பாரதியாரின் தேசிய கீதங்கள்/29. சுதந்திர தேவியின் துதி
Appearance
29. சுதந்திர தேவியின் துதி
- இதந்தரு மனையின் நீங்கி
- இடர்மிகு சிறப்பட் டாலும்
- பதந்திரு இரண்டும் மாறிப்
- பழிமிகுந் திழிவுற் றாலும்
- விதந்தரு கோடி இன்னல்
- விளைந்தெனை அழித்திட் டாலும்
- சுதந்திர தேவி! நின்னைத்
- தொழுதிடல் மறக்கி லேனே.
- நின்னருள் பெற்றி லாதார்
- நிகரிலாச் செல்வ ரேனும்,
- பன்னருங் கல்வி கேள்வி,
- படைத்துயர்ந் திட்டா ரேனும்,
- பின்னரும் எண்ணி லாத
- பெருமையிற் சிறந்தா ரேனும்,
- அன்னவர் வாழ்க்கை பாழாம்,
- அணிகள்வேய் பிணத்தோ டொப்பார்.
- தேவி! நின்னொளி பெறாத
- தேயமோர் தேய மாமோ?
- ஆவியங் குண்டோ ? செம்மை
- அறிவுண்டோ ? ஆக்க முண்டோ ?
- காவிய நூல்கள் ஞானக்
- கலைகள் வேதங்க ளுண்டோ ?
- பாவிய ரன்றோ நிந்தன்
- பாலனம் படைத்தி லாதார்?
- ஒழிவறு நோயிற் சாவார்,
- ஊக்கமொன் றறிய மாட்டார்,
- கழிவுறு மாக்க ளெல்லாம்
- இகழ்ந்திடக் கடையில் நிற்பார்
- இழிவறு வாழ்க்கை தேரார்,
- கனவிலும் இன்பங் காணார்,
- அழிவுறு பெருமை நல்கும்
- அன்னை! நின் அருள் பெறாதார்.
வேறு
- தேவி! நின்னருள் தேடி யுளந்தவித்து
- ஆவி யுந்தம தன்பும் அளிப்பவர்
- மேவி நிற்பது வெஞ்சிறை யாயினும்
- தாவில் வானுல கென்னத் தகுவதே.
- அம்மை உன்றன் அருமை யறிகிலார்
- செம்மை யென்றிழி தொண்டினைச் சிந்திப்பார்,
- இம்மை யின்பங்கள் எய்துபொன் மாடத்தை
- வெம்மை யார்புன் சிறையெனல் வேண்டுமே.
- மேற்றிசைப்பல நாட்டினர் வீரத்தால்
- போற்றிநினைப் புதுநிலை யெய்தினர்,
- கூற்றினுக்குயிர் கோடி கொடுத்தும்நின்
- பேற்றினைப்பெறு வேமெனல் பேணினர்.
- அன்னை தன்மைகொள்நின்னை அடியனேன்
- என்ன கூறிஇசைத்திட வல்லனே
- பின்ன முற்றுப் பெருமை யிழந்துநின்
- சின்ன மற்றழி தேயத்தில் தோன்றினேன்.
- பேர றத்தினைப் பேணுதல் வேலியே!
- சோர வாழ்க்கை, துயர் மிடி யாதிய
- கார றுக்கக் கதித்திடு சோதியே!
- வீர ருக்கமு தே! நினை வேண்டுவேன்.