உள்ளடக்கத்துக்குச் செல்

பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/40. தேச முத்துமாரி

விக்கிமூலம் இலிருந்து
40. தேச முத்துமாரி

தேடியுனைச் சரணடைந்தேன்,தேச முத்து மாரி!
கேடதனை நீக்கிடுவாய், கேட்டவரந் தருவாய்

பாடியுனைச் சரணடைந்தேன் பாசமெல்லாங் களைவாய்;
கோடிநலஞ் செய்திடுவாய்,குறைகளெல்லாந் தீர்ப்பாய்

எப்பொழுதும் கவலையிலே இணங்கி நிற்பான் பாவி;
ஒப்பியுன தேவல்செய்வேன் உனதருளால் வாழ்வேன்

சக்தி யென்று நேர மெல்லாந் தமிழ்க் கவிதை பாடி,
பக்தியுடன் போற்றி நின்றால் பயமனைத்துந் தீரும்

ஆதாரம் சக்தி யென்றே அருமறைகள் கூறும்;
யாதானுந் தொழில் புரிவோம்;யாதுமவள் தொழி
லாம்

துன்பமே இயற்கையெனும் சொல்லைமறந் திடுவோம்;
இன்பமே வேண்டி நிற்போம்;யாவுமவள் தருவாள்

நம்பினார் கெடுவ தில்லை;நான்கு மறைத் தீர்ப்பு;
அம்பி கையைச் சரண் புகுந்தால் அதிகவரம் பெறலாம்.