பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/73. தீ வளர்த்திடுவோம்!

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

73. தீ வளர்த்திடுவோம்!

யாகப் பாட்டு

ராகம்-புன்னாகவராளி

பல்லவி

தீ வளர்த்திடுவோம்!-பெருந்
தீ வளர்த்திடுவோம்!

சரணங்கள்

ஆவியி னுள்ளம் அறிவி னிடையிலும்
அன்பை வளர்த்திடுவோம்-விண்ணின்
ஆசை வளர்த்திடுவோம்-களி
ஆவல் வளர்த்திடுவோம்-ஒரு
தேவி மகனைத் திறமைக் கடவுளைச்
செங்கதிர் வானவனை -விண்ணோர் தமைத்
தேனுக் கழைப்பவனைப்-பெருந்திரள்
சேர்ந்து பணிந்திடுவோம்-வாரீர்! (தீ)

சித்தத் துணிவினை மானுடர் கேள்வனைத்
தீமை யழிப்பவனை-நன்மை
சேர்த்துக் கொடுப்பவனைப்-பல
சீர்க ளுடையவனைப்-புவி
அத்தனையுஞ்சுட ரேறத் திகழ்ந்திடும்
ஆரியர் நாயகனை-உருத்திரன்
அன்புத் திருமகனை-பெருந்திர
ளாகிப் பணிந்திடுவோம்-வாரீர்! (தீ)

கட்டுக்கள் போக்கி விடுதலை தந்திடுங்
கண்மணி போன்றவனை-எம்மைக்
காவல் புரிபவனைத்-தொல்லைக்
காட்டை யழிப்பவனைத்-திசை
எட்டும் புகழ்வளர்ந் தோங்கிட வித்தைகள்
யாவும் பழகிடவே-புவிமிசை
இன்பம் பெருகிடவே-பெருந்திரள்
எய்திப் பணிந்திடுவோம்-வாரீர்! (தீ)

நெஞ்சிற் கவலைகள் நோவுகள் யாவையும்
நீக்கிக் கொடுப்பவனை-உயிர்
நீளத் தருபவனை-ஒளிர்
நேர்மைப் பெருங்கனலை-நித்தம்
அஞ்ச லங்சேலென்று கூறி எமக்குநல்
ஆண்மை சமைப்பவனைப் பல் வெற்றிகள்
ஆக்கிக் கொடுப்பவனைப்-பெருந்திரள்
ஆகிப் பணிந்திடுவோம்-வாரீர்! (தீ)

அச்சதைச் சுட்டங்கு சாம்பரு மின்றி
அழித்திடும் வானவனைச்-செய்கை
ஆற்று மதிச் சுடரைத்-தடை
யற்ற பெருந்திறலை-எம்முள்
இச்சையும் வேட்கையும் ஆசையும் காதலும்
ஏற்றதொர் நல்லறமும்-கலந்தொளி
ஏறுந் தவக்கனலைப்-பெருந்திரள்
எய்திப் பணிந்திடுவோம்-வாரீர்! (தீ)

வான கத்தைச்சென்று தீண்டுவன் இங்கென்று
மண்டி யெழுந்தழலைக்-கவி
வாணர்க்கு நல்லமுதைத்-தொழில்
வண்ணந் தெரிந்தவனை-நல்ல
தேனையும் பாலையும் நெய்யையும் சோற்றையும்
தீம்பழம் யாவினையும்-இங்கேயுண்டு
தேக்கிக் களிப்பவனைப்-பெருந்திரள்
சேர்ந்து பணிந்திடுவோம்-வாரீர்! (தீ)

சித்திர மாளிகை பொன்னொளிர் மாடங்கள்
தேவத் திருமகளிர்-இன்பந்
தேக்கிடுந் தேனிசைகள்-சுவை
தேறிடு நல்லிளமை-நல்ல
முத்து மணிகளும் பொன்னும் நிறைந்த
முழுக்குடம் பற்பலவும்-இங்கேதர
முற்பட்ட நிற்பவனைப்-பெருந்திரள்
மொய்த்துப் பணிந்திடுவோம்-வாரீர்! (தீ)