பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/26. பேதை நெஞ்சே

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

26.பேதை நெஞ்சே!

இன்னுமொரு முறைசொல்வேன்,பேதை நெஞ்சே!
எதற்குமினி உளைவதிலே பயனொன் றில்லை;
முன்னர்நம திச்சையினாற் பிறந்தோ மில்லை;
முதலிறுதி இடைநமது வசத்தில் இல்லை;
மன்னுமொரு தெய்வத்தின் சக்தி யாலே
வையகத்திற் பொருளெல்லாம் சலித்தல் கண்டாய்!
பின்னையொரு கவலையுமிங் கில்லை,நாளும்
பிரியாதே விடுதலையைப் பிடித்துக் கொள்வாய்!

நினையாத விளைவெல்லாம் விளைந்து கூடி,
நினைத்தபயன் காண்பதவன் செய்கையன்றோ?
மனமார உண்மையினைப் புரட்டலாமோ?
மஹாசக்தி செய்தநன்றி மறக்க லாமோ?
எனையாளும் மாதேவி,வீரார் தேவி,
இமையவருந் தொழுந்தேவி, எல்லைத் தேவி,
மனைவாழ்வு பொருளெல்லாம் வகுக்குந் தேவி,
மலரடியே துணையென்று வாழ்த்தாய் நெஞ்சே!

சக்தியென்று புகழ்ந்திடுவோம் முருகன் என்போம்;
சங்கரனென் றுரைத்திடுவோம்,கண்ணன் என்போம்;
நித்தியமிங் கவள்சரணே நிலையென் றெண்ணி,
நினக்குள்ள குறைகளெல்லாந் தீர்க்கச் சொல்லி
பக்தியினாற் பெருமையெல்லாம் கொடுக்கச் சொல்லி,
பசிபிணிக ளில்லாமற் காக்கச் சொல்லி,
உத்தமநன் னெறிகளிலே சேர்க்கச் சொல்லி,.
உலகளந்த நாயகிதாள் உரைப்பாய்,நெஞ்சே!

செல்வங்கள் கேட்டால்நீ கொடுக்க வேண்டும்.
சிறுமைகளென் னிடமிருந்தால் விடுக்க வேண்டும்;
கல்வியிலே மதியினைநீ தொடுக்க வேண்டும்.
கருணையினால் ஐயங்கள் கெடுக்க வேண்டும்,
தொல்லைதரும் அகப்பேயைத் தொலைக்க வேண்டும்
துணையென்று நின்னருளைத் தொடரச் செய்தே
ந்லலவழி சேர்ப்பித்துக் காக்க வேண்டும்.
‘நமோநமஓம் சக்தி’ யென நவிலாய் நெஞ்சே!

பாட்டினிலே சொல்லுவதும் அவள்சொல் லாகும்;
பயனனிறி உரைப்பாளோ? பாராய், நெஞ்சே!
கேட்டதுநீ பெற்றிடுவாய்,ஐயமில்லை;
கேடில்லை,தெய்வமுண்டு,வெற்றி யுண்டு;
மீட்டுமுனக் குரைத்திடுவேன், ஆதிச சக்தி,
வேதத்தின் முடியினிலே விளங்கும் சதி,
நாட்டினிலே சனகனைபோல் நமையும் செய்தாள்;
‘நமோநம,ஓம் சக்தி‘ யென நவிலாய் நெஞ்சே!