பாரதி அறுபத்தாறு/யாழ்ப்பாணத்து சுவாமியின் புகழ்
Appearance
யாழ்ப்பாணத்து சுவாமியின் புகழ்
கோவிந்த ஸாமி புகழ் சிறிது சொன்னேன்;
குவலயத்தின் விழி போன்ற யாழ்ப்பாணத்தான்,
தேவி பத மறவாத தீர ஞானி,
சிதம்பரத்து நடராஜ மூர்த்தி யாவான்,
பாவியரைக் கரை யேற்று ஞானத் தோணி
பரம பத வாயிலெனும் பார்வை யாளன்;
காவி வளர் தடங்களிலே மீன்கள் பாயுங்
கழனிகள் சூழ் புதுவையிலே யவனைக் கண்டேன்.
(40)
தங்கத்தாற் பதுமை செய்து மிரத லிங்கஞ்
சமைத்து மவற் றினி லீசன் தாளைப் போற்றுந்
துங்கமுறு பக்தர் பலர் புவி மீதுள்ளார்;
தோழரே, யெந்நாளு மெனக்குப் பார்மேல்
மங்களஞ் சேர் திரு விழியா லருளைப் பெய்யும்
வானவர் கோன், யாழ்ப்பாணத் தீசன் றன்னைச்
சங்கர னென் றெப்போது முன்னே கொண்டு
சரண டைந்தா லது கண்டீர் சர்வ சித்தி.
(41)