பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/58. திருமகளைச் சரண்புகுதல்

விக்கிமூலம் இலிருந்து

58. திருமகளைச் சரண் புகுதல்

 
மாதவன் சக்தியினைச்-செய்ய
மலர்வளர் மணியினை வாழ்த்திடுவோம்;
போதுமிவ் வறுமையெலாம்-எந்தப்
போதிலுஞ் சிறுமையின் புகைதனிலே
வேதனைப் படுமனமும்-உயர்
வேதமும் வெறுப்புறச் சோர்மதியும்
வாதனை பொறுக்கவில்லை-அன்னை
மாமக ளடியிணை சரண் புகுவோம்.

கீழ்களின் அவமதிப்பும்-தொழில்
கெட்டவ னிணக்கமும் கிணற்றினுள்ளே
மூழ்கிய விளக்கினைப் போல்-செய்யும்
முயற்சியெல் லாங்கெட்ட முடிவதுவும்,
ஏழ்கட லோடியுமோர்-பயன்
எய்திட வழியின்றி இருப்பதுவும்,
வீழ்கஇக்கொடு நோய்தான்-வைய
மீதினில் வறுமையோர் கொடுமை யன்றோ?

பாற்கட லிடைப் பிறந்தாள்-அது
பயந்தநல் லமுதத்தின் பான்மைகொண்டாள்;
ஏற்குமோர் தாமரைப்பூ-அதில்
இணைமலர்த் திருவடி இசைந்திருப்பாள்;
நாற்கரந் தானுடையாள்-அந்த
நான்கினும் பலவகைத் திருவுடையாள்;
வேற்கரு விழியுடையாள்-செய்ய
மேனியள் பசுமையை விரும்பிடுவாள்.

நாரணன் மார்பினிலே-அன்பு
நலமுற நித்தமும் இணைந்திருப்பாள்;
தோரணப் பந்தரிலும்-பசுத்
தொழுவிலும் சுடர்மணி மாடத்திலும்,
வீரர்தந் தோளினிலும்-உடல்
வெயர்திட உழைப்பவர் தொழில்களிலம்
பாரதி சிரத்தினிலும்-ஒளி
பரவிட வீற்றிருந் தருள் புரிவாள்.

பொன்னிலும் மணிகளிலும் -நறும்
பூவிலும் சாந்திலும் விளக்கினிலும்,
கன்னியர் நகைப்பினிலும்-செழுங்
காட்டிலும் பொழிலிலம் கழனியிலம்,
முன்னிய தணிவினிலும்-மன்னர்
முகத்திலும் வாழ்ந்திடும் திருமகளைப்
பன்னிநற் புகழ்பாடி-அவள்
பதமலர் வாழ்த்திநற் பதம்பெறு வோம்.

மண்ணினுட் கனிகளிலும்-மலை
வாய்ப்பிலும் வார்கட லாழத்திலும்,
புண்ணிய வேள்வியிலும்-உயர்
புகழிலும் மதியிலும் புதுமையிலும்
பண்ணுநற் பாவையிலும்-நல்ல
பாட்டிலும் கூத்திலும் படத்தினிலும்,
நண்ணிய தேவிதனை-எங்கள்
நாவிலும் மனத்திலும் நாட்டிடுவோம்.

வெற்றிகொள் படையினிலும்-பல
விநயங்கள் அறிந்தவர் கடையினிலும்
நற்றவ நடையினிலும்-நல்
நாவலர் தேமொழித் தொடரினிலும்,
உற்றசெந் திருத்தாயை-நித்தம்
உவகையிற் போற்றியிங் குயர்ந்திடுவோம்;
கற்றபல் கலைகளெல்லாம்-அவள்
கருணை நல் லொளிபெறக் கலிதவிர்ப்போம்.