பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/70. ஞானபாநு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

70. ஞான பாநு

திருவளர் வாழக்கை,கீர்த்தி,தீரம்,நல் லறிவு,வீரம்,
மருவுபல் கலையின் சோதி, வல்லமை யென்ப வெல்லாம்,
வருவது ஞானத் தாலே வையக முழுதும் எங்கள்
பெருமைதான் நிலவி நிற்கப் பிறந்தது ஞான பாநு.

கவலைகள்,சிறுமை,நோவு,கைதவம் வறுமைத் துன்பம்,
அவலமா மனைத்தைக் காட்டில் அவலமாம் புலைமை யச்சம்,
இவையெலாம் அறிவி லாமை என்பதோர் இருளிற் பேயாம்
நவமுறு ஞான பாநு நண்ணுக;தொலைக பேய்கள்.

அனைத்தையும் தேவர்க்காக்கி அறத்தொழில் செய்யும் மேலோர்
மனத்திலே சக்தி யாக வளர்வது நெருப்புத் தெய்வம்;
தினத்தொளி ஞானங் கண்டீர் இரண்டுமே சேர்ந்தால் வானோர்
இனத்திலே கூடி வாழ்வர் மனிதரென் றிசைக்கும் வேதம்.

பண்ணிய முயற்சியெல்லாம் பயனுற வோங்கும்,ஆங்கே
எண்ணிய எண்ண மெல்லாம் எளிதிலே வெற்றி யெய்தும்;
திண்ணிய கருத்தி னோடும் சிரித்திடு முகத்தினோடும்
நண்ணிடும் ஞான பாநு,அதனைநாம் நன்கு போற்றின்.