பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/16. மஹாசக்தி வெண்பா
Appearance
16. மஹாசக்தி வெண்பா
தன்னை மறந்து சகல உலகினையும்
மன்ன நிதங்காக்கும் மஹாசக்தி-அன்னை
அவளே துணையென் றனவரதம் நெஞ்சம்
துவளா திருத்தல் சுகம்
நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கி,
அஞ்சி உயிர்வாழ்தல் அறியாமை;-தஞ்சமென்றே
வையமெலாங் காக்கும் மஹாசக்தி நல்லருளை
ஐயமறப் பற்றல் அறிவு
வையகத்துக் கில்லை,மனமே!நினக்குநலஞ்
செய்யக் கருதியிவை செப்புவேன்-பொய்யில்லை
எல்லாம் புரக்கும் இறைநமையுங் காக்குமென்ற
சொல்லால் அழியும் துயர்.
எண்ணிற் கடங்காமல் எங்கும் பரந்தனவாய்
விண்ணிற் சுடர்கின்ற மீனையெல்லாம் பண்ணிய
சக்தியே நம்மைச் சமைத்ததுகாண். நூறாண்டு
பக்தியுடன் வாழும் படிக்கு