உள்ளடக்கத்துக்குச் செல்

பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/53. மனப் பீடம்

விக்கிமூலம் இலிருந்து

53. மனப் பீடம்

பல்லவி

பீடத்தி லேறிக் கொண்டாள்-மனப்
பீடத்தி லேறிக் கொண்டாள்.

சரணங்கள்

நாடித் தவம் புரிந்து பீடுற்ற முனிவரர்
கேடற்ற தென்று கண்டு கூடக் கருது மொளி
மாடத்தி லேறி ஞானக்ச கூடத்தில் விளையாடி
ஓடத் திருந்து கன்னி வேடத்தி ரதியைப்போல்,
ஈடற்ற கற்பனைகள் காடுற்ற சிந்தனைகள்
மூடிக் கிடக்கு நெஞ்சின் ஊடுற் றதை யமரர்
தேடித் தவிக்கு மின்ப வீடொத் தினிமைசெய்து
வேடத்தி சிறுவள்ளி வித்தையென் கண்ணம்மா (பீடத்தி)

கண்ணன் திருமார்பிற் கலந்த கமலை யென்கோ?
விண்ணவர் தொழுதிடும் வீரச் சிங்காதனத்தே
நண்ணிச் சிவனுடலை நாடுமவ ளென்கோ?
எண்ணத்துதிக்குதடா இவள்பொன் னுடலமுதம்!
பெண்ணி லரசியிவள் பெரிய எரி லுடையாள்
கண்ணுள் கணியெனக்குக் காத லிரதியிவள்
பண்ணி லினிய சுவை பரந்த மொழியினாள்
உண்ணு மிதழமுற ஊற்றினள் கண்ணம்மா (பீடத்தி)