பாரதியாரின் தேசிய கீதங்கள்/18. ஜாதீய கீதம்
Appearance
18. ஜாதீய கீதம்
(பங்கிம் சந்திர சட்டோ பாத்தியாயர் எழுதிய வந்தே மாதரம் கீதத்தின் மொழிபெயர்ப்பு)
- இனிய நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை!
- தனிநறு மலயத் தண்காற் சிறப்பினை!
- பைந்நிறப் பழனம் பரவிய வடிவினை! (வந்தே)
- வெண்ணிலாக் கதிர்மகிழ் விரித்திடும் இரவினை!
- மலர் மணிப் பூத்திகழ் மரன்பல செறிந்தனை!
- குறுநகை யின்சொலார் குலவிய மாண்பினை!
- நல்குவை இன்பம், வரம்பல நல்குவை!
- முப்பதுகோடி வாய் (நின்னிசை) முழங்கவும்
- அறுபது கோடிதோ ளுயர்ந்துனக் காற்றவும்
- திறனிலாள் என்றுனை யாவனே செப்புவன்?
- அருந்திற லுடையாய்! அருளினைப் போற்றி!
- பொருந்தலர் படைபுறத் தொழித்திடும் பொற்பினை!
(வந்தே)
- நீயே வித்தை நீயே தருமம்!
- நீயே இதயம் நீயே மருமம்!
- உடலகத் திருக்கும் உயிருமன் நீயே! (வந்தே)
- தடந்தோ ளகலாச் சக்திநீ அம்மே!
- சித்தம் நீங்காதுறு பக்தியும் நீயே!
- ஆலயந் தோறும் அணிபெற விளங்கும்
- தெய்விக வடிவமும் தேவியிங் குனதே! (வந்தே)
- ஒருபது படைகொளும் உமையவள் நீயே!
- கமலமெல் லிதழ்களிற் களித்திடுங் கமலைநீ!
- வித்தை நன் கருளும் வெண்மலர்த் தேவிநீ! (வந்தே)
- போற்றி வான்செல்வி! புரையிலை நிகரிலை!
- இனிய நீர்ப்ப் பெருக்கினை, இன்கனி வளத்தினை
- சாமள நிறத்தினை சரளமாந் தகையினை!
- இனியபுன் முறுவலாய்! இலங்குநல் லணியினை!
- தரித்தெமைக் காப்பாய், தாயே போற்றி! (வந்தே)