உள்ளடக்கத்துக்குச் செல்

பாரதியின் இலக்கியப் பார்வை/முத்தமிழுக்கும் மூன்று சொல்

விக்கிமூலம் இலிருந்து

முத்தமிழுக்கும் மூன்று சொல்.

கம்பரை மானிடனாகவும், வள்ளுவரைத் தெய்வமாகவும் உணர்த்திய பாரதியார் இளங்கோவடிகளைப் புலவராகக் கண்டு உணர்த்துகின்றார்.

‘இளங்கோவடிகளது சிலப்பதிகாரத்தை மனக்கண் குளிரக்கண்டு சுவைக்காதவர் குருடர்கள்’ என்று குறித்ததை முன்னர்க் கண்டோம்.

“தமிழச்சாதி” என்னுந் தலைப்பில் சிலம்பின் திறத்தை எண்ணி ஓர் அடியை அமைத்தார் :

“சிலப்பதி காரச் செய்யுளைக் கருதியும்”

- என்பது அது. இவ்வடியில் சிலப்பதிகாரத்தினைச் செய்யுளின் குறியோடு குறித்துள்ளமை நோக்கத்தக்கது. இளங்கோவடிகளைப் புலவராக அறிமுகப்படுத்துவதாக அதனைக் கொள்ளவேண்டும்.

சிலம்பில் பல்வகைச் செய்யுட்களும் அமைந்துள்ளன. ஆசிரியப்பாவும், வெண்பாவும், கலிப்பாவும் இவற்றின் வகைகளும் சில இனங்களும் இக்காலத்து வழக்கிறந்து போன செய்யுட்களும் சிலம்பில் உள்ளன, உரைப்பாட்டு மடை, கட்டுரை, கொளு என்பனவும் செய்யுள் யாப்பு முறையை ஓரளவு ஒத்து அமைந்துள்ளன. இசையிலக்கணச் செறிவு கொண்ட வரிப் பாடல்களும் தனியான செய்யுள் யாப்பு முறை கொண்டவை. அவை, கூடை, வாரம் எனத் தனித் தனியான யாப்பிலக்கணம் பெற்றவை. இவ்வாறு பலவகைச் செய்யுட்களும் அமைந்த தொடர் நிலைச் செய்யுள் இலக்கியம் அஃதாவது காப்பிய இலக்கியம் இதுபோன்று வேறொன்று அமைந்ததில்லை எனலாம்.

இச்செய்யுட்களும் தேர்ந்த சொற்கட்டு கொண்டவை. தெளிந்த பொருட்செறிவு பெற்றவை. இனிய ஓசை நயம் அமைந்தவை. அழகார்ந்த அணிகள் மிளிர்பவை. இவற்றைக் கூர்ந்து நோக்கினார் பாரதியார். செய்யுள் திறன் நிறைந்து சிலப்பதிகாரம் மிளிர்வதை உணர்ந்தார். அவ்வுணர்வுடனே “சிலப்பதிகாரச் செய்யுள்” எனக்குறித்தார்.

இவ்வாறு குறித்ததன் வாயிலாக இளங்கோவின் புலமைத் திறம் அவர்தம் இலக்கியத்தில் ஆழ்ந்து கிடப்பதைக் கண்டு உணர்த்தியவராகிறார். செய்யுளைச்சுட்டிக் கூறியதால் இளங்கோ இயற்றமிழ்ப் புலவர் என்பதையும் குறித்தவராகிறார்.

இளங்கோ எத்துணை இயற்றமிழில் வல்ல புலவராக மிளிர்கின்றாரோ அத்துணை இசைத் தமிழிலும் வல்லுநர். சிலப்பதிகார அரங்கேற்று காதை தமிழிசை இலக்கணத்தின் வடிவம். பலவகை இசை நுணுக்கங்களை வியப்புறும் வண்ணம் கொண்டு மிளிரும் இசைத் தமிழ்க் கருவூலம். வரி என்பது இசைப் பாடலைக் குறிப்பது. வரி என்றொரு பண் வகையையும் குறிக்கும். சிலம்பில் பலவகை வரிப் பாடல்கள் அமைந்துள்ளன. கானல் வரி, வேட்டுவ வரி ஊர்சூழ் வரி என மூன்று காதைகள் வரிப் பெயரோடு உள்ளன. இவற்றுட் கூறப்படும் பாடல்களில் செல்வங்கொழிக்கும் கலைஞர் கைக்கொள்வன உள, உணர்வை மிட்டித் தனியார் இசைப்பன உள. அடிநிலைக் குமுகாயத்தினர், இசைப்பன உள. பல்வகைத் தொழிலினர் இசைப்பன உள.

இவ்வகையான வரிப்பாடல்களோடு மேலும் பல்வகையான இசைப்பாடல்களைக் கொண்டதாகவும் சிலம்பு விளங்குகிறது.

அம்மனைவரி, கந்துகவரி, ஊசல்வரி என்பன சிலம்பின் இறுதிப்பகுதியாகிய வாழ்த்துக் காதையில் அமைந்துள்ளன. இவை பெண்கள் விளையாடுங்கால் பாடப்படுபவை, வள்ளைப் பாட்டு என்று ஒன்று உண்டு. இது பெண்கள் உலக்கை கொண்டு குற்றும் போது பாடப்படுவது. தேவந்தி அரற்று, காவற்பெண்டு அரற்று, அடித்தோழி அரற்று என அமைந்துள்ள பாடல்கள் துக்க மேலீட்டால் கையற்றுப் பாடப் படுவன. இவை இக்காலத்தே நாட்டு வழக்கில் கூறப்படும் ‘ஒப்பாரி’ வகையன.

இவ்வாறு விளையாட்டு, இல்லத்தொழில், துயரநிலை ஆகியவற்றிற்காகும் இசை முறைகளையும் கொண்டு சிலப்பதிகாரம் இசையிலக்கியப் பெட்டகமாகத் திகழ்கிறது. இதுபோன்ற இசை நிறைவாய் அமைந்த வேறொரு தொடர் நிலைச் செய்யுள்-காப்பியம் இல்லை எனலாம். இவற்றின் வாயிலாக இளங்கோவடிகளின் இசைப் புலமையையும், இசை உணர்வையும் சிலம்பில் காணலாம். பாரதியார் சிலம்பில் ஆழ்ந்திருக்கும் இளங்கோவடிகளது இசை உணர்வைக் கண்டார்;

“சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்”

என்று பாடினார்

‘சேரன்தம்பி சிலம்பை எழுதியதும்’ என்று பாடவில்லை; ‘சிலம்பை யாத்ததும்’ என்று பாடவில்லை. “சிலம்பை இசைத்ததும்” என்று பாடினார். இளங்கோவடிகள் சிலம்பில் இசைத்திருப்பனவற்றை எல்லாம் பாரதியார் நிரலே காண்கிறார்.

சிலம்பின் முதற்காதை மங்கல வாழ்த்துப்பாடல். முதற் காதைப் பெயரிலேயே பாடல் அமைந்தது. இக்காதையில்,

முரசியம்பின [1] முருடதிர்ந்தன
முறையெழுந்தன. [2] பணிலம்”

என்ற இசைக் கருவிகனை இயங்க வைத்து மங்கல இசையோடு தம் இசையுணர்வைத் துவங்கினார். அரங்கேற்று காதையில் இசையாசிரியன் வழி, வாய்ப்பாட்டை இசைத்தார். தண்ணுமையோன் வழி, மத்தளத்தை இசைத்தார். குழலாசிரியரின் வழி, குழலை இசைத்தார். யாழாசிரியன் வழி, யாழை இசைத்தார்.

கானல்வரிப் பகுதியில் கோவலன், மாதவி கைகள் வழியே யாழை இசைத்தார். யாழோடு அவர்கள் குரலிசையால் பல வகைப் பண்களையும் இசைத்தார். அவ்விசையால் கதைத் திருப்பத்தையேஅமைத்தார். வேனிற்காதையில் கோவலனைப் பிரிந்து கலங்கும் மாதவியைப் யாழொடு மயங்கிப் பாட வைத்து இசைத்தார். இதன் மூலம் கலைஞரது துன்பத்திற்கு அவரது கலையே போக்கு வீடாகும் என்பதன் குறிப்பையும் வைத்தார்.

வேட்டுவ வரிப் பகுதியில் வேட்டுவர்களைக் கூத்தாடிப் பாடவைத்துச் சந்தப் பாட்டிசைத்தார். புறஞ்சேரியிறுத்த காதையில் கோவலனைப் பாணரோடு கூடி யாழிசைக்கச் செய்து அவ்வழியே பாடற்பாணி இசைத்தார். ஆய்ச்சியர் குரவையில் ஆய்ச்சியரை மாயவனையும், முடிமன்னர் மூவரையும் பரவிப்பாடச் செய்து குரவை இசை இசைத்தார். ஊர் சூழ்வரியுள் கண்ணகியைக் கோவலனது வெட்டுண்ட உடல் மேல்தழுவவைத்துப் புலம்பச் செய்து ஓல இசை இசைத்தார்.

குன்றக் குரவையுள் குறவர் முருகனைப் பரவ வைத்து அவர் வழியே பராவி இசைத்தார். நீர்ப்படைக்காதையில் சேர அரசி வேண்மாளைக் கேட்கவைத்துக் குறிஞ்சி, முல்லை மருதம், நெய்தல், என்னும் நால் வகைப் பண்ணையும் அவ்வக்குமுகாய மக்கள் வழி இசைத்தார். நடுகற் காதையில் வீரரது போர்ப்புண்ணின் நோவு நீர அகவன் மகளிரை யாழ் மீட்டிப் பாடவைத்து இசைத்தார். இதனால், இசை, நோவைத் தீர்க்கும் மருந்தெனக் காட்டினார். வாழ்த்துக் காதையில் தேவந்தி முதலியோரை அரற்றிப் புலம்பச் செய்து ஓல இசை இசைத்தார். மகளிரை அம்மானை பந்து முதலியனை ஆடும்போது பாடவைத்து ஆடலிசை இசைத்தார்.

இவ்வாறு, நூல் முழுமையும் இசையை ஊடுபாவாக ஓடவைத்து இசைத்ததைப் பாரதியார் நோக்கினார். அந்நோக்காலே “சிலம்பை இசைத்ததும்” என்று பாடினார்.

சிலம்பில் இளங்கோவின் இயற்றமிழ்ப் புலமையையும் இசைத்தமிழ் புலமையையும் இரு சொற்களால் குறித்தவர் அவரதுகூத்துத்தமிழ் அஃதாவது நாடகத்தமிழ்ப் புலமையைக் காணாது விடுவரோ? கண்டார்; சிலம்பில் பலவகையான வாய்ப்புள்ள இடங்களிளெல்லாம் இளங்கோவடிகள் கூத்தை அமைத்துள்ளதைக் கண்டார்.

மன்னர் முன்னர் ஆடும் வேத்தியல் கூத்து; மக்கள் முன்னர் ஆடும் பொதுவியல் கூத்து; தெய்வ நிலையில் நின்று ஆடும் கூத்து; மக்கள் தன்மையில் நின்று ஆடும் கூத்து; தனித்து நின்று ஆடும் கூத்து; சில எண்ணிக்கையினர் கூடியும், குமுகாயத்தினராகக் குழுமியும் ஆடும் கூத்து. அகப்பொருளை அமைத்தாடும் கூத்து; புறப்பொருளை அமைத்தாடும் கூத்து; தமிழ் இனத்தார் ஆடும் கூத்து; பிற இனத்தார் ஆடும் கூத்து. இவ்வாறு பலமுனைக் கூத்துகளும் சிலம்பில் அமைத்துள்ளதைப் பாரதியார் கண்டார். அவற்றின் விளக்கத்தையும் கண்டார்.

அரங்கேற்று காதையில் கூத்தின் முழு இலக்கணமும், இலக்கியமும் அமைந்துள்ளன. ஆடல் ஆசிரியனாம் நட்டுவனின் இலக்கணத்தைப் புலப்படுத்தும் வாயிலாகக் கூத்தின் அடிப்படை குறிக்கப்பட்டுள்ளது. ஆடும் அரங்கம், மேடையின் அமைப்பு வியக்கத்தகும் வண்ணம் சுட்டப்பட்டுள்ளது. ஆடலும் பாடலும் அழகும் நிறைந்த கலையரசி மாதவியைச் சோழ மன்னன் திருமுன் அரங்கேற்றி ஆடவைத்துக் கூத்தின் இலக்கியத்தை மிளிர வைத்துள்ளார்.

மன்னன்முன் ஆடியவளை அடுத்து மக்கள்முன் ஆட வைத்துள்ளார். கடலாடு கதையில் இந்திரவிழாக்கான வந்தோர் யாவரும் காணுமாறு பதினோராடலை மாதவியை ஆடவைத்து விளக்குகிறார். இவை பதினொன்றும் தெய்வ நிலையில் நின்று ஆடப்படுவன. அவற்றுள் ஆண்பால் தெய்வங்களுக்கு உரியன ஆறு; பெண்பால் தெய்வங்களுக்கு உரியன நான்கு; இருபாலும் ஒன்றிய அம்மையப்பர் வடிவத்துக்கு உரியது ஒன்று. இவ்வாறு தெய்வங்களையும் ஆடவைத்துள்ளார்.

மன்னனது அவையிலும், மக்களது அம்பலத்திலும் ஆட வைத்தவர் வீட்டுஅறையிலும் மாதவியை ஆடவைத்துள்ளார். இதனை வேனிற்காதையில் கோவலன் வாயிலாக எண் வகை வரிக்கூத்து என அறிவித்தார். வீட்டுக்காரி போலும் வேலைக்காரி போலும் மாறுவேடந்தரித்து ஆடப்படுபவை வரிக்கூத்து எனப்படும்.

நாட்டிலும், வீட்டிலும் கூத்தைக் காட்டியவர் அடுத்துக் காட்டில் அமைத்துக் காட்டியுள்ளார். வேட்டுவ வரியில் வேடுவர்களைக் குழும வைத்து ஆடவைத்துள்ளார். இதனைக் குமுகாயக் கூத்து எனலாம்.

ஊர்காண் காதையுள் பல்வகைக் கூத்தியரை அறிமுகம் செய்துள்ளார்.

குமுகாயக் கூத்தைக் காட்டியவர் கைகோத்துக் கூடியாடும் குரவைக் கூத்தை ஆய்ச்சியர் குரவையுள் காட்டியுள்ளார்.

இவ்வாறு பல்வகையாய்த் தமிழினத்தார் ஆடும் கூத்துகளைக் காட்டியவர் கால்கோட் காதையுள் பிற இனத்தவர் கூத்தை அமைத்துக் காட்டியுள்ளார். சேர மன்னன் முன்னர்க் கொங்கணரும் குடகரும் ஓவரும் தனித்தனியே தத்தம். கூத்துக் கலைத்திறனைக் காட்டவைத்துள்ளார்.

இறுதியாக, நடுகற் காதையுள் மிகத்திறன் வாய்ந்த, ‘கொட்டிச்சேதம்’என்னும் கூத்தைக்காட்டியுள்ளார்.பறையூர்க் கூத்தச் சாக்கையன் என்பானைச் சேரன் செங்குட்டுவன் முன்னர் அம்மையப்பர் வடிவில் ஆடவைத்துள்ளார். உடலின் வலப் பக்கம் சிவனுருவாம் ஆணுருவும், இடப்பக்கம் உமையுருவாம் பெண்ணுருவும் கொண்டு ஆடப்படுவது இது. ஆண் உருவத்தை இயக்கி ஆடுங்கால் பெண்ணுருவப்பகுதி உறுப்புகளும் அணிகளும் அசைவின்றி அமைதியுற்றிருக்கும். பெண்ணுருவத்தை இயக்கி ஆடுங்கால் ஆணுருவப்பகுதி உறுப்புகளும் அணிகளும் அசைவின்றி அமைதியுற்றிருக்கும். இத்திறன் மிக அரிதானது; கண்டு வியக்கத்தக்கது. இவ் வியக்கத்தக்க திறனைக் காட்டிமுடிப்பதன் மூலம் இளங்கோவடிகளும் வியக்கத்தக்கவராகிறார்.

கூத்தின் இயல்புகளை இவ்வாறு விளக்கும் போக்கிலேயே நாடக அமைவின் உறுப்புகளை இளங்கோவடிகள் ஆங்காங்கு புலப்படுத்தியுள்ளார்.

நாடக மேடை அமைப்பு, மேடை அழகு, திரைச் சீலைகள், ஒளி அமைப்பு, ஒப்பனை அறை, பாடலியற்றும் கவிஞன், பின்னணி இசை, இசைக் கருவிகள், நடிப்பு, அவைத்தலைவர், சுவைப்போர், பரிசு என நாடக அமைவின் உறுப்புக்கள் யாவற்றையும் செம்மையாகவும், வியக்க தக்க முறையிலும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

மாதவி தலை முதல் கால்வரை 29 வகை அணிகலன்களை அணிந்தமை விளக்கப்பட்டுள்ளது. வேட்டுவக் குமரி ஒருத்தியைக் கொற்றவைபோல் அணி செய்தமை விளக்கப்பட்டுள்ளது. இவை நாடக ஒப்பனைக் கலையின் அறிகுறிகளாக இடம்பெற்றுள்ளன.

இவ்வாறு நாடக அமைப்புக்கு உறுதுணையானவற்றை நிறைவாக அமைத்து இளங்கோவடிகள் நாடக உத்திகளையும் ஆங்காங்கு கையாண்டுள்ளார்.

கவுந்தியடிகள் என்னும் சமண சமயப் பெண் துறவியாரைப் படைத்ததும், யாழிசையால் கதைத் திருப்பத்தை உருவாக்கியதும், முன்னறிவுப்புகளாகக் கனவுச் செய்திகளை அறிவித்திருப்பதும், பல்லோர் வாயாலும் கதைத்தலைவி தலைவனைப் பாராட்ட வைத்திருப்பதும், விற்பனைக்கு ஒரு சிலம்பைக்கொண்டு செல்ல வைத்ததும், வழக்குரை காதை என ஒருகாதையை அமைத்ததும், செங்குட்டுவனுக்குச் சாத்தனார் கண்ணகியின் மதுரை நிகழ்ச்சிகளை உணர்த்து மாறு அமைத்ததும், இவைபோன்ற பல வகை அமைப்புகளும் சிறந்த நாடக உத்திகள் எனலாம்.

யாவற்றினும் மேலாக ஆங்காங்கு நாடகக் காட்சிகளாகப் பலபகுதிகள் அமைந்துள்ளன. அவை படிப்போர் மனக்கண் முன் நிழற்படங்களாகக் காட்சியளித்து உள்ளத்தை இழுக்கின்றன. பாரதியார் அவற்றைக் கண்டுள்ளார். அவரோடு சிலவற்றைக் காணலாம்.

முதற்காட்சியாகத் தோன்றுவது திருமணக்காட்சி. ஒரு பூப்பந்தல். அதில் முத்துக்கோவைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. மேலே நீல விதானம். ஏதிரே, தீ, சுள்ளிகளிடையே நாவை நீட்டுகிறது. முதிய பார்ப்பனர் மறை, ஓதுகிறார். கண்ணகியைக் கோவலன் கைப்பிடித்துத் தீயை வலம் வருகிறான். மங்கலப் பொருள்களை ஏந்திய மகளிர் ஒருபுறம் நிற்கின்றனர். குமரிகள் கூட்டம் நிற்கிறது. ஒருத்தி நெளிந்து பார்க்கிறாள். ஒருத்தி ஓரக்கண்ணால் பார்க்கிறாள். ஒருத்தி ஏதோ நினைவில் புன்முறுவல் பூக்கிறாள். ஒருத்தி ஏதோ கூறி நகைக்கிறாள். ஒருத்தி பாடுகிறாள். யாவரும் சேர்ந்துகை நிறைய மலர்கொண்டு தூவி வாழ்த்துகின்றனர். இம்மங்கலக் காட்சி மனத்தைக் குளிர்விக்கிறது. இதனைக் ‘காண்பாரது கண் என்ன நோன்பிருந்ததோ’ என இளங்கோவடிகளே குறிக்கிறார்.

அடுத்து ஒரு காதற் காட்சி- எழுநிலை மாடமாளிகை அதில் நான்காவது மாடத்து நிலாமுற்றம். அங்கொரு மணிக்கால் கட்டில் கிடக்கிறது; கட்டிலில் கண்ணகி; பக்கத்தே கோவலன்; முதல் இரவு. தென்றல் பலவகை மனத்தோடு வீசுகிறது. கண்ணகி நாணத்தால் அடி பட்டிருக்கிறாள். தோளில் எழுதிய கரும்பு ஓவியம் கலைந்துள்ளது. மார்பில் எழுதிய தொய்யில் அழிந்துள்ளது. மல்லிகை மாலை குலைந்து தெரிகிறது. கோவலன் அணிந்திருந்த தாரும் குலைந்துள்ளது. இன்ப உலகில் தன்னை மறந்த நிலையில் கண்ணகி கிடக்குமிடந் தெரியாமல் கிடக்கிறாள். கோவலன் இன்பக் களிப்பில் உணர்வு கலங்கிக் கொஞ்சுகின்றான். கண்ணகியின் அழகைப் பாராட்டி இன்பக் தினவோடு பேசுகின்றான்; பெருமைப் பொலிவோடு புகழ்கின்றான். இந்தக் குலாவல் காட்சி நாகரிகமான காதல் காட்சி. படிப்போர் உள்ளத்தில் இக்காட்சி இன்பத் தினவை இலக்கிய உணர்வோடு கிள்ளி விடுகிறது. பாரதி காண்கிறார்: நெஞ்சம் துள்ளுகிறார்.

அடுத்து ஒரு கலைக் காட்சி; ஓர் ஆடல் அரங்கு. ஒருபுற எதிரே சோழமன்னன் தலைமையேற்றிருக்கிறான். பாங்கிலே அரசியல் கணத்தார் அமர்ந்திருக்கின்றனர். மறுபுற எதிரே கலைதெரி மக்கள் வெள்ளம், மேடையில் ஒப்பனைகளின் எழில் கொஞ்சுகிறது. ஓவியத் திரைச் சீலைகள் ஓடி ஒளிகின்றன. நட்டுவனும் பின்னணியினரும் தோன்றுகின்றனர். அழகின் தனித்தெய்வமாய் மாதவி மேடையில் தோன்றுகிறாள். உறுப்புகளையெல்லாம் கூத்தின் மலர்களாக்கி ஆடுகின்றாள். காண்போர் கண் கொட்டாது சுவைக்கின்றனர். மன்னன் மகிழ்ந்து ‘தலைக் கோல்’ ஈந்து, பட்டமளித்துப் பரிசை வழங்குகின்றான். நாமும் நம்மை மறந்து கைகளைத் தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்து விடுகிறோம். அவ்வாறு, இந்நாட்டியக் காட்சி உணர்வில் களிப்பை மீட்டுகிறது. பாரதியாரும் காண்கிறார்; நெஞ்சம் தெள்ளுகிறார்.

அடுத்து ஓர் இயற்கைக் காட்சி: மாலைப்பொழுது. செங்கதிரோன் தான் பரப்பிய செவ்வொளியை இழுத்துக் கொண்டிருக்கிறான். நிலமகள் அவன் பிரிவால் அந்தி மயக்கில் கிடக்கிறாள். கீழ் வானில் திங்கள் தலை நீட்ட முயல்கின்றான். அதோ, குழலில் வாய்வைத்து இடையர் முல்லைப் பண்ணை ஊதுகின்றனர். இதோ, அதைக் கண்ட தும்பி முல்லையில் வாய்வைத்து ஊதுகிறது. இடையே வண்டு மலரின் முடிச்சவிழ்க்கக் கவிழ்ந்து பார்க்கிறது. ஊடே தென்றல் வந்து மலரை அசைத்து அதனை விரட்டுகிறது. செம்மலர் தேனைச் சிந்துகிறது. இது கதிரவனாம் கணவனைப் பிரிந்ததால் நிலமகள் கண்ணீர் விடுவது போல் உள்ளது. ஒரு மூலையில் காதலனைப் பிரிந்தவள் கன்னத்தில் கைவைத்துக் குமைந்துபோயிருக்கிறாள். மறுபுறம் கூடிய இருவர் கைகோத்துக் கும்மளிக்கின்றனர். அதோ பிறைத் திங்கள் தோன்றிவிட்டது. நம் உள்ளத்திலும் ஒரு புன்முறுவல் தோன்றுகிறது. பாரதியும் இக்காட்சியைக் கண்டு புன்முறுவல் பூக்கிறார்: நெஞ்சம் துளும்புகிறார்.

மற்றோர் அவலக் காட்சி: அந்தி நேரம். இருள் ஒளியை விழுங்கத் துவங்கியுள்ளது. ஊருக்கு வெளி இடம்; கொலைக்களம். புழுதி எழும்பிய தரை காட்சியளிக்கிறது. அங்கங்கு குருதி ஓடி ஊறிக் கிடக்கிறது. கோவலன் உடல் குலைந்து குப்புறக் கிடக்கிறான். அவன் மார்பு புழுதியில் பதிந்துள்ளது. மார்பின் ஊடே வாள் அறுத்த பிளவு விலாப் புறத்தே தெரிகிறது. முதுகின் புறமெல்லாம் குருதி வழிந்து நனைந்திருக்கிறது. இதோ இன்னும் குருதி குதித்துக் கசிந்து கொண்டிருக்கிறது. உயிர் வெளியேற மனமில்லாமல் எங்கோ உடலின் ஒரு மூலையில் நெளிந்து கொண்டிருக்கிறது; கண்ணகியின் வருகையை நோக்கிப்போலும். அதோ கண்ணகி அலறிப் புடைத்துக் குமுறல் வெள்ளமாய் வருகிறாள். கூந்தல் குலைந்து அலை பாயுகிறது. சிவந்த கண்களிலே கண்ணீர் அருவி குதிக்கிறது. கோவலன் மேலே விழுந்து கதறுகிறாள். பொன் போன்ற மார்பைப் புழுதியிலே பார்க்கிறாள்; நெஞ்சம் குமறுகிறாள். தூக்கி எடுக்கிறாள்; மார்போடு அணைக்கிறாள். ‘ஐயோ, மலர் மாலையில் அழுந்திய மணிமார்பு புழுதியில் படிந்ததே’ என்கிறாள். கண்கள் ஆறாகின்றன; அவலச்சுவை நம்மை அனலாய்க் குடைகிறது. ‘மன்னவன் செய்தானே இக்கொடுமையை’ என்று நிமிர்ந்து அகலவிழிக்கிறாள்; வெகுளிச் சுவை வேல் முனையாய்ப் பாய்கிறது. குற்றுயிராய்க் கிடந்த கோவலனது கை இறுதி உணர்வோடு கண்ணகியின் கண்ணீரைத் துடைக்கிறது. “இருப்பாயாக” என்று வாய் அசைகிறது. மூச்சு வானிலே பறக்கிறது; உடல் விழுகிறது. கண்ணகியும் உடன் விழுகிறாள். நம்மிடையே அவலம் எழுகிறது. விழுந்த கண்ணகி குத்திட்டு எழுகிறாள், ‘தீய வேந்தனைக் கண்டு இத்தீமையைக் உசாவுவேன்’ என்று விம்முகிறாள். வெகுளி, வீரத்தை விரைந்து தழுவி எழுகின்றது. இருவகை உணர்வுகளையும் மாற்றி மாற்றி எழுப்பும் இக்காட்சி நம் உள்ளத்தை உலுக்குகின்றது. பார்த்த பாரதியையும் குலுக்குகின்றது; நெஞ்சம்குமுறுகிறார்.

தொடர்ந்தொரு வெகுளிக் காட்சி, பாண்டியன் அவைக் கூடம், அரியணையில் மிடுக்காக நெடுஞ்செழியன் விற்றி ருக்கின்றான். அண்டையில் பட்டத்தரசி பதுமையாய் இருக்கிறாள். அமைச்சர், படைத்தலைவர், சான்றோர், வீரர் உளர். வாயிலோன் அச்சத்தை அழுத்தி மறைத்துக்கொண்டு விரைந்து வருகின்றான். பின்னே கண்ணகி வந்து மன்னன் முன்னே நிற்கின்றாள். விரித்த கருங்கூந்தல்; வெறித்த பார்வை. மெய்யிலே புழுதி; கையிலே ஒற்றைச் சிலம்பு. கன்னத்திலே வழியும் கண்ணீர். கண்ணிலே பிழம்பெனச் செந்தீ. கண்ட மன்னன் ‘கண்ணீர் வழியும் கண்ணையுடையாளே! நீ யார்’ என்கின்றான். ‘தெளிவில்லாத மன்னா’ என்று தொடங்கிய கண்ணகி மடமட வென்று தன்னை அறிமுகப் படுத்துகின்றாள். மன்னன் அமைதியோடு விளக்கம் தருகின்றான். ‘என்கால் பொன் சிலம்பு மாணிக்கப் பரல் கொண்டது’ என்கின்றாள். மன்னன் ‘எமது முத்துடையது’ என ஒன்றைத் தரச்செய்து வாங்கி வைக்கின்றான். ஓங்கி அடிக்கிறாள், கைச் சிலம்பை. ஒரு மணி மன்னன் முகத்தே விழுகிறது. ‘யானோ அரசன்’ என அழிகின்றான். காலை வருடியவாறே கோப்பெருந்தேவியும் அழிகின்றாள். கொப்பளித்த பெண்மையின் வீரம் இரு பேருயிர்களை அழித்துவெற்றி எக்காளமிடுகிறது. இக்காட்சி நம்உள்ளத்தை ஊடுருவிக் கலக்குகிறது. ஒன்றிய பாரதியாரும் நெஞ்சம் குலுங்குகிறார்.

இவை போன்று சிலம்பின் இறுதிவரை அமைந்துள்ள உணர்வை அள்ளும் காட்சிகள் பல. இடை இடையே எத்துணையோ சுவைக் காட்சிகள். ஒன்பான் சுவைகளும் மாறி மாறித் தலை தூக்குகின்றன. உள்ளத்தை உலுக்குகின்றன; குலுக்குகின்றன. மனத்தை மகிழ்விக்கின்றன; நெகிழ்விக்கின்றன. நெஞ்சத்தை நயப்பிக்கின்றன; வியப்பிக்கின்றன. எல்லாக் காட்சிகளும் சேர்ந்து பாரதியின் நெஞ்சை அள்ளுகின்றன. அள்ளிவிட்ட நெஞ்சோடு துள்ளி எழுந்து பாடுகிறார் :

நெஞ்சை அள்ளும் சிலப்பதி காரமென்றோர் மணி
ஆரம் படைத்த தமிழ்நாடு.”

-என்று,

ஏன் சிலப்பதிகாரத்தை நெஞ்சை அள்ளும் என்னும் அடைமொழியால் சிறப்பித்தார்? எது நெஞ்சை அள்ளும்?

இயற்றமிழ் உள்ளத்தைக் தொடும். இசைத்தமிழ் மனத்தை மீட்டும். நாடகத்தமிழ் நெஞ்சை அள்ளும்.

அக்காலத்து நாடகம் கூத்தையே கொண்டது. நாடகம் என்னும் சொல் கூத்தையே குறித்தது. “நாடகம் உருப்பசி நல்காளாகி”“நாடக மகளிர்” என்றெல்லாம் கூத்தாடுவோர் குறிக்கப்பட்டனர்.

கதையினைக் கூத்தால் விளக்கிய நாடகம் படிப் படியாக மாறுதலடைந்தது. கூத்து சிறுகச் சிறுகக் குறைந்தது; கூத்தில்லாமலே முகக்குறிப்பு, கைச் செய்கை, குரலிலே எடுத்தல், படுத்தல், நலிதல் ஆகிய ஒலி மாற்றங்கள் பெருகிப் பெருகி நெருங்கி நாடகம் மாற்ற மடைந்தது.

இம்மாற்றத்தின் துவக்கம் சிலப்பதிகாரத்தில் முளை விடுகிறது. இம்முளைவிடும் சிலப்பதிகாரத்தின் கூத்தைத் தழுவியதும், தழுவாததுமான நாடக உத்திகளும், நாடகத் துணை அமைப்புகளும், நாடகக் காட்சிகளும் பாரதியின் நெஞ்சை அள்ளியுள்ளன. தன்னைக் கவர்ந்த அந்நூலின் நாடகத் தமிழை அறிவுறுத்துவதற்கேற்ற சொற்றொடராக “நெஞ்சை அள்ளும்” என்னும் தொடரை அமைத்தார். அள்ளும் என்னும் சொல்லால் இளங்கோவடிகளின் நாடகப் புலமையை வெளிப்படுத்தியவராகிறார்.

இவ்வாறாக,

“சிலப்பதிகாரச் செய்யுள்”
“சிலம்பை இசைத்தது”
“நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்”

-என இத்தொடர்களை அமைத்த பாங்கு எண்ணி எண்ணி மகிழத்தக்கது. சிலப்பதிகாரத்தின் இயற்றமிழ்க் கடலில் முங்கித்திளைத்த அவர் “செய்யுள்” என்னும்முத்தான சொல்லைத் தேர்ந்தெடுத்துள்ளார். அச்சொல்லால் சிலம்பின் இயற்றமிழ்ப் பெருமையைப் பறைசாற்றுகிறார். சிலப்பதிகாரத்தின் இசைத்தமிழ் ஓடையில் நீந்தித் திளைத்த அவர் “இசைத்தது” என்னும் முத்தான சொல்லைக் கண்டுள்ளார். அச்சொல்லால் சிலம்பின் இசைத்தமிழ்ப் பெருமையை முழக்குகிறார். சிலப்பதிகாரத்தின் நாடகத்தமிழ் அருவியில் ஆடிக் களித்த அவர் “நெஞ்சை அள்ளும்” என்னும் முத்துத் தொடரைத் தேர்ந்துள்ளார். அத் தொடரால் சிலம்பினது நாடகத்தமிழின் பெருமையைக் கொட்டி முழக்குகிறார். முத்தமிழின் அமைப்பை மூன்று முத்துச் சொற்களால் குறித்துள்ள திறம் நோக்கத்தக்கது.

அம்மூன்று சொற்களும் சிலப்பதிகாரம் என்னும் நூற்பெயரோடு சேர்த்தே “சிலப்பதிகாரச் செய்யுள்”,“சிலம்பை இசைத்தது”. “அள்ளும் சிலப்பதிகாரம்” என அமைத்திருப்பதுமேலும் ஒருகால் எண்ணி மகிழ்தற்குரியது.

இம்மூன்று சொற்களும் சிலப்பதிகார இலக்கியத்திற்கு மூன்று முத்தான் திறவுகோல்களாக அமைந்துள்ளன.

இவற்றிற்கு மேலும், சிலப்பதிகாரத்திற்கு மணியான திறவுகோல் ஒன்றும் பாரதியாரால் வழங்கப்பட்டுள்ளது. அது வியத்தற்குரிய அமைப்பு. அதனைக் காண்பதற்கு முன் ஒரு இடைவெட்டான எண்ணத்திற்கு அமைதி கண்டு விடல் நலமாகும்.

‘பாரதியார் தமிழ் இலக்கியங்களில் இத்துணை ஆர்வ நோக்கோடு ஈடுபாடு கொண்டிருந்தாரோ’ என்றொரு ஐயம் எழலாம். இவ்வையமே இடைவெட்டான எண்ணமாகும்,

அவரது கவிதைகளோடு கட்டுரைகளையும் காண்போர் இவ்வையம் நீங்கி அமைதி கொள்வர்; அகமகிழ்வர்.

கட்டுரைகளிலும் வாய்ப்பு நேரும் போதெல்லாம் கம்பர் திருவள்ளுவர், இளங்கோ ஆகிய மூவரையும் சேர்த்துக் குறித்துள்ளார். ஒளவையார், தாயுமானவர், ஆண்டாள் முதலியோரை ஈடுபாட்டோடு பாராட்டியுள்ளார். ஆங்காங்கே இலக்கிய மேற்கோள்கள் காட்டியுள்ளார். திருக்குறள் மேற்கோள்கள் நிறைந்து காணப்படுகின்றன.

அவர் சங்க இலக்கியங்களைக் காணாதவராக இருக்கலாம். அதற்குக் காரணம் சங்க நூல்கள் வெளியிடப் படாமையும் கிடைக்காமையுமேயாகும். அக்காலத்துக் குறிக்கப்பட்ட சில புறநானூற்றுப் பாடல்களைக் கண்டு வியந்து போற்றியுள்ளார்.

“தமிழ்நாட்டு நாகரிகம்” எனும் தலைப்பில் அமைந்த கட்டுரையில், அவரது தமிழ் இலக்கிய ஈடுபாட்டைப் பளிச்சென்று காணமுடிகிறது. “இந்தியப் பெருநாட்டின் ஆட்சி உரிமையை இழப்பினும் இழப்போம்; எம் சேக்சுபியரின் இலக்கியத்தை இழக்க ஒப்பமாட்டோம்” என்னும்[3]மெக்காலே பெருமகனாரின் கருத்தைக் காட்டிப் பின்வருமாறு தொடருகிறார்:

“இந்த மாதிரியாகப் பெருமைப் படுத்தி நம்மவர் கம்பனைச் சொல்லலாம்; திருவள்ளுவரைச்

சொல்லலாம்; சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடி களைக் கூறலாம்................தமிழ்நாட்டின் மற்றச் செல்வங்களையெல்லாம் இழந்துவிடப் பிரியமா; ஔவையார் நூல்களை இழந்துவிடப் பிரியமா, என்று நம்மிடம் கேட்பார்களாயின் ‘மற்றச்செல்வங்களையெல்லாம் பறிகொடுக்க நேர்ந்தாலும் பெரிதில்லை; அவற்றைத் தமிழ்நாடு மீட்டும் அமைத்துக் கொள்ள வல்லது. ஔவைப் பிராட்டியின் நூல்களை இழக்க ஒரு போதும் சம்மதப்படமாட்டோம். அது மீட்டும் அமைத்துக்கொள்ள முடியாத தனிப் பெருஞ்செல்வம்’ என்று நாம் மறுமொழி உரைக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.”

இதனைக் காண்போம், பாரதியார் தமிழ் இலக்கியம் பற்றிக் கொண்டிருந்த பூரிப்பைக் காணலாம்.

இவற்றிற்கெல்லாம் முடிசூட்டுவது போல் வேறு ஓரிடத்தில்,

“கம்பன், இளங்கோ, திருவள்ளுவர் முதலிய மகா கவிகளுக்கு ஞாபகச் சிலைகளும், வருசோற்சவங்களும் ஏற்பாடு செய்யவேண்டும்.”

- என்று குறித்துத் தன் பேரார்வத்தை வெளிப்படுத்தியுள்ளார். இக்கருத்து இற்றைக்கு அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது. தமிழ் இலக்கியத்திற்கு அக்காலத்தில் இருந்த வரவேற்பை உள்ளத்தில் கொண்டு இக்கருத்தை எடை போட வேண்டும்.

ஐயத்தோடு எழுந்த இந்த இடைவெட்டான எண்ணம் இவ்வளவில் அமைதியுற்றாலும் மற்றொரு வகையில் அவ்விடைவெட்டு எண்ணம் தொடர்தல் கூடும்.

‘தமிழ் இலக்கியத்தின்பால் பாரதியார் பேரார்வமும், ஈடுபாடும் கொண்டது உண்மையாயிருக்கலாம். தான்கண்ட இலக்கியங்களைத் துருவித் துருவி ஆய்ந்திருப்பாரா? அவற்றின் பொருள் அமைப்புகளைத் தேர்ந்து தேர்ந்து கண்டிருப்பாரா? கண்டவற்றைச் சுட்டிக் காட்டச் சொற்களைச் சுண்டிப் பார்த்தெடுத்து அமைத்திருப்பார் என்று சொல்லலாமோ’ என்ற எண்ணம் எழலாம். இவ்வெண்ணமும் அவ்விடை வெட்டின் தொடர்பே.

இதற்குப் பாரதியார் தமிழ்ப் புலவர்களது உணர்வைக் கண்டு வெளியிட்டுள்ளதைக் காணவேண்டும். தமிழ்ப் புலவர்கள் காப்பியங்களை நிறைவேற்றுவதற்கு வெற்றுக் கதை அளப்பையும், சொல்லடுக்குகளையும், மின்னலிடும் நயங்களையும், சுவை கூட்டும் அணிகளையும் மட்டும் முதலாகக் கொண்டார்களல்லர். தமிழ்ப் புலவர்கள் தாம் அமைக்கும் காப்பியங்களை உணர்வுப் பிழம்புகளாய், எழுச்சியின் ஆக்கங்களாய்த் திகழவைக்க வேண்டும் என்னும் போக்குடையவர்கள் என்று பாரதியார் கருதிப் பாடியுள்ளார்.

“கள்ளையும் தீயையும் சேர்த்து-நல்ல
காற்றையும் வான வெளியையும் சேர்த்து
தெள்ளு தமிழ்ப்புல வோர்கள்-பல
தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார்”

- என்று அவர் பாடியிருப்பதில் தமிழ்க் காப்பியம் பற்றிய அவரது உள்ளுணர்வு கொப்பளிக்கிறது.

களிப்பும், மயக்கமும் கள்ளினது தன்மை. வெம்மையும் ஒளியும் தீயினது தன்மை. இவ்விரண்டு தன்மைகளும் கலக்க முடியாதன; சேர்க்கமுடியாதன. ஆனால் புலவர்களால் இவ்வருஞ் செயல் முடியும். காற்று, கட்புலனாகா நுண்மையும் இயக்கமும் கொண்டது. வானம், விரிவையும் பல்வகைக் கோள்களையும் கொண்டது. இவ்விரண்டன் கோட்பாடுகளையும் புலவர்களால் சேர்க்க முடியும். அவ்வாறு சேர்த்து அவற்றிற்குச் சொல்லுருவம் கொடுத்துக் காப்பியங்களை வடித்துள்ளதாகப் பாரதியார் பாடுகிறார். அதைக் கூர்ந்து நோக்கினால் பாரதி தமிழ் இலக்கியங்களில் தோய்ந்துள்ள நிலை தென்படும்; ஆய்ந்துள்ள வகை புலப்படும்.

எதை நோக்கினும் அதில் பொதிந்து கிடக்கும் உண்மையை உடனே விரைந்து அறிய வேண்டும் என்னும் துடிப்பான கூர்த்த அறிவுடையவர் பாரதியார்

இதனை,

“அறிவு வேண்டுகிறேன்; எந்தப் பொருளை நோக்குமிடத்தும் அதன் உண்மையை உடனே தெரிந்துகொள்ளும் நல்லறிவு’’ (வேண்டுகிறேன்)

- என்று குறிக்கும் அவரது குறிப்பை நுணுகி நோக்கி உணரவேண்டும்.

தம் அறிவுப் பார்வையில் படுகின்றவற்றின் உள்ளீட்டை, பார்வை பட்ட அளவிலேயே உணரும் திறன் வாய்ந்தவர் பாரதியார் என்பதை அவரது கவிதைகளாலும் உணரலாம்.

இத்திறன் உடையோர் ஆன்றோராவர். பாரதியார் ஆன்றோர் குழுவில் ஒளிவிட்டுத் திகழ்பவர்.

ஆன்றோர்கள் கருத்துக் கருவூலங்கள்; அரும்பொருள் பெட்டகங்கள் எங்கெங்கோ, எவ்வெப்பொழுதோ பெற்ற நுண்மாண் பொருள்கள் அவர்தம் உள்ளத்தே முறையாக அமைந்திருக்கும். அவர்களது இயற்கையான மதிநுட்பத்தால் அவை உரிய காலத்தே, உரிய அளவில், உரிய முறையில் வெளிப்படும். ஒன்றைப் படைக்குங்கால் எளிதாகக் கைப்போக்கில் படைப்பர். அப்படைப்பில் திட்டமிட்டும், வரையறுத்தும், முறைகருதியும் அமைத்தது போன்று சொற்களும் கருத்துகளும் அமைந்துவிடும்.

அப்படைப்புகளை அவர்களே திரும்ப நோக்கும்போது வியப்பர். அவ்வியத்தகு வித்தகம் பாரதியாரிடத்தும் அமைந்துள்ளது. இவ்வித்தகம் அவர்க்குக் கைவந்த கலை இவ்வடிப்படை உண்மையை உளத்துக்கொண்டு நோக்கின், பாரதியார் சொற்களை அமைத்ததன் தெளிவும் பொருட்பொலிவும் புரியும். இடைவெட்டெண்ணமும் சிறுகச் சிறுக மறைந்து அமைதி கிடைக்கும்.

இவ்வடிப்படையிலே - இவ்வமைதியிலே நின்றுதான் சிலப்பதிகாரத்திற்குப் பாரதியார் தந்துள்ள மணியான திறவுகோலை நோக்கவேண்டும்; நோக்குவோம்.

சிலப்பதிகாரத்திற்கு ‘நெஞ்சை அள்ளும்’ எனும் அடைமொழி கொடுத்தார். அதே மூச்சில் என்ன பாடினார்?

“சிலப்பதி காரம் என்றோர்
மணி ஆரம் படைத்த தமிழ்நாடு”

- என்று சிலப்பதிகாரத்தை ஒரு ‘மணி ஆரமாக’ உருவகித்துப் பாடினார். தமிழ்நாட்டிற்கு ஒரு ‘மணிமாலை’ சூட்டிப் பூரித்தார்.

சிலப்பதிகாரத்தை ஓர் அணிகலனாக உருவகம் செய்தவர் ஏன் மணி ஆரம் - மணிமாலை என்றார்? ஏன் பவளமாலை என்று பாடியிருக்கக் கூடாது? பொன்மாலை என்று பாடியிருக்கலாமே! மலர் மாலை என்று தொடுத்திருந்தால் மணக்காதா? செய்யுள் அமைதிக்கும் ஒத்திசைக்கும் வகையில்,

சிவப்பதிகாரம் என்றோர்
துகிர்[4] ஆரம் படைத்த தமிழ்நாடு”
சிலப்பதிகாரம் என்றோர்
பொலன்[5] ஆரம் படைத்த தமிழ்நாடு”
சிலப்பதிகாரம் என்றோர்
மலர் ஆரம் படைத்த தமிழ்நாடு.”

-என்று பாடியிருக்கலாம். ஏன் மணிகள் கோத்த கோவையாகப் பாடினார்? மணியாகச் சிலப்பதிகாரத்தைக் குறித்துள்ளதுதான் நோக்கத்தக்கது. நம் நோக்கம் கூர்ந்து நுழைய நுழையப் புதுப்புது வியப்புகள் மேலிடுகின்றன.

‘மணிஆரம்’ என்ற தொடரில் ‘மணி’ என்னும் சொல் ஒரு திறவுகோலாகப் புகுந்து சிலப்பதிகாரப் பேழையைத் திறக்கிறது. அரும்பெரும் கருத்துக்குவியலை நமக்கு வழங்குகிறது. அதனால் அச்சொல் மணியான திறவுகோலாக மிளிர்கிறது.

சிலப்பதிகாரம் ஓர் அணியால் பெயர் பெற்ற காப்பியம். அவ்வணி சிலம்பு. சிலம்பு காரணமாக அதிகரித்த, வரலாற்றைக் கூறுவதால் சிலம்பின் பெயரைப் பெற்றது. இதனால் நூல் முழுதும் சிலம்பே நிறைத்துக் கொண்டிருக்கவில்லை. சிலம்பு பெற்றுள்ள இடங்கள் நான்கே. சிலம்பு, காட்சிக்கு நிற்கும் நிலையைக்கொண்டே இந்நான்கு எண்ணிக்கை குறிக்கப்படுகின்றது.

மாதவியைப் பிரிந்து தனது இல்லம் அடைந்த கோவலன் தனது நிலையைக் கண்ணகியார்பால் கூறி வருந்தியபோது, கண்ணகியார் ‘சிலம்புகள் உள்ளன: பெற்றுக்கொள்ளும்’ என்றார். இங்குதான் சிலம்பு முதற்காட்சி விளங்குகின்றது.

மதுரையில் இடைக்குல மடந்தை மாதரியின் இல்லத்தில் கண்ணகியாரும் கோவலனும் தங்கினர். சிலம்பு விற்பனைக்கு நோட்டம் காணப் புறப்படும் கோவலன், ‘உனது சிறிய அடியில் அணிந்திருந்த சிலம்புகளில் ஒன்றைக்கொண்டு சென்று விற்பனைக் களமறிந்து வருவேன்’-என்று சொல்லி ஒரு சிலம்பைப் பெற்றுப் புறப்பட்டான். இங்கு இரண்டாவது காட்சி வழங்குகின்றது சிலம்பு.

இவ்விரண்டு இடங்களிலும் சிலம்பு குறிக்கப்படுகிறதேயன்றி அதன் தன்மையோ, அமைப்போ பேசப்படவில்லை.

அடுத்துக் கோவலன் பொற்கொல்லனைக் காண்கின்றான். ‘அரசிக்கு ஆவதோர் சிலம்பு உள்ளன. அதனை விலையிடுவையோ, என்று கோவலன் பொற்கொல்லனிடம் கூற, அவனும் இசைய, கோவலன் பொதிந்து வைத்திருந்த பொதியை அவிழ்த்தான். சிலம்பு காட்சியளித்தது. பொற்கொல்லனை பொற்கொல்லன் காண்கின்றான். இளங்கோவடிகளார் இங்குதான் சிலம்பை முதன் முதல் வண்ணிக்கின்றார்.

இச்சிலம்பு, ‘கிளிச்சிறை என்னும் பசும் பொன்னால் செய்யப்பட்டது. சித்திர வேலைப்பாடுகள் நிறைந்தது, அதன் கூடுவாய் மேடாக இருக்கும். அம்மேட்டில் ஒரு குழி (கேவணம்) யையும் கொண்டது. அக்குழியில் ஒளிக்கதிர் வீசும் கல் ஒன்று பதிக்கப்பட்டுள்ளது. இக்கல்லோடு வயிரமும் சேர்த்துக் கட்டப்பட்டுள்ளது.’

இதனைக் கூறும் சிலப்பதிகார அடிகள் இவை:

மத்தக மணியொடு வயிரம் கட்டிய
பத்திக் கேவணப் பசும்பொற் குடைச்சூழ்
சித்திரச் சிலம்பு”

சிலம்பில் மத்தகம்போன்ற பகுதியில் பதிக்கப்பட்டது ஒரு ‘மணி’ என்று அறிமுகப்படுத்தப்படுகின்றது. சிலம்பின் புற அமைப்பில் இவ்வாறு ஒரு மணி இடம்பெறுகின்றது. மூன்றாவது இடமாகச் சிலம்பு வரினும் இங்குதான் சிலம்பின் தோற்றத்தைக் காட்டுகின்றார். முதலில் காட்டும் எடுப்பிலேயே “மத்தக மணி” எனச் சிலம்பில் மணி இடம் பெற்றமை குறிக்கப்படுகின்றது. இதனை ஒரு முதற்குறிப்பாகக் கொள்ளலாம். இக்குறிப்பு பாரதியின் நெஞ்சிலும் தோன்றியிருக்கலாம்.

சிலம்பு இறுதியாகப் பாண்டிய மன்னன் அவையில் தோன்றுகின்றது.

பாண்டியன் நெடுஞ்செழியன் வீற்றிருக்கின்றான். அவன் பால் ஒரு சிலம்பு-பொற்கொல்லனால் கோவலனிடமிருந்து பெறப்பட்ட சிலம்பு உள்ளது. எதிரே அவலம் பொதிந்த சீற்றத்தோடு கண்ணகியார் நிற்கின்றார். அவர் கையில் ஒரு சிலம்பு உள்ளது. மன்னன்,

“யாமுடைச் சிலம்பு முத்துடை அரியே” என்றான். சிலம்பில் ஒலி உண்டாவதற்கு உள்ளே அவரவர் செல்வ நிலைக்கேற்ப சிறு கல்லோ, வெள்ளிப் பரலோ,பொன்னோ, முத்தோ பிறவோ போடப்பட்டிருக்கும். அப்பரல் “அரி” எனப்படும். மன்னன் தனது ‘சிலம்பில் போடப்பட்ட அரி முத்து’ என்றான்.

கண்ணகியார், தனது சிலம்பில் பெய்யப்பட்டுள்ள ‘அரி’ யை அறிவிக்கின்றார் :

“என்காற் சிலம்பு மணியுடை அரியே”—என்றார். ஆம். மணி உள்ளே பெய்யப்பட்ட சிலம்பு இது. மணி ஒன்பது வகைப்படும். இங்கே பெய்யப்பட்ட மணி செம்மணியாம் மாணிக்க மணி. இவ்வாறு சிலம்பிற்குள்ளும் மணி இடம் பெற்றதைக் காண்கின்றோம். பாரதியின் நெஞ்சக் கண்ணிலும் இது பட்டிருக்கலாம்.

சிலம்பின் உள்ளே போடப்பட்ட பரல் மணி என்று கண்ணகியாரை அறிவிக்கச் செய்த இளங்கோவடிகளார் அம்மணி அறிவிப்பை ஒரு முறையோடு நிறுத்தினாரல்லர். தொடர்ந்து அடிகளாரே கோவைப்படுத்துகின்றார்:

அணிமணிக் காற்சிலம்பு உடைப்ப, மன்னவன்
வாய்முதல் தெரித்தது மணியே; மணிகண்டு
தாழ்ந்த குடையன்; தளர்த்தசெங் கோலன்”

இங்கு மணி, மணி, மணி என அடுக்கியுள்ளமை ஒரு மணிமாலை போன்றுள்ளது. இம்மணிமாலை பாரதி நெஞ்சப் பார்வையில் பதிந்திருக்கும்.

சிலப்பதிகாரக் காப்பியத்திற்குக் காரண வாயிலாகிய சிலம்பு, புறத்தாலும் அகத்தாலும் மணிபெற்றுத் திகழ்வதை ஒரு பதிவாகக் கொள்ள வேண்டும். இது முதல் பதிவு.


  1. முருடு - ஒருவகை மத்தளம்.
  2. பணிலம் - சங்கு.
  3. மெக்காலே என்று பாரதி காட்டியுள்ளார்.
    “12-5-1940 செவ்வாயன்று இலண்டன் மாநகரில் “தாந்தேயும் சேக்சுபியரும்” பற்றிப் பேசியபோது தாமசுகார்லைல் “சேக்கபீயரை ஒரு போதும் இழக்கமாட்டோம். இந்தியப்பேரரசு ஒரு நாளில் எவ்வாறேனும் நம்மை விட்டு நீங்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.”
    —திருத்த அறிவிப்பு பேரா. பா. வளன் அரசு எம். ஏ. நன்றி
  4. துகிர் = பவளம்.
  5. பொலன் = பொன்