பாரதியாரின் தேசிய கீதங்கள்/4. பாரத நாடு
Appearance
4. பாரத நாடு
ராகம் - இந்துஸ்தானி தாளம் - தோடி
பல்லவி
- பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்
- பாரத நாடு.
சரணங்கள்
- ஞானத்தி லேபர மோனத்திலே - உயர்
- மானத்தி லேஅன்ன தானத்திலே
- கானத்தி லேஅமு தாக நிறைந்த
- கவிதையி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)
- தீரத்தி லேபடை வீரத்திலே - நெஞ்சில்
- ஈரத்தி லேஉப காரத்திலே
- சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு
- தருவதி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)
- நன்மையி லேஉடல் வன்மையிலே - செல்வப்
- பன்மையி லேமறத் தன்மையிலே
- பொன்மயி லொத்திடும் மாதர்தம் கற்பின்
- புகழினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)
- ஆக்கத்தி லேதொழில் ஊக்கத்திலே - புய
- வீக்கத்தி லேஉயர் நோக்கத்திலே
- காக்கத் திறல்கொண்ட மல்லர்தம் சேனைக்
- கடலினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)
- வண்மையி லேஉளத் திண்மையிலே - மனத்
- தண்மையி லேமதி நுண்மையிலே
- உண்மையி லேதவ றாத புலவர்
- உணர்வினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)
- யாகத்தி லேதவ வேகத்திலே - தனி
- யோகத்தி லேபல போகத்திலே
- ஆகத்தி லேதெய்வ பக்திகொண் டார்தம்
- அருளினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)
- ஆற்றினி லேசுனை யூற்றினிலே - தென்றல்
- காற்றினி லேமலைப் பேற்றினிலே
- ஏற்றினி லேபயன் ஈந்திடுங் காலி
- இனத்தினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)
- தோட்டத்தி லேமரக் கூட்டத்திலே - கனி
- ஈட்டத்தி லேபயிர் ஊட்டத்திலே
- தேட்டத்தி லேஅடங் காத நதியின்
- சிறப்பினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)