பாஞ்சாலி சபதம்/21. விதுரன் பதில்

விக்கிமூலம் இலிருந்து
21. விதுரன் பதில்

வேறு
விதுரனும் சொல்லு கிறான் 'இதை
விடமெனச் சான்றவர் வெகுளுவர் காண்;
சதுரெனக் கொள்ளுவ ரோ?-இதன்
தாழ்மை யெலாமவர்க் குரைத்து விட்டேன்;
இதுமிகத் தீதென்றே-அண்ணன்
எத்தனை சொல்லியும் இள வரசன்,
மதுமிகுத் துண்டவன் போல்-ஒரு
வார்த்தையை யேபற்றிப் பிதற்றுகிறான். 128

கல்லெனில் இணங்கி விடும்-அண்ணன்
காட்டிய நீதிகள் கணக்கில வாம்;
புல்லனிங் கவற்றை யெலாம்-உளம்
புகுதவொட் டாதுதன் மடமையினால்
சல்லியச் சூதினி லே-மனம்
தளர்வற நின்றிடுந் தகைமை சொன்னேன்;
சொல்லிய குறிப்பறிந்தே-நலந்
தோன்றிய வழியினைத் தொடர்க'என்றான். 129