உள்ளடக்கத்துக்குச் செல்

பாலஸ்தீனம்/யூதர் குடியேற்றத்தின் விளைவு

விக்கிமூலம் இலிருந்து

IV
யூதர் குடியேற்றத்தின் விளைவு

1919ம் வருஷத்திலிருந்து 1938ம் வருஷத்திற்குள், பாலஸ்தீனத்தில் சுமார் மூன்று லட்சம் யூதர்கள் குடியேறியிருக்கிறார்கள். இவர்கள் அங்கஹீனர்களோ, வயதான கிழவர்களோ இல்லை. உழைக்கிற சக்தியும், இடத்தையும், பொருளையும் சந்தர்ப்பம் பார்த்து உபயோகிக்கிற திறமையும் நிரம்பப் பெற்றவர்கள். இவர்கள், தாங்களாக மட்டும் வரவில்லை. சுமார் எட்டு கோடி பவுன் மூலதனத்தையும், கூடவே கொண்டு வந்தார்கள். உழைப்பும், பணமும் ஒரு சமூகத்தாரிடத்தில் ஒன்று சேர்ந்திருக்குமானால், அந்தச் சமூகத்தார் எந்த நாட்டிலும், எத்தகைய தர்மசங்கடமான நிலையிலுங் கூட வெற்றி காண முடியுமல்லவா? இவர்கள், தங்களுக்கு அநுகூலமான சந்தர்ப்பங்கள் ஏற்படவில்லையென்று சும்மாயிருக்க மாட்டார்கள்; சந்தர்ப்பங்களைச் சிருஷ்டி செய்து கொள்வார்கள். பாலஸ்தீனத்தில் குடியேறிய யூதர்கள் இம்மாதிரியினரே.

யூதர்களின் குடியேற்றத்திற்கு முன்னர், அராபியர்கள், ஏதோ அற்ப சொற்பமாக, தங்களுடைய அன்றாட ஜீவனத்திற்குப் போதுமான அளவு சிறு சிறு துண்டு நிலங்களில் விவசாயஞ் செய்து வந்தார்கள். இந்த நிலங்களும், இவர்களுக்குச் சொந்தமாயிராது. நிலச் சுவான்தார்களிடமிருந்து, குத்தகைக்கோ, வாடகைக்கோ பெறப்பட்டதாக இருக்கும். மகசூலில் ஏறக்குறைய ஐந்தில் ஒரு பாகம் முதல், மூன்றில் ஒரு பாகம் வரை, நிலச் சொந்தக்காரர்களுக்குக் கொடுத்து விடுவார்கள். இங்ஙனம், இவர்கள் ஒழுங்காகக் கொடுத்துக் கொண்டு வந்த போதிலும், சாசுவதமாக ஒரே நிலத்திலேயே சாகுபடி செய்து கொண்டிருக்கலாம் என்ற நிச்சயம் இராது. நிலச் சொந்தக்காரர்கள், தங்கள் இஷ்டப்படி நிலத்தைப் பிரித்தோ, மாற்றியோ வேறு யாருக்கேனும் கொடுத்து விடுவார்கள். இங்ஙனம் விவசாயிகள் தங்கள் உழைப்பின் ஊதியத்தில் ஒரு பகுதியை நிலச் சொந்தக்காரர்களுக்குக் கொடுத்து விடுவதோடு, தாங்கள் கடன் பட்டிருக்கும் லேவாதேவிக்காரனுக்கு ஒரு பகுதியைக் கொடுத்து விடுவார்கள். விவசாயிக்குத் தேவை இருக்கிறதோ இல்லையோ, தேவையை உண்டு பண்ணியோ, அதிகப் படுத்தியோ விடுகிறான் லேவாதேவித் தொழில் நடத்துகிறவன். இந்தச் சாபக்கேட்டிற்கு பாலஸ்தீன அராபிய விவசாயிகள் புறம்பாகவில்லை.

விவசாயம் இந்த நிலையிலிருக்க, கைத்தொழில்கள் இல்லவே இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். பரம்பரையாக வந்த சில குடிசைத் தொழில்கள், விவசாயிகளின் மற்றத் தேவைகளைப் பூர்த்தி செய்து வந்தன.

யூதர்கள் குடியேற்றத்திற்குப் பின்னர், விஸ்தீரணமான பிரதேசங்களில் ஏகபோக விவசாயம் நடைபெற்றது. இயந்திரங்களை வைத்து நடத்தப் பெற்ற கைத்தொழிற் சாலைகள் தோன்றின. பெரும் பற்றான வியாபாரம் நடைபெறத் தொடங்கியது. இவைகளோடு, அராபியர்களின் சாதாரண விவசாயமும், குடிசைத் தொழிலும் போட்டி போட முடியுமா?

குடியேறின யூதர்கள், பெரும்பற்றான விவசாயத்தைச் செய்வதற்காக, அராபிய நிலச்சுவான்தார்களிடமிருந்தும், தனிப்பட்ட விவசாயிகளிடமிருந்தும் நல்ல விலை கொடுத்து, சாகுபடி செய்யப்படுகிற விவசாய நிலங்களையும், கரம்பாயிருந்த பிரதேசங்களையும் வாங்கினார்கள். விற்ற நிலச்சுவான்தார்கள், தங்கள் நிலத்தோடு ஒட்டி வாழாமல், நிலத்திலிருந்து கிடைக்கிற வருமானத்தை வைத்துக் கொண்டு, நகரங்களில் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தவர்கள். இவர்கள், தங்கள் நிலங்களுக்கு நல்ல விலை கிடைக்கிற போது, அவற்றை விற்காமலிருப்பார்களா? தங்களுடைய நிலத்தை நம்பி, வாழ்க்கையை நடத்தி வந்த விவசாயிகளைப் பற்றி இவர்களுக்கு என்ன கவலை?

யூதர்கள் வாங்கிக் கொண்ட நிலங்களில், அராபியர்கள் இனி விவசாயஞ் செய்வதெப்படி? அநேகருக்கு ஜீவனோபாயமே இல்லாமற் போய் விட்டது. ஒரு சிலர் விவசாயக் கூலிகளாய் அமர்ந்து வேலை செய்தார்கள். இன்னுஞ் சிலர், நகர்ப் புறங்களுக்குச் சென்று புதிதாக யூதர்களால் ஸ்தாபிக்கப்பட்ட தொழிற்சாலைகளில் கூலியாட்களாய் அமர்ந்தார்கள். ஆனால், இவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கூலியோ மிகச் சொற்பம்.

இது நிற்க. யூதர்களின் கட்சியைச் சிறிது கேட்போம். தாங்கள் எந்த நிலங்களை விவசாயத்திற்கென்று சுவாதீனப்படுத்திக் கொண்டார்களோ, அவை தங்கள் சுவாதீனமாவதற்கு முன்னர் வெறுஞ் சதுப்பு நிலமாகவோ அல்லது கரம்பாகவோ இருந்தனவென்றும், விவசாயஞ் செய்யப்பட்டு வந்த நிலங்களைத் தாங்கள் அதிகமாகச் சுவாதீனப்படுத்திக் கொள்ளவில்லை யென்றும், அப்படி சுவாதீனப்படுத்திக் கொண்டிருந்தாலும், அவைகளுக்கு நல்ல விலை கொடுத்திருப்பதாகவும், சாகுபடி நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட அராபிய விவசாயிகளுக்கு வேறு நிலமோ, போதிய பணமோ நஷ்டஈடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதென்றும் யூதர்கள் கூறுகிறார்கள்.

இவற்றை யாரும் மறுக்கவில்லை. ஆனால், அராபிய விவசாயிகள் இதனால் திருப்தியடையவில்லையே. தாங்கள் பரம்பரையாகச் சாகுபடி செய்து வந்த நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டதுதான், அவர்களுக்கு அதிக அதிருப்தியை அளித்திருக்கிறது. எந்த நிலத்தில் தலைமுறை தலைமுறையாகத் தங்கள் வியர்வையைப் பாய்ச்சி, அதிலிருந்து கிடைக்கிற தானியங்களைக் கொண்டு வயிறு வளர்த்து வந்தார்களோ, அதிலிருந்து வெளியேறிச் செல்வதென்றால்,—அதிலும் பிறருடைய பலவந்தத்தின் பேரில்— யாருக்குமே கஷ்டமாகத்தானிருக்கும். மற்றும், இவர்களுக்கு நஷ்ட ஈடாகக் கொடுக்கப் பெற்ற மாற்று நிலங்களோ, விவசாயத்திற்கு லாயக்கில்லாதவைகளாகவோ போதுமானவையாகவோ இல்லை. பணமாக நஷ்ட ஈடு பெற்றவர்களோ, அதனால், எவ்வித பலனையும் அநுபவிக்க முடியவில்லை. இவர்களுக்குக் கடன் கொடுத்திருந்த லேவாதேவிக்காரர்கள் மொத்தமாக அதனை வாங்கிக் கொண்டு போய் விட்டார்கள்.

அராபியர்களுக்கு மற்றொரு பயமும் ஏற்பட்டிருக்கிறது. இவர்களின் ஜனத்தொகையானது, 1922ம் வருஷத்தில் ஆறரை லட்சமாயிருந்தது. இது 1936ம் வருஷத்தில் பத்து லட்சமாகி விட்டது. இந்த நிலையில், தங்களுடைய பிதிரார்ஜிதமான நிலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக யூதர்கள் வசம் போய் விட்டால், நாளா வட்டத்தில் தங்களுக்குச் சொந்தமாயுள்ள சராசரி நிலங்களின் ஈவு குறைந்து போகுமேயென்று இவர்கள் அஞ்சுகிறார்கள். ‘விவசாய முறையில் ஏதேனும் மாற்றஞ் செய்யப்பட்டாலன்றி, ஜனத் தொகை அதிகமாகி வரும் அராபியர்களின் ஜீவனத்திற்குப் போதிய அளவு நிலம் இராது’ என்று பீல் கமிஷன் அறிக்கையும் கூறுகிறது.

அராபிய விவசாயிகளின் நிலைமை இப்படியிருக்க, நகரங்களிலே வசிக்கும் அராபியத் தொழிலாளர்களின் நிலைமையென்ன? சுமார் இரண்டு லட்சம் அராபியர்கள், நகரங்களில் கூலி வேலை செய்து அற்ப ஜீவனம் நடத்துகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் அரசாங்கத்தாருடைய மராமத்து இலாகா, ரெயில்வேக்கள், துறைமுகங்கள் முதலியவற்றில் வேலை செய்கிறார்கள். இன்னுஞ் சிலர், யூதர்களின் தொழிற்சாலைகளிலும், அராபியர்களின் தொழில் ஸ்தாபனங்களிலும் வேலைக்கமர்ந்திருக்கிறார்கள். யூதத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப் பெறும் கூலி விகிதத்தை விட இவர்களுக்குக் கொடுக்கப் பெறும் கூலி விகிதம் குறைவு. அறிவின் உபயோகத்திற்கு அவசியமில்லாத வேலைகளில் அராபியர்களே பெரும்பான்மையோராக இருக்கின்றனர். இவர்களுக்குக் கொடுக்கப் பெறும் கூலி விகிதமானது, சுற்றுப் புறமுள்ள ஈராக், சிரியா முதலிய நாடுகளில் கொடுக்கப் பெறும் கூலி விகிதத்தை விட அதிகமேயானாலும், இவர்களின் வாழ்க்கைச் செலவானது வருமானத்தை விட அதிகமாயிருக்கிறது. உதாரணமாக ஹைபா என்ற துறைமுகப் பட்டினத்தில் வீட்டு வாடகை மிக அதிகம். ஒரு வீட்டில் ஓர் அறைக்கு மட்டும் சுமார் இருபது ரூபாய் விகிதம் மாத வாடகை செலுத்த வேண்டும். அராபியத் கொழிலாளி ஒருவனுடைய தினசரி கூலி சராசரி ஒரு ரூபாய்க்கு மேல் இரண்டு ரூபாய்க்குட்பட்டுத்தானிருக்கிறது. இந்த வருமானத்தில், ஏறக் குறைய பாதி பாகத்தை வீட்டு வாடகைக்கு மட்டும் செலவழித்து விட்டால், அவனுடைய மற்றக் குடும்ப காரியங்கள் நடப்பதெங்ஙனம்? மேற்படி ஹைபா நகரத்தில் சுமார் எண்ணூறுக்கு மேல்பட்ட அராபியத் தொழிலாளர்கள் தங்கள் குடும்பங்களோடு நகருக்குப் புறம்பான ஓரிடத்தில் தகரக் கொட்டகைகள் அமைத்துக் கொண்டு வசிக்கிறார்கள். மற்றும் அராபியத் தொழிலாளர்களை ஒருமுகப் படுத்திச் செலுத்தக் கூடிய தொழிற் சங்க ஸ்தாபனங்கள் எதுவும் இல்லை. அப்படி ஏதேனும் தொழிற் சங்க ஸ்தாபன முயற்சி செய்யப் படுமானால், அதனை அரசாங்கத்தார் உடனே அடக்கி விடுகின்றனர். யூதர்களுக்கென்று தனியான ஒரு தொழில் ஸ்தாபனமிருக்கிறது. இதற்கு ‘ஹிஸ்தாத்ரூத்’ (Histadruth) என்று பெயர். இதனிடமிருந்தும் ,அராபியத் தொழிலாளர்கள் எவ்வித உதவியும் பெறுவதில்லை. இதற்கு மாறாக, இவர்கள் மேற்படி ஸ்தாபனத்தைச் சந்தேகிக்கிறார்கள். இன்னும் அதிகமான யூதர்களை பாலஸ்தீனத்தில் குடி புகுத்துவதற்கும், தங்களுக்கு வேலை கிடைக்காமற் செய்து விடுவதற்குமே மேற்படி ‘ஹிஸ்தாத்ரூத்’ ஏற்பட்டிருப்பதாக அராபியத் தொழிலாளர்கள் நம்புகிறார்கள்.

இது நிற்க, யூதர்களின் குடியேற்றத்தினால், சில அராபியர்கள் நன்மையும் அடைந்திருக்கிறார்கள். யூதர்களுக்கு நல்ல விலைக்குத் தங்கள் நிலங்களை விற்றதனால், இவர்களிற் பலர் எதிர்பாராத வண்ணம் பணக்காரர்களாகி விட்டனர். அராபியர்கள் உற்பத்தி செய்யும் விவசாயப் பொருள்களில் சுமார் ஒரு கோடி பவுன் பெருமானவற்றை யூதர்கள் வருஷந்தோறும் வாங்குகிறார்கள். இந்த ஒரு கோடி பவுனும் அராபியர்களில் ஒரு சிலருடைய பொருளாதார அந்தஸ்தை உயர்த்திக் கொடுக்கிறதல்லவா? இந்தக் காரணங்களினால், பாலஸ்தீனத்தில் ஐரோப்பிய யுத்தத்திற்குப் பிறகு அராபிய முதலாளி இனம் ஒன்று தோன்றி விட்டது. சிறப்பாகக் கடலோரப் பிரதேசங்களில், யூதர்களுக்குப் போட்டியாக, அராபியர்களும் பெரிய, பெரிய பழத்தோட்டங்கள் வைத்து, அதில் வியாபாரம் செய்கிறார்கள். 1931ம் வருஷத்தில், அராபியர்களுக்குச் சொந்தமாக 14,740 ஏக்கரா விஸ்தீரணமுள்ள ஆரஞ்சு, திராட்சை முதலியன விளையும் பழத் தோட்டங்கள் இருந்தன. 1935ம் வருஷத்தில் இவை 34,000 ஏக்கராவுக்குப் பெருகின. 1914ம் வருஷத் தொடக்கத்தில் அராபியர்களுக்குச் சொந்தமான தொழிற்சாலைகள் 1,235. 1936ம் வருஷத்தில் இவை 2,290க்குப் பெருகின. இங்ஙனம், பெருகி வரும் அராபிய முதலாளி இனமானது, தன்னை விட தொழில் திறமையிலும், பணத்திலும் முற்போக்கடைந்துள்ள யூத முதலாளி இனத்தோடு அடிக்கடி போட்டி போட்டுக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. இதனால், முன்னது தேசிய மனப்பான்மை கொண்டதாயிருப்பதில் ஆச்சரிய மில்லையல்லவா? தேசீய விடுதலை ஏற்பட்டால்தானே, அந்நியர்களின் பொருளாதார ஆதிக்கம் குறையும்.