பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/32. மகா சக்தி பஞ்சகம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

32. மஹா சக்தி பஞ்சகம்

கரணமுந் தனுவும் நினக்கெனத் தந்தேன்,
காளிநீ காத்தருள் செய்யே;
மரணமும் அஞ்சேன்;நோய்களை அஞ்சேன்;
மாரவெம் பேயினை அஞ்சேன்.
இரணமுஞ் சுகமும்,பழியுநற் புகழும்
யாவுமோர் பொருளெனக் கொள்ளேன்;
சரணமென் றுனது பதமலர் பணிந்தேன்
தாயெனைக் காத்தலுன் கடனே.

எண்ணிலாப் பொருளும்,எல்லையில்,வெளியும்
யாவுமா நின்தனைப் போற்றி,
மணிணிலார் வந்து வாழ்த்தினுஞ் செறினும்
மயங்கிலேன்;மனமெனும் பெயர்கொள்
கண்ணிலாப் பேயை எள்ளுவேன்;இனியெக்
காலுமே அமைதியி லிருப்பேன்;
தண்ணிலா முடியிற் புனைந்துநின் றிலகும்
தாயுனைச் சரண்புகுந் தேனால்.

நீசருக் கினிதாந் தனத்தினும், மாதர்
நினைப்பினும்,நெறியிலா மாக்கள்
மாசுறு பொய்ந்நட் பதனிலும், பன்னாள்
மயங்கினேன்;அதையினி மதியேன்;
தேசுறு நீல நிறத்தினாள்,அறிவாய்ச்
சிந்தையிற் குலவிடு திறத்தாள்.
வீசுறுங் காற்றில் நெருப்பினில் வெளியில்
விளங்குவாள் தனைச்சரண் புகுந்தேன்.

ஐயமுந் திகப்புந் தொலைந்தன; ஆங்கே
அச்சமுந் தொலைந்தது;சினமும்
பொய்யுமென் றினைய புன்மைக ளெல்லாம்
போயின; உறுதிநான் கண்டேன்,
வையமிங் கனைத்தும் ஆக்கியும் காத்தும்
மாய்த்துமே மகிழ்ந்திடு தாயைத்
துய்யவெண் ணிறத்தாள் தனைக்கரி யவளைத்
துணையெனத் தொடர்ந்தது கொண்டே.

தவத்தினை எளிதாப் புரிந்தனள், யோகத்
தனிநிலை எளிதெனப் புரிந்தாள்;
சிவத்தினை இனிதாப் புரிந்தனள்,மூடச்
சித்தமும் தெளிவுறச் செய்தாள்;
பவத்தினை வெறுப்ப அருளினள், நானாம்
பான்மை கொன் றவன்மயம் புரிந்தாள்;
அவத்தினைக் களைந்தாள் அறிவென விளைந்தாள்,
அநந்தமா வாழ்கஇங் கவளே!