பாரதிதாசன்-முதற்பாடல்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

பாரதிதாசன் தமிழ்த்தாய் தவமிருந்து பெற்றெடுத்த புரட்சிப் பாவலர்! தன் ஆசான் பாரதியின் நேரடி வளர்ப்பில் உருவானவர்! பாரதி மறைவுக்குப்பின் தந்தை பெரியாரின் பாசறையில் சங்கமமானவர்! என்றாலும் தனக்கென ஒருதனித்தன்மை கொண்டவர்; சங்கப்புலவர் பெருஞ்சித்திரனார் போன்று எவர்க்கும் அஞ்சாத நெஞ்சினர்! பாரதியின் பாட்டுப்பாசறையில் வளர்ந்த பாரதிதாசன், முன்னரே கவிதை படைக்கும் திறன் உடையவர் என்றாலும், அவர்கவிதை பாரதியின் சந்திப்புக்குப்பின் புதியதடம் கண்டது; இதனைப் பாரதிதாசனே பலமுறை கூறியுள்ளார். தம் குருநாதர் பாரதியின் முன்னிலையில் அவர்பாடிய முதற்பாடல் இது!

பாரதிமுன் அவர் பாடிய முதற்பாடல்[தொகு]

[தொகு]


எங்கெங்குக் காணினும் சக்தியடா! தம்பி
ஏழுகடல் அவள் வண்ணமடா! அங்குத்
தங்கும் வெளியினில் கோடியண்டம் அந்தத்
தாயின் கைப்பந்தென ஓடுமடா ஒரு
கங்குலில் ஏழு முகிலினமும் வந்து
கர்ச்சனை செய்வது கண்டதுண்டோ எனில்
மங்கை நகைத்த ஒலியெனலாம் அவள்
மந்த நகை யங்கு மின்னுதடா!

காளை ஒருவன் கவிச்சுவையைக் கரை
காண நினைத்த முழுநினைப்பில் அன்னை
தோளசைத் தங்கு நடம்புரிவாள் அவன்
தொல்லறி வாளர் திறம் பெறுவான் ஒரு
வாளைச் சுழற்றும் விசையினிலே இந்த
வைய முழுவதும் துண்டுசெய்வேன் என
நீள இடையின்றி நீநினைத்தால் அம்மை
நேர்படுவாள் உன்றன் தோளினிலே!