். அதற்கு வாரியார் சுவாமிகளும், திருமதி பட்டம்மாள் வாசனும் உபதலைவர்களாக இருக்க ஒப்புக் கொண்டார்கள். காமராஜ்தான் தலைவர். நான் செயலாளர்.

உடனேயே, வேகமாக வேலை தொடங்கி, காங்கிரஸ் மைதானத்தில் பெரிய மேடை அமைத்து, அலங்காரப் பந்தல் போட்டு, நாற்காலிகளைப் பரப்பியாயிற்று. ஏவி. மெய்யப்பன், ஆர்ட் டைரக்டர் சேகரை அனுப்பி வாயிலில் அமர்க்களமாக முகப்பு தயாரித்து விட்டார்.

நாற்பது நாள் வாரியார் கதை. வாரத்தில் இரண்டு நாட்கள் எஸ். வி. சகஸ்ரநாமம் குழுவினரின் பாரதியாரின் ‘பாஞ்சாலி சபதம்’ போன்ற நாடகங்கள்.

விழாவைத் துவங்கி வைக்க கவர்னரை அழைப்பதென்று முடிவு செய்தோம் அப்போது மைசூர் மகாராஜா தான் தமிழ்நாடு கவர்னராக இருந்தார். மைசூரிலிருந்து அவ்வப்போது சென்னை வந்து போய்க் கொண்டிருந்தார். கவர்னர் உத்தியோகத்துக்கான சம்பளமாக மாதம் ஒரு ரூபாய் மட்டுமே பெற்றுக் கொண்டார். நான், சகஸ்ரநாமம், லிஃப்கோ சர்மா மூவரும் காரிலேயே மைசூருக்குப் போய் மகாராஜாவைச் சந்தித்து, “காமராஜ் தலைமையில் சத்ய சபா உருவாகியிருக்கிறது. வாரியார் ராமாயணம் சொல்ல ஒப்புக் கொண்டுள்ளார். தாங்கள்தான் விழாவைத் தொடங்கி வைக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டோம். காமராஜ் மீது மகாராஜா பெரும் மதிப்பு வைத்திருந்ததால் உடனே மகிழ்ச்சியோடு ஒப்புதல் தெரிவித்தார்.

மைசூர், மகாராஜா விழாப் பந்தலுக்குள் வந்ததும் பெரிய பரபரப்பு. நாதஸ்வர இசை முழங்க பூர்ண கும்பத்துடன் அவரை வரவேற்றோம். செயலாளன் என்ற முறையில் அவரை வரவேற்று மேடைக்கு அழைத்துக் கொண்டு போனேன். மேடைக்குப் போகும் படிகளுக்கு அருகில் சென்றதும் நான் சற்று விலகி நின்ற வண்ணம் மகாராஜா அவர்களை மேலே போகச் சொல்லி கை காட்டினேன். நான்தான் முதலில் படிகளில் ஏறி அவரை மேலே அழைத்துப் போய் உட்கார வைக்க வேண்டும் என்கிற பண்பாடு எனக்குத் தெரியவில்லை.

அவர் என்னைப் பார்த்துப் புன்முறுவலுடன் மெல்லிய குரலில், “நீங்கள் முதலில் போங்கள். பின்னோடு நான் வருகிறேன். அதுதான் முறை?” என்றார், மகாராஜா. இதை ரொம்பவும் நாசூக்காக என்னிடம் எடுத்துச் சொன்ன உயர்ந்த பண்பை நான் எண்ணி எண்ணி வியந்ததுடன் என் டயரியிலும் குறித்து வைத்துக் கொண்டேன்.

விழாவைத் தொடங்கி வைத்ததும் மகாராஜா மேடையை விட்டுக் கீழே இறங்கி எதிரில் போய் அவருக்கெனத் தனியாகப் போட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு வாரியார் சொற்பொழிவைக் கேட்க விரும்பினார். இப்போது இன்னொரு சின்ன சங்கடம் ஏற்பட்டது. மைசூர் மகாராஜாவை மட்டும் தனியே நாற்காலியில் உட்கார வைப்பது எப்படி? அவருக்குப் பக்கத்தில் தகுதியுள்ள ஒருவரைப் பேச்சுத் துணைக்கு உட்கார வைக்க வேண்டுமே, அந்த அளவுக்குத் தகுதியும் அந்தஸ்தும் பெற்றவர் அங்கே யார் இருக்கிறார்கள்? சுற்று முற்றும் பார்த்தேன். திரு எஸ். எஸ். வாசன் அவர்களைத் தவிர அதற்குப் பொருத்தமானவர் வேறு யாரும் என் கண்ணில் படவில்லே. வாசன் அவர்களை அணுகி விவரத்தைச் சொன்னேன்.

“எனக்கு அவரிடம் பழக்கம் இல்லையே” என்று தயங்கினார் வாசன். “உங்களைப் பற்றி அவர் நிச்சயம் அறிந்திருப்பார். தயவு செய்து தாங்கள் தான் உதவிக்கு வரவேண்டும்” என்று விநயமாய் வாசன் அவர்களிடம் கேட்டுக் கொண்டேன். என் சங்கடத்தைப் புரிந்து கொண்ட வாசன் எழுந்து வந்தார். மகாராஜா இதற்குள் அவர் யார் என்பதைப் புரிந்து கொண்டு முகமலர்ச்சியோடு அவரை பக்கத்தில் அமரச் சொன்னார். அன்று இருவரும் பக்கத்தில் பக்கத்தில் அமர்ந்து வெகுநேரம் பேசிக் கொண்டிருந்த காட்சி அந்த நிகழ்ச்சிக்கே சிகரம் வைத்தற்போல் இருந்தது.

அப்போது அவர்கள் இருவரையும் எடுத்த புகைப்படம் ஒன்று மிக அபூர்வக் காட்சியாக அமைந்து விட்டது. வாசனும் மைசூர் மகாராஜாவும் சிரித்துப் பேசும் அந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் எனக்கு ஒரு யோசனை உதித்தது. இந்தப் படத்தைப் பெரிதாக என்லார்ஜ் செய்து சட்டம் போட்டுக் கொண்டு போய் வாசன் அவர்களிடம் கொடுத்தால் சந்தோஷப் படுவார் என்று எண்ணினேன்.

மறுநாளே அந்தப் படத்தை அழகாக ஃப்ரேம் செய்து கொண்டு வாசன் அவர்களைப் பார்க்கச் சென்றேன்.

அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வாசன் அவர்கள், “இது எதற்கு?” என்று கேட்டார். “மிக நன்றாக வந்திருக்கிறது. வீட்டில் மாட்டி வைக்கலாம்” என்றேன்.

“நோ நோ! அதெல்லாம் கூடாது. நீ அழைத்தாய் என்பதற்காக நான் அவர் பக்கத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தேன். இதை என் வீட்டில் மாட்டி வைத்து, நானும் மகாராஜாவும் ரொம்ப நாள் சிநேகிதர்கள்” என்பது போல் காட்டிக் கொள்ள வேண்டுமா? அது போலித்தனம் ஆகாதா? ஸாரி, அதை நான் விரும்பவில்லை. முதலில் இதை எடுத்துக் கொண்டு போய் விடு” என்று கண்டிப்பாகக் கூறித் திருப்பி அனுப்பி விட்டார். வாசனின் இந்தப் பண்பாடு பற்றியும் டயரியில் குறித்துக் கொண்டேன்.