பாய்ச்சலூர்ப் பதிகம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
Wikipedia-logo-v2.svg
விக்கிப்பீடியாவில் பின் வரும் தலைப்புக்கான தகவல் தொகுக்கப்பட்டுள்ளது:
Wikipedia-logo-v2.svg
விக்கிப்பீடியாவில் பின் வரும் தலைப்புக்கான தகவல் தொகுக்கப்பட்டுள்ளது:

பதினைந்தாம் நூற்றாண்டில்
உத்தர நல்லூர் நங்கை என்னும்
பெண்பாற்புலவர் பாடிய
பாய்ச்சலூர்ப் பதிகம் என்னும்
நங்கையார் பதிகம்

11 பாடல்கள் கொண்ட இந்த நூலில்
மு. அருணாசலம் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு
பதினைந்தாம் நூற்றாண்டு நூலில் உள்ள எட்டுப் பாடல்கள்

1
ஓதிய நூலும் பொய்யே உடலுயிர் தானும் பொய்யே
சாதியும் ஒன்றை யல்லால் சகலமும் வேற தாமோ
வேதியன் படைத்த தல்லால் விதியினை வெல்லல் ஆமோ
பாதியிற் பழியே சூழ்ந்த பாய்ச்சலூர்க் கிராமத் தாரே.
2
கொக்குமேற் குடுமி கண்டேன் கோழிமேற் சூடும் கண்டேன்
நெக்குறு வாலும் கண்டேன் நீரின்மேல் நெருப்பும் கண்டேன்
சற்குணம் என்று சொல்லிச் சதுர்மறை பேச வேண்டாம்
பக்குவம் அறிந்து பாரும் பாய்ச்சலூர்க் கிராமத் தாரே.
3
வெற்றிலை தாழை வாழை வித்தொன்று முளைப்ப தொன்றோ
பற்றிய யோனி பேதம் பாருளோர் அறிந்தி டாமல்
பெற்றவர் தம்மைத் தேடிப் பிறந்திருந் திறந்து போனார்
பற்றிநின் றலைவ தேனோ பாய்ச்சலூர்க் கிராமத் தாரே.
4
குலம்குலம் என்ப தெல்லாம் குடுமியும் பூணும் நூலும்
சிலந்தியும் நூலும் போலச் சிறப்புடன் பிறப்ப துண்டோ
நலந்தரு நான்கு வேதம் நான்முகன் படைத்த துண்டோ
பலந்தரு பொருளும் உண்டோ பாய்ச்சலூர்க் கிராமத் தாரே.
5
மகம்கொண்ட தேகம் தன்னில் மற்றொரு சுத்தம் காணீர்
அகம்கண்டு புறமும் கண்டும் அவனுக்கே தார மானேன்
சுகம்கண்டு துக்கம் கண்டு சுக்கில வழியே சென்று
பகம்கொண்ட தேனோ என்னில் பாய்ச்சலூர்க் கிராமத் தாரே.
(மகம் = மதம்)
6
ஊருள பார்ப்பார் கூடி உயர்ந்ததோர் சாலை கட்டி
நீரிலே மூழ்கி வந்து நெருப்பிலே நெய்யை விட்டுக்
கார்வயல் தவளை போலக் கதறிய வேதம் தானும்
பாரைவிட் டகன்ற தாமோ பாய்ச்சலூர்க் கிராமத் தாரே.
7
சந்தனம் அகிலும் வேம்பும் தனித்தனிக் கந்தம் நாறும்
அந்தணர் தீயில் வீழ்ந்தால் அவர்மணம் வீசக் காணோம்
செந்தலைப் புலையன் வீழ்ந்தால் தீமணம் வேற தாமோ
பந்தமும் தீயும் வேறோ பாய்ச்சலூர்க் கிராமத் தாரே.
8
ஒருபனை இரண்டு பாளை ஒன்று நுங்கு ஒன்று கள்ளு
அறிவினில் அறிந்த வர்க்கே அதுவும் கள் இதுவும் கள்ளே
ஒருகுலை உயர்ந்த தேனோ ஒருகுலை தாழ்ந்த தேனோ
பறையனைப் பழிப்ப தேனோ பாய்ச்சலூர்க் கிராமத் தாரே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பாய்ச்சலூர்ப்_பதிகம்&oldid=17668" இருந்து மீள்விக்கப்பட்டது