உள்ளடக்கத்துக்குச் செல்

பாபு இராஜேந்திர பிரசாத்/நேருவின் சுயசரிதத்தில் பாபு இராஜேந்திர பிரசாத்

விக்கிமூலம் இலிருந்து
பாபு இராஜேந்திர பிரசாத்


1. நேருவின் சுயசரிதத்தில்
பாபு இராஜேந்திர பிரசாத்

“சில சமயங்களில் நான் காங்கிரஸ் காரியதரிசி என்ற முறையில் பீகார் மாகாண காங்கிரஸ் கமிட்டிக் காரியாலயத்தைப் பரிசோதனை செய்யச் சென்றிருக்கிறேன். காரியாலயத்தை அவர்கள் நன்றாக வைத்துக் கொள்ளவில்லையென்றும், வைத்துக் கொள்ளும் திறமை அவர்களுக்கு இல்லையென்றும் கருதி நான் அவர்களைக் கடுமையான வார்த்தையில் கண்டித்திருக்கிறேன்.

நிற்பதைக் காட்டிலும் உட்கார்ந்திருக்கலாமே! உட்கார்ந்திருப்பதைக் காட்டிலும் படுத்துக் கொண்டிருக்கலாமே! என்பதைப் போன்ற மனப்பான்மை பீகார் காங்கிரஸ்காரர்களுக்கு இருந்ததாகத் தோன்றிற்று. காரியாலயத்தில் சாமான்கள் அதிகமாயில்லை. ஏனென்றால், அவர்கள் நாற்காலி, மேஜை முதலிய வழக்கமான காரியாலய செளகரியங்கள் இல்லாமலே வேலை நடத்திக் கொண்டு வந்தார்கள். என்றாலும், அக்காரியாலயத்தை நான் எவ்வளவோ கண்டித்தாலும், காங்கிரஸ் லட்சியப்படி பார்த்தால், அந்த மாகாணம் இந்தியாவில் காங்கிரசிடம் மிகுந்த பக்தி சிரத்தை கொண்ட மாகாணமென்று எனக்குத் தெரியும்.

காங்கிரஸ் அங்கு ஆடம்பரமாய் இருக்கவில்லை. ஆனால் விவசாயிகள் அனைவரும் காங்கிரசை ஆதரித்து வந்தார்கள். அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் கூட, பீகார் அங்கத்தினர்கள் எந்த விஷயத்திலும் ஒரு பொழுதும் மாறுபட்ட மனப்பான்மை காண்பதில்லை. இந்தப் பெரிய சபைக்கு இவர்கள் ஏன் வந்தார்கள் என்று அவர்கள் திகைத்துக் கொண்டிருப்பதைப் போல. அவர்களைப் பார்த்தால் தோன்றும். ஆனால், இரண்டு சட்ட மறுப்பு இயக்கங்களிலும் பீகார் காண்பித்த வேலைக் கணக்கு அபாரமாகும்.

பீகார் பூகம்ப நிவாரணக் கமிட்டி, இந்த நேர்த்தியான காங்கிரஸ் அமைப்பின் மூலமாக விவசாயிகளுக்கு உதவி செய்ய முடிந்தது. கிராமங்களில் வேறு எந்த அமைப்பும் இதைப் போல அவ்வளவு ஒத்தாசையாக இருக்க முடியாது. அரசாங்கத்தால் கூட ஆகாது. பீகார் காங்கிரஸ் அமைப்புக்கும் நிவாரணக் கமிட்டிக்கும் தலைவர் பாபு இராஜேந்திர பிரசாத். அவர் பீகாரில் நிகரில்லாத் தலைவர். பார்த்தால் அசல் குடியானவன், பீகார் மண்ணோடு ஒட்டிக்கொண்டு பிறந்த திருப்புதல்வன். முதல் தடவை அவரைப் பார்த்தால் அவரைப் பற்றி ஒன்றும் பிரமாதமாகத் தோன்றாது. ஆனால், சத்தியம் பேசும் அவருடைய கூர்மையான கண்களும், சிரத்தை நிறைந்த அவருடைய பார்வையும் யாருடைய கவனத்தையும் இழுக்கும்.

அந்தப் பார்வையையும், அந்தக் கண்களையும் ஒருவரும் மறக்க முடியாது. ஏனென்றால், அந்தக் கண்களின் மூலமாக சத்தியம் உங்களைப் பார்க்கின்றது. அதைச் சந்தேகிக்கவே முடியாது.

விவசாயியைப் போலவே அவர் ஒருக்கால் தமது நோக்கில் குறுகியவராக இருக்கலாம். நவீன உலகத்துக்குப் பொருந்தாதவர் என்று ஒருக்கால் தோன்றக்கூடும். ஆனால், அவருடைய நிகரில்லா வல்லமையும், அவரது பரிபூரண யோக்கியப் பொறுப்பும், அவரது ஊக்கமும், இந்திய விடுதலைக்காக அவர் காண்பிக்கும் பக்தியும் மிகச் சிறந்த தன்மைகளாகும். அவைகளுக்காக அவரை பீகார் மாகாணம் முழுவதும் கொண்டாடி நேசிப்பதல்லாமல், இந்தியா முழுவதுமே அவர் நேசிக்கப்படுகிறார்.

இந்தியாவில் எந்த மாகாணத்திலும், இராஜேந்திர பாபுவை பீகாரில் கொண்டாடுவது போல, ஏகமனதாக எல்லோரும் கொண்டாடக்கூடிய தலைவர் வேறு எவருமே கிடையாது. காந்தியின் தத்துவத்தை உண்மையாகவும், முழுமையாகவும் யாரேனும் ஒருவர் அறிந்து உணர்ந்திருக்கக் கூடுமானால், அது அவர்தான். அத்தகைய ஒருவர் பீகார் பூகம்ப நிவாரண வேலைக்குத் தலைமை வகிக்க நேர்ந்தது மக்களது பாக்கியமே ஆகும். அவரிடம் இருந்த நம்பிக்கையினாலேதான் இந்தியாவின் எல்லா பகுதிகளிலிருந்தும் ஏராளமான பணம் பீகாருக்கு வந்து கொட்டிற்று.

ராஜேந்திர பாபுவிற்கு அப்போது உடம்பு சுகமே இல்லை.என்றாலும், அவர் நிவாரண வேலையில் அப்படியே யோசனையின்றிக் குதித்து விட்டார். எல்லா அலுவல்களுக்கும் அவர் மத்தியப் புள்ளி போல் விளங்கியதாலும், எல்லோரும் அவரிடம் யோசனை கேட்க வர நேர்ந்ததாலும், அவர் தமது உடல் வலிமைக்கு மீறியே உழைத்தார்.

–ஜவஹர்லால் நேரு

("ஜவஹரின் சுய சரித்திரம் பூகம்ப பகுதி

பக்கம் 843-845)



பாரதத்தின் முன்னாள் பிரதமராகவும், அகில இந்திய தேசியக் காங்கிரஸ் மகா சபையின் முன்னாள் பொதுச் செயலாளராகவும், மகாத்மா காந்தியடிகளின் அரசியல் வாரிசாகவும், மனிதருள் மாணிக்கம் என்று இந்த மாபெரும் ஞாலத்தால் போற்றிப் புகழப்பட்டவருமான பண்டிதர் ஜவகர்லால் நேரு “ஜவஹரின் சுய சரித்திரம்” என்ற நூலில் 843 முதல் 845 வரையுள்ள பக்கங்களில் மேற்கண்டவாறு, டாக்டர் இராஜேந்திர பிரசாத்தின் பண்புகளை, வழங்கியுள்ளார்.

அதற்கேற்ப, இரோசேந்திர பிரசாத் மிக எளிய தோற்றம் உடையவர்; அமைதியான ஒளி நிலா, அன்பு உருவான தென்றல்; அடக்கமே தவழ்கின்ற அருவிச் சுனை! அருள் சுரக்கின்ற விழிகள்; புன்னகை மணக்கும் பூத்தமல்லி, இனிய பேச்சு நல்ல செயல்கள் துய சிந்தனைகள், வெற்றி பெற்றால் சிரிப்போ, தோல்வியைச் சுமந்தால் சலிப்போ இல்லாமல், பாடறிந்து ஒழுகும் இத்தனை பண்புகளும் இதழ் இதழாக அன்றலர்ந்த தாமரை போல காட்சி தரும் குணசீலர் இராஜேந்திர பாபு அவர்கள்.

முறுவல் எப்போதும் முகாமிட்ட முகம்; வீரத்தில் தீரர்; கிராமத்தான் போன்ற காட்சிக்குரியவர்; ஆனால் ஏறுநிகர் நெஞ்சம்; தியாகத்தில் வைரம்; எண்ணற்ற இவையொத்த சுபாவங்கள் இராஜேந்திர பிரசாத்துக்கு இயற்கையாகவே அமைந்து விட்ட காரணத்தால்தான், அவர் அகிலம் போற்றும் முதல் குடியரசுத் தலைவரானார். அந்தப் பதவி அவரால் தகுதி பெற்றது. அவனியும் அதை அறிந்தது.

நமது இந்திய நாடு விடுதலை பெற்றிடத் தன்னலம் துறந்து, சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டு பெருந்தியாகம் செய்தவர்களில், டாக்டர் பாபு இராஜேந்திர பிரசாத்தும் ஒருவர் ஆவார். எப்போதும் தொண்டுள்ளம் படைத்த தொண்டராகவே வாழ்ந்த சீலர்,

டாக்டர் இராஜேந்திர பிரசாத், மற்றபிற சுதந்திரப் போராட்டத் தலைவர்களை விட தனி இடத்தைப் பெற்றிருக்கிறார். இதற்குக் காரணம் பாபுஜியின் குறை காண முடியாத தேசத் தொண்டுதான் என்றால் மிகையன்று!

ஒரு நிலையில் நாட்டுப் பற்றுணர்வுகள் பொங்கப் பொங்க அவர் ஆற்றிய தேசத் தொண்டு, மறுநிலையில் உழவர் பெருமக்களுடைய துன்பங்களை, குறைகளைப் போக்குவதற்காக, அவர் பாடுபட்டு அரிய உழைப்பாளியாகவும் திகழ்ந்தார். அதனால்தான், ராஜன் பாபு இந்திய விடுதலை வீரர்களுக்குள் ஒரு தனி இடத்தைப் பெற்றுத் திகழ்ந்தார் எனலாம்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், கப்பலோட்டிய தமிழன் சிதம்பரம் பிள்ளை, மாவீரன் பகத்சிங், சுப்ரமணிய சிவா, திலகர், அரவிந்தர், வி.டி.சவர்க்கார் போன்ற மாவீரர்களது தேசாபிமானத் தொண்டுகளை மக்கள் படிக்கும் போதும், எண்ணும் போதும், அவர்களது உடல் புல்லரிக்கின்றது. இரத்தம் சூடேறுகிறது. ஏன்?

வெள்ளைக்காரன் ஆட்சியில் நாம் அடிமைகளாக இருந்தோம், சட்டத்தை எதிர்த்தோம். போலீஸ் கொடுமைகளோடு போரிட்டோம். நீதிமன்றப் படிக்கட்டுகளை வலம் வந்தோம். கடுங்காவல், சிறைத் தண்டனை, தூக்குமேடை, ஆயுள் தண்டனை இவற்றை அவர்கள் அனுபவித்துச் செத்தார்களே என்று எண்ணும் போதுதான். நமது தேசாபிமானமும், மனிதாபிமானமும் நமது ரத்தத்தைச் சூடேற்றுகின்றன.

இவ்வாறு பலவித கொடுமைகளையும் அனுபவித்த பிறகுதான் நமக்குரிய சுதந்திரத்தை வெள்ளையன் வழங்கினான். என்றாலும், ஆங்கிலேயர்கள் கொடியவர்கள்; கொள்ளையர்கள் என்று எண்ணுகிற போது, எரிமலை போல நமது மனம் குமுறுகிறது அல்லவா?

ஆனால், ராஜன் பாபுவின் தேசீயப் போராட்ட வரலாறை, படிக்கும்போது, ரத்தம் சூடாகாது. நிலாவைப் போல சாந்தமே நமது நெஞ்சிலே பொழியும். நம்மை அறியாமல் நமது மனம் அருவியின் சலசலப்பை போல நயமான அமைதியை எழுப்பும் நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; நடப்பவை நல்லவையாக அமையட்டும் என்ற தத்துவத்தைப் போல, யாரையும் பகை கொள்ளப் பண்பையூட்டிக் கொண்டிருப்பதையும் பார்க்கின்றோம்.

எல்லோரும் நல்லவரே எம்கடன் பணி செய்து கிடப்பதே! நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே. நாட்டுக்கு நீ என்ன செய்தாய்? என்ற கேள்வியை எழுப்பி, அந்த உணர்விலே நமது தொண்டுகளைப் பதிவு செய்து கொள்வோம். நாம் வாழ்வது நமக்காக அன்று. நாட்டின் எதிர்கால வாரிசுகளுக்கே என்ற மனநிறைவையும் மகிழ்வையும் ராஜேந்திர பிரசாத் வரலாறு நமக்கு எடுத்துரைக்கிறது.