பாரதியாரின் சிறுகதைகள்/சிறுகதை

விக்கிமூலம் இலிருந்து

ஒரு வீட்டில் ஒரு புருஷனும், ஸ்திரீயும் குடியிருந்தார்கள். ஒருநாள் இரவில் புருஷன் வீட்டுக்கு வரும்போது ஸ்திரீ சமையல் செய்து கொண்டிருந்தாள். சோறு பாதி கொதித்துக் கொண்டிருந்தது. அந்த ஸ்திரீ அன்றிரவு கொஞ்சம் உடம்பு அஸௌகரியமாக இருந்த படியால், தனக்கு, ஆஹாரம் வேண்டாமென்று நிச்சயித்துப் புருஷனுக்கு மாத்திரமென்று சமைத்தாள்.

புருஷன் வந்தவுடன், நான் இன்றிரவு விரதமிருக்கப் போகிறேன். எனக்கு ஆஹாரம் வேண்டாம் என்றான்.

உடனே பாதி கொதிக்கிற சோற்றை அவள் அப்படியே சும்மா விட்டுவிட்டு அடுப்பை நீரால் அவித்து விடவில்லை தங்களிருவருக்கும் உபயோகமில்லாவிடினும் மறுநாள் காலையில் வேலைக்காரிக்கு உதவுமென்று நினைத்து அது நன்றாகக் கொதிக்கும் வரை காத்திருந்து வடித்து வைத்து விட்டுப் பிறகு நித்திரைக்குச் சென்றாள்.

அது போலவே, கர்மயோகி தான் ஒரு தொழில் செய்யத் தொடங்கி, இடையிலே அது தனக்குப் பயனில்லையென்று தோன்றினால், அதை அப்படியே நிறுத்திவிடமாட்டான். பிறருக்குப் பயன் தருமென்பதைக் கொண்டு, தான் எடுத்த வேலையை முடித்த பிறகே வேறு காரியம் தொடங்குவான்.

பிரார்த்தனை

கிழவனுடைய அறிவு முதிர்ச்சியும், நடு வயதிற்குள்ள மனத்திடனும், இளைஞருடைய உத்ஸாஹமும், குழந்தையின் ஹிருதயமும், தேவர்களே, எனக்கு எப்போதும் நிலைத்திருக்கும் படி அருள் செய்க.