உள்ளடக்கத்துக்குச் செல்

பாஞ்சாலி சபதம்/55. திரௌபதியைத் துரியோதனன்

விக்கிமூலம் இலிருந்து
55. திரௌபதியைத் துரியோதனன் மன்றுக்கு அழைத்து வரச் சொல்லியது பற்றி ஜகத்தில் உண்டான அதர்மக் குழப்பம்

மூடப் புலைமையினோன்,
அகத்தே இருளுடையான், ஆரியரின் வேறானோன்,
துரியோ தனனும் சுறுக்கெனவே தான்திரும்பி
அரியோன் விதுர னவனுக் குரைசெய்வான்:
‘செல்வாய், விதுராநீ சிந்தித் திருப்பதேன்?
வில்வா ணுதலினாள், மிக்க எழிலுடையாள்,
முன்னே பாஞ்சாலர் முடிவேந்தன் ஆவிமகள்,
இன்னேநாம் சூதில் எடுத்த விலைமகள்பால்
சென்று விளைவெல்லாஞ் செவ்வனே தானுணர்த்தி,
“மன்றி னிடையுள்ளான் நின் மைத்துனன் நின் ஓர்தலைவன்
நின்னை அழைக்கிறான் நீள்மனையில் ஏவலுக்கே”
என்ன உரைத்தவளை இங்குகொணர்வாய்’ என்றான்.