பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/44. கண்ணனை வேண்டுதல்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

44. கண்ணனை வேண்டுதல்

வேத வானில் விளங்கி"அறஞ்செய்மின்,
சாதல் நேரினுஞ் சத்தியம் பூணுமின்,
தீத கற்றுமின்"என்று திசையெல்லாம்
மோத நித்தம் இடித்து முழுங்கியே.

உண்ணுஞ் சாதிக் குறக்கமும் சாவுமே
நண்ணு றாவணம் நன்கு புரந்திடும்
எண்ண ரும்புகழ்க் கீதையெனச் சொலும்
பண்ண மிழ்தத் தருள்மழை பாலித்தே,

எங்க ளாரிய பூமி யெனும்பயிர்
மக்க ளம்பெற நித்தலும் வாழ்விக்கும்
துங்க முற்ற துணைமுகி லே! மலர்ச்
செங்க ணாய்நின் பதமலர் சிந்திப்பாம்

வீரர் தெவ்தம் கர்ம விளக்குநற்
பார தர்செய் தவத்தின் பயனெ னும்
தார விர்ந்த தடம்புயக் பாத்தனோர்
கார ணம்மெனக் கொண்டு கடவுள்நீ.

நின்னை நம்பி நிலத்திடை யென்றுமே
மன்னு பாரத மாண்குலம் யாவிற்கும்
உன்னுங் காலை உயர்துணை யாகவே
சொன்ன சொல்லை யுயிரிடைச் சூடுவோம்.

ஐய கேளினி யோர்சொல் அடியர்யாம்
உய்ய நின்மொழி பற்றி யோழுகிய
மைய றும்புகழ் வாழ்க்கை பெறற்கெனச்
செய்யும் செய்கையி னின்னருள் சேர்பையால்.

ஒப்பி லாத உயர்வொடு கல்வியும்
எய்ப்பில் வீரமும் இப்புவி யாட்சியும்
தப்பி லாத தருமமுங் கொண்டுயாம்
அப்ப னேநின் னடிபணிந் துய்வமால்.

மற்று நீயிந்த வாழ்பு மறுப்பையேல்
சற்று நேரத்துள் எம்முயிர் சாய்த்தருள்
கொற்ற வா!நின் குவலய மீதினில்
வெற்று வாழ்க்கை விரும்பி யழிகிலேம்.

நின்தன் மாமர பில்வந்து நீசராய்ப்
பொன்றல் வேண்டிலம் பொற்கழ லாணைகாண்
இன்றிங் கெம்மை யதம்புரி, இல்லையேல்
வென்றி யும்புக ழுந்தரல் வேண்டுமே.