பழைய கணக்கு/பி. டி. கோயங்காவுடன்

விக்கிமூலம் இலிருந்து



பி. டி. கோயங்காவுடன்...

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் இந்தியன் எக்ஸ்பிரஸ் டைரக்டர் திரு பி. டி. கோயங்கா என்னைப் பார்க்க விரும்புவதாக அப்போதைய மானேஜர் திரு எஸ். வி. சுவாமி மூலம் சொல்லி அனுப்பினார்.

நான் போயிருந்தேன்.

“தினமணி கதிர் பத்திரிகைக்குப் பொறுப்பாசிரியராக இருக்கச் சம்மதமா?” என்று கேட்டார்.

“பொறுப்பாசிரியரா, அல்லது ஆசிரியர் பொறுப்பா?” என்று திருப்பிக் கேட்டேன்.

“ஏ. என். சிவராமன்தான் இப்போது ஆசிரியர்” என்று இழுத்தார் திரு பி. டி. ஜி.

“என்னை ஆசிரியராகப் போடுவதாயிருந்தால் ஒப்புக் கொள்கிறேன்” என்றேன்.

“சரி பார்க்கலாம். முதலில் வேலையை ஒப்புக் கொள்ளுங்கள்” என்றார்.

“ஒப்புக்கொள்கிறேன். ஆனால் ஆசிரியராகத்தான் ஒப்புக் கொள்ள முடியும்” என்றேன். பல நிர்ப்பந்தங்கள் காரணமாக அவரால் வாக்குறுதியைக் காப்பாற்ற முடியவில்லை. அவருடைய தர்மசங்கடமான நிலை எனக்குப் புரிந்தது. ஆனாலும் நான் விடவில்லை. ஏறத்தாழ ஒரு மாத காலம் தினமும் போய் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

கடைசியில் ஒரு நாள் “எதற்காக என்னைத் தினமும் வரச் சொல்கிறீர்கள்? தங்களுக்கு இதில் ஏதேனும் சிரமம் இருந்தால் விட்டு விடலாமே!” என்றேன்.

“அதெல்லாம் ஒன்றுமில்லை. வேலையை ஒப்புக்கொள்ளுமுன் ஒருமுறை என் தந்தையைப் பார்த்துப் பேசி விடுங்களேன்” என்றார். அவருடைய தந்தை ராம்நாத் கோயங்கா சென்னைக்கு எப்போதாவதுதான் வந்து போய்க் கொண்டிருந்தார். ஆகவே அவரைச் சந்திப்பதில் வீண் கால தாமதம் ஆயிற்று.

“தாங்கள் தானே என்னைக் கூப்பிட்டனுப்பினீர்கள்? அப்புறம் அவரைப் பார்க்க வேண்டிய அவசியம் என்ன?” என்று பி. டி. கோயங்காவிடம் கேட்டேன்.

“சும்மாத்தான். இப்போது ஜவுளி வாங்கக் காஞ்சிபுரம் போகிறோம். அப்படியே கோவிலுக்குப் போய் பெருமாளைச் சேவித்து விட்டு வருவதில்லையா? அந்த மாதிரிதான். அப்பாவைப் பார்ப்பது என்பது சம்பிரதாயத்துக்குத்தான்” என்றார்.

அவர் கூறிய உதாரணமும், பேசிய தமிழும் என்னை வியப்பில் ஆழ்த்தின. கடைசியில் ராம்நாத் கோயங்காவைப் பார்க்காமலே தான் வேலையில் சேர்ந்தேன்.

வேலையில் சேர்ந்த முதல் நாள் அன்று பி. டி. ஜி. என்னைத் தம் அறைக்கு அழைத்து, “உன்னிடம் முக்கியமாக ஒன்று சொல்ல வேண்டும். எனக்கு அடிக்கடி கோபம் வரும், அம்மாதிரி சமயங்களில் சத்தம் போடுவேன். எப்போதாவது நான் கோபித்துக் கொள்ள நேரிட்டால் அதை நீ பொருட்படுத்தக் கூடாது” என்றார்.

“எனக்கும்தான் அடிக்கடி கோபம் வரும். என் கோபத்தையும் நீங்கள் பொருட்படுத்தக் கூடாது” என்று பதிலுக்கு நான் சொன்ன போது அவர் சிரித்து விட்டார்!

பி. டி. ஜி. தினமும் காலை வேளையில் எம். எஸ். ஸின் சுப்ரபாதம் கேட்டுக் கொண்டே தம்முடைய எக்ஸ்பிரஸ் தோட்டத்தில் ‘வாக்கிங்’ போவது வழக்கம். ரொம்ப வேகமாகத்தான் நடப்பார். அவர் நடக்கும் போது சில சமயங்களில் நான் கூடவே பேசிக் கொண்டு போவதுண்டு. அவர் வேகத்துக்கு என்னால் நடக்க முடிவதில்லை.

ஒரு நாள் காலை நான் அவரைப் பார்க்கப் போயிருந்த போது, “ஏம்பா, ராத்திரியெல்லாம் உன் டிபார்ட்மெண்ட்டில் விளக்கு எரிகிறதே, ஏன்?” என்று கேட்டார்.

“ஆமாம்; வேலை நிறைய இருக்கிறது. இரவில் வேலை செய்வதை உதவி ஆசிரியர்கள் கூட விரும்பவில்லைதான், ஆனாலும் என்ன செய்வது? இம்மாதிரி ரொம்ப நாள் நடக்காது......" என்றேன்.

“ஏம்பா?” என்றார்.

“இராத்திரியில் கண் விழித்து வேலை செய்வது அவர்களுக்குக் கஷ்டமாக இராதா?” என்று கேட்டேன்.

“அவர்கள் ஸெகண்ட் ஷோ சினிமா பார்க்கப் போனல் கண் விழிக்க மாட்டார்களா?” என்று திரும்பக் கேட்டார்.

“சினிமா பார்ப்பது ஒரு பொழுதுபோக்கு. வேலை செய்வது வேறு” என்றேன்.

“வேலை செய்வதில் அவர்கள் சினிமா பார்க்கிற அளவுக்கு ஆர்வம் காட்ட வேண்டும்” என்றார்.

நான் சிரித்தேன். என் சிரிப்பின் அர்த்தத்தை அவர் புரிந்து கொண்டார். வேலை செய்கிறவர்களின் கஷ்டங்களை அவர் உணராதவர் அல்ல. அடுத்த சில மாதங்களுக்குள்ளாகவே உதவி ஆசிரியர்களுக்கும் ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கும் சம்பளத்தை உயர்த்திப் போடும்படி என்னிடம் சொன்னார்.

கவன் தாஸ் கோயங்காவின் உள்ளத்தைப் புரிந்து கொண்டவர்கள் வெகு சிலரே இருக்கக் கூடும். மேலாகப் பார்க்கும் போதும், பேசும் போதும் அவர் கடினமாகத் தோன்றினாலும் உள்ளத்தில் அவர் குழந்தை மாதிரி.

காமராஜர் இறந்த செய்தி கேட்டு அவர் எவ்வளவு துக்கப்பட்டார் என்பது எனக்குத் தெரியும். அன்று என் வீட்டுக்கு டெலிபோன் செய்து “கோயங்கா பேசறேன்” என்றார். “என்ன விஷயம்?” என்றேன்.

“காமராஜ் போயிட்டாரேப்பா, தெரியுமா?” என்று கேட்டார்.

“தெரியும்” என்றேன்.

எனக்கும் காமராஜருக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை அவர் அறிந்திருந்தார்.

“நீ போய்ப் பார்க்கவில்லையா?” என்று கேட்டார்.

“பார்த்தேன். சாயந்திரமே போய் மாலை போட்டு என் இறுதி மரியாதையைத் தெரிவித்து விட்டு வந்தேன்” என்றேன்.

“அடாடா, எப்பேர்ப்பட்ட லீடர். போய்விட்டாரே” என்று திரும்பத் திரும்பச் சொல்லி வருத்தப்பட்டார். அவர் குரலில் கனமான சோகம் தோய்ந்து கிடப்பதை என்னால் உணர முடிந்தது.

பி. டி. ஜிக்கு எதையுமே வேகமாகச் செய்ய வேண்டும். ஐம்பது வருடங்களில் செய்ய வேண்டிய காரியத்தை ஐந்தே வருடங்களில் முடித்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தோடும் அவசரத்தோடும் செயல்படுவார். அவர் மாதிரி வேகமாகக் கார் ஒட்டக் கூடியவர்களை நான் பார்த்ததில்லை. டிராபிக் ஸிக்னல்களெல்லாம் அவருக்குப் பெரிய இடையூறுகள். ஏர்போர்ட்டில் எட்டு மணிக்கு விமானம் புறப்படுகிறது என்றால் முப்பது நிமிஷங்களுக்கு முன்னால்தான் ஆபீஸை விட்டுப் புறப்படுவார். டிராபிக் ஸிக்னல்கள் எதுவும் அவருக்கு லட்சியமில்லை. அதையெல்லாம் மீறிக்கொண்டு பயங்கர வேகத்தில் போய் ஏர்போர்ட்டை அடைந்து, அங்கே உள்ள டெலிபோன் பூத்தில் புகுந்து யாருக்காவது போன் போட்டுப் பேசிய பிறகே ஓடிச் சென்று விமானத்துக்குள் செல்வார்.

டெலிபோன் செய்வதற்குச் சோம்பலே கிடையாது. விடியற்காலம், பாதி ராத்திரி எந்த நேரத்திலும் யாருக்காவது டெலிபோன் செய்துகொண்டே இருப்பார். ஒரு சமயம் இரவு பன்னிரண்டு மணிக்கு எனக்கு போன் செய்து, “என்ன செய்கிறாய்?” என்று கேட்டார்.

“தூங்கிக் கொண்டிருந்தேன்” என்றேன்.

“இதற்குள்ளாகவா தூங்கிவிட்டாய்?” என்று அவர் கேட்ட போது சிரிப்பதைத் தவிர என்னால் எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை.

டெலிபோன் நம்பர்கள் அடங்கிய சின்ன டயரி ஒன்று எப்போதும் அவரிடம் இருக்கும். அவற்றில் பாதி நம்பர்களுக்கு மேல் அவருக்கு மனப்பாடம்.

வேலை, வேலை, எப்போதும் வேலைதான். மேஜை மீது நூறு கடிதங்கள் இருந்தாலும் பைல்கள் இருந்தாலும், அவ்வளவையும் ஒன்று விடாமல் படித்துப் பரபரவென்று அவ்வளவிலும் குறிப்புகள் எழுதிக் கையெழுத்துப் போட்டு விடுவார்.

பி. டி. ஜியைப் போன்ற இன்னொரு உழைப்பாளிச் சீமானை நான் கண்டதில்லை. இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற ஒரு மாபெரும் ஸ்தாபனத்தின் வளர்ச்சிக்குப் பல காரணங்கள் இருக்கலாம். அந்த நிறுவனத்தில் சக்தி மிக்க ரோட்டரி இயந்திரங்கள் இருக்கலாம். ஆனால் அந்த இயந்திரங்களை யெல்லாம் மீறிய சக்தி படைத்த இன்னொரு இயந்திரம் உண்டு. அதற்குப் பெயர்தான் பி. டி. கோயங்கா. அந்த மகத்தான மனித இயந்திரம் ஓய்ந்து விட்டது. ஆனாலும் பம்பாயிலுள்ள எஸ்பிரஸ் டவர் சிகரம் போல் பத்திரிகை உலகில் அவர் புகழ் ஓங்கி நிற்கும்.