உள்ளடக்கத்துக்குச் செல்

பாப்பா முதல் பாட்டி வரை/024-024

விக்கிமூலம் இலிருந்து

போலியோவுக்கு விடை கொடுப்போம்

நம் நாட்டில் பெரியம்மை, பிளேக் போன்ற கொடிய நோய்களை முற்றிலும் ஒழித்தது போல, போலியோ நோயையும் ஒழிக்க, தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சுகாதாரப் பிரச்சினை : கை, காலை ஊனமாக்கும் ஆற்றல் படைத்த போலியோ வைரஸ்ஸை, 2000-ம் ஆண்டுக்குள் உலகத்திலிருந்தே அறவே ஒழிக்க வேண்டும் என, 12 ஆண்டுகளுக்கு முன்பு, உலக சுகாதார நிறுவனம் இலக்கு நிர்ணயித்தது. இதை முன்னிட்டுப் போலியோ நோய் ஒழிப்பு முறைகள் உலகம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டன. 156-க்கும் மேற்பட்ட மேலை நாடுகள் போலியோ நோயை ஒழித்து வெற்றி கண்டுள்ளன. ஆனால், இந்தியா, மற்றும் அதைச் சுற்றியுள்ள தென்கிழக்கு ஆசிய நாடுகளில், போலியோ ஒரு சுகாதாரப் பிரச்சினையாக இருந்து வருகிறது.

80 சதவீதக் குழந்தைகள் : உலகம் முழுவதும் போலியோ நோயினால் பாதிக்கப்பட்ட மொத்தக் குழந்தைகளின் எண்ணிக்கையில், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பங்கு மட்டும், 80 சதவீதம் ஆகும். எனவே, நாமும் நமது அண்டை நாடுகளும், போலியோ நோயை ஒழித்தால் தான் போலியோ நோயிலிருந்து உலகம் விடுபட முடியும்.

போலியோ வைரஸ் பரவுவது எப்படி? : போலியோ நோய் பரப்பும் நுண்கிருமிகள், பெரும்பாலும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளேயே தாக்குகின்றன. இக் கிருமிகள், மலத்தின் மூலம் பரவுகின்றன. மூடி வைக்கப்படாமல், ஈ மொய்த்த உணவு, கழிப்பறை சென்றுவிட்டு, சோப்பு போட்டுக் கை கழுவாமல் சாப்பிடுதல், ஆகியவை காரணமாக வாய் வழியாகக் குழந்தையின் வயிற்றுக்குள் இக் கிருமி செல்கிறது. பின்னர் குடலில் தங்கி பல மடங்காகப் பெருகுகிறது.

ஊனம் ஏன்?: குடலில் பல்கிப் பெருகும் போலியோக் கிருமிகள், ரத்த ஒட்டத்தில் கலந்து, முகுதுத் தண்டு வடத்தில் உள்ள நரம்பு மண்டலத்தைத் தாக்கத் தொடங்குகின்றன. இவ்வாறு, நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதால், தசைப் பகுதிகள் பலவீனம் அடைகின்றன. குழந்தைக்குக் காய்ச்சல் ஏற்பட்டு, கை, கால்கள் துவளத் தொடங்குகின்றது. நோய் தீவிரமடையும் நிலையில், கை அல்லது காலில் நிரந்தர ஊனம் ஏற்படுகிறது.

குழந்ததைகளுக்கு ஏன் : குழந்தைகளுக்கு, ஐந்து வயது ஆவதற்குள் மூளை உள்பட, நரம்பில் தொடர்புடைய இணைப்புகள், 90 சதவீத வளர்ச்சி அடைகின்றன. இவ்வாறு வளர்ச்சி அடையும் நிலையில்,போலியோ வைரஸ் முதுகுத் தண்டுவடத்தைத் தாக்கும்போது பெரும்பாலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

100-ல் ஒரு குழந்தை : போலியோ வைரஸ் தாக்கினாலும், எல்லாக் குழந்தைகளும் ஊனம் அடைவதில்லை. 100 குழந்தைகளைப் போலியோ வைரஸ் தாக்கினால், ஒரு குழந்தைக்கு ஊனம் ஏற்படுகிறது. நோய் எதிர்ப்புச் சக்தி காரணமாக, மற்ற குழந்தைகளுக்குப் பாதிப்பு ஏற்படாத குழந்தைகளின், குடலில் போலியோ வைரஸ் தங்கி இருக்கும்.

வெளியேற்றுவது எப்படி? : ஊனமோ அல்லது வேறு விளைவுகளோ ஏற்படாமல் உள்ள குழந்தைகளின் உடலில் இருந்து போலியோ வைரஸை மலம் மூலம் வெளியேற்ற முடியும். இதற்காகவே இலவசமாக போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. அனைத்துக் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்தை ஒரே நேரத்தில் கொடுப்பதன் மூலம் கிருமிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் மலத்தின் மூலம் வெளியேற்றப்படும். இவ்வாறு வெளியேறும் கிருமிகள் சுற்றுப்புற வெப்பத்தில் 48 மணி நேரத்துக்கு மேல் உயிர்வாழ முடியாமல் மடிந்து விடும். நோய் பரப்பும் போலியோ வைரஸ் கிருமிகள் எந்தக் குழந்தையின் குடலிலும் தங்கிப் பெருக வாய்ப்பு இருக்காது. எனவே தான் எந்தக் குழந்தைக்கும் விட்டுப் போகாமல் சொட்டு மருந்து கொடுப்பதற்கான தீவிர முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. இதற்கு பெற்றோரின் ஒத்துழைப்பு மிக அவசியம்.

தமிழகத்தில் : ஒவ்வொரு குழந்தைக்கும் தடுப்பு மருந்துகள் அட்டவணைப்படி பிறந்து ஒன்றரை வயது ஆவதற்குள் ஆறு முறை போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. இவ்வாறு கொடுத்தும் கூட போலியோ வைரஸ் சுற்றுப்புறத்தில் இருந்ததால் கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து தீவிர சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்படுகின்றன.

இவ்வாறு தீவிர சிறப்பு சொட்டு மருந்து முகாம்கள் நடத்தியதன் மூலம் தமிழகத்தில் பலன் கிடைத்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் போலியோ நோயினால் பாதிக்கபடும் நிலை இருந்தது. தீவிர சிறப்பு சொட்டு மருந்து முகாம்கள் காரணமாக 1999-ல் தமிழகத்தில் 11 குழந்தைகள் போலியோ வைரஸால் பாதிக்கப்பட்டனர்; இவர்களில் தூத்துக்குடியைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் உள்பட மூன்று குழந்தைகள் மட்டுமே ஊனம் அடையும் அளவுக்குப் பாதிக்கப்பட்டனர். இந்த அளவுக்கு எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. எனவே வைரஸை சுற்றுப்புறத்திலிருந்து ஒழிப்பதன் மூலம் போலியோ நோய் ஒழிப்பைப் பூர்த்தி செய்ய முடியும்.

நோய் வராமல் தடுத்துக்கொள்ள என்ன வழி ? : குழந்தை பிறந்தது முதலே அட்டவணைப்படி போலியோ சொட்டு மருந்து கொடுத்தல், சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் போதும் சொட்டு மருந்து கொடுத்தல் ஆகியவை மூலம் போலியோ தாக்குதலில் இருந்து குழந்தையைக் காக்க முடியும். மேலும் குழந்தை வளரும் முதல் 5 ஆண்டுதான் முக்கியமான வளர்ச்சிப் பருவம் என்பதால் புரதச்சத்து நிறைந்த உணவுகளைத் தொடர்ந்து கொடுப்பது அவசியம். பால், முட்டை, மீன், பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொடுப்பது அவசியம். ஏனெனில் போலியோ நோய்குத் தடுப்பு உண்டு. சிகிச்சை கிடையாது. நோய் வந்த பிறகு ஊட்டச்சத்து உணவுகள் கொடுத்துப் பலன் இல்லை.

பெற்றோரே : கடந்த அக்டோபர், நவம்பரில் நடந்த முதல் இரண்டு தவணை போலியோ சொட்டு மருந்து முகாம்களில் பெற்றோரின் முழு ஒத்துழைப்பு காரணமாக தமிழகத்தில் 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. எனவே வரும் டிச.19 (ஞாயிறு), ஜனவரி 23 (ஞாயிறு) ஆகிய இரண்டு தேதிகளிலும் நடைபெறும் சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம்களில் அதே ஒத்துழைப்பைத் தர பெற்றோர் தவறக் கூடாது.