பாபு இராஜேந்திர பிரசாத்/ஐரோப்பிய நாடுகளில் காந்தீய தத்துவப் பிரசாரம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
9. ஐரோப்பிய நாடுகளில்
காந்தீய தத்துவப் பிரசாரம்!

காந்தியடிகளாரின் ஒத்துழையாமைப் போர் ஆரம்பமானவுடனே காங்கிரஸ் கட்சியின் கட்டளைக்குட்பட்டு ராஜன்பாபு தனது வழக்குரைஞர் பணியைத் தூக்கி எறிந்தார். அப்போது, ஒரே ஒரு வழக்குக்கு மட்டும் தான் பணியாற்ற வேண்டும் என்று அனுமதியைப் பெற்றிருந்தார் ராஜன் பாபு!

அது லண்டன் மாநகரிலே உள்ள ப்ரிவி கவுன்சிலுக்குச் சென்று வழக்காட வேண்டிய ஒரு பெரு வழக்கு. இங்கிலாந்து நாட்டு நீதிமன்றம் சென்று அந்த வழக்கை வாதாடாவிட்டால், வழக்காளருக்கு பெருத்த பண நஷ்டமும், கெளரவக் குறைவும் ஏற்பட்டு விடும் என்ற காரணத்தைப் பிரிட்டிஷ் அரசுக்குக் காட்டி ராஜன்பாபு அனுமதி பெற்றிருந்தார். இதுபோன்ற வேறொரு வழக்கை நடத்திட பண்டித மோதிலால் நேருவுக்கு அனுமதித்துள்ளதையும் ராஜேந்திர பிரசாத் ஆதாரம் காட்டி தனது வழக்குக்குரிய அரசு அனுமதியைப் பெற்றிருந்தார்.

இராஜேந்திர பிரசாத்துக்கு அனுமதி அளித்த வழக்கு 1928- ஆம் ஆண்டில் ப்ரீவி கவுன்சில் முன்பு விசாரணைக்காக வந்தது. அவர் அதற்காக லண்டன் மாநகர் சென்றார். அங்கே இருந்த வழக்குரைஞருக்கு வாதாடுவதற்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்தார்.

அந்த வழக்கில் ராஜன் பாபுவிடம் நியாயம் இருப்பதாக எண்ணிய நீதிமன்றம், அவர் வழக்கு வெற்றி பெறும் நிலையில் தீர்ப்பளித்தது. வந்த வேலை முடிந்த ஆர்வத்தால், ராஜேந்திர பிரசாத் இங்கிலாந்து நாடு முழுவதுமாகச் சென்று சுற்றிப் பார்த்தார்.

எங்கெங்கு பாபு பயணம் செய்தாரோ, அந்தந்த இடங்களிலே எல்லாம் காந்தீய தத்துவங்களின் மேன்மைகளை எடுத்துரைத்தார். இடையிடையே இந்தியாவுக்கு ஏன் சுதந்திரம் கேட்டுப் போராடுகிறோம் என்ற காரண, காரியங்களை விரிவாகவும், விளக்கமாகவும் சொற்பொழிவாற்றி அங்குள்ள ராஜ தந்திரிகளுக்கும், கல்விமான்களுக்கும் பொதுமக்களுக்கும் புரியும்படி இந்திய நிலையை எடுத்துரைத்தார்.

இங்கிலாந்து நாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்ட ராஜேந்திர பிரசாத் பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றார். அங்கே காந்தியடிகள் கொள்கைகள் மீதும், அவரது தத்துவங்கள் மேலும் தனிப்பட்டதோர் பற்றுக் கொண்ட அறிஞர் ரோமேன் ரோலந் என்பவரைச் சந்தித்து, இருவரும் நீண்ட நேரம் அளவளாவி மகிழ்ந்தார்கள். காந்தியடிகளது மெய்ப் பொருளை உண்மையாகவே பின்பற்றும் ஒரு காங்கிரஸ் விசுவாசி ராஜன் பாபு என்பதை அவர் உணர்ந்தார். அதனால், அவரை உளமார வரவேற்று தனது வீட்டில் விருந்துபசாரம் நடத்தி இரண்டொரு நாட்கள் தங்கவும் வைத்தார்.

அந்த நேரத்தில், அகில உலக இளைஞர்கள் மாநாடு ஒன்று பிரான்சு நாட்டிலுள்ள பாரிஸ் நகரில் நடந்தது. அந்த மாநாட்டிற்கு ராஜேந்திர பிரசாத் சிறப்பு அழைப்பின் பேரில் சென்று கலந்து கொண்டு, காந்தீய தத்துவங்களின் அடிப்படைகளை விளக்கிப் பேசினார்.

பாரிஸ் மாநாடு முடிந்த பின்பு, ரோமன் ரோலந்து அறிஞரிடம் பிரியாவிடை பெற்று, ஆஸ்திரியா என்ற நாட்டின் தலைநகரமான வீயன்னா நகருக்கு அவர் சென்றார். அங்கே நடந்த யுத்த எதிர்ப் மாநாடு ஒன்றில் சிறப்பு அழைப்பின் பேரில் வரவேற்கப்பட்டார்.

அந்த ‘யுத்த எதிர்ப்பு மாநாட்டுக்கு’ உலகப் புகழ் பெற்ற பிரிட்டிஷ் சமாதானவாதியான பென்னர் பிராக்வே தலைமை தாங்கினார். அந்த மாநாட்டில் ராஜன் பாபுவும் கலந்து கொண்டு பேசும் போது,

“அன்பால்தான் உலகத்தில் வாழ முடியும். அகிம்சையால் தான் உலகம் உய்யும். முன்னேறும்” என்பதற்கான காந்திய தத்துவத்தின் சான்றுகளை எடுத்துக் காட்டி அற்புதமாகப் பேசினார்.

யுத்த எதிர்ப்பு மாநாட்டில் சிலர், கலகம் செய்வதற்கென்றே வந்திருந்தார்கள். அவர்கள் அப்போது கலகத்தை உருவாக்கி, மாநாட்டுத் தலைவர் பென்னர் பிராக்வேயையும், ராஜன் பாபுவையும் அடித்து நொறுக்கிப் படுகாயங்களை உண்டு பண்ணி விட்டார்கள். ராஜன் பாபு பட்ட அடி படுகாயங்களானதால், அந்த காயங்கள் ஆறுவதற்கு ஆறேழு வாரங்களாயின. அந்தக் காயங்கள் ஆறி உடல் நலம் தேறும்வரை ராஜேந்திர பிரசாத் வெளியே எங்கும் போக முடியாமல் படுத்த படுக்கையாகவே அவர் தங்கியிருந்த வீட்டில் சிகிச்சை பெற்றார்.

உடல் நலமானது. சிறிது காலம் ஐரோப்பா நாடுகளைச் சுற்றி அங்குள்ள மக்களின் சுதந்திர நிலைகளைக் கண்டுணர்ந்தார். குறிப்பாக, இந்திய நாட்டிலே இருந்து வெளிநாடு சுற்றுப் பயணம் போகிறவர்கள் எல்லாம், பெரும்பாலாக, தங்களது உடைகளை அந்தந்த நாடுகளின் பருவ நிலைகளுக்கு ஏற்றவாறும் தட்ப வெட்ப சூழலுக்குத் தகுந்தவாறும் மாற்றிக் கொள்ளவது இன்றும் கூட வழக்கம்.

ஆனால் ராஜன் பாபு மட்டும் தனது ஆடைகளை மாற்றிக் கொள்ள மறுத்துவிட்டார். வழக்கமான கதராடைகளையே அணிந்தார். இதைக் கண்ட மேனாட்டவருக்கு வேடிக்கையாகவே இருந்தது. சிலருக்கு ஏளனமாகவும் காட்சியளித்தது. ஆனால், வேறு சிலர், மோட்டா கதர் துணியின் மர்மத்தை ராஜன் பாபுவிடமே கேட்டார்கள். அதற்குராஜன் பாபு பதில் கூறியபோது, ‘கதர் இந்திய தேசியத்தின் சின்னம்’ என்றார். இந்தியப் பொருளாதாரத் தத்துவத்தையும் அவர் விளக்கினார். இவ்வாறாக ராஜன் பாபு, ஐரோப்பிய நாடுகளில் காந்தீய தத்துவங்களை விளக்கிக் கூறி விட்டு தனது பயணத்தினையும் முடித்து, எகிப்து நாட்டுக்குச் சென்று, பிறகு இந்தியா வந்து சேர்ந்தார்.