உள்ளடக்கத்துக்குச் செல்

பாலைப்புறா/அத்தியாயம் 16

விக்கிமூலம் இலிருந்து

தே பாதைதான்… அதே வெள்ளையன்பட்டிதான். ஆனாலும், கலைவாணியின் கண்ணுக்கும், கருத்துக்கும் அதல பாதாள வித்தியாசம்.

போனவள், வந்தவள் ஆனாள்… ‘சூரியன் உதிக்கும் கிழக்கு திசை’ அது அஸ்தமிக்கும் மேற்கு திசையானது. கார், வில் வண்டியானது. ஆனந்த அழுகை, துக்கித்த சிரிப்பானது. ஆயிரங்கால் மண்டபமாய் தோன்றிய வாழைத் தோப்பு, குலையிழந்த வெறுமைப் பூமியானது. மயில் போல் தோகை விரித்த கல் வாழை, எவருக்கும் பயன்படாத இலை கிழிந்த மரமாக காற்றில் அல்லாடியது. அதோ, அவள் முன்னின்று அடிக்கல் நாட்டிய இடத்தில், தென்னங் கீற்றுக் கொட்டகையில், ஒரு தற்காலிக மருத்துவமனை இருப்பது போல் தோன்றியது. அங்கே நிர்வாகப் பொறுப்பை ஏற்க வேண்டியவள், முதல் எய்ட்ஸ் நோயாளி என்று சேர வேண்டிய நிலைமை… எல்லோருக்கும் முழு முகத்தை காட்டியவள், முக்காடு போட்டிருக்கிறாள்…

அந்த வில்வண்டி குலுங்கிக் குலுங்கி, அவளையும், குலுக்கி எடுத்தது. ஆங்காங்கே தெரிந்தவர்களைப் பார்த்ததும், இவள், தன்னை தெரியப்படுத்திக் கொள்ள விரும்பாமல், முக்காட்டை இழுத்துப் போட்டு, முகம் மறைத்து, முகம் திரும்பினாள். ஆனாலும், பலர் அவளை அடையாளம் கண்டு கொண்டார்கள். அந்த வில் வண்டி ஓடிக் கொண்டே இருந்தது. ஊருக்குள், சுற்றமும், நட்பும் போல விழுது விட்டு, கிளை பரப்பிய ஆலமரத்தைச் சுற்றி, வட்டமாகக் கட்டப்பட்ட திண்ணையில் உட்கார்ந்து, உள்ளூர் விவேகிகளுடன் பேசிக் கொண்டிருந்தவர்கள், திடுக்கிட்டு எழுந்தார்கள். அவளைப் பச்சாதாபமாக பார்த்தார்கள். பத்திரிகைகளைப் பிறர் படித்துக் கேட்டவர்கள், மனோகருக்கு வந்ததை அரைகுறையாகக் 147

சு.சமுத்திரம்

கேள்விப்பட்டவர்கள்... இப்போது அந்த உள்ளூர் விவேகிகளிடம், முழுமையாகக் கேட்கப் போனார்கள்; உடனே அவர்களில் ஒருவர், வெற்றிலை எச்சிலையை இரண்டு விரல் இடுக்கு வழியாய் துப்பியபடியே, விவரம் சொல்லப் போனார்.

அந்த வண்டி மேற்கொண்டு ஊர்ந்தபோது, பீடிக்கடைக்குப் போவதற்காக தட்டுக்களோடு எதிர்ப்பட்ட பெண்கள், ஒருவருக்கொருவர் பேசிய வார்த்தைகளை விழுங்கினபடியே அப்படியே நின்றார்கள். அவளை, அதிசயமாய் பார்த்தபடியே நின்றார்கள். இவர்களையும் கடந்து அந்த வண்டி பள்ளிக்கூட மைதானத்திற்கு வந்த போது, கூடிக்குலவி பேசிக் கொண்டு நின்ற வாடாப்பூவின் கணவன் மாரியப்பனும், மருத்துவமனை இடத்தில் எருமை மாட்டு கொட்டகையை போட்ட அதே ராமசுப்புவும், தங்கள் தோள்களை தட்டிக் கொண்டார்கள். என்றாலும், வாடாப்பூ, எங்கிருந்தோ ஒடி வந்தாள். செருப்பு போடாத கால்கள் கல்லையும், முள்ளையும் குத்த, அந்த குத்தல் உணர்வற்று, ஒட்டப்பந்தயத்தில் ஒடுகிறவள்போல் ஒடி, அந்த வண்டியை நோக்கி ஓடினாள். ஒடியாடி வண்டியின் பின் பக்க அடைப்புக் கம்பியை பிடித்தபடியே, ‘கலை ‘கலைம்மா என் ராசாத்தி!' ‘ஒனக்கா... ஒனக்கா... ‘ என்று சொல்லி முடிக்கும் முன்பே அழுதுவிட்டாள். கலைவாணி, பழக்கப்பட்ட பாசக் குரல் கேட்டு நிமிர்ந்தாள். அந்த ஊரில், இந்த ஆறுமாத கால இடை வெளியில், முதல் முதலாய், நேருக்கு நேராய்ப் பார்க்கப்படும் முதல் தோழி இந்த வாடாப்பூதான்; இரண்டு பேரின் பார்வை பரிமாற்றத்தில் கண்கள் நீர்கொட்டின. கலைவாணி வண்டிக்கு வெளியேயும், வாடாப்பூ வண்டிக்கு உள்ளேயும் போகப் போவது மாதிரியான பாசத்தின் ஆவேசத் தாவல்... அதற்குள்

மாரியப்பன், வேக வேகமாக ஓடி வந்தான். ஒரு துள்ளலாகத் துள்ளி வந்தான். வாடாப்பூவின் கொண்டையைப் பிடித்தான். ஒரே இழுப்பாய் இழுத்து, அவள் தலையை தன் காலடியில் தூக்கிப் போட்டான். பிறகு அவளது நீண்ட நெடிய தலைமுடியை கைக்குள், கயிறுபோல் சுருட்டிப் பிடித்து, அவளை தரதரவென்று இழுத்துக் கொண்டு போனான். கலைவாணியின் கண் முன்னாலயே...

கலைவாணி, அலைமோதினாள். வண்டியில் இருந்து கீழே குதிக்கப் போவதுபோல் உடலை நகர்த்தினாள். அப்புறம் அடங்கிப் போனாள். இப்போது, தான் பழைய கலைவாணி இல்லை என்பதைப் புரிந்து கொண்டாள். இதற்குள், எவர் மாரியப்பனைத் துண்டிவிட்டிருப்பாரோ, அந்த ராமசுப்புவே, மாரியப்பன் தலையில் ஒரு தட்டுத்தட்டி, வாடாப்பூவை மீட்டார். தலை கலைந்து, ஜாக்கெட்கிழிந்து, ஆடை நழுவி, அலங்கோலமாய் பாலைப்புறா

148

நின்ற அந்த நிலையிலும், வாடாப்பூ, கலைவாணி போகும் திசையைப் பார்த்து முண்டியடித்தபோது, அதே ராமசுப்பு, மாரியப்பனை அவள் பக்கமாக தள்ளிவிட்டார். அதற்குள் வண்டியும் திரும்பிவிட்டது.

வீட்டு முன்னால், திடுதிப்பென்று வில் வண்டி நிற்பதைப் பார்த்து விட்டு, யாராக இருக்கும் என்ற தோரணையில், சிமெண்ட் தொட்டி டேப் வழியாக ஒழுகிய நீரில், சாம்பல் பூசிய பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்த குழல்வாய் மொழி, இன்னும் அந்த வண்டிக்குள் இருந்து எவரும் இறங்காமல் இருப்பதைப் பார்த்துவிட்டு, ஒரு கையில் பாத்திரத்தைத் தூக்கியபடியே குனிந்தபடி, தலையை மட்டும் தூக்கினாள். அப்படியும் வண்டிதான் அங்குமிங்குமாய் நகர்ந்தது. குழல்வாய் மொழி முழுமையாய் நிமிர்ந்த சமயம் பார்த்து, வண்டியில் இருந்து, கலைவாணி கீழே குதித்தாள். வீட்டுக்கு வெளியே உள்ள திண்ணைக்கு வகிடான படிக்கட்டுக்களில் ஏறி, வாசல் படியைத்தாண்டி, முற்றத்தில் நின்று, நிதானிக்காமலே உள்திண்ணைப் படிகளில் தாவி, வலதுபுறமாக இருந்த தனது பழைய அறைக்குள் போய், தட்டுமுட்டுச் சாமான்களோடு கிடந்த கட்டிலில் போய் குப்புறப் படுத்துக் கொண்டாள். அக்காள் வருவதைக் கேள்விப்பட்டு, வெளியே இருந்து ஒரே ஒட்டமாய் ஒடி, முற்றத்திற்கு வந்த தம்பி பலராமன், அக்காவை அந்த நிலையில் பார்க்க மனங்கொள்ளாமல், அங்கேயே நின்றான். மண்வெட்டியில் தேங்காய் உறித்துக் கொண்டிருந்த அண்ணன் கமலநாதன், பாதி நார்க்குவியலோடு தேங்காயைப் போட்டு விட்டு, தங்கை இருந்த அறைக்குள் ஒடினான். எதுவுமே தெரியாமல், சமையலறைக்குள், வெந்து போன மரச்சீனிக்கிழங்கின் தோலைஉரித்துக் கொண்டிருந்த சீனியம்மா, குழல்வாய் மொழி காதில் கிசுகிசுத்ததை உள்வாங்கிக் கொண்டே ஓடினாள். திண்ணையில் சுவரோடு ஒட்டிப் போட்டிருந்த நார்க் கட்டிலில் ஒருச் சாய்த்துப் படுத்துக்கிடந்த சுப்பையா, படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்தாரே தவிர, இந்தப் பக்கமோ அந்தப் பக்கமோ அசையவில்லை. தன்னைத் தானே பார்த்தபடி, தனக்குத்தானே மருவியபடி, கண்கள் நிலைகுத்த, அப்படியே இருந்தார்.

கட்டிலில் குப்புறக் கிடந்தவளை, அவளது அம்மா சீனியம்மா தோளைப் பிடித்து உலுக்கினாள். மகளின் கழுத்துக்குள் கையை விட்டு பின்புறமாய்த் தூக்கி, அவள் முதுகை தன் மார்பிலே போட்டுக் கொண்டு, புலம்பினாள்.

‘என்செண்பகப்பூவே... என் செவந்தி மலரே... ஒனக்காடி இந்தக் கதி? ஒனக்காடி...அய்யய்யோ...அய்யய்யோ கிளியை வளர்த்துப் பூனைகையிலே கொடுத்துட்டேனே. என் வாடா மலரே... நான் தவம் இருந்து பெத்த செல் 149

சு. சமுத்திரம்

வத்தை பாழும் கிணத்தில தள்ளிட்டோமே... எம்மா... நான் பெத்த மவளே!’

கலைவாணி, அசைந்து கொடுக்கவில்லை; அம்மாவிடம் இருந்து திமிறி மீண்டும் குப்புறப்படுத்தாள். கண்களில் ஒரு சொட்டு நீர்கூட தேங்கி நிற்காமல், முகம் விறைக்க வாய் பூட்டிக் கொள்ள, தரையைத்தவிர எவரையும் பார்க்க விரும்பாததுபோல் கிடந்தாள். கமலநாதன், அவள் தலையை தொட்டபடியே கலை... கலை என்று சொன்னபோதே அழுது விட்டான். அவன் கண்ணிர், கலைவாணியின் பின் கழுத்தில் சொட்டுச் சொட்டாய் விழுந்து தெறித்தது. குழல்வாய்மொழி, கட்டிலில் ஒரு ஒரமாக உட்கார்ந்து கொண்டு..., ‘கலை, கலை' என்று கீச்சிட்டாள். பலராமன், கண்கள் சிவந்து விட்டன. அழுகையாக ஒரு கண்... ஆத்திரமாய் மறு கண். சீனியம்மா, ஒரேயடியாய் இப்போது மகள் மேல் புரண்டாள். அவள் முதுகிலேயே, தன் தலையைப் போட்டுப் போட்டு மோதினாள். மகளைப் புரட்டி எடுக்கப் போனாள். ஆனால், அந்த மகளோ, இப்போது லேசாய் விம்மினாள். விம்மி, விம்மி கட்டில் துவாரங்கள் வழியாய்க் கண்ணிர் சிந்திக் கொண்டிருந்தாள். அவள் முதுகு குலுங்கியது. பின்தலை ஆடியது.

இதற்குள், கூட்டம் கூடிவிட்டது. ஒரு சிலரைத் தவிர, பெரும்பாலானோர் முற்றத்தில் நின்றார்கள். திண்ணையை அடைத்தார்கள். இதில் அதிகமானபேர் பங்காளிகள்; நெருங்கிய உறவினர்கள். அத்தனை பேரும் வாயடைத்துப்போய் நின்றார்கள். அவளுக்கு நடந்தது போல், கார் காராய், எந்த திருமணமும் நடந்ததும் இல்லை; நடந்த வேகத்திலேயே இப்படி முடிந்ததும் இல்லை. எந்தப் புற்றுக்குள் எந்தப் பாம்பு இருக்குமுன்னு தெரியலியே... உள்ளூர்க்காரன் என்று நம்பிக் கொடுக்க முடியாது போலிருக்கே...

இதற்குள், கலைவாணி இருந்த அறைக்குள் தாவிப் போன தேனம்மாவும், கனகம்மாவும் கலைவாணியைத் திருப்பினார்கள். அவள் தலை கனகம்மாவின் மடியிலும், கால்கள் தேனம்மாவின் முழங்கால்களிலும் கிடந்தன. கனகம்மா, தான் போட்டிருக்கும் பாம்படங்களே உணர்வுகளின் வெளிப்பாடாக, கலைவாணியின் முகத்தைத்துடைத்தபடியே, கூக்குரலாய்ப் பேசினாள்.

‘ஊருக்கெல்லாம், புத்தி சொன்ன நீயே... இப்படி கலங்குனால் நாங்க யார் கிட்டம்மா போவோம்?... மாரியாத்தா மூதேவி, ஒனக்கு, வழிகாட்டுவாம்மா... ஆண்டிப்பயல் முருகன், ஒனக்கு அடைக்கலம் கொடுப்பாம்மா...’

வெளியே ஒரு சத்தம்... உள்ளுர் விவேகிகளில் ஒருவரும், ராமசுப்புவும் கலந்து போட்ட சத்தம்.

‘ஏழா... முட்டாப்பய மவளுகளா... கலைவாணிக்கு ஆறுதல் 150 பாலைப்புறா

சொல்லுங்க.. வேண்டாங்கல... ஆனால் தூர நின்னே பேசுங்க... ஒட்டுவாரொட்டி நோயாளி. பாவம் அவள் குணத்துக்கு இப்படி வரப்படாது. ஆனால் வந்திட்டே...”

“என்னம்மா அநியாயம் இது... புருஷனுக்கு வந்துட்டா பெண்டாட்டிக்கு வந்திடுமாமே. ஜாதகப் பொருத்தத்தைவிட சரியான பொருத்தமாய் இருக்கே"...

‘கலிமுத்திட்டுனு.அர்த்தம். ஏய் இந்திரா. வெளியிலே வா...பாவிப்பய நோயி படாத பாடு படுத்துமாமே... பேப்பர்ல எவ்வளவு விவரமா போட்டிருக்கான் பாரும்... இந்த மாதிரி ஒரு ஒட்டுவாரொட்டி நோய் எதுவுமே கிடையாதாம்...’

‘ஏழா குழலாமொழி... ஒன் நாத்தனார... தனி ரூம்ல வையுங்க. தனித்தட்டுல தனிச் சாப்பாடாய் போடுங்க... பாவம் இந்தக் கலைவாணிய மாதிரி இனிமேதான் ஒருத்தி பிறக்கணும்’

வெளியில் அடிபட்டப் பேச்சு, கலைவாணி காதிலும் விழுந்திருக்க வேண்டும், கனகம்மாவையும், தேனம்மாவையும் விட்டு சிறிது விலகி உட்கார்ந்தாள். சொந்த வீட்டு முற்றத்திலேயே இப்படி ஊர் பேச்சு அடிபட்டால், இன்னும் என்னவெல்லாம் பேசப்படுமோ என்ற அச்சம். இப்படிப்பட்ட ஊரில் எப்படி இருக்கப் போகிறோமோ என்ற கவலை. பேசாமல், மெட்ராசில் இருந்திருக்கலாமோ... அய்யய்யோ... புறப்படும் போது நடந்ததை நினைக்கவே வெறுப்பா இருக்கே. எந்த மாதர் சங்கத்தை அவள் துவக்கினாளோ, அந்த மாதர் சங்கமே அவளை எப்படி வெளியேற்றுவது என்று கூட்டம் கூட்டி ஆலோசித்த கொடுமை... கூட்டம் நடந்த இடத்திற்கு முன்னால் இவள் நின்றபோது, ஒருத்தி வாயில் கூட "ஏன் போகிறே” என்ற வார்த்தை வரவில்லை. தீர்மானம் போடாமலே நோக்கம் நிறைவேறிய பூரிப்பு கூட இருக்கலாம். இல்லையானால், அவள்களிடம் முறையிட்ட மீனாட்சியை, அப்படி பாமா மாமி விரட்டியிருக்க மாட்டாள்... 'உன் வேலைய பாரேண்டி... உனக்கு என்ன தெரியும்...? தாய் வீட்டுக்குத் தானே போறாள். ஒனக்கு என்ன வந்துட்டு...’

கலைவாணி, உதட்டைக் கடித்தாள். சாவதற்காக கடலைத் தேடியோ, ரயிலைத் தேடியோ போனாலும், அவற்றையும் தாய் வீடாக கருதுகிறவள்கள். இவர்கள் இருக்கும் இடம், எய்ட்ஸ் இருக்கும் இடத்தை விடக் கொடிய இடம். வாடாப்பூ, கனகம்மா, தேனம்மா கால்தூசிக்குக் கூட பெறாதவள்கள். இவள்கள் இருக்கும் திசையில் கோவில் இருந்தால்கூட போகக் கூடாது...

ஊர்க்காரர்கள், சன்னஞ்சன்னமாயாய் குறைந்துவிட்டார்கள். தேனம்மா சு. சமுத்திரம் 151

வும், கனகம்மாவும், கலைவாணி போகச் சொல்லியும், போகாமல் கிடந்தார்கள். இவர்களுடைய வீட்டுக்காரர்களும், மாரியப்பனாக மாறி வீடு வரை வந்துவிடக் கூடாது என்று கலைவாணிக்குப் பயம். இதற்குள், மனோகரின் தந்தை தவசிமுத்து உள்ளே வந்தார். எட்டுமுழ வேட்டியும், அரைக்கை பாப்ளேன் சட்டையுமாய், தோளில் ஜரிகைதுண்டோடு கல்யாணவீட்டிற்கு வருவதுபோல் வந்தார். அவரைப் பார்த்ததும், 'வாங்கண்ணாச்சி’ என்ற வாய் நிறைய கேட்கும் சம்பந்தி சீனியம்மா, பல்லைக் கடித்தபடி, முகத்தைத் திருப்பிக் கொண்டாள். குழல்வாய் மொழி, வழக்கம் போல் எழுந்திருந்து அவருக்கு மரியாதை கொடுக்கவில்லை. பலராமன், அவரை அடிக்கப் போவது போல் பார்த்தான். ஆனால் தவசிமுத்து, இதைக் கண்டாரோ... காணவில்லையோ, குப்புறப்படுத்த மருமகளிடம் நேரிடையாகப் பேசினார்.

‘நம்ம வீட்டுக்கு வரவேண்டியதுதானேம்மா... அப்புறமா இங்கே வந்திருக்கலாமே... ஊர் முறையும் அதுதானே’.

சீனியம்மா, உருமினாள்; கமலநாதன் தற்செயலாய் காறித்துப்புவது போல் வெளியே போய்துப்பினான். ஆனாலும் தவசிமுத்து அசரவில்லை.

"அந்தப்பயல் எப்படிம்மா இருக்கான்? அவனையும் கூட்டிட்டு வந்தி ருக்கலாமே பயநோய் நேரம் பார்த்து வந்திருக்கு பாரு... இன்னும் கல்யாணக் கடனே அடைபடல. மாதாமாதம் கடனஅடைப்பான்னு பார்த்தால்...”

கலைவாணி, வாரிச்சுருட்டி எழுந்தாள். கட்டில் கவரில் முதுகைச்சாத்தி, சுவரில் தலை போட்டபடியே கத்தினாள்.

"எம்மா... யாரும் என்கிட்டப் பேசப்படாதுன்னு சொல்லு உறவு சொல்லி யாரும் இந்த வீட்டுக்குள்ளே வரப்படாதுன்னு சொல்லு”.

தவசிமுத்து விடவில்லை... பதிலுக்குப்பதில் சொன்னார்.

‘என்னம்மா... நீ... மாமனார் என்கிற மட்டு மரியாத இல்லாமப் பேசுறே. ஒன்புருஷனப் பெத்து வளத்து பேரிட்டவன் நான்’

சீனியம்மாவால், இப்போது பொறுக்க முடியவில்லை.

‘புருஷன். எப்பேர்பட்ட புருஷன் பாவிப்பயல்... என்செல்ல மகள... கெடுக்கணுமுன்னே வந்திருக்கான். நான் இந்தப் பாவி மனுஷன்கிட்ட படிச்சுப் படிச்சு சொன்னேன். தராதரம் தெரியாதவன் வீட்டுலே சம்பந்தம் வேண்டாமுன்னு; பாவிப்பயல்; பன்னாடைப்பயல் கண்ட பொம்பளைக் கிட்டல்லாம் போயி, கடைசியிலே என் பொண்ணையும் அப்படிப் பண்ணிட்டான்; பண்ணாத அலங்கோலமாய் பண்ணிட்டான். பாவிப் 152 பாலைப்புறா

பயலுக்கு நான் பெத்த பொண்ணுதானாகிடைச்சாள்?”

தவசிமுத்து, எதுவும் பேசாமல் கால்களைத் தேய்த்தபடியே நின்றார். இந்த சுப்பையா சுருள் (வரதட்சணை) பாக்கி ஐயாயிரம் ரூபாய் கொடுக்கணும். அதுக்குள்ளே இந்த இழவும், எட்டும் வந்துட்டு. மெட்ராஸ்லே போய் அந்தப் பயலை பார்த்துட்டு வர முந்நூறு ரூபாய் வேற செலவாகும். அவனே வந்தால் செலவு மிச்சம்...

“எம்மா... கலைவாணி... இதையாவது சொல்லு. அந்தப் பயல்... அதுதான் ஒன் புருஷன்... இங்கே எப்போ வருவானாம்... நீ அவனையும் கூட்டிக்கிட்டு வந்து இருக்கலாம் இல்லே".

கட்டிலில் செத்த சவம் போல் கிடந்த சுப்பையாவால், தாள முடியவில்லை. சம்பந்தியிடம் நெருங்கி வந்து கோபம் கோபமாய்ப் பேசினார். அந்த சமயம் பார்த்து, தவசிமுத்து மடியில் துருத்திய வெற்றிலை பாக்கை எடுத்தார்.

‘வே,... ஒமக்கு சமய சந்தர்ப்பம் தெரிய வேண்டாமா.., ஒம்ம மகன் வரக் கூடாத நோயை வாங்கி... என் மகளுக்கும் கொடுத்துட்டான். நாங்க மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாம தவிக்கோம். நீரு என்னடான்னா’

“அப்போ என்மவனை பொம்புளக் கள்ளன்னா சொல்றீரு?”

"அதைத்தான் பேப்பர்லேயே போட்டுட்டானே. மொதல்ல, நீரு போம் வே. கோபம்... பழி பாவம், வேண்டாம். வெத்திலை பாக்கு போடுற நேரமா இது”.

தவசிமுத்து, வன்மமாகத் தலையாட்டிவிட்டு, அவசர அவசரமாக வெளியேறினார். இதற்குள் சீனியம்மா மகளின் வயிற்றை தடவியபடியே, மருமகளிடம் பேசினாள்.

‘ஒன் நாத்தனாருக்கு வயிறு கொலுக்கா இருக்கும்மா... மொதல்ல மோரு கொண்டு வாம்மா. அதாவது வயித்துக்குள்ளே இறங்குதான்னு பார்ப்போம்’

குழல்வாய் மொழி, சமையலறைக்குள் போய், ஒரு பெரிய பித்தளை டம்ளர் நிறைய மோர் கொண்டு வந்தாள். அந்த டம்ளர் விளிம்பை, கலைவாணியின் வாய் விளிம்பில் வைத்தாள். அப்போது வீட்டுக்கு வெளியே பலத்த கூச்சல், ம்னோகரின் அம்மா சீதாலட்சுமியின் ஒங்காரக் கூச்சல். கலைவாணியை விட்டு விட்டு, எல்லோரும் வெளியே வந்தார்கள்.

மனோகரைப் பெற்ற சீதாலட்சுமி, கணவன் தவசிமுத்தோடும், மச்சான் சு. சமுத்திரம் 153

கொழுந்தன் பெண்டாட்டிகளோடும், அந்த வீட்டைப் படையெடுக்கப் போவதுபோல் பார்த்துப் போர்க் குரலிட்டாள்.

“என் மகன்.... நான்... உள்ளங்கையிலே சோறு பொங்கிப்போட்ட என் செல்ல மகன், எவள் கிட்ட எல்லாமோ போய்... எந்த நோயையோ வாங்கிட்டு வந்ததான்னு, எவளோ, எவனோ சொன்னாளாமே... வாங்கடா வெளில... வாங்கடி. வெளியில... பெத்தவளுக்குத் தெரியாத பிள்ள அருமை... இவளுவளுக்குத் தெரியுமா... என்ன நெனைச்சாளுவ இன்னிக்கி என்பிள்ளையப்பற்றி சொன்னதை ருசிப்பிக்கணும்”.

சீனியம்மாவுக்கு, தெருச்சண்டை பழக்கமில்லை. இதில் பேரும் புகழும் பெற்ற தவசிமுத்து வீட்டில், இதற்காகவே கலைவாணியைக் கொடுக்கக் கூடாது என்று வாதிட்டவள்... இப்போது என்ன செய்வது என்று புரியாமல் தவித்தாள். இது, சீதாலட்சுமிக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. யாராவது பிடிக்கப் பிடிக்கத்தான், அவளுக்கு ஆவேசம் வரும். அவள் மகள் மீரா, அம்மாவைப் பிடித்தாள். விவேகானந்தர் மாதிரிகையைக் கட்டிக் கொண்டு நின்ற பலராமனிடம், தான் ஒரு குடும்பப் பாங்கான பெண் என்பதைக் காட்டிக் கொள்வது போல், “எம்மா... எம்மா" என்று சொல்லி, முகத்தை சுழித்தபடியே பிடித்தாள். ஆனால், அந்த அம்மாவோ, சுற்றி நின்ற கூட்டத்திடம் முறையிடுவது போல் கத்தினாள்.

‘குனிஞ்சதல.. நிமிராமல் நடக்கிறவன் என்மகன். வாய் அதிர்ந்து கூட பேசாத பிள்ளை என் பிள்ளை. அப்படிப்பட்ட என் ராசாதி ராசா, இப்போ சீரழிஞ்சு சின்னாபின்னமாகி.. லோலுபட்டு கிடக்கான். நானும் ரெண்டு நாளாய் உண்ணாமத் தின்னாமக் கிடக்கேன். இந்த வீட்ல என்னடான்னா... என் மகன், எவள்கிட்ட எல்லாமோபோனதா பேசுறாங்களாம். இவங்க என்னமோ லைட்டு பிடிச்சது மாதிரி... கட்டுன புருஷன அனாதரவாவிட்டுட்டு வந்திருக்கிற ஒடுகாலிய சத்தம் போட்டு திருப்பி அனுப்புறதுக்கு வக்கில்ல... வகையில்...துப்பில்ல... தொகை இல்ல... பேசுறாவளாம் பேச்சு’.

சீனியம்மாவால், பொறுக்க முடியவில்லை... வாசல் தாண்டாமலே கேட்டாள்.

"ஏன் பேசமாட்டோம்... உடம்பிலே ஆயிரத்தெட்டு நோய வாங்கிட்டு, என் பொண்ணக்கெடுத்த கல்நெஞ்சுக்காரனை ஏன் பேசமாட்டோம்?... என் மகளை சீரழிக்கனுமுன்னே பிறந்திருக்கான் பாரு...”

‘ஒன் மகள்தான் என் மகனக் கெடுக்கன்னே பிறந்திருக்காள். எந்த நேரத்தில நான்தவம் பெத்த மகன் கையப் புடிச்சாளோ, நான் பெத்த பிள்ளை நடுத்தெருவிலே நிக்கான்'. 154 பாலைப்புறா

ஆமா... பெரிய அரிச்சந்திரன். பொம்புள நோய வாங்கிறவன் ஒரு மனுஷனா... அவன் சீரழிஞ்சாஅது அவன்புத்தி. ஆனால் என்மகளை எதுக்கு சீரழிக்கணும்...”

“ஒன் மகளோட புத்தி ஊருக்கு நல்லாவே தெரியும்... அவளாலதான் என்பிள்ளை சீரழியுறான்".

பலராமன், இப்போது போர்க்குரல் கொடுத்தான்...

"எத்தே... இதுக்கு மேல பேசினே... அப்புறம் பேசுறதுக்கு வாய் இருக்காது. ஒன் மகன் யோக்கியததான் பேப்பர் பேப்பரா கிழியுதே... பேச வந்துட்டாள் பெரிசா”.

தம்பிக்கு கோபம் வந்தால், அது விஷ்ணு சக்கரம் மாதிரி இலக்கைத் தாக்காமல் திரும்பாது என்பதைப் புரிந்து கொண்ட கலைவாணி, வெளியே வந்தாள். அம்மாவின் முதுகுக்குப் பக்கமாய் நின்று கொண்டாள். அவளைப் பார்த்தவுடனேயே, சீதாலட்சுமிக்கு பற்றிக் கொண்டு வந்தது. பிரும்மாஸ்திரத்தை விட்டாள்.

‘இவள் மட்டும் யோக்கியமோ... சொல்லச் சொல்லு. பொம்பளை நோயின்னு சொல்றியளே... அந்த பொம்பள, ஒன் மகளா ஏன் இருக்கப்படாது? அந்தச் சங்கம் இந்தச் சங்கமுன்னு எத்தனை பேர் கிட்ட பல்லைக்காட்டி இருக்காள். எத்தனை ராத்திரி நாடகம் கூத்துன்னு வீட்டுக்கு வராமல் வெளியிலே தங்கி இருக்காள்... என் அப்பாவிமகனுக்கு அந்த நோயக்கொடுத்தது இவள்தான். இந்த முண்டக் கண்ணிதான்...’

பலராமன், சீதாலட்சுமியின் முடியைப் பிடிக்கப் பாய்ந்தான். அப்படிப் பாய்ந்தவனை, தவசிமுத்து, காலைப் பிடித்து இழுத்தார். அந்த தவசிமுத்துவை, கமலநாதன் கழுத்தைப் பிடித்து இறுக்கினான். மீராவும், குழல்வாய் மொழியும் கைகளைப் பிசைந்தார்கள். சுப்பையா, கலைவாணியைக் கட்டிப் பிடித்து, குய்யோ முறையோ என்று கூப்பாடு போட்டார். உள்ளுர் விவேகிகள், ஆளுக்குள் ஆள் சத்தம் போட்டு அதட்டினார்கள்.

கலைவாணி காதுகளைப் பொத்திக் கொண்டு, மனதைத் திறந்து கேட்டாள்.

‘இந்தப் பழியையும், இந்த நோயையும் சுமந்துக்கிட்டு, இன்னும் உயிரோட வாழணுமா...? ஊர் பக்கம் கிணறு இருக்கு, வீட்ல கயிறு இருக்கு, எனக்கும் மானம் இருக்கு’...

"https://ta.wikisource.org/w/index.php?title=பாலைப்புறா/அத்தியாயம்_16&oldid=1639236" இலிருந்து மீள்விக்கப்பட்டது