உள்ளடக்கத்துக்குச் செல்

பாரதி அறுபத்தாறு/மரணத்தை வெல்லும் வழி

விக்கிமூலம் இலிருந்து

மரணத்தை வெல்லும் வழி

பொன் னார்ந்த திருவடியைப் போற்றி யிங்கு
புகலுவேன் யா னறியு முண்மை யெல்லாம்;
முன்னோர்க ளெவ்வுயிருங் கடவு ளென்றார்,
முடிவாக அவ் வுரையை நான் மேற் கொண்டேன்;
அன்னோர்க ளுரைத்த தன்றிச் செய்கை யில்லை.
அத்வைத நிலை கண்டால் மரண முண்டோ?
முன்னோர்க ளுரைத்த பல சித்த ரெல்லாம்
முடிந்திட்டார், மடிந்திட்டார், மண்ணாய்விட்டார். (4)

பொந்திலே யுள்ளா ராம், வனத்தி லெங்கோ
புதர்களிலே யிருப்பா ராம், பொதியை மீதே
சந்திலே சவுத்தியிலே நிழலைப் போலே
சற்றே யங்கங்கே தென் படுகின்றா ராம்,
நொந்த புண்ணைக் குத்துவதிற் பய னொன்றில்லை ;
நோவாலே மடிந் திட்டான் புத்தன் ; கண்டீர்
அந்தண னாம் சங்க ராசார்யன் மாண்டான்;
அதற்கடுத்த விராமா நுஜனும் போனான்;
(5)

சிலுவையிலே அடி யுண்டு யேசு செத்தான்;
தீய தொரு கணையா லே கண்ணன் மாண்டான்;
பலர் புகழு மிராமனு மே யாற்றில் வீழ்ந்தான்;
பார் மீது நான் சாகா திருப்பேன், காண்பீர்!
மலிவு கண்டீ ரிவ் வுண்மை, பொய் கூறேன் யான்,
மடிந்தாலும் பொய் கூறேன் மானுடர்க் கே,
நலிவு மில்லை, சாவுமில்லை, கேளீர், கேளீர்.
நாணத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை (6)