பாரதியின் இலக்கியப் பார்வை/மனிதக் கம்பன்
மனிதக் கம்பன்.
கம்பரது இலக்கியத்தை வாயாரப் பாடி, பேசிக்களிக்காத வரை ஊமையர் என்று அறிவித்ததை முன்னர்க் கண்டோம். பிற உயிரினங்களினும் மக்களினத்திற்குக் கிட்டியிருக்கும் பேறுகளில் வாய்ப்பேச்சும் ஒன்று. ஒன்று என்பது மட்டும் அன்று. வெளிப்படையாக உணர்ந்துகொள்ளத்தக்கசிறப்பும் ஆகும். இச்சிறப்பின் செயற்பாடாக மக்கள் வாய் விட்டுப் பேசுவதும், பாடிப் பார்ப்பதும் மனிதத் தன்மைகளில் வெளிப்படைக் குறியைக் காட்டுவன ஆகும். ஆகவே, தமது இராமாயணத்தைப் படிப்பதன் வாயிலாக மனிதத்தன்மை புலனாக வேண்டும் எனும் குறிக்கோளைக் கம்பர் கொண்டுள்ளார் என ஆகிறது. அதனால்,கம்பன் மனித இனத்தின் செம்மைப்பாட்டை விளக்குங்குறிக்கோளில் ஊன்றிநிற்கிறான் என்று கண்டவர்,
- “கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்”
—எனக் குறித்தார்.
இதனையொட்டித் தொடர்ந்து நோக்கினால் இராமாயணவாயிலாகச் சில மனிதத் தன்மைகளைக் குறித்துக் காட்டும் நோக்கோடு கம்பர் இலக்கியத்தை யாத்துள்ளார் என்று பாரதி கருதுகின்றார் என்பது தெளிவாகும்,
இராமாயணக் கதையும் தெய்வம் மனிதப் பிறவி, எடுத்து அம்மனிதப் பிறவியின் மேம்பட்ட தன்மைகளுக்குக் குறியாக விளங்கும் அடிப்படையைக் கொண்டது என்பர். இதனை யாவரும் ஒப்புவர். இறையோ எல்லையற்றது. அவ்வெல்லை யற்றதைக் கம்பர் தாம் எடுத்துக் கொண்ட கதையின் வாயிலாகத் தம் திறமையையும் குழைத்துச் சில குறிகளால் தெளிவாக்கிவிட முயல்கிறார். இதனைப் பாரதி கண்டு கொள்கிறார். இதனையே,
- “எல்லையொன் றின்மை எனும்பொரு ளதனைக்
- கம்பன் குறிகளால் காட்டிட முயலும்
- முயற்சி”
-என்று பாடுகிறார்.
மேலும், “கல்வியிற் பெரியன் கம்பன்” எனும் இலக்கண நூலின் மேற்கோள் தொடர் பாரதிக்கு நினைவில் நிற்கிறது. அந்நினைவைச் செந்தமிழ் நாட்டைப் பாடிப் பூரிக்கும் போது முன்னே இழுத்துத் தொடர்பு படுத்தி,
- “கல்வி சிறந்த தமிழ் நாடு-புகழ்க்
- கம்பன் பிறந்த தமிழ் நாடு”
- “கல்வி சிறந்த தமிழ் நாடு-புகழ்க்
-என்று பாடுகிறார்.
இவ்வாற்றான் கம்பரது இலக்கியத்தில் ‘கம்பரது உள்ளம் மனிதத் தன்மையைப் பதியவைக்கும் உணர்வில் ஆழ்ந்து கிடக்கிறது’ என்று பாரதி அறிவிக்கிறார்.