பாஞ்சாலி சபதம்/4. துரியோதனன் சபை
கன்னங் கரியது வாய்-அகல்
காட்சிய தாய்மிகு மாட்சிய தாய்,
துன்னற் கினியது வாய்-நல்ல
சுவைதரும் நீருடை யமுனை யெனும்
வன்னத் திருநதி யின்-பொன்
மருங்கிடைத் திகழ்ந்த அம் மணிநக ரில்,
மன்னவர் தங்கோ மான்-புகழ
வாளர வக்கொடி யுயர்த்துநின் றான்.
துரியோ தனப்பெய ரான்,-நெஞ்சத்
துணிவுடை யான்,முடி பணிவறி யான்.
கரியோ ராயிரத் தின்-வலி
காட்டிடு வோன்’என்றக் கவிஞர் பிரான்
பெரியோன் வேத முனி-அன்று
பேசிடும் படிதிகழ் தோள்வலி யோன்,
உரியோர் தாமெனி னும்-பகைக்
குரியோர் தமக்குவெந் தீயனை யான்.
தந்தைசொல் நெறிப்படி யே-இந்தத்
தடந்தோள் மன்னவன் அரசிருந் தான்,
மந்திர முணர்பெரி யோர்-பலர்
வாய்த்திருந் தார்அவன் சபைதனி லே,
அந்தமில் புகழுடை யான்.-அந்த
ஆரிய வீட்டுமன்,அறம்அறிந் தோன்,
வந்தனை பெருங்குர வோர்-பழ
மறைக்குல மறவர்கள் இருவரொடே.
மெய்ந்நெறி யுணர்விது ரன்-இனி
வேறுபல் அமைச்சரும விளங்கிநின் றார்;
பொய்ந்நெறித் தம்பிய ரும்-அந்தப்
புலைநடைச் சகுனியும் புறமிருந் தார்?
மைந்நெறி வான்கொடை யான்-உய்
மானமும் வீரமும் மதியுமு ளோன்,
உய்ந்நெறி யறியா தான்.இறைக்கு
உயிர்நிகர் கன்னனும் உடனிருந் தான்.