பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/36. காளி தருவாள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

36. காளி தருவாள்

எண்ணி லாத பொருட்குவை தானும்,
ஏற்றமும், புவி யாட்சியும் ஆங்கே
விண்ணில் ஆதவன் நேர்ந்திடும் ஒளிம்
வெம்மை யும்பெருந் திணமையும் அறிவும்,
தண்ணி லாவின் அமைதியும் அருளும்
தருவள் இன்றென தன்னை யென்காளி;
மண்ணி லார்க்குந் துயரின்றிச் செய்வேன்,
வறுமை யென்பதை மண்மிசை மாய்ப்பேன்.

தானம் வேள்வி தவங்கல்வி யாவும்
தரணி மீதில் நிலைபெறச் செய்வேன்,
வானம் மூன்று மழைதரச் செய்வேன்
மாறி லாத வளங்கள் கொடுப்பேன்;
மானம் வீரியம் ஆண்மை நன்னேர்மை
வண்மை யாவும் வழங்கறச் செய்வேன்,
நான்வி ரும்பின காளி தருவாள்.