உள்ளடக்கத்துக்குச் செல்

பாலைப்புறா/அத்தியாயம் 24

விக்கிமூலம் இலிருந்து

னோகர், நீல நிறப் பின்னணித் துணியில் சிவப்புக் கோடுகள் போட்ட சட்டையைக் கழட்டி, உடம்பு முழுவதையும் துடைத்தான். தொள, தொளப்பான லுங்கியை, ஒரு கையால் தூக்கித் தூக்கி, ஆட்டி, ஆட்டி வியர்த்துப் போன கால்களுக்கு விசிறியாக்கினான். கண்களை இறுக்கிக் கொண்டு, நினைவுப் பாதையில் பின்னோக்கி நடந்தான். ஓடினான், தள்ளாடினான், விழுந்தான். மனத்தில் பதிந்த வண்ணக் காட்சிகளுக்கு ஏற்ப வர்ணனை கொடுத்தான்.

“எங்க ஊர், ஆறு பாய்கிற கிராமம் இல்ல… கரிசலான பொட்டல் காடுமில்ல… குளமுள்ள ஊரு. குளம்னா சாதாரண குளமல்ல. ஏரிக்கும், குளத்திற்கும் இடைப்பட்ட தேக்கம். எங்கேயோ பாயும் ஆறில் இருந்து வெட்டப்பட்ட கால்வாய் வழியாய் நீர் வழங்கும் குளப் பாசனம்… இதன் வயல் காட்டில் இருந்து ஒரு ஓடை பிரிக்கிற தோட்டக் காடு. குளம், நிறை மாத கர்ப்பிணியாய் இருக்கும் போது, நஞ்சைக் கிணறுகள் பொங்கிப் பிரசவிக்கும்…. புஞ்சைக் கிணறுக்கு எட்டு மாதமாகும்”

“அறுக்காதடா… சலிப்பூட்டுறது நல்ல வர்ணனை… இல்லடா…”

“இப்படிப்பட்ட சமயத்தில, நான் எஞ்ஜினியரிங் காலேஜை முடிச்சிட்டு, என்னைத் துரத்தின கம்பெனியில் வேலைக்கு சேர்ந்த நேரம்… கேம்பஸ் இன்டர்வியூவில் நான்தான் இரண்டாவது… மாணவப் பருவத்தில் இருந்த தாழ்வு மனப்பான்மை, தன்னம்பிக்கையாய் மாறுன நேரம்… மாதச் சம்பளம் பத்தாயிரத்துக்கு மேல. நட்சத்திர ஹோட்டல் சகவாசம். ஆகாயத்தில் பறக்கிற ஆனந்தம்”

“வாடாப்பூவை பார்க்கறதுக்கு நான் எவ்வளவு நேரண்டா காத்துக் கிடக்கிறது?”

“சொந்தக் காலுல நிற்கிற பெருமிதத்தோடு, ஊருக்கு போனேன். சின்ன வயசிலேயே, அந்தர் அடித்த எங்க கிணத்தில் ஒரு பல்டி அடிக்க ஆசை. கிணற்றுக் குத்துக் காலில் ஏறி நின்னு… கிணத்துக்குள்ளே தலை கீழாய் பாய்வேன்… தலை கீழாய் தாவி, மல்லாந்தும் விழுவேன். ஒரு நாள் உச்சி வெயில்… ஒரே எரிச்சல்… சூரியன் சுட்டது… சோளத் தட்டைகளும், கிணற்று மேடும் மறைக்கும் எங்க கிணற்றுக்குள் நிலை நீச்சலாய் நின்றேன்…அதாவது, கவிழ்ந்து படுக்காமல், காலையும், கையையும் லேசு லேசாய் ஆட்டி, செங்குத்தாய் நிற்பது… நின்றேனா…”

“வெளியே ஒரு அழுகைச் சத்தம்… இடையிடையே விசும்பல்… விக்கல். நான், அவசர அவசரமாய் மூலைப் படிக்கு வந்து, மேலே உள்ள ஒவ்வொரு படியாய் ஏறி, ஏறி வெளியே வந்தேன். வாடாப்பூ அழுது கொண்டு நின்றாள். அங்கேயும், இங்கேயுமாய் அல்லாடினாள்… என் வயதுக்காரி. தொட்டால் ஷாக் அடிக்கும் உடல்; கண்ணை சுகமாக்கும் நிறம்… அவள் கன்னத்தில் ஒரு கையின் அடையாளம்; கன்ன மேடு, ஏற்ற இறக்கமாய் இருந்தது. அவள் நெற்றிப் பொட்டில் ரத்தத் தலை முடி, யாரோ பிடித்து விட்ட சிலிர்ப்போடு கூம்பிக் கிடந்தது… என்னைப் பார்த்ததும், அவள் மலங்க மலங்க விழித்தாள். ஜட்டியோடு நின்ற என்னை சங்கோஜமாய் பார்க்காமலே, படபடப்பாய், பின்னால் திரும்பித் திரும்பி, பயந்து பயந்து சொன்னாள். ‘என் புருஷன்… ஒரு கையிலே சாட்டைக் கம்போடவும், இடுப்பிலே சூரிக் கத்தியோடும், என்னை விரட்டுறான். என்னைக் காப்பாத்து.. காப்பாத்துன்னு’ கதறினாள். நான், உடனே பம்பு செட்டுக் கதவைத் திறந்து, அவளை உள்ளே போகச் சொன்னேன்… சந்தேகம் வராமல் இருக்க, கதவையும் இழுத்து மூடி பூட்டிட்டேன். ஐந்தே ஐந்து நிமிடத்திற்குள்ளே, வாடாப்பூ வீட்டுக்காரன் மரியப்பன் வந்தான். அவனை எல்லோருமே லாரிக்கார மாரியப்பன்னே சொல்லுவாங்க… வெட்டரிவாள் மீசைக்காரன்… பயமுறுத்தும் கண்கள்; சிலர் குடிக்கா விட்டால், ஆடு, குடித்தாலோ ஒநாய்… ஆனால், இவன் எப்பவுமே ஒரு போக்கிரி… அசல் கழுதைப் புலி… என்னை பார்த்து, ‘என் வீட்டுக்கார மூதேவி இங்கே வந்தாளா?’ என்றான். அவள் கிடைக்கவில்லையானால், என்னை வெட்டப் போகிற மாதிரி; நான் ‘இல்லியண்ணே’ என்று சொல்லி விட்டு, ஒப்புக்கு, அவனோடு சேர்ந்து அங்குமிங்குமாய் தேடினேன். அப்புறம் ‘ஒரு பெண்ணை… ஒன்னை மாதிரி, ஒரு வீரன் அடிக்கலாமா அண்ணே’ என்று கேட்டேன். ‘நான் அவளை அடித்தேன்னு ஒனக்கு எப்படித் தெரியுமுன்னு?’ சந்தேகமாய் கேட்டான். உடனே ‘புத்திசாலியா’ நான் ‘இன்னைக்கி கன்னத்தில கை பதியும்படியா அடித்ததைச் சொல்லல… முன்னால அடித்ததை சொன்னேன்னு’ சொன்னேன். நல்ல வேளையாய், அப்போப் பார்த்து பனையேறி மாமா மேகலிங்கம், கலயங்கள், முறுக்கு தடியில் தொங்க வந்தார். ‘கள்ளு வேணுமாடா… கள்ளு’ என்று மாரியப்பனைப் பார்த்துக் கேட்டார். அவன் சப்புக் கொட்டினான். பனையேறி மாமா, அவனை ஒரு கள்ளு கலசத்தை தூக்க வைத்துக் கொண்டு, அவன் முதுகைத் தள்ளினார். பிறகு, என் பக்கமாய் ஓடி வந்து, ‘பனைமரத்துல பாளை சீவும் போது பார்த்துட்டேன்… வாடாப்பூவை… பாவம்… பக்குவமாய்… அனுப்புன்னு’ சொல்லிட்டு போயிட்டார். நான் சிறிது நேரம் சிலையானேன். அப்புறம் கிணற்றுக்குள் போட்ட கல்லானேன். அரை மணி நேரத்திற்குப் பிறகு, பம்பு செட்டுக் கதவு தட்டப்பட்டது. நான் பயந்தபடியே திறந்தேன்… மாரியப்பன் வந்திடுவானோ என்ற பயம்… கள்ளு மாமா கவனித்துக் கொள்வார் என்ற ஆறுதல். கதவைத் திறந்தேன்; வாடாப்பூ, பேய் பிடித்தவள் போல் கண்களை அகலமாக்கி, தலை முடியை விரித்துப் போட்டு, தன்னை மறந்து நிற்பது போல் நின்றாள். அவளுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதோ என்று எனக்குப் பயம்… அதற்கு ஏற்ப, தலையில் ஒரு குடம் இருப்பது போலவும், அதைப் பிடித்துக் கொண்டு இருப்பது போலவும், கைகளை தலைக்கு மேல் கொண்டு போய், அப்படியே வைத்திருந்தாள். உடனே நான், பம்ப் செட் தரையில் கசிந்த நீரை உள்ளங்கையில் ஏந்தி, அவள் முகத்தில் அடித்தேன். நெற்றிப் பொட்டில் உறைந்த ரத்தத்தை, எனது லுங்கி முனையில் துடைத்து விட்டேன். எந்த விகற்பமும் இல்லாமல், அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தேன். இத்தகைய ஆண் ஆதரவு, இது வரை கிடைக்காததாலோ என்னவோ, வாடாப்பூ முட்டி மோதினாள். கதவில் தலையை மோத விட்டாள். உடனே நான், அப்போதும் எந்த விகற்பமும் இல்லாமல், ‘இனிமேல் நீ… இவனோட வாழப்படாது… ஆனால், கொஞ்ச நாளைக்கு பல்லைக் கடிச்சிக்கோ… மெட்ராஸ்லே என் கம்பெனியிலே உனக்கு நல்ல வேலையா வாங்கித் தாறேன்’ என்றேன். இதைக் கேட்டதும் அவள் ‘நீ சொன்னதே போதும்’ என்று அரற்றியபடியே, என் கழுத்தை ஒரு கதவாக நினைத்து, அதில் முகம் போட்டு, முட்டி போதினாள். நான் அவள் முகத்தை நிமிர்த்தி, அவள் தலையைக் கோதி விட்ட போது, அந்தப் பஞ்சும் இந்த நெருப்பும் பற்றிக் கொண்டன. எல்லாம் முடிந்ததும், அவள் ஒலமிட்டாள். மாரியப்பன் கொடுக்காத அழுகையை, நான் கொடுத்து விட்டேன். நானும் கைகளை நெறித்தேன். கால்களை தரையில் உதைத்தேன்”…

மறுநாளே, மாரியப்பன் லாரியில் போய் விட்டான். திரும்பி வர மாதமாகும். நான், உச்சி வெயில் வராத காலையிலும், மஞ்சள் வெயில் அடிக்கும் மாலையிலும் தோட்டத்துக்குப் போனேன். வாடாப்பூவும் புருஷன் விரட்டாமலே வந்தாள். நெற்றியில் குங்குமம் வைத்து, தலை மறைய பூ வைத்து, காலையில் ஆட்டுக்கும், மாலையில் மாட்டுக்கும் புல் வெட்டுவதாய் போக்குக் காடடி வந்தாள். மத்தியானம் தலை மறைவாய் வந்தாள். நான் வாக்குக் கொடுத்தது போல், கலைவாணியோட சம்மதத்தில், அவளுக்கு கம்பெனியில… ஒரு வேலை வாங்கிக் கொடுக்க நினைத்தேன். அதுக்குள்ளே எல்லாமே எய்ட்ஸாயிட்டு. சும்மா சொல்லபடாது… கலைவாணியோடு என் திருமணம் நிச்சயமானதும், வாடாப்பூ என்னைத் திரும்பிக் கூட பார்ப்பதில்லை… பாவம் என்னைப் போல், அவளுக்கும் எய்ட்ஸ் நிச்சயம்… அவள் மூலம் … எனக்கும், மாரியப்பன் மூலம் அவளுக்கும்… எவ்வளவு பெரிய ரத்த பந்தம் பாரு…”

“ஓகே… நெக்ஸ்ட்…”

“அப்புறம் தேனம்மா…”

“ஒன் மினிட்… தேனம்மா எப்படி இருப்பாள்? கொஞ்சம் பொறு… காமிராக் கண்களை அட்ஜெஸ்ட் செய்யறேன்… கலர் வந்துட்டு… சொல்லு… எப்படி இருப்பாள்…?”

“என் வயதுக்காரி… வாழைப்பூ நிறம்… என் காதளவு உயரம்… பாக்கு மர நளினம். ஆமணக்கு செடியின் சாயல், முத்தம் கொடுக்க போவது போல் குவியும் உதடுகள்”

“நீ கவிஞன்டா… அதனாலயே பொம்பளைக் கள்ளன்டா… லேடி கில்லர்டா… சரி சொல்லுடா”

“இந்த தேனம்மா… வாடாப்பூவோட உயிருக்கு உயிரான தோழி. என்னை, எங்கே பார்த்தாலும், அங்கேயே நிதானமாய்… பொதுப் படையாய் பேசுறவள். வாடாப்பூ உறவுக்குப் பிறகு, என்னைப் பார்த்தால், குறுஞ்சிரிப்பாய் சிரிக்கிறதும்… நிற்காமலே ஓடுறதுமாய் ஆகிட்டாள். ஒரு துணி வியாபாரியோட பெண்டாட்டி… அந்த ஆசாமி ஊர்ல. இருக்கிறதே அதிசயம்… பம்பாய், ஹைதராபாத் என்று சேலை மூட்டைகளைத் தூக்கிட்டு நகரம், நகரமாய் அலையுறவன்… ஒரு நாள், தோட்டத்துப் பக்கமாய் எதற்கோ வந்த இந்த தேனம்மா கிட்டே கேட்டுட்டேன்… ‘எதுக்காக என்னைப் பார்த்துட்டு ஓடுறே’ன்னு கேட்டேன். ‘பார்க்கிறவங்க தப்பா நினைக்க மாட்டாங்களான்னு’ கேட்டேன். உடனே அவள் சிரித்தாள். பிறகு ‘எனக்கு எல்லாம் தெரியும்… வாடாப்பூ சொன்னாள்'ன்னு வெட்கத்தோடு சொன்னாள். நான் பயந்துட்டேன். விவகாரம், மாரியப்பன் காதுக்குப் போனால், அவன் பேச மாட்டான். அவனோட சூரிக் கத்திதான் பேசும்… அந்தக் காட்சியை நினைத்து, கண்ணை மூடினேன். அப்புறம் திறந்தால், தேனம்மா, பக்கத்தில் வந்து நின்னாள்… நான், யதேச்சையாய்…”

“நிறுத்துடா… ஒனக்கு எல்லாமே யதேச்சை… அந்தப் பொண்ணுக மட்டும் நினைச்சே வருவாளுங்க… இது ஆணாதிக்கம்டா”

“உச்சக் கட்டத்தில உச்சியை பிடிக்காதே! நான் தேனம்மாவை யதேச்சையாய்”

“இந்த வார்த்தைய சென்சார் பண்ணிட்டேன். சரி மேற்கொண்டு போ.”

“நான், என்னை அறியாமலே… தேனம்மாவின் மோவாயைப் பிடித்து கெஞ்சினேன். வேறு யார் கிட்டயும் சொல்லிடாதேன்னு அழுங்குரலில் சொன்னேன். உடனே, அவள் அழுதாள். நான் பயந்து போய் விலகி நின்னேன்… தலை வலி, போய் திருகு வலி வந்திட்டேன்னு வெல வெலத்தேன். அவள் மெள்ளப் பேசினாள். அப்புறம் ஆவேசமாய்ப் பேசினாள். அவள் புருஷனும் இன்னொரு மாரியப்பனாம்… மூன்று மாதத்திற்கு ஒரு தடவை வந்து, முரட்டுத்தனமா பாய்வானாம்… மறு தடவை வரும் போது, ‘உண்டாயிட்டியான்னு’ கேட்பானாம். இல்லன்னு இவள் தலையாட்டினால், போட்டு, போட்டு அடிப்பானாம். மலடி… மலடின்னு திட்டுவானாம்… ‘மொதல்ல ஒன்னை சோதித்துப்பாரு’ன்னு ஒரு நாள் கேட்ட போது, எனக்கு பிறந்திருக்கிற பிள்ளைகளுக்கு… ஒரு பஞ்சாயத்து பள்ளிக்கூடமே நடத்தலாமுன்னு, சொல்லிச் சிரிச்சானாம். அடுத்த தடவை வரும் போது, நீ மட்டும் முழுகாட்டால், ஒரேடியாய் ‘தலை முழுகிடுவேன்னு’ விரட்டிட்டு போயிட்டானாம். தேனம்மா அழுதாள். அவன் கண் முன்னாலயே, ஒரு குழந்தை பெற்றுக் காட்டணுமுன்னாள். அவனுக்காக இல்லாட்டாலும், தனக்காகவாவது ஒரு பிள்ளை வேண்டும் என்று வெளிப்படையாவே சொன்னாள். அப்புறம் என்ன, அடுத்த தடவை நான் ஊருக்குப் போகும் போது, அவளுக்கு ஒரு குழந்தை…நான்கு மாதக் குழந்தை… நோயாளிக் குழந்தை; பிறந்த ஏழாவது மாசமே இறந்துட்டு… இப்போதான் இறந்ததுக்குக் காரணம் புரியுது.”

மனோகர், பேச்சை நிறுத்தி விட்டு, அண்ணாந்து பார்த்தான். உள்ளே மனதில் ஊடுருவிய சினிமாஸ்கோப்பில், முரட்டுக் கணவனால் அடிபடும் வாடாப்பூ, பெற்ற பிள்ளையைப் பறி கொடுத்துட்டு, வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள்ளும் தேனம்மா…

எஸ்தர், அவனை, தலையைப் பிடித்து உலுக்கினாள். தோளைத் தொட்டு குலுக்கினாள்… உடனே, மனோகர் மனத்திரையில் ஆனந்தி… அதே பம்ப் செட் அறை… அதை, காதல் செட் என்றே பெயரிடலாம்.

“ஆனந்தி இருக்காளே… அவள் அழகுக்கு, கலைவாணி ஈடாக மாட்டாள். நான், பள்ளிக் கூடத்தில் எட்டு படிக்கும் போது, இவளும், கலைவாணியும் ஐந்து படித்தார்கள். காலையில் பிரேயர் கூட்டம்… ‘கன்’ டயம்லே நடக்கும்; தலைமை ஆசிரியர், தேசிய கொடி ஏற்றுவார். அந்தக் கொடியையே அடிக்கப் போவது போல், டிரில் மாஸ்டர் கையில் பிரம்போடு நிற்பார். லேட்டாய் வருகிறவர்கள், ஒரு ஓரமாய் நிற்கணும். பிரேயர் முடிந்ததும், தலைமை ஆசிரியர், டிரில் மாஸ்டரோட ஓரம் கட்டப்பட்ட மாணவ, மாணவிகளிடம் வருவார். ஒவ்வொருவர் கிட்டயும் காரணம் கேட்பார். நான் தாமதத்திற்கு சொன்ன காரணம், தலைமை ஆசிரியருக்கு பிடிக்கவில்லை… உடனே, டிரில் மாஸ்டரைப் பார்த்து கண்ணசைத்தார். உடேன அந்த டிரில், என்னையே டிரில் போடப் போவது போல் உற்றுப் பார்த்தது. ஆசாமிக்கு குதிரை முகம். ஓநாய் பார்வை. அன்றைக்குப் பார்த்து பிரம்பு கொண்டு வரவில்லை. உடனே, ஐந்தாவது வகுப்பறைக்குள் வரிசையாய் போன ஒரு மாணவனைப் பார்த்து, தன்னோட, அறையில் இருக்கிற பிரம்பை எடுத்து வரச் சொன்னார். அதுக்குள்ளயே இந்த ஆனந்தி, பக்கத்தில் கிடந்த ஒரு வாத மடக்கிக் கம்பை எடுத்து, டிரில் மாஸ்டரிடம் நீட்டினாள். கலைவாணி அவளைத் தடுத்தாள். கட்டிப் பிடித்தாள். ஆனாலும், ஆனந்தி, அவள் தலைக்கு மேலே கம்பைக் கொண்டு போய், டிரில் மாஸ்டரிடம் ஒப்படைத்தாள். அவர் என்னை புறங்கையை காட்டச் சொல்லி, வாங்கு வாங்குன்னு வாங்கிட்டார். அதுக்கு முந்தின நாள், அவர் நடந்து போன போது, சைக்கிளில் போன நான் இறங்கவில்லை… அந்தக் கோபம் அவருக்கு… ஆனந்தியைத் தடுத்த கலைவாணிக்கும்… உள்ளங்கையில் பிரம்படி… கை சிவக்கும்படி …”

“எல்லாருக்கும், ஸ்கூலுல அடி கிடைக்கும்… இதா பெரிசு… அந்தச் சின்னஞ்சிறிசு கிட்டே வாடா…”

“ஆனந்தியைப் பார்த்தாலே, எனக்கு பற்றி வரும். இதனாலயே ஊருக்கு நான் போகும் போது, அவளைப் பார்த்தால், ஒதுங்கிக் கொள்வேன். அவளும், அலட்டிக்க மாட்டாள். ஒரு தடவை, என்னைக் காப்பியடித்தாள்; அதாவது பார்த்து விட்டு, திரும்பிப் போனாள். காலயில் கரெக்டா எட்டு மணிக்கி, எங்க தோட்டத்துக்கு பக்கத்தில் உள்ள அவள் தோட்டத்துக்கு, பிளாஸ்டிக் கூடையில் மாற்றுப் புடவை வகையறாக்களை வைத்துக் கொண்டு போவாள். ஒரு வண்ணத் துண்டு மட்டும் தோளுல தொங்கும். அவள் தோட்டம் ஒரு பனந்தோப்பு. இடையிடையே தென்னை மரங்கள், கோணி நிற்கும். ஒவ்வொரு பனையும் ஒரு ராட்சதனின் முகம் போலவும், தென்னை ஓலைகள், அவன் மீசை போலவும், கீழே நிற்கும் விடலிகள், அவன் காலணிகள் போலவும்…”

“அறுக்காதே… அறுக்காதேடா… அதுக்குன்னே நித்தியகுமார் இருக்கான்.”

“சரி… அன்றைக்கும் ஆனந்தி… தோட்டத்துக்கு, தோளுல துண்டு துலங்க போனாள். போயிட்டு சிறிது நேரத்தில், எங்க கிணற்றுப் பக்கமாய் வந்தாள். அவள் போகும் போது, பல்லைக் கடித்தபடி போனாள். இப்பவோ, பல் தெரிய வந்தாள். ‘எங்க பம்ப் செட்டுல மோட்டார் ரிப்பேர்… எனக்கு காலேஜ்ல ஷவர்ல குளித்துப் பழக்கமா… அதனால பம்ப் தண்ணிர்லே தலையைக் கொடுக்கிறது ஒரு சந்தோஷமா… ஸோ… மோட்டாரை ஆன் செய்துட்டுப் போங்க…நான் குளிச்சிட்டு செட்டை பூட்டிட்டு, சாவியை என் தம்பி மூலம் கொடுத்தனுப்புறேன்’ என்றாள். நான் தலையாட்டி விட்டு, போகப் போனேன். பிறகுதான், எனக்கு ஞாபகம் வந்தது. நானோ, தங்கை மீராவோ, வேலையாட்களோ, பம்ப் செட் தண்ணீரில் குளித்து கரெண்டையும், தண்ணீரையும் வேஸ்டாக்கிட படாதுன்னு… எங்கப்பன்… மோட்டார் ஸ்விட்சை உல்டாவாய் வைத்திருந்தார். நான் இதைச் சொல்வதற்காக பம்பு செட்டுக்கு பக்கமாய், வேகவேகமாய் போய் விளக்கமளித்தேன்… உடனே அவள்… ‘கிண்டலா’ என்ற போது, உள்ளே போய் ஸ்விட்சை ‘ஆன்’ செய்தேன்… அவளும் உள்ளே வந்தாள். எப்படியோ நான் ‘ஆன்’ ஆனேன். அவள் ‘ஆப்’ ஆனாள்.”

“அடேய் பாவி.. அந்த ஆனந்தியையே கட்டியிருக்கலாமேடா…?”

“இருக்கலாம். ஆனாலும், அது ஒரு செக்ஸ் விபத்து… அவ்வளவுதான்… அதோட ஒரு நாள் தேனம்மாவையும், என்னையும் அதே பம்ப் செட்டுல, பக்கத்தில் பக்கமாய் பார்த்துட்டாள். வேறு யாராக இருந்தாலும், வெளில டமாரம் அடித்திருப்பாள். தேனம்மாவோட குட்டை உடைச்சால், தன் குட்டும் தானாய் உடையுமுன்னு நினைத்தாளோ என்னமோ, ஒதுங்கிட்டாள்…”

“நீ ஒரு உமனைசர்டா.”

“ஆமாம். எந்தப் பெண்ணையும் போனாப் போகிறதுன்னு நான்தான் விட்டு வைக்கிறது. அப்புறம் எங்க அக்காவோட நாத்தனார்… இப்போக் கூட எதிர் வீட்டு பொண்ணு வலிய, வலிய வந்து சைட் அடிக்காள். அதனாலதான் அவளோட தாத்தா.. இந்த வீட்டுக் கிழத்தோட வந்து கத்திட்டுப் போறார்…”

“அடேய்… பாவி… வேணாண்டா… ஒன்னோட எய்ட்ஸ் அவளுக்கு வந்துடப் படாதுடா. அக்கிரமக்காரிங்க கிட்டே… அடங்காப் பிடாரிங்க கிட்டே வேணுமுன்னா… போ… ஆனால், அப்பாவிப் பெண்களை… விட்டுடா. பிராமிஸ் பண்ணுடா. ஒனக்கு வேணும்னா… நான் இருக்கேன்டா…”

“நானும் மனுஷன்தான் எஸ்தர்”

“அப்புறம்… கலைவாணியை மட்டும் ஏண்டா… கல்யாணத்துக்கு முன்னால விட்டு வச்சே.”

“கலைவாணியைப் பார்க்கும் போது… குறைந்த பட்சம் எனக்கு, அவளைக் கையெடுத்துக் கும்பிடணும் போல தோணியது. அவள் பேசுறதை கேட்கத் தோணும். பேசுற வாய்க்கு முத்தம் கொடுக்க தோணாது… ஒண்டர்புல் கேர்ல்… அதோடு அவளையே கட்டிக்கலாமுன்னும் ஒரு விருப்பம்… கல்யாணத்துக்கு முன்னால் கட்டிக்கப் போற என்னால் கூட… அவள் கன்னி கழியப்படாதுன்னு ஒரு விருப்பம்…”

“நீ… ஒரு செல்பீஷ் பெல்லோ… ஆனாலும், கலைவாணியை நினைத்தாலே எனக்கு குமட்டுது.. மனுஷியா அவள்? ஒன்னை மட்டும்… அவள் அப்படி அம்போன்னு விட்டுட்டுப் போகாட்டால்… நீ பம்பாயிலோ… இல்லாட்டி டில்லியிலோ… வேற கம்பெனில சேர்ந்து… வேலை பார்த்திருக்கலாம்… அதுவும் இல்லாட்டி… ஒனக்கு கிடைத்த இரண்டு லட்சம் ரூபாய்ல… ஒரு சின்ன யூனிட்டை ஆரம்பித்திருக்கலாம்… நீங்க ரெண்டு பேருமே, காரும், வீடுமாய் இருக்கலாம். இப்படி அன்புமணி பாஸ்டர்ட்கிட்ட சிக்கி இருக்க வேண்டாம். இவன் கிட்டே ஜாக்ரதையா இருடா… பொல்லாத போக்கிரிடா…”

எஸ்தர் துள்ளிக் குதித்து நின்றாள்… அன்புமணியின் கழுத்தை அப்போதே நெரிக்கப் போவது போல், இரண்டு கரங்களையும் குவித்தாள். மனோகரும் எழுந்தான். அவளை தோள் தொட்டு, அழுத்தி அழுத்தி, தரையில் மீண்டும் உட்கார வைத்தான். சிறிது நேரத்தில், எஸ்தருக்கு போதை முழுவதுமாக தெளிந்து விட்டது. தெளியத் தெளிய வேதனை… உடலெல்லாம் நடுக்கம்… முகம், பின் பக்கமாய் திரும்பப் போவது போல் சுழன்றது. மனோகர், அவள் தலையைப் பிடித்துக் கொண்டான். குலுங்கிய கால் கைகளைப் பிடித்து விட்டான். ஆனால், எஸ்தரோ கதவைத் திறந்து, வெளியே வந்து நின்றாள். மாடிச் சுவர்களில் சரிந்து கீழே தொங்கினாள். இப்போது, அன்புமணி அவளுக்கு ஒரு அதிசயமாய்த் தெரிந்தான். அவள் ஆட்டத்தையும், வாதையையும் கழித்து கட்டி விட்டு, அவளை இழந்த சொர்க்கத்திற்குள் கூட்டிப் போகும் போதை மருந்து புருஷோத்தமனாய் தென்பட்டான்.

எஸ்தர் பொறுமை இழந்தாள். மனோகரை, கைகளால் பிராண்டினாள். பல தடவை நச்சரித்தாள்.

“பணம் தாடா… பணம் தாடா… நானே வாங்கிட்டு வாரேன். ஒனக்கும், எனக்கும் வாங்கிட்டு வாறேன்…”

மனோகரும் வெளியே போய், மாடிச் சுவர் வழியாய் எட்டிப் பார்த்து விட்டு, உள்ளே வந்தான். வாய் பிளந்து கிடந்த சூட்கேஸின் மேல் பகுதியின் அடிவாரத்தில் உள்ள ஜிப்பை திறந்தான். ஒரு நோட்டுக் கட்டை எடுத்து எஸ்தரிடம் நீட்டினான். அதற்குள் அன்புமணியும், நித்தியகுமாரும் உள்ளே வந்தார்கள். இன்னும் கண் விழிக்காமல், தூங்காமல் தூங்கி சுகம் பெறும் சசிகுமார், சேகர் வகையறாக்களை உசுப்பி விடப் போனார்கள். இதற்குள் எஸ்தர் படபடத்தாள். அன்புமணியின் காலில் விழுந்து, அவன் முட்டிக் கால்களை கட்டிக் கொண்டு, முகத்தைத் தூக்கி பாம்பு மாதிரி பற்றிக் கொண்டு, பிச்சைக்காரியாய் கெஞ்சினாள்…

“போட்றா… போட்றா… ஊசி போட்றா”

அன்புமணி செயல்படும் முன்பே, ஒரு அழைப்பு மணிச் சத்தம்… முதலில் மென்மையாய், அப்புறம் முரடாய்… பிறகு கதவு தட்டப்பட்டது. உருமி மேளமானது. உடையப் போனது.

அன்புமணி கண்ணசைப்பில், நித்தியகுமார் கதவைத் திறந்தான். உள்ளே ஒரு கும்பல் தாவி வந்தது. இடுப்பில் ரிவால்வரோடு, ஒரு நட்சத்திர காக்கிச் சட்டைக்காரர். தோள் பக்கம் கோடுகள் போட்ட நான்கைந்து லத்திக் கம்புக் காரர்கள்.

அந்த போலீஸ் அதிகாரி, வாய் மூடாத சூட்கேஸ் பக்கம் போன போது, மனோகர், சும்மா இருந்திருக்கலாம்… காட்டுக் கத்தலாய் கத்தினான்.

“அய்யோ… என் ரூபாய், அய்யோ.. .என் ஒரு லட்சம்…”

அந்த சூட்கேஸை காலால் இடறப் போன இன்ஸ்பெக்டர், அதைக் கையால் பற்றினார்…

"https://ta.wikisource.org/w/index.php?title=பாலைப்புறா/அத்தியாயம்_24&oldid=1641712" இலிருந்து மீள்விக்கப்பட்டது