உள்ளடக்கத்துக்குச் செல்

பாரதி அறுபத்தாறு/உபதேசம்

விக்கிமூலம் இலிருந்து

உபதேசம்

பக்கத்து வீடிடிந்து சுவர்கள் வீழ்ந்த
பாழ் மனை யொன் றிருந்த தங்கே ; பரமயோகி
ஒக்கத் தன் னருள் விழியா லென்னை நோக்கி
ஒரு குட்டிச் சுவர் காட்டிப் பரிதி காட்டி

அக்கணமே கிணற்றுள தன் விம்பங் காட்டி.
“அறிதிகொலோ?“ எனக் கேட்டான் “அறிந்தேன்”
                                           [என்றேன்.
மிக்க மகிழ் கொண்டவனுஞ் சென்றான்; யானும்
வேதாந்த மரத்திலொரு வேரைக் கண்டேன். (27)

தேசிகன் கை காட்டி யெனக் குரைத்த செய்தி
செந்தமிழி லுலகத்தார்க் குணர்த்து கின்றேன்;
“வாசியை நீ கும்பகத்தால் வலியக் கட்டி,
மண்போலே சுவர் போலே,வாழ்தல் வேண்டும்;
தேசுடைய பரிதி யுருக் கிணற்றி னுள்ளே
தெரிவது போலுனக்குள்ளே சிவனைக் காண்பாய்;
பேசுவதிற் பயனில்லை, அனுபவத் தாற்
பேரின்ப மெய்துவதே ஞான“ மென்றான். (28)

கையிலொரு நூலிருந்தால் விரிக்கச் சொல்வேன்,
கருத்தை யதிற் காட்டுவேன்; வானைக் காட்டி,
மையிலகு விழியாளின் காத லொன்றே
வையகத்தில் வாழு நெறி யென்று காட்டி,
ஐய னெனக் குணர்த்தியன பலவா ஞானம்,
அதற்கவன் காட்டிய குறிப்போ அநந்த மாகும்,
பொய்ய றியா ஞான குரு சிதம்ப ரேசன்
பூமி விநாயகன் குள்ளச் சாமி யங்கே. (29)

மற்றொரு நாட் பழங் கந்தை யழுக்கு மூட்டை
வள் முறவே கட்டியவன் முதுகின் மீது
கற்றவர்கள் பணிந் தேத்துங் கமலப் பாதக்
கருணைமுனி சுமந்துகொண்டென் னெதிரே வந்தான்;
சற்று நகை புரிந்தவன் பாற் கேட்கலானேன்:
"தம்பிரானே,இந்தத் தகைமை யென்னே?

முற்று மிது பித்தருடைச் செய்கை யன்றோ? [றேன்.
மூட்டை சுமந்திடுவ தென்னே? மொழிவாய்“ என்

புன்னகை பூத் தாரியனும் புகலு கின்றான்:
“புறத்தே நான் சுமக்கின்றேன்; அகத்தினுள்ளே,
இன்னதொரு பழங் குப்பை சுமக்கிறாய் நீ“
என்றுரைத்து விரைந்தவனு மேகிவிட்டான். [டேன்;
மன்னவன் சொற்பொருளினை யான் கண்டு கொண்
மனத்தி னுள்ளே பழம் பொய்கள் வளர்ப்பதாலே
இன்னலுற்று மாந்தரெலா மடிவார் வீணே,
இருதயத்தில் விடுதலையை இசைத்தல் வேண்டும். (31)

சென்றதினி மீளாது; மூடரே, நீர்
எப்போதுஞ் சென்றதையே சிந்தைசெய்து
கொன்றழிக்குங் கவலை யெனுங் குழியில் வீழ்ந்து
குமை யாதீர்; சென்றதனைக் குறித்தல் வேண்டா;
இன்று புதிதாப் பிறந்தோ மென்று நெஞ்சில்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளையாடி யின் புற்றிருந்து வாழ்வீர்;
அஃதின்றிச் சென்றதையே மீட்டு மீட்டும் (32)

மேன்மேலு நினைந் தழுதல் வேண்டா, அந்தோ;
மேதை யில்லா மானுடரே, மேலு மேலும்
மேன் மேலும் புதியகாற் றெம்முள்வந்து
மேன் மேலும் புதிய வுயிர் விளைத்தல் கண்டீர்,
ஆன்மா வென்றே கருமத் தொடர்பை யெண்ணி
அறிவு மயக்கங் கொண்டு கெடுகின் றீரே !
மான் மானும் விழியுடையாள் சக்தி தேவி
வசப்பட்டுத் தனை மறந்து வாழ்தல் வேண்டும். (33)

சென்ற வினைப் பயன்க ளெனைத் தீண்டமாட்டா;
“ஸ்ரீதரன் யான் சிவ குமாரன் யானன்றோ?
நன்றிந்தக் கணம் புதிதாப் பிறந்து விட்டேன்,
நான் புதியன், நான் கடவுள், நலிவிலாதோன்”
என்றிந்த வுலகின் மிசை வானோர் போலே
இயன் றிடுவார் சித்த ரென்பார்; பரம தர்மக்
குன்றின் மிசை யொரு பாய்ச்சலாகப் பாய்ந்து,
குறிப் பற்றார் கேடற்றார் குலைத லற்றார். (34)

குறியனந்த முடையோராய்க் கோடி செய்தும்
குவலயத்தில் வினைக் கடிமைப் படாதாராகி
வெறியுடையோன் உமையாளை யிடத்திலேற்றோன்
வேத குரு பரம சிவன் வித்தை பெற்றுச்
செறிவுடைய பழ வினையா மிருளைச் செற்றுத்
தீயினைப் போல் மண்மீது திரிவார் மேலோர்,
அறிவுடைய சீடா, நீ குறிப்பை நீக்கி
அநந்தமாந் தொழில் செய்தா லமர னாவாய். (35)

கேளப்பா, மேற் சொன்ன உண்மை யெல்லாம்
கேடற்ற மதி யுடையான் குள்ளச் சாமி
நாளும் பல் காட்டாலும் குறிப்பினாலும்
நலமுடைய மொழியாலும் விளக்கித் தந்தான்;
தோளைப்பார்த்துக் களித்தல் போலே யன்னான்
துணை யடிகள் பார்த்து மனங் களிப்பேன் யானே.
வாளைப் பார்த் தின்பமுறு மன்னர் போற்று
மலர்த் தாளான் மாங் கொட்டைச் சாமி வாழ்க! (36)