உள்ளடக்கத்துக்குச் செல்

பாலைப்புறா/அத்தியாயம் 1

விக்கிமூலம் இலிருந்து


ந்த வீட்டு தொலைக்காட்சிப் பெட்டி, பிரதமர் வி.பி. சிங்கின் தமிழக சுற்றுப் பயண நிகழ்ச்சிகளைக் காட்டிக் கொண்டிருந்தது. ‘டுயாங்.. டுயாங்’ பின்னணி இசை செய்தி வாசிப்பல்ல; தொகுப்புரை. இசை ஒலிக்காத போது, காதைச் சுற்றி, சுற்றி மூக்கைத் தொடும் தமிழில் ஒரு வர்ணனை.

இந்த வெள்ளையன்பட்டிக்கு என்று ஒரு கின்னஸ் புத்தகம் எழுதப்பட்டால், இந்த வீட்டுத் தலைவர் சுப்பையாவும், அவரைத் தூண்டி விட்ட மகள் கலைவாணியும், முதல் பக்கத்தை நிரப்புவார்கள். அட்டைப் படமாகக் கூட ஆகலாம். ஒரு வருடத்திற்கு முன்பு, இந்த ஊருக்குள் முதலாவதாக நுழைந்த தொலைக்காட்சிப் பெட்டி இதுதான். அதற்குப் பிறகு இந்த அரண்மனை வீடே, கிட்டத்தட்ட சினிமா தியேட்டராகி விட்டது. அவரவர் அந்தஸ்துகளுக்கு ஏற்ப, வெறுந்தரையான முற்றம், பெஞ்சுகளைக் கொண்ட உள் திண்ணை, சில நாற்காலிகளைக் கொண்ட உள்ளறை என்று ரசிகர்கள் தரம் பிரிக்கப்பட்டாலும், இது வரை கட்டணம் வசூலிக்கப்படாத வீடியோ வீடுதான்.

இந்த பெருமை மிக்க பெட்டிக்கு தொலைவில், பத்துப் பதினைந்து பெண்கள், வட்டமடித்து உட்கார்ந்து இருந்தார்கள். வாடிக் கொண்டிருக்கும் செடி ஒன்று, காலத்தின் கனிவால், தன்னைத் தானே புதுப்பித்துக் கொண்டிருப்பது போன்ற தோற்றம். ஒரே ஒரு பாம்படக்காரி… மூன்று அச்சடி சேலைகள்; ஐந்தாறு உல்லி உல்லிகள்; இரண்டு சல்வார் கமிஷ் மொட்டுக்கள்; பல்வேறு வண்ணங்களிலான இதழ்களையும், அதே சமயம், அடிவாரத்தில் வாடிப் போன இலைகளையும் கொண்ட ஒரு அதிசயப் பூ கண்டுபிடிக்கப்பட்டது போன்ற பெண் வட்டம்.

20 பாலைப்புறா

வாடாப்பூவும், தேனம்மாவும், கலைவாணி ஏதோ கேட்டதற்கு பதில் சொல்லாமல், அந்த சின்னத் திரையை வாயகல பார்த்தபோது, ஆனந்தி எழுந்தாள். தொலைக்காட்சி பெட்டியில் குமிழை இடதுபக்கமாய்த் திருப்பினாள். உடனே அது, மீண்டும் கண்ணாடிபோல் ஆனது. பேச்சில் இனித் தடங்கல் இருக்காது என்ற திருப்தியோடு, அவள் கீழே உட்கார்ந்த போது, வாடாப்பூ, செல்லமாகவும், குத்தலாகவும் கேட்டாள்.

‘ஒங்க வீட்டை மாதிரி - காசு கொடுத்துட்டுப்பார்க்கணும் எங்கிறியா?”

‘நீ... குழுக் கூட்டத்துக்கு வந்தியா... இல்ல அந்தச் சாக்கிலே இதைப் பார்க்க வந்தியா.... நாம் பேசறதை அது கேட்க விடுதா...’

‘நீ பேசிட்டாலும்... எப்பாடி!’

கலைவாணி, இருவரையும், இரு கரங்களால் சமாதானப்படுத்தி விட்டு, எழுந்தாள். அந்தப் பெட்டிப் பக்கம் போனாள். அப்போது பிரதமர் வி.பி. சிங் சென்னை விமானநிலையத்தில், விடாக் கண்டர்களான அரசியல்வாதிகளின் அமர்க்களப் பின்னணியில், ஏ.கே. 47 பிடித்த காவலர்களின் முன்னிலையில், விமானத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார். அப்போது பார்த்து, கலைவாணி கீழே ஒன்றை அழுத்தினாள். விமானநிலையத்தில் கைகளைத் தூக்கி ‘வாழ்க போட்டவர்கள், கடைசி நிமிட முயற்சியாய், சால்வையோடு நின்றவர்கள் உட்பட அத்தனை பேரையும் பார்க்க முடிந்தது. கேட்க முடியவில்லை. அத்தனை பேரும் ஊமை ஆனார்கள். ஒரே அழுத்தில் ஊமையாக்கப்பட்டார்கள்.

கலைவாணி, சிரித்தபடியே கீழே உட்கார்ந்தாள். எல்லோருக்கும் திருப்தி. ஆனால் வாடாப்பூவுக்கு பாதிதான்.

‘சீக்கிரமாய் பைசல் பண்ணிடுவோம்... ஒலியும் ஒளியும் வரப் போற நேரம். பாட்டு இல்லாமல் ஆடுறதைப் பார்த்தால், அசிங்கமாய் இருக்கும்’

இப்போது கலைவாணியே சீறினாள். ஒரு அடுக்கில் இருந்த ஒரு செவ்வகக் காகிதத்தை எடுத்துக் கொண்டே, வாடாப்பூவின் முகம் பார்க்காமலே பேசினாள்.

‘ஒனக்கு கால நேரமே தெரியாதாக்கா? இந்த முக்கியமான சங்கதிக்கு கெடு போட்டால், அப்புறம் அந்த சங்கதிதான் கெட்டுப் போகும். சரி... சரி... ஆனந்தி! இந்த நோட்டிசைப் படிச்சுப்பாரு. எழுத்துப் பிழை இலக்கணப் பிழை... இருந்தாக் கூட பரவாயில்லை.... முன்னிலை வைக்கிறவங்க பெயர்ல பிழை வந்துடப்படாது. உலகமே கெட்டுப் போயிட்டதாய் கூச்சல் சு.சமுத்திரம் 21

போடுவாங்க. நம்ம ஊர்க்காரங்களைப் பற்றி ஒனக்குத் தெரியாதா... சீக்கிரமாய் படி... என் கண்ணுக்கு எதுவும் தெரியல்லே"

"நீ வேற... என் பேரை பின்னால போட்டுட்டு.. அவன் பேரை எப்படி முன்னால போடலாமுன்னு சண்டைக்கு வரப் போறாங்க. இதனால்தான் படித்துப் படித்து சொன்னேன்”.

"போகட்டும். இப்போ படித்துப் பாரு..."

உள்ளுர் அறிவொளி இயக்க ஆசிரியையான ஆனந்தி, அந்தக் காகித அழைப்பிதழில் கண்களை விட்டபோது, பீடிக்காரி தேனம்மா, இன்னொரு அழைப்பிதழை எடுத்தாள். அவள் எடுத்ததைப் பார்ப்பதற்காக, உள்ளே மூக்கை விட்ட பாம்படம் போட்ட கனகம்மா, அதிசயித்துப் பேசுவதுபோல் பேசினாள்.

“எப்பாடி... முந்தா நாள் கார்டு... லெட்டர் மாதிரி இருந்துது. இப்போ என்னடான்னா முத்து முத்தா... ரெண்டுமே என் கல்யாணநோட்டீஸ் மாதிரி இல்லியே... பொறேன் வாடாப்பூ. கிழிச்சிடுவே போலுக்கே”

"நீங்க கிழடு பாட்டி... அதனால உங்க நோட்டீஸாம் கிழடாயிட்டு... அந்தக் காலத்த இந்தக்காலத்தில கொண்டு வரப்படாது"

"பழுப்பு ஒலை விழுதுன்னு பச்சோலை சிரிச்சுதாம்... நீயும் கிழவி ஆவேடி..."

"அதுவரைக்கும் சிரிச்சிட்டுப் போறேன்."

"கனகத்தே சும்மாயிருங்க, ஒங்களுக்கு மட்டும் இந்த பாம்படக் காதை அறுத்து கம்மல் வச்சால், மாமா... அவருகாத பிடிச்சிட்டு... தோப்புக்கரணம் போடுவாரு..."

"இப்ப மட்டும் என்னவாம்...?”

வாடாப்பூவும், தேனம்மாவும், ‘பாம்படப் பாட்டி' கனகம்மாவோடு சேர்ந்து சிரித்தார்கள். கலைவாணி முகம் சுழித்தாள். உடனே வாடாப்பூ ‘வேலைக்கு' வந்தாள்.

"ஆனந்தி படிச்சுக் காட்டேன்... எப்படி எழுதி இருக்குதுன்னு என்னை மாதிரி கைநாட்டுக்குத் தெரியட்டும்".

"இதுக்குத்தான்... ஒன்னை அறிவொளி இயக்கத்தில சேரச்சொன்னேன். வந்திருந்தால், எனக்கே படித்துக்காட்டுவே..." 22 பாலைப்புறா

"நான் என்ன தாயி பண்ணுவேன்? நீ சொல்லி நானுந்தான் வந்தேன். ஆனால் அந்த பேதில போவான்... அப்படி வந்த சமயத்தில என் கொண்டைய பிடிச்சு இழுத்துட்டுப் போனான். நீகூட தட்டிக் கேக்கல.”

வாடாப்பூவின் முகம் சுருங்கியபோது, தேனம்மாவும், தனது நினைவுகளை அழிப்பதற்காக, அந்த அழைப்பிதழை எடுத்து, சத்தம் போட்டு படித்தாள்.

"வெள்ளையன்பட்டி... எம்மாடி பேரப்பாரு ஊர்ல முக்கால் வாசிப் பேரு... நனைஞ்ச பன தூரு... காக்காவே கேலி பண்ணும். ஏன்னா அதுக்காவது கொண்ட வெள்ளை."

அடுத்த அறைக்குள், அவித்த அகத்திக் கீரையை, சோளக் கஞ்சியோடு பினைந்து பிணைந்து, பக்கத்தில் மகன் இருப்பதையும் மறந்து, உப்பு மிளகாயோடு உள்ளே தள்ளிக் கொண்டிருந்த சுப்பையா, வாயும் சோறுமாய் கத்தினார்.

"ஏழா தேனு... வாய் என்ன ரொம்ப நீளுது... ஒங்க ஊர்க்காரன் கலப்படமுன்னா... நாங்களும் அப்படி ஆகணுமா...?"

அப்பா பக்கத்தில் அரிசி சோற்றை சாப்பிட்ட கமலநாதன், தான், அப்படிப்பட்ட பனைக் கருப்பு அல்ல என்பதால், ஆரம்பத்தில் சிரித்தான். அப்புறமாய் திடுக்கிட்டு, அசல் சிவப்பான அம்மாவைப் பார்த்தான். இதனாலதான், அப்பா, அம்மாக்கிட்டே தகராறு வரும் போது எல்லாம் ஒன் பரம்பரையைப் பற்றி எனக்குத் தெரியாதா என்கிறாரா!

தேனம்மா, உள்ளே உண்டு முடித்த சுப்பையாவை கள்ளச் சிரிப்பாய்ப் பார்த்தபோது, கலைவாணி, உள்ளறையைப் பார்த்து குரலிட்டாள்.

"எண்ணி... இங்க வந்து படித்துக்காட்டுங்க”

"நீ படிச்சுக்காட்டுனால் என்ன?”

"இதை எழுதுனது நான். திருத்துனது ஆனந்தி... அதனால எங்க கண்ணுக்கு தப்பு தெரியாது... வாங்கண்ணி!”

“எப்படிவரமுடியும்? உங்கண்ணன் புத்தி ஒனக்குத் தெரியாதா... எதுலே விட்டுட்டுப் போனாலும், இப்டி சாப்பிடும் போது விட்டுட்டுப் போனால்... கூத்தடிச்சுடுவாரே, சும்மா துள்ளாதீங்க... சாப்பிடுங்க... சோறு விக்கிடும்!”

வெளியறையில், ஆனந்தி, வாடாப்பூவிடம் ரகசியமாய் கேட்டாள். "அது என்ன 'எதுல’... என்னது இந்த எதுல?" சு. சமுத்திரம் 23

"கல்யாணமானால்... ஒனக்கும் தானாப்புரியும். ஏன் அப்படி சிரிக்கே! அப்படி ஆகணுமுன்னு அவசியம் இல்லியா? இதோ மீராவே வந்துட்டாள். என்னடி ரெண்டு நாளாஆளு அகப்படல."

பாவாடை-தாவணி மீரா, வாடாப்பூவை, அலட்சியமாகப் பார்த்தாள். இடது கை தங்க வளையல்களை, வலது கையால் உருட்டியபடியே "இந்த மாதிரி ‘டி’ போடுற வேலைய என்கிட்ட வச்சுக்காதே" என்றாள்.

வாடாப்பூவின் முகம் வாடியது. தேனம்மாவுக்கு மனம் கேட்கவில்லை. மீராவை, சூடாகப் பார்த்துவிட்டு, பிறகு வாடாப்பூவைப் பார்த்துப் பேசினாள்.

"ஒனக்கு மூளையே கிடையாது. ஒருத்தர் நம்ம கிட்ட எந்த அளவுக்கு பழகிறாங்களோ அந்த அளவுக்குத்தான் நாமும் பழகணும்."

பாம்படங்கள் காதாட, கனகம்மா, ஒரு சந்தேகம் கேட்டாள்.

"தேனு! நீ சொல்றது ஆம்புளைக்கும், ஆம்புளைக்கும் சரி; பொம்பளைக்கும் பொம்பளைக்கும் சரி... ஆம்பளைக்கும், பொம்பளைக்கும் எப்படி சரியாகும்? ஒரு ஆம்புள, நம்ம கிட்ட பழக நினைக்கிறது மாதிரி நாமும் பழகுனால்... அது வேற இதுல தான் கொண்டு விடும்... இல்லியா மயினி..."

இதற்குள் ‘மயினி' சீனியம்மா வெளிப்பட்டாள். "என்னடி ஒனக்கு வயசு திரும்புதா" என்று கனகம்மாள் தலையில் கை ஊன்றியபடியே உட்கார்ந்தாள். பிறகு எல்லோரையும் பார்த்துவிட்டு, கலைவாணியை குறிப்பாக நோக்கி விட்டு, கேட்டாள்.

"என் மகள்... கலைக்குத்தான் புத்தியில்ல... இன்னும் இருபது நாளையில கல்யாணம். சாஸ்திரப்படி அங்குமிங்குமாய் அலையப் படாது. இவள் மாமியாரு வேற என்கிட்ட கரடி மாதிரி கத்துறாவ... நீங்களாவது இவளுக்கு புத்தி சொல்லப்படாதா?”

கலைவாணி, பேச்சை மாற்றவோ அல்லது அவசரத்திலோ ஆணையிட்டாள். மீராவின் கையில் அழைப்பிதழை திணித்து, அதை சத்தமாய்ப் படித்துக் காட்டும்படிச் சொன்னாள். மீரா பேசாமல் நின்றாள். பிறகு கலைவாணியின் தம்பி பலராமன், தன்னை ஏறிட்டுப் பார்க்காமலே முதுகு காட்டிப் போகும் வெங்கொடுமை சாக்காட்டில் தவித்தாள். ஆனாலும், அவன் முதுகை, முகமாக்கும் ஒரே ஒரு லட்சியத்துடனேயே படித்தாள். சத்தம் போட்டு படித்தாள். 24 பாலைப்புறா

"வெள்ளையன்பட்டி பிரசவ மருத்துவமனை. அடிக்கல் நாட்டு விழா; நாள்-இன்றைக்கு நேரம்-மாலை மணி ஆறு, தலைமை மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் சுகுமார்; அடிக்கல் நாட்டுபவர் - எம்.எஸ்.நிச்சில், எம்முக்கும் எஸ்ஸுக்கும் இடையே புள்ளியோ கோடோ கிடையாது. பிராக்கட்டுல உலக வங்கி திட்ட மேற்பார்வையாளர், வரவேற்பு; எஸ்.கலைவாணி, முன்னிலை - திருவாளர்கள் ஆறுமுகம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர், சாமிநாத பாண்டியன், முன்னாள் கர்ணம், பால்பாண்டி, முன்னாள் மணியம், தமிழ்த்துரை- பள்ளி நிர்வாகி, சின்னத்துரை, டாக்டர் அம்பேத்கர் மன்றச் செயலர், சீமைச்சாமி, வர்த்தகர், வெள்ளைச்சாமி, ஒப்பந்தர், பிராக்கட்ல காண்டிராக்டர். நன்றியுரை ஆனந்தி... இன்ஷியல் இல்ல. இப்படிக்கு மகளிர் சுயவேலைக் குழு, மகளிர் நல மன்றம்,நேரு இளைஞர் மையம் மற்றும் அறிவொளி இயக்கத்தின் கூட்டுச்செயற்குழு. அய்யோ முன்னிலையில் மூன்று பெயரை விட்டுட்டே, படிக்கட்டுமா?”

மீரா, படித்து முடித்து விட்டு, எல்லோரையும் பார்த்தாள்.

ஆனந்தி, ஒப்பாரி மாதிரி பேசினாள்.

‘'வேணுமுன்னா பாருங்க... பெயருக்கு முன்னால சாதிப்பேர ஏன் போடலன்னு பாதிப்பேர் சண்டைக்கு வருவாங்க. முந்தா நாளே, கலை கிட்டே கத்துனேன். கேட்கல... இந்த முன்னிலை பட்டியல் வாக்காளர் பட்டியல் மாதிரி நீண்டிருக்கும்போது, என் பெயரை எப்படி விடலாமுன்னு ஒவ்வொருத்தனும் குதிக்கப் போறான்... விழா நடந்தாப்போலதான்... ஆஸ்பத்திரி வந்தாப் போலதான்"

வாடாப்பூ குறுக்கிட்டாள்.

“சும்மா இருக்கறவங்களையும், நீயே தூண்டிவிடுவே, போலுக்கே.. இவங்க மேல ஆசயிலயா போட்டோம்? அத்தனையும் அற்பம். இடக்கு மடக்குவாய் எதாவது செய்திடப்படாதேன்னு பயம். அதனாலதான் பெயரை போட்டோம். கலைவாணி மேலே என்ன தப்பு?”

கலைவாணிக்கு, ஆனந்தியின் சந்தேகமோ, தேனம்மாவின் குறுக்குக் கேள்வியோ காதுகளில் விழவில்லை. மீரா, படிக்கப்படிக்கப்பூரித்து, படித்து முடித்த பிறகு, அந்த பூரிப்பிலேயே மூழ்கிக் கிடந்தாள். நினைவுகள் பின்னோக்கியும், எதிர் பார்ப்புக்கள் முன்னோக்கியும் போயின. போனவருடம் கல்லூரி படிப்பு முடிந்ததும், ஊருக்கு வந்து, நேரு இளைஞர் மன்றத்தின் சுற்றுப்புறக் கிராமங்களுக்கு அமைப்பாளராகி, பல்வேறு சு. சமுத்திரம் 25

கூட்டங்களை நடத்தியும், கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியும் காட்டியது நினைவுக்கு வந்தது. உலக வங்கி கொடுத்த கடன்கள் உருப்படியாய் மாறுகின்றனவா என்பதை, அதிகாரிகளை நம்பி பார்வையிட வந்த உலக வங்கி திட்ட மேற்பார்வையாளர் மேடம் நிச்சிலை குளிப்பாட்ட நினைத்த ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், நேரு மையத்தை அணுக, அந்த மையம் தன்னை அணுக, கோலம், கும்மி, கரகம், காவடி என்று கலைநிகழ்ச்சி நடத்தி, அதில் மேடம் நிச்சிலும் முதன்மை விருந்தினராய்க் கலந்து, தன்னைப் பாராட்ட, அப்போது பார்த்து, தான் வெள்ளையன்பட்டி பெண்கள் பிரசவத்துலேயே செத்துப் போவதைப் பெயர் பெயராய்ச் சொல்லிவிட்டு, பிரசவ மருத்துவமனை கேட்க, மேடம், நிச்சில், கலெக்டர் காதைக் கடிக்க, அவர் ஏதோ சொல்ல, இந்த நிச்சில் இன்னும் பேச, கலெக்டர் அதே இடத்துலேயே பத்து லட்சம் ரூபாய் சாங்ஷன் ஆகும் என்று அறிவிக்க, ஒரே கைதட்டல். அப்புறம் பின்னால்... தன்னை அவர் கோபித்துக் கொண்டாலும், சாங்ஷன் என்னமோ சாங்ஷன்தான்... இந்த கோபம், இன்னும் அவருக்குப் போகவில்லை. இந்த விழாவிற்குத் தலைமை வகிக்கக் கூப்பிட்டால், ‘பி.ஏ.’ மூலம் பேசி, துரத்தி விட்டார். அநேகமாய் ஒரு வருடத்திற்குள் மருத்துவமனைக் கட்டிடம் ரெடியாகிவிடும். இந்த ஏப்ரலில் துவங்கிவிட்டதால், அடுத்த மார்ச்சுக்குள் முடிந்துவிடும். அப்போதுதான் உலக வங்கி, மீண்டும் உதவிக்கு வரும். இந்த மருத்துவமனையில், குடிசைக்குள் துடித்த வாடாப்பூ, குறைப் பிரசவமான பூவம்மா... எல்லோரும் இன்னொரு குழந்தை பெறலாம்... ‘நானே கூட இங்கே வந்து பிள்ளை பெறலாம்.’

கலைவாணி, தன்னைக் கட்டிக்கப்போகும் மனோகரின் தங்கை மீராவை நாணத்தோடு பார்த்தாள். அந்த மீராவோ, உள்ளே நின்று கொண்டிருக்கும் பலராமனை குரலால் இழுக்க முயற்சித்தாள்;

"மிஸ்ஸுன்னா செல்வி, மிஸ்ஸஸ் என்றால் 'திருமதி’, எம்எஸ், என்றால் புரியலியே, கலைவாணி அண்ணி கொஞ்சம் சொல்லுங்களேன்!”

‘ஒரு பெண் கல்யாணம் செய்யாவிட்டால் மிஸ்; செய்தால் மிஸ்ஸஸ்; செய்தாலும் செய்யாவிட்டாலும் எம்எஸ். கல்யாணம் ஒருத்தியோட சொந்த விவகாரம். இதுல தலையிட எவருக்கும் உரிமை இல்லை என்கிறதை, சொல்லாமல் சொல்லிக் காட்டும் பெண் விடுதலையின் முதல் கட்டம்’

சீனியம்மாவுக்கு, மகளின் பேச்சு பெருமையாகவும் இருந்தது. அதே சமயம் பயமாகவும் இருந்தது.

“ஏ... பொண்ணுங்களா இவளை விட்டுடுங்கடி..., ஒரு மாதத்தில மெட்ராஸ் போறவள். மாப்பிள்ளை பையன் தப்பா நினைக்கப்படாது பாரு". 26 பாலைப்புறா

சாப்பிட்டு முடித்து விட்டு, போகும் போது கூட ஏறிட்டுப் பார்க்காமல், சுவரில் சாய்ந்த அடையாள முத்திரைகளோடு முதுகைக் காட்டி வெளியேறும் பலராமனின் கன்னத்தில் இரண்டு அடி போடுவது போல் மானசீகமாய் அனுமானித்துக் கொண்டே மீரா, கலைவாணியின் அம்மாவுக்கும், பதிலளித்தாள்.

“எங்கண்ணா ஒண்ணும் காட்டான் இல்லை. ஒரு பெண்ணோட மனசை புரிஞ்சுக்காத மண்டு இல்ல. எங்கண்ணா ரசிகர், கலையண்ணி எது செய்தாலும் ரசிப்பார்".

வாடாப்பூவிற்கே சிரிப்பு வந்துவிட்டது.

‘அது என்னடி. தப்பு தப்பு... அதென்னம்மா எது செய்தாலும்..., என்னது அந்த எது...?’

எல்லாப் பெண்களும் சிரித்து விட்டார்கள். மீரா அழப்போனாள். அனைவரும் அவள் கேலி தாங்க முடியாமல் அழப் போவதாய் அனுமானித்து, அடக்கிச் சிரித்தார்கள்.சீனியம்மா எழுந்து, கதவோடு கதவாக நின்ற மீராவை இழுத்து, தன் பக்கம் உட்கார வைத்தாள். அவள் விபரம் தெரியாமல் விழித்தபோது, சீனியம்மாவே விளக்கம் சொன்னாள்.

"பேசுறதுக்கு முன்னால யோசித்துட்டுப் பேசணும். அவளுக எதுக்கு சிரிக்காளுக தெரியுதா?”

மீராவுக்கு பாதிதான் புரிந்தது. பலராமனிடம் போன உள்ளத்தை இழுத்துப் பிடித்தபடியே தலையைத் தட்டி யோசித்தாள். இதற்குள், இவளைவிட ஒரு வயசு குறைந்த சல்வார் கமிஸ் மஞ்சுளாவுக்கு ஒரு ஆசை. தனக்கும் பேசத் தெரியும் என்பதைக் காட்டிக் கொள்வதில் அலாதி ஆசை.

‘இந்த மருத்துவமனை பெண்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதனால மகளிர் பிரசவ மருத்துவமனைன்னு பேர் வச்சிருக்கணும்’

“ஒன் மண்டையிலே மசாலா இருக்குதா? பிரசவ ஆஸ்பத்திரியில் ஒன் அப்பனாவந்து பிள்ளப் பெறுவான்"

“அப்படி இருந்தால், ஊர்க்காரனுக இந்நேரம் நாலடுக்கு ஆஸ்பத்திரியே கட்டி இருப்பாங்க.”

இதற்குள், இதுவரை வாய் திறக்காத 'மேலத் தெரு' தர்மராசாவின் புதுப் பெண்டாட்டிக்கு ஒரு ஆவல்; கேட்டே விட்டாள். வாடாப்பூவும் பதில் சொல்லிவிட்டாள். சு. சமுத்திரம் 27

"ஆஸ்பத்திரி... எப்போ ரெடியாகும்...?”

"ஒரு வருஷத்துக்கு மேலாகும். கொஞ்ச நாளைக்கு சும்மா கிட... ஆஸ்பத்திரில பிறக்கிற முதல் பிள்ளை ஒன்பிள்ளையாத்தான் இருக்கணும்".

“ஆமாண்டி... கல்யாணமானவள்க எல்லார்க்கிட்டயும் சொல்லுங்க... ஒரு வருஷம் வரைக்கும் தம் பிடிக்கச்சொல்லுங்க”.

"ஏய்... கனகம்... என்ன பேச்சு பேசறே? பாம்படம் அறுந்து விழப் போவுது".

"சீனியம்மாமயினி... நீங்க ஒண்ணும் தம் பிடிக்க வேண்டாம்!”

வீடெல்லாம் சிரிப்பு. ஒரே சிரிப்பு. கலைவாணியின் அண்ணி குழல்வாய் மொழியும், சமையல் கட்டில் இருந்து, முகத்தைத் துடைத்தபடியே அங்கே வந்தாள். அந்தச் சிரிப்பில் கலந்து கொண்டு, மாமியாரிடம் இருந்து மரியாதைக்குரிய இடைவெளிபோட்டு உட்கார்ந்தாள். குறுக்கே பேசப் போன வாடாப்பூவை, கலைவாணி கையைத் தடுத்துவிட்டு, கண்டிப்பாய்ப் பேசினாள்.

"இனிமேல் யாரும் சிரிக்கப்படாது. சிரிக்கிறது மாதிரி பேசப் படாது, விழா நடக்க பாதிநாள்தான் இருக்குது. அந்தம்மா வெளிநாட்டுக்காரி... ‘கன்' டைமுக்கு வந்துடுவாங்க மொதல்ல தேனம்மா! நீயும், மீராவும் இந்த அழைப்பிதழ்களை வீடு வீடாய் கொடுத்துட்டு வாங்க. முன்னிலை வகிக்கிறவர்களுக்கு அவங்க பெயரை இந்த கவர்லே எழுதிக் கொடுங்க. சீக்கிரம்... ஒலியும் ஒளியும் அப்புறம். இந்தாங்க”.

"தேனம்மா, கலைவாணி நீட்டிய காகிதக் கட்டை, வேண்டா வெறுப்போடு வாங்கிக் கொண்டாள். மீரா எழுந்தாள், சிரிப்போடு எழுந்தாள்... இந்த பலராமன் வீட்ல சைட் அடிக்காட்டாலும், தெருவுலயாவது அடிக்கறானான்னு பார்ப்போம். தேறாத ஜென்மம்".

தேனம்மாவும், மீராவும் தெருவுக்குப் போவதை உறுதிபடுத்திய பின்னர், கலைவாணி காரியத்திற்கு வந்தாள்.

"இந்தம்மாவுக்கு யார்சால்வை போத்துறது...?"

"நீ எதுக்கு இருக்கே!"

"நான் வரவேற்புரை ஆற்றப் போறேன். ஒருத்தருக்கு ஒரு பொறுப்பு. ஒரு கெளரவம்தான் கொடுக்கணும்; கனகம் அத்தை - அந்தம்மாவுக்கு 28 பாலைப்புறா

சால்வை போர்த்தட்டும். வாடாப்பூவும், மீராவும் வரவேற்பு தட்டுல கற்கண்டை ஏந்திகிட்டு, பன்னீர் தெளிக்கணும், இதுல ஒரு ஆணும் இருக்கணும்".

"அதான் முன்னிலைக்குன்னு ஏகப்பட்ட பேரு இருக்காங்களே?”

"இவங்களுக்கும், மாவட்ட சுகாதார அதிகாரிக்கும் நம் கூட்டுச் செயற்குழு உறுப்பினர்கள் மாலை போடுவாங்க. ஒரு ஆண் பேச்சாளர் உள்ளுர் ஆசாமி வேணும்."

"மனோகர் பேசட்டும்".

"அவரு சரிப்படாது. அவருக்கு பதிலாய் நான் பேசறேனே... எந்த விழாவும் ஒரு குடும்ப விழாவா ஆகிடப்படாது".

"அடேயப்பா.. மனசுக்குள்ளேயே குடும்பம் நடத்துற போலுக்கே... நீ இல்லாமல் நம்ம குழு எப்படித்தான் நடக்கப் போகுதோ?”

ஆரம்பத்தில் நாணிக் கோணிய கலைவாணி, பிறகு எதிர்காலப் பிரிவுத் துயரில் இப்போதே சிக்கிக் கொண்டவள் போல் வாயகல இருந்தாள். பின்னர் "எந்த அமைப்பும் ஒரு ஆளை மட்டுமே நம்பி இருக்கப்படாது. இதனால்தான் அமெரிக்கால யாரும் இரண்டு தடவைக்குமேலே ஜனாதிபதி பதவியில இருக்க முடியாது. இங்கே என்னடான்னா நம் தலைவர்களோ இன்னும் பிறக்காத பேரன், பேத்திக்குக் கூட எம்.எல்.ஏ. சீட்டை ரிசர்வ் செய்கிறாங்க. பேச்சு எங்கேயோ போகுது; ஆக வேண்டியதைப் பார்ப்போம்” என்றாள்.

இதற்குள் ஒரு சத்தம்... டெம்போ சத்தம். சாமியானாவையும், பிளாஸ்டிக் நாற்காலிகளையும், கோணச் சத்திரத்தில் ஏற்றி, விழா நடக்கப் போற இடத்துல போட வேண்டிய டெம்போ, இங்கே ஏன் வருது? அங்கே நிற்கிற பூமாரியும், பொன்னம்மாவும் என்ன செய்கிறாளுக? இந்நேரம் பாதிப் பந்தல் போட்டிருக்கணுமே!

எல்லோரும், வெளியே வந்தார்கள். டெம்போ டிரைவரே, கேட்காமல் பதில் சொன்னார்.

"நீங்க சொன்ன இடத்துக்கு போனோம். அங்கே ஒரு கொட்டகை போடுறாங்க. உள்ளே எருமை மாடுகளை கட்டிப் போட்டிருக்காங்க. அடிக்கல்களை பிடுங்கிட்டாங்க; எங்கள வேற அரிவாளோட வெட்ட வந்துட்டாங்க. ஒங்கபட்டிமோசமுன்னு தெரியும், ஆனால் இந்த அளவுக்கு மகா மோசமுன்னு தெரியாது... உயிர்பிழைச்சதே தெய்வாதீனம்..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பாலைப்புறா/அத்தியாயம்_1&oldid=1641687" இலிருந்து மீள்விக்கப்பட்டது