பாரதியாரின் தேசிய கீதங்கள்/5. பாரத தேசம்
Appearance
5. பாரத தேசம்
ராகம் - புன்னாகவராளி
பல்லவி
- பாரத தேசமென்று பெயர்சொல்லு வார் - மிடிப்
- பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார்.
சரணங்கள்
- வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் - அடி
- மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
- பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம், எங்கள்
- பாரத தேசமென்று தோள்கொட்டுவோம். (பாரத)
- சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்,
- சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
- வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
- மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம். (பாரத)
- வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம்
- வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்,
- எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
- எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம். (பாரத)
- முத்துக் குளிப்பதொரு தென் கடலிலே,
- மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந்தே,
- நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்தே
- நம்மருள் வேண்டுவது மேற்க ரையிலே. (பாரத)
- சிந்து நதியின்மிசை நிலவினி லே
- சேர நன்னாட்டிளம் பெண்களுட னே
- சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்
- தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம். (பாரத)
- கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
- காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்
- சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
- சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம். (பாரத)
- காசி நகர்ப்புலவர் பேசும் உரை தான்
- காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்
- ராசபுத் தானத்து வீரர் தமக்கு
- நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம். (பாரத)
- பட்டினில் ஆடையும் பஞ்சினில் உடையும்
- பண்ணி மலைகளென வீதி குவிப்போம்
- கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்
- காசினி வணிகருக்கு அவை கொடுப்போம் (பாரத)
- ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்
- ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
- ஒயுதல்செய் யோம்தலை சாயுதல் செய்யோம்
- உண்மைகள்சொல் வோம்பல வண்மைகள் செய்வோம். (பாரத)
- குடைகள்செய் வோம்உழு படைகள் செய் வோம்
- கோணிகள்செய் வோம் இரும் பாணிகள் செய்வோம்
- நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்
- ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம் (பாரத)
- மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம்
- வானையளப் போம்கடல் மீனையளப்போம்
- சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்
- சந்திதெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம். (பாரத)
- காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம்
- கலைவளர்ப் போம் கொல்ல ருலைவளர்ப் போம்
- ஓவியம்செய் வோம் நல்லஊசிகள் செய் வோம்
- உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம். (பாரத)
- சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே
- தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்
- நீதிநெறி யினின்று பிறர்க்கு தவும்
- நேர்மையர் மேலவர், கீழவர் மற்றோர். (பாரத)