பாஞ்சாலி சபதம்/8. சகுனி திரிதராட்டிரனிடம் சொல்லுதல்
மற்றதன்பின்னர் இருவரும்-அரு
மந்திரக் கேள்வி உடையவன்-பெருங்
கொற்றவர் கோந்திரித ராட்டிரன்-சபை
கூடி வணங்கி இருந்தனர்;-அருள்
அற்ற சகுனியும் சொல்லுவான்-'ஐய!
அண்டகை நின்மகன செய்திகேள்;-உடல்
வற்றித் துரும்பொத் துருக்கின்றான்;-உயிர்
வாழ்வை முழுதும் வெறுக்கின்றான். 58
'உண்ப சுவையின்றி உண்கின்றான்;-பின்
உடுப்ப திகழ உடுக்கின்றான்,-பழ
நண்பர்க ளோடுற வெய்திடான்;-இள
நாரியரைச் சிந்தை செய்திடான்;-பிள்ளை
கண்பசலை கொண்டு போயினான்;-இதன்
காரணம் யாதென்று கேட்பையால்;-உயர்
திண்பரு மத்தடந் தோளினாய்!'-என்று
தீய சகுனியும் செப்பினான். 59
தந்தையும் இவ்வுரை கேட்டதால்-உளம்
சாலவும் குன்றி வருந்தியே,-'என்றன்
மைந்த!நினக்கு வருத்தமேன்?-இவன்
வார்த்தையி லேதும் பொருளுண்டோ?-நினக்கு
எந்த விதத்துங் குறையுண்டோ;-நினை
யாரும் எதிர்த்திடு வாருண்டோ?-நின்றன்
சிந்தையில் எண்ணும் பொருளெலாம்-கணந்
தேடிக் கொடுப்பவர் இல்லையோ? 60
'இன்னமு தொத்த உணவுகள்,-அந்த
இந்திரன் வெ·குறும் ஆடைகள்,-பலர்
சொன்ன பணிசெயும் மன்னவர்,-வருந்
துன்பந் தவிர்க்கும் அமைச்சர்கள்,-மிக
நன்னலங் கொண்ட குடிபடை-இந்த
நானில மெங்கும் பெரும்புகழ்-மிஞ்சி
மன்னும்அப் பாண்டவச் சோதரர்-இவை
வாய்ந்தும் உனக்குத் துயருண்டோ?' 61
தந்தை வசனஞ் செவியுற்றே-கொடி
சர்ப்பத்தைக் கொண்டதொர் கோமகன்
வெந்தழல் போலச் சினங்கொண்டே-தன்னை
மீரிப் பலசொல் விளம்பினான்,-இவன்
மந்த மதிகொண்டு சொல்வதை-அந்த
மாமன் மதித்துரை செய்குவான்;-'ஐய;
சிந்தை வெதுப்பத்தி னாலிவன்-சொலும்
சீற்ற மொழிகள் பொறுப்பையால். 62
'தன்னுளத் துள்ள குறையெலாம்-நின்றன்
சந்நிதி யிற்சென்று சொல்லிட-முதல்
என்னைப் பனித்தனன்;யானிவன்-றனை
இங்கு வலியக் கொணர்ந்திட்டேன்;-பிள்ளை
நன்னய மேசிந்தை செய்கின்றான்;-எனில்
நன்கு மொழிவ தறிந்திலன்-நெஞ்சைத்
தின்னுங் கொடுந்தழல் கொண்டவர்-சொல்லுஞ்
செய்தி தெளிய உரைப்பரோ? 63
'நீபெற்ற புத்திரனே யன்றோ?-மன்னர்
நீதி யியல்பில் அறிடின்றான்-ஒரு
தீபத்தில் சென்று கொளுத்திய-பந்தம்
தேசு குறைய எரியுமோ?-செல்வத்
தாபத்தை நெஞ்சில் வளர்த்திடல்-மன்னர்
சாத்திரத் தேமுதற் சூத்திரம்;-பின்னும்
ஆபத் தரசர்க்கு வேறுண்டோ-தம்மில்
அன்னியர் செல்வம் மிகுதல்போல்? 64
'வேள்வியில் அன்றந்தப் பாண்டவர்-நமை
வெண்டுமட் டுங்குறை செய்தனர்;-ஒரு
கேள்வி யிலதுன் மகன்றனைப்-பலர்
கேலிசெய் தேநகைத் தார்,கண்டாய்! புவி
ஆள்வினை முன்னவர்க் கின்றியே-புகழ்
ஆர்ந் திளை யோரது கொள்வதைப்-பற்றி
வாள்விழி மாதரும் நம்மையே-கய
மக்களென் றெண்ணி நகைத்திட்டார். 65
'ஆயிரம் யானை வலிகொண்டான்-உந்தன்
ஆண்டகை மைந்த னிவன்,கண்டாய்;-இந்த
மாயிரு ஞாலத் துயர்ந்ததாம்-மதி
வான்குலத் திற்கு முதல்வனாம்;-ஒளி
ஞாயிறு நிற்பவும் மின்மினி-தன்னை
நாடித் தொழுதிடுந் தன்மைபோல்,-அவர்
வேயிருந் தூதுமொர் கண்ணனை-அந்த
வேள்வியில் சால உயர்த்தினார். 66
'ஐய!நின் மைந்தனுக் கில்லைகாண்-அவர்
அர்க்கியம் முற்படத் தந்ததே;-இந்த
வையகத் தார்வியப் பெய்தவே,-புவி
மன்னவர் சேர்ந்த சபைதனில்-மிக
நொய்யதொர் கண்ணனுக் காற்றினார்-மன்னர்
நொந்து மனக்குன்றிப் போயினர்;-பணி
செய்யவும் கேலிகள் கேட்கவும்-உன்றன்
சேயினை வைத்தனர் பாண்டவர். 67
'பாண்டவர் செல்வம் விழைகின்றான்;-புவிப்
பாரத்தை வேண்டிக் குழைகின்றான்;-மிக
நீண்ட மகிதலம் முற்றிலும்-உங்கள்
நேமி செலும்புகழ் கேட்கின்றான்;-குலம்
பூண்ட பெருமை கெடாதவா-றெண்ணிப்
பொங்குகின் றான்நலம் வேட்கின்றான்,-மைந்தன்
ஆண்டகைக் கி·து தகுமன்றோ?-இல்லை
யாமெனில் வையம் நகுமன்றோ? 68
நித்தங் கடலினிற் கொண்டுபோய்-நல்ல
நீரை அளவின்றிக் கொட்டுமாம்-உயர்
வித்தகர் போற்றிடுங் கங்கையா-றது
வீணிற் பொருளை யழிப்பதோ?-ஒரு
சத்த மிலாநடுக்காட்டினில்-புனல்
தங்கிநிற் குங்குளம் ஒன்றுண்டாம்;-அது
வைத்ததன் நீரைப் பிறர்கொளா-வகை
வாரடைப் பாசியில் மூடியே. 69
சூரிய வெப்பம் படாமலே-மரம்
சூழ்ந்த மலையடிக் கீழ்ப்பட்டே-முடை
நீரினைநித்தலும் காக்குமாம்;-இந்த
நீள்சுனை போல்வர் பலருண்டே?-எனில்
ஆரியர் செல்வம் வளர்தற்கே-நெறி
ஆயிரம் நித்தம் புதியன-கண்டு
வாரிப் பழம்பொருள் ஏற்றுவார்;-இந்த
வண்மையும் நீயறி யாததோ?' 70