பாஞ்சாலி சபதம்/26. பாண்டவர் பயணமாதல்
Appearance
ஆங்கதன்பின் மூன்றாம்நாள் இளைஞ ரோடும்
அணியிழையப் பாஞ்சாலர் விளக்கி னோடும்
பாங்கினுறு பரிசனங்கள் பலவி னோடும்
படையினோடும் இசையினோடும் பயண மாகித்
தீங்கதனைக் கருதாத தருமக் கோமான்
திருநகர்விட் டகல்கின்றான் தீயோர் ஊர்க்கே
நீங்கிஅகன் றிடலாகுந் தன்மை உண்டோ
நெடுங்கரத்து விதிகாட்டும் நெறியில் நின்றே? 145
நரிவகுத்த வலையினிலே தெரித்து சிங்கம்
நழுவி விழும்;சிற்றெறும்பால் யானை சாகும்;
வரிவகுத்த உடற்புலியைப் புழுவுங் கொல்லும்;
வருங்கால முணர்வோரும் மயங்கி நிற்பார்;
கிரிவகுத்த ஓடையிலே மிதத்து செல்லும்;
கீழ்மேலாம்,மேல் கீழாம்;கிழக்கு மேற்காம்;
புரிவகுத்த முந்நூலார் புலையர் தம்மைப்
போற்றிடுவார்,விதிவகுத்த போழ்தி னன்றே. 146