பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/23. சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

23.சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம்

ராகம்-பூபாளம் தாளம்-சதுஸ்ர ஏகம்

கையைச், சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சாதனைகள் யாவினையுங் கூடும்-கையைச்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சக்தியுற்றுக் கல்வினையுஞ் சாடும்.

கண்ணைச்,சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சக்தி வழியினையது காணும்-கண்ணைச்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சத்தியமும் நல்லருளும் பூணும்.

செவி, சக்தி தனக்கே கருவி யாக்கு-சிவ
சக்திசொலும் மொழியது கேட்கும்-செவி
சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சக்தி திருப் பாடலினை வேட்கும்.

வாய், சக்தி தனக்கே கருவி யாக்கு-சிவ
சக்தி புகழினையது முழங்கும்-வாய்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சக்திநெறி யாவினையும் வழங்கும்.

சிவ, சக்திதனை நாசி நித்தம் முகரும்-அதைச்
சக்தி தனக்கே கருவி யாக்கு-சிவ
சக்திதிருச் சுவையினை நுகரும்-சிவ
சக்தி தனக்கே எமது நாக்கு.

மெய்யைச்,சக்தி தனக்கே கருவி யாக்கு-சிவ
சக்திதருந் திறனதி லேறும்-மெய்யைச்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சாதலற்ற வழியினைத் தேறும்

கண்டம், சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சத்தமும் நல்லமுதைப் பாடும்-கண்டம்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சக்தியுடன் என் றும்உற வாடும்.

தோள், சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
தாரணியும் மேலுலகுந் தாங்கும்-தோள்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சக்தி பெற்று மேருவென ஓங்கும்.

நெஞ்சம், சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சக்தியுற நித்தம் விரிவாகும்-நெஞ்சம்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அதைத்
தாக்கவரும் வாளொதுங்கிப் போகும்.

சிவ, சக்தி தனக்கே எமது வயிறு-அது
சாம்பரையும் நல்லவுண வாக்கும்-சிவ
சக்தி தனக்கே எமது வயிறு-அது
சக்திபெற உடலினைக் காக்கும்.

இடை, சக்தி தனக்கே கருவி யாக்கு-நல்ல
சக்தியுள்ள சந்ததிகள் தோன்றும்-இடை
சக்தி தனக்கே கருவி யாக்கு-நின்தன்
சாதிமுற்றும் நல்லறத்தில் ஊன்றும்.

கால், சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சாடியெழு கடலையுந் தாவும்-கால்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சஞ்சலமில் லாமலெங்கும் மேவும்.

மனம், சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சஞ்சலங்கள் தீர்ந்தொருமை கூடும்-மனம்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சாத்துவிகத் தன்மையினைச் சூடும்.

மனம், சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சக்தியற்ற சிந்தனைகள் தீரும்-மனம்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சாரும் நல்ல உறுதியும் சீரும்.

மனம், சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சக்திசக்தி சக்தியென்று பேசும்-மனம்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அதில்
சார்ந்திருக்கும் நல்லுறவும் தேசும்.

மனம், சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சக்தி நுட்பம் யாவினையும் நாடும்-மனம்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சக்திசக்தி யென்றுகுதித் தாடும்.

மனம், சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சக்தியினை எத்திசையும் சேர்க்கும்-மனம்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
தான் விரும்வில் மாமலையைக் பேர்க்கும்

மனம், சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சந்ததமும் சக்திதனைச் சூழும்-மனம்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சாவுபெறும் தீவினையும் ஊழும்.

மனம், சக்தி தனக்கே கருவி யாக்கு-எதைக்
தான் விரும்பு னாலும்வந்து சேரும்-மனம்
சக்தி தனக்கே உரிமை யாக்கு-உடல்
தன்னிலுயர் சக்திவந்து சேரும்.

மனம், சக்தி தனக்கே கருவி யாக்கு-இந்தத்
தாரணியில் நூ றுவய தாகும்-மனம்
சக்தி தனக்கே கருவி யாக்கு-உன்னைச்
சாரவந்த நோயழிந்து போகும்.

மனம், சக்தி தனக்கே கருவி யாக்கு-தோள்
சக்திபெற்று நல்ல தொழில் செய்யும்-மனம்
சக்தி தனக்கே கருவி யாக்கு-எங்கும்
சக்தியருள் மாரிவந்து பெய்யும்.

மனம், சக்தி தனக்கே கருவி யாக்கு-சிவ
சக்தி நடையாவும் நன்கு பழகும்-மனம்
சக்தி தனக்கே கருவி யாக்கு-முகம்
சார்ந்திருக்கும் நல்லருளும் அழகும்.

மனம், சக்தி தனக்கே கருவி யாக்கு-உயர்
சாத்திரங்கள் யாவும் நன்கு தெரியும்-மனம்
சக்தி தனக்கே கருவி யாக்கு-நல்ல
சத்திய விளக்குநித்தம் எரியும்

சித்தம், சக்தி தனக்கே உரிமை யாக்கு-நல்ல
தாளவகை சந்தவகை காட்டும்-சித்தம்
சக்தி தனக்கே உரிமை யாக்கு-அதில்
சாரும்நல்ல வார்த்தைகளும் பாட்டும்.

சித்தம், சக்தி தனக்கே உரிமை யாக்கு-அது
சக்தியையெல்லோர்க்குமுணர்வுறுத்தும்-சித்தம்
சக்தி தனக்கே உரிமை யாக்கு-அது
சக்திபுகழ் திக்கனைத்தும் நிறுத்தும்.

சித்தம், சக்தி தனக்கே உரிமை யாக்கு-அது
சக்திசக்தி யென்று குழலூதும்-சித்தம்
சக்தி தனக்கே உரிமை யாக்கு-அதில்
சார்வதில்லை அச்சமுடன் சூதும்.

சித்தம், சக்தி தனக்கே உரிமை யாக்கு-அது
சக்தியென்று வீணைதனில் பேசும்-சித்தம்
சக்தி தனக்கே உரிமை யாக்கு-அதில்
சக்திபரி மளமிங்கு வீசும்.

சித்தம், சக்தி தனக்கே உரிமை யாக்கு-அது
சக்தியென்று தாளமிட்டு முழக்கும்-சித்தம்
சக்தி தனக்கே உரிமை யாக்கு-அது
சஞ்சலங்கள் யாவினையும் அழிக்கும்

சித்தம், சக்தி தனக்கே உரிமை யாக்கு-அது
சக்திவந்து கோட்டைகட்டி வாழும்-சித்தம்
சக்தி தனக்கே உரிமை யாக்கு-அது
சக்தியருட் சித்திரத்தில் ஆழும்

மதி, சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது
சங்கடங்கள் யானையும் உடைக்கும்-மதி
சக்தி தனக்கே உடைமை யாக்கு-அங்கு
சத்தியமும் நல்லறமும் கிடைக்கும்.

மதி, சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது
சாரவரும் தீமைகளை விலக்கும்-மதி
சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது
சஞ்சலப் பிசாசுகளைக் கலக்கும்.

மதி, சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது
சக்தி செய்யும் விந்தைகளைத் தேடும்-மதி
சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது
சக்தியுறை விடங்களை நாடும்.

மதி, சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது
தர்க்கமெனுங் காட்டிலச்சம் நீங்கும்-மதி
சக்தி தனக்கே உடைமை யாக்கு-அதில்
தள்ளி விடும் பொய்ந்நெறியும் நீங்கும்.

மதி, சக்தி தனக்கே உடைமை யாக்கு-அதில்
சஞ்சலத்தின் தீயவிருள் விலகும்-மதி
சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது
சக்தியொளி நித்தமுநின் றிலகும்.

மதி, சக்தி தனக்கே உடைமை யாக்கு-அதில்
சார்வதில்லை ஐயமெனும் பாம்பு-மதி
சக்தி தனக்கே உடைமை யாக்கு-அங்கு
தான் முளைக்கும் முக்திவிதைக் காம்பு.

மதி, சக்தி தனக்கே அடிமை யாக்கு-அது
தாரணியில் அன்பு நிலை நாட்டும்-மதி
சக்தி தனக்கே அடிமை யாக்கு-அது
சர்வசிவ சக்தியினைக் காட்டும்.

மதி, சக்தி தனக்கே அடிமை யாக்கு-அது
சக்திதிரு வருளினைச் சேர்க்கும்-மதி
சக்தி தனக்கே அடிமை யாக்கு-அது
தாமதப்பொய்த் தீமைகளைப் பேர்க்கும்

மதி, சக்தி தனக்கே அடிமை யாக்கு-அது
சத்தியத்தின் வெல்கொடியை நாட்டும்-மதி
சக்தி தனக்கே அடிமை யாக்கு-அது
தாக்கவரும பொய்ப்புலியை ஓட்டும்.

மதி, சக்தி தனக்கே அடிமை யாக்கு-அது
சத்தியநல் லிரவியைக் காட்டும்-மதி
சக்தி தனக்கே அடிமை யாக்கு-அதில்
சாரவரும் புயல்களை வாட்டும்.

மதி, சக்தி தனக்கே அடிமை யாக்கு-அது
சக்திவிர தத்தையென்றும் பூணும்-மதி
சத்திவர தத்தை யென்றுங் காத்தால்-சிவ
சக்திதரும் இன்பமும்நல் லூணும்.

மதி, சக்தி தனக்கே அடிமை யாக்கு-தெளி
தந்தமுதப் பொய்கையென ஒளிரும்-மதி
சக்தி தனக்கே அடிமை யாக்கு-அது
சந்ததமும் இன்பமுற மிளிரும்.

அகம், சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது
தன்னையொரு சக்தியென்று தேரும்-அகம்
சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது
தாமதமும் ஆணவமும் தீரும்.

அகம், சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது
தன்னையவள் கோயிலென் றுகாணும்-அகம்
சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது
தன்னை யெண்ணித் துன்பமுற நாணும்.

அகம், சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது
சக்தியெனும் கடலிலோர் திவலை-அகம்
சக்தி தனக்கே உடைமை யாக்கு-சிவ
சக்தியுண்டு நமக்கில்லை கவலை.

அகம், சக்தி தனக்கே உடைமை யாக்கு-அதில்
சக்திசிவ நாதநித்தம் ஒலிக்கும்-அகம்
சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது
சக்திதிரு மேனியொளி ஜ்வலிக்கும்.

சிவ, சக்தி என்றும் வாழி! என்று பாடு-சிவ
சக்தி சக்தி என்றுகுதித் தாடு-சிவ
சக்தி என்றும் வாழி! என்று பாடு-சிவ
சக்திசக்தி என்றுவிளை யாடு.