பாரதியாரின் தேசிய கீதங்கள்/39. தேசபக்தர் சிதம்பரம் பிள்ளை மறுமொழி
Appearance
39. தேசபக்தர் சிதம்பரம் பிள்ளை மறுமொழி
- சொந்த நாட்டிற் பரர்க்கடிமை செய்தே
- துஞ்சிடோ ம் - இனி அஞ்சிடோ ம்
- எந்த நாட்டினும் இந்த அநீதிகள்
- ஏற்குமோ? - தெய்வம் பார்க்குமோ?
- வந்தே மாதரம் என்றுயிர் போம்வரை
- வாழ்த்துவோம் - முடி தாழ்த்துவோம்
- எந்த மாருயி ரன்னையைப் போற்றுதல்
- ஈனமோ? - அவ மானமோ?
- பொழுதெல்லாம் எங்கள் செல்வங் கொள்ளை கொண்டு
- போகவோ? - நாங்கள் சாகவோ?
- அழுது கொண்டிருப் போமோ? ஆண்பிள்ளைகள்
- அல்லமோ? - உயிர் வெல்லமோ?
- நாங்கள் முப்பது கோடி ஜனங்களும்
- நாய்களோ? - பன்றிச் சேய்களோ?
- நீங்கள் மட்டும் மனிதர்களோ? - இத்
- நீதமோ? - பிடி வாதமோ?
- பார தத்திடை அன்பு செலுத்துதல்
- பாபமோ? - மனஸ் தாபமோ?
- கூறும் எங்கள் மிடிமையைத் தீர்ப்பது
- குற்றமோ? - இதில் செற்றமோ?
- ஒற்றுமை வழி யொன்றே வழியென்பது
- ஓர்ந்திட்டோ ம் - நன்கு தேர்ந்திட்டோ ம்
- மற்று நீங்கள் செய்யுங்கொடு மைக்கெல்லாம்
- மலைவு றோம்; - சித்தம் கலைவுறோம்.
- சதையைத் துண்டுதுண் டாக்கினும் உன்னெண்ணம்
- சாயுமோ? - ஜீவன் ஓயுமோ?
- இதயத் துள்ளே இலங்கு மஹாபக்தி
- ஏகுமோ? - நெஞ்சம் வேகுமோ?