பாரதியாரின் தேசிய கீதங்கள்/10. வெறி கொண்ட தாய்
Appearance
10. வெறி கொண்ட தாய்
ராகம் - ஆபோகி தாளம் - ரூபகம்
- பேயவள் காண் எங்கள் அன்னை - பெரும்
- பித்துடையாள் எங்கள் அன்னை
- காய்தழல் ஏந்திய பித்தன் - தனைக்
- காதலிப்பாள் எங்கள் அன்னை. (பேயவள்)
- இன்னிசை யாம்இன்பக் கடலில் - எழுந்து
- எற்றும் அலைத்திரள் வெள்ளம்
- தன்னிடை மூழ்கித் திளைப்பாள் - அங்குத்
- தாவிக் குதிப்பாள் - எம் அன்னை (பேயவள்)
- தீஞ்சொற் கவிதையஞ் சோலை - தனில்
- தெய்வீக நன்மணம் வீசும்
- தேஞ்சொரி மாமலர் சூடி - மது
- தேக்கி நடிப்பாள்எம் அன்னை. (பேயவள்)
- வேதங்கள் பாடுவள் காணீர் - உண்மை
- வேல்கையிற் பற்றிக் குதிப்பாள்
- ஓதருஞ் சாத்திரம் கோடி - உணர்ந்
- தோதி யுலகெங்கும் விதைப்பாள் (பேயவள்)
- பாரதப் போரெனில் எளிதோ? - விறற்
- பார்த்தன்கை வில்லிடை ஒளிர்வாள்
- மாரதர் கோடிவந் தாலும் - கணம்
- மாய்த்துக் குருதியில் திளைப்பாள் (பேயவள்)