பாஞ்சாலி சபதம்/67. அர்ஜீனன் சொல்வது
Appearance
வேறு
எனவீமன் சகதேவ னிடத்தே சொன்னான்.
இதைக்கேட்டு வில்விஜயன் எதிர்த்துச் சொல்வான்:
‘மனமாரச் சொன்னாயோ? வீமா! என்ன
வார்த்தை சொன்னாய்? எங்குசொன்னாய்? யாவர் முன்னே?
கனமாருந் துருபதனார் மகளைச் சூதுக்
களியிலே இழந்திடுதல் குற்ற மென்றாய்;
சினமான தீஅறிவைப் புகைத்த லாலே,
திரிலோக நாயகனைச் சினந்து சொன்னாய். 78
‘“தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்;
தருமம்மறு படிவெல்லும்” எனுமியற்கை
மருமத்தை நம்மாலே உலகங் கற்கும்
வழிதேடி விதிஇந்தச் செய்கை செய்தான்.
கருமத்தை மேன்மேலுங் காண்போம். இன்று
கட்டுண்டோம், பொறுத்திருப்போம்; காலம் மாறும்
. தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்.
தனுஉண்டு காண்டீவம் அதன்பேர்’ என்றான். 79