பாலைப்புறா/அத்தியாயம் 28
எங்குமே இருள் மயம்…
அந்தக் கடலையும், கடல் முனையான கடற்கரைத் திட்டையும் இருள் ஆக்கிரமித்திருந்தது. கடலும், வானமும் ஒன்றானது போன்ற தோற்ற மாயை. கடல் மேலே ஏறுவது போலவும், ஆகாயம் கீழே இறங்கிப் போனது போலவுமான அர்த்த ராத்திரி. தொலைவில் உள்ள சாலையில், மாநகராட்சி விளக்குகள் கண்களை மூடிக் கொண்டன. கடலுக்குள்ளும், படகின் விளக்கோ அல்லது கப்பலின் ஒளியோ இல்லாத சூன்ய நேரம்… கடல் சாட்சியோடு, இருளின் பேயாட்சி. மௌனத்தின் கொடுங்கோல்…
அந்தக் கடல் நுனியில், ஈர மண்ணில் மனோகரும், அன்புமணி, எஸ்தர் உள்ளிட்ட அவன் தோஸ்துக்களும், மாட்டின் பிடரி போன்ற மண் சரிவில், சாய்ந்து கிடந்தார்கள். சிறிது நேரத்தில்… எஸ்தர் மட்டும் எழுந்து, மனோகரின் முன்னால் வந்து, அவன் கால் மேல், தனது கால்களைப் போட்டுக் கொண்டு, அவன் கழுத்தைத் தடவி விட்டாள். காவல் துறையினர், அந்தக் கழுத்துப் பக்கத்தில்தான் பூட்ஸ் கால்களால் அழுத்தினார்கள். அது வரை, முதுகில் லத்திக் கம்புகளையும், முகத்தைக் குத்திய கம்பு முனைகளையும் பல்லைக் கடித்துத் தாங்கிக் கொண்ட மனோகர், அப்போது கதறப் போனான். சத்தம் போட்டு அழ முடியாமல், கண்களில் இருந்து உப்பு நீரும், வாயில் இருந்து எச்சில் நீரும் தரையில் ஒன்றாய்க் கலவையாயின. கடைசியில், இந்த எஸ்தர்தான், அந்த சப்-இன்ஸ்பெக்டரையும், கான்ஸ்டபிளையும் கையெடுத்துக் கும்பிட்டாள். ‘யானைக் கிட்ட போன கரும்பும், போலீஸ் கிட்டே போன பொருளும், திரும்பாது என்கிறது…. தெரியாதவன், சார்… இனிமேல்… என் பணம் என்னாச்சின்னு கேட்க மாட்டான் சார்’ என்று மன்றாடினாள். அப்படியும், லத்திக் கம்புகள் மீண்டும் ஓங்கப்பட்ட போது, எஸ்தர், ஒருத்தரின் கையைப் பற்றிக் கொண்டு, பெருவிரலை அழுத்தியபடியே சிரித்தாள். சிரிப்பைக் கவசமாக்கி, கண்களில் கிறக்கம் ஏற்றிப் பார்த்தாள். அந்த போலீசாரை கண்களால் கைது செய்து, லத்திக் கம்புகளை கீழே போட வைத்தாள்… அவர்களோ, அப்போதே இரவு வரக் கூடாதா என்று ஏங்கி ஏங்கி, மனோகர் மேல் போட்ட பிடியை விட்டார்கள். அந்தப் பிடியை, எஸ்தர் மேல், அழுத்தம் குறைத்து, கோபம் தணித்துப் போட்டார்கள். பிறகு பகலாய் இருந்தாலும் பரவாயில்லை என்பது போல், அவளை இழுத்துக் கொண்டு பின்பக்கமாய்ப் போனார்கள்.
கடற்கரையில், புண்ணை ஊதிக் கொண்டிருந்த மனோகர், இதை நினைப்பதற்கே பயந்தான்.
காவலாளர் கொடுத்த கைப்புண்ணையும், கால் புண்ணையும், மனோகர் ஊதிய போது, எஸ்தர் ஈரக் கடல் மண்ணைப் பிசைந்தபடியே அவனைத் தேற்றினாள்.
“தானாய் ஆறிடுண்டா… உப்புக் காற்றுலே சரியாயிடும்… வாய்க்கு ஏன் வேலை கொடுக்கிற…”
“பாவிப் பயங்க. சாவடியாய் அடிச்சதும் இல்லாமல், சூட்கேசையும் அதுக்குள்ள இருந்த ஆயிரக்கணக்கான ரூபாயையும் அமுக்கிட்டாங்களே… வெட்ட வெளியே, வீடாய் போயிட்டே…”
“புலம்பாதேடா… மனோ… ஒன்னை இந்தப் பாடு படுத்தின அவனுக ரெண்டு பேருக்கும் எய்ட்ஸ் கொடுத்திட்டேன் பாரு… வேணுமுன்னே திட்டம் போட்டுத்தான். அவங்க இழுத்த இழுப்புக்கு சாய்ந்து, ஒரேடியாய் இழுத்துச் சாய்ச்சுட்டேன்…”
“இப்போ அதனால… நமக்கு என்ன லாபம்?”
“இப்படி லாப, நட்டம் கணக்கு போடாதே அன்புமணி. ஒனக்கென்ன? என்ன சாலக்கு செய்தியோ… மறுநாளே, போலீஸ் ஒன்னை விட்டுட்டு. ஆனால், இந்த மனோகரைப் படுத்தின பாடு இருக்கே…”
“ஏய்… எஸ்தரு… ஒனக்கு… அவன் அடிப்பட்டதுதான் பெரிசா தெரியுதோ… அப்போ… நான் …இந்த சசி, சேகர்… என்ன பாடு பட்டோம் தெரியுமா… எங்களை என்ன அந்த நாயிங்க… சந்தனம் பூசித் தடவுனாங்களா…”
“கோவிச்சிக்காதடா… மச்சி… மனோவுக்கு அடிபட்டு பழக்கமில்ல… பாரு… அதனால சொன்னேன்… பாவம்… ஒங்களையும் ரொம்பத்தான் அடிச்சிட்டான்”
எஸ்தர், நகர்ந்து நகர்ந்து,… நித்தியகுமார், முன்னால் போய், கால்களை மடித்துப் போட்டு உட்கார்ந்தாள். அவன் விரல்களுக்கு சொடக்கு விட்டாள். அன்புமணி சட்டையில் அப்பிய மண் துகள்களை தட்டியபடியே கேட்டான்.
“மனோ… எதாவது காசு இருக்காடா… ஊசி போடாட்டா… உயிரே போயிடும் போலுக்கு… சாதாரண ஊசியாவே போட்டுக்கலாம்… மில்லி பத்து ரூபாய்தான்…”
எஸ்தர், நித்தியகுமாரிடம் இருந்து விடுபட்டு எழுந்தாள். கால்களையும், கைகளையும் உதறி விட்டுக் கொண்டாள். அங்குமிங்குமாய்ச் சுற்றினாள். பின்னர் அந்தச் சாக்கில், மனோகரின் அருகே உட்கார்ந்தாள். அவன் காதில் மெல்லக் கிசுகிசுத்தாள். “மனோ… என் கிட்டே இருக்கிற ஒன்னோட ஆயிரம் பற்றி சொல்லிடாதடா… இந்த துஷ்டப் பய இன்னிக்கே காலி செய்திடுவான்… நீயும், நானும் இருக்கிறதுக்காக… ஒரு குடிசை பார்த்திருக்கேன்… அதுக்கு தேவைடா…” என்றாள். மனோகர் மனம் ஆடியது. அவனுக்கும் பட்டையும், கஞ்சாவும் அலுத்து விட்டன. அந்த சொர்க்க லோகத்திற்கு, ஊசி வழியாய்ப் போக வேண்டும். அங்கேதான் அவனுக்கு எய்ட்ஸ் கிடையாது. கலைவாணியோடு கை கோர்த்து அங்கேதான் வாழ முடியும்… அங்கேதான் குடியரசுத் தலைவர், அவனுக்கு விருது வழங்குவார்.
மனோகர், எஸ்தர் சொன்னதையும் மீறி, அவளிடம் கேட்கப் போனான். அவளும், போதைப் பைத்தியத்தையும் முறியடித்துதான் அப்படிச் சொன்னாள் என்பது இவனுக்குத் தெரியும். ஆனாலும், மனம் பொறுத்தால், உடல் பொறுக்கவில்லை. உடல் பொறுத்தால், மனம் கேட்கவில்லை… ‘எஸ்தர்’ என்று சொல்வதற்காக, அவன் நாக்கு முனை மேல் பல்லின் அடிவாரத்தை தொட்ட போது, அன்புமணி இவனை சுதாரிக்க வைத்து விட்டான். மனோகரிடம் பணம் இல்லை என்று அனுமானித்து, இன்னொன்றைக் கிளப்பப் போனான்.
“அப்புறண்டா… நீ பேங்க் லாக்கர்லே தங்க நகைகளை வைத்திருக்கியாம். போலீஸ்காரங்க… பேங்க் புக்கை… ஒன்கிட்ட தெரியாத்தனமாய் கொடுத்திட்டாங்களாம்”
“ஆமா… அதுக்கென்ன இப்போ…?”
“இன்னும் அப்பாவியாவே இருக்கியேடா… மனோ… அந்த நகைகளை எடுத்து, போலீஸ்ல கொடுத்திடணுமாம். இல்லாட்டி, கஞ்சா கேஸ்லே புக் பண்ணி, ஒரு வருஷம் உள்ளே போட்டுடுவாங்களாம். தேவைப்பட்டால், தடாவோ, கிடாவோ அதை விட்டு… அடிப்பாங்களாம்… சப்-இன்ஸ்பெக்டர் கண்டிப்பாய் சொல்லிட்டார்.”
“அன்புமணி, நீ எப்போ சப்-இன்ஸ்பெக்டர் ஆனே?”
அன்புமணி, வெடுக்கென்று கேட்ட எஸ்தரை அடித்திருப்பான். ஆனாலும், அவள் திருப்பிக் கொடுக்கிறவள்… இந்த எஸ்தர் இல்லாத சமயமாய் பார்த்து, மனோகர் கிடைத்து விட்டால், அவனை லாக்கரில் மாட்டி விடலாம்…
அன்புமணி சமாளித்தான்.
“என்ன எஸ்தரு… நாம் நேற்றோ… இன்னிக்கோவா பழகுறோம்? ஒன்னை எப்போ வேலூர், பெங்களூர் ரோட்டுல பைக்கில் பிக்கப் செய்தேனோ… அதுல இருந்தே, நாம் ஒண்ணாப் பழகுறோம்… ஒண்ணா… படுக்கிறோம்… ஒண்ணா சாப்பிடுறோம்… நீ என்னை புரிஞ்சிருப்பேன்னு நினைத்தேன்…”
எஸ்தர் பதில் பேசாத போது, மனோகர் திட்டவட்டமாக, தீர்க்கமான குரலில் பேசினான்.
“அன்பு! நீ கேட்டாலும் சரி, அந்த சப்-இன்ஸ்பெக்டர் கேட்டாலும் சரி… லாக்கர்ல இருக்கிற நகை, என் ஒய்ப் கலைவாணியோட நகைங்க. எனக்கு சொந்தமில்லாத பொருளுங்க… கழுத்த நெரிச்சாலும் சரி, சுவரோட சேர்த்து… விலங்குல போட்டாலும் சரி… ஐஸ் கட்டில படுக்க வச்சாலும் சரி, என் கலைவாணி நகையிலே ஒரு கிராம் கூட கொடுக்க மாட்டேன்…”
“எவன்டா… இவன்… ஒன்னை… நான் கொடுன்னா… சொன்னேன்? நீ கொடுக்கப் போனாலும், தடுக்கிறவன்டா… இந்த அன்பு, தர்மத்துக்காக தலையைக் கொடுக்கிறவன்டா…”
“அதான்… போலீஸ்லே எங்களை விட்டுட்டு, மறுநாளே நீ பிச்சிட்டுப் போனியோ…”
“மூள இருக்காடா… சேகர்!… நான் வெளில போய், பிடிக்க வேண்டிய ஆட்களை பிடிக்காட்டால், இந்நேரம் ஜெயிலுல இருப்பீங்க. போலீஸ்லே எப்.ஐ.ஆர். போடாமல் பார்த்துக்கிட்டவன் நான். நான் மட்டும் எனக்கு தெரிஞ்ச ‘பெரிசுகளோட’ கையை காலை பிடிக்கலன்னா… மனோகருக்கு… செமத்தையா கொடுத்து, அவனே லாக்கர் நகையை எடுத்து… போலீஸ்க்கு கொடுக்க வேண்டியது வந்து இருக்கும். நன்றியோட இருங்கடா… இல்லாட்டி… போய் கிட்டே இருப்பேன்…”
“எங்களை விட்டு ஓடிப் போக முடியுமா…”
“பேசுறதையும் பேசிட்டு… பாடுறான் பாரு பாட்டு… அடித்த இடத்தில அடித்தவனே ஒத்தடம் கொடுத்தது மாதிரி…!”
இதற்குள், இருட்டோடு இருட்டாய், வட திசையிலும் தென் திசையிலும் சுற்றிக் கொண்டிருந்த சசிகுமாரும், இன்னொருவனும் அங்கே வந்து விட்டார்கள். அன்புமணி, கை,கால் உதறக் கேட்டான்.
“எவ்வளவுடா தேறிச்சு…”
“கஞ்சப் பயல்கடா… முன் கூட்டியே காசு கேட்டால்… முடியட்டும் என்கிறான். முடிந்த பிறகு கேட்டால், நீதான் தரணுமுன்னு அடிக்கிறான். இந்தக் கடற்கரையே ரெளடி மயமாயிட்டு…”
“டேய்…அதோ பாருடா நாயிங்க மாதிரி”
அங்கிருந்த ஒவ்வொருத்தரும், எதிரே சன்ன்ஞ் சன்னமாய் பெருத்துக் கொண்டிருந்த நிழல் உருவங்களை, கீழே கிடந்தபடி பார்த்தார்கள். ஓடித் தப்பலாமா என்பது போல் எழுந்தார்கள். அன்புமணி, அம்போவாய்க் கிடந்த மனோகரை, ஆற்றொண்ணா அன்புப் பெருக்கோடு தூக்கி விட்டான். அதற்குள், இவர்கள் ஓடி விடக் கூடாது என்பது போல் எதிர் திசைக்காரர்கள், அங்குமிங்குமாய் சிதறி, வட்ட வியூகம் போட்டபடி நடந்து, இவர்கள் அருகே வந்ததும் ஒன்றானார்கள்… சிறிது குள்ளமானவன், பெண்ணாகச் சந்தேகிக்கப்பட்ட எஸ்தரை தனிப்படுத்திக் கேட்டான்.
“இந்தப் பசங்க கிட்டே என்னமே வேல ஒனக்கு?”
“வேலை. இல்லாமப் போனதாலதான்… பேசிட்டு இருக்கேன்… ஏதாவது வேலை இருந்தா தாயேன்…”
“சரி வா…”
“ஆனால் ஒண்ணு… காண்டோம் போடப்படாது… எனக்கு பிடிக்காது…”
“எங்களுக்கும் பிடிக்காது… யாராவது கிடைத்தால், முழுசாத்தான் பிடிப்போம்”
“அப்படியான்னா நான் எவ்வளவு ரூபாய்க்கு பெறுவேன்!”
“நல்லாத்தான் பேசுறே… வாமே… அதான் ஐம்பதுன்னு ஒரு ரேட்டு இருக்குதே… விலை வாசி கூடிட்டுன்னு யோசிக்கிறியா?”
எஸ்தர், சகாக்களைப் பார்த்தாள். அவர்கள் திருப்தியுடன் கீழே உட்கார்ந்த போது, மனோகர் மட்டும் உட்காரமலே நின்றான். உடனே எஸ்தரும், “துணைக்கு வா மனோ…” என்று இவனைப் பிடித்து இழுத்தாள்.
கூப்பிட்ட மூவரும் முன்னால் போன போது, அவர்கள் பின்னால் நடந்த எஸ்தர், மனோகரின் காதில் கிசுகிசுத்தாள்…
“இவங்க… பேட்டை ரெளடிங்க மாதிரி… கடற்கரை ரெளடிங்க… பொல்லாத போக்கிரிங்க… கற்பழிக்கறதுக்கின்னு சுத்துறவங்க… போராட முடியாது. அதோட… இவங்க, நமக்கு… பாதுகாப்பா கூட இருப்பாங்க…”
“இந்த அசிங்கத்தைப் பார்க்கவா என்னை வரச் சொல்றே…?”
“இல்லடா கண்ணு… நீ அங்கே இருந்தால் அன்புமணி… ஒன்னை மயக்கிடுவான்… நான் வரும் முன்னாலயே, ஒன்னைக் கூட்டிக்கிட்டு போயிடுவான். ஒன்னோட லாக்கர் நகையை கைப்பற்றுவது வரைக்கும் அவன் தூங்க மாட்டான். தயவு செய்து கொடுத்திடாதடா…”
“அதை விட உயிரைக் கொடுப்பேன்”
முன்னால் போனவர்கள், எஸ்தர் தங்கள் பின்னால் வந்துதான் ஆக வேண்டும் என்பது போல் திரும்பிப் பார்க்காமலேயே நடந்தார்கள். ஆனாலும், ஒரு படகு பக்கம் வந்ததும், அப்படியே நின்றார்கள். அவர்களுக்கும், வெட்கம் இருந்தது. ஒருத்தன் மட்டுமே, அவளைப் படகிற்கு மறு பக்கம் இழுத்துக் கொண்டு போனான்.
இருளின் இருளான இருள் காடு… அலைகள் அழுகின்றன… சொறி நாய்கள் ஓலமிடுகின்றன. மண் பொந்துகளில் இருந்து வெளிப்பட்ட நண்டுகள் துடிக்கின்றன. நாய்களின் வியூகத்தில் சிக்கிக் கொண்ட பூனை, ஒரு குழந்தையைப் போல் அழுகிறது.
எஸ்தர் தட்டுத் தடுமாறி எழுந்து, தள்ளாடித் தள்ளாடி நடந்து, தொலைவாய் நின்ற மனோகரின் தோள் மேல் சாய்கிறாள். அதற்குள், அந்த மூவரில் முதல்வன் “இந்தாமே… நூறு ரூபாய்…” என்று அவளிடம் நீட்டி விட்டு நடையைக் கட்டுகிறான். அவளுக்கு, சந்தோஷம் தாங்க முடியவில்லை… எல்லா பசங்களையும் சேர்த்து, ஊசிப் போட்டுக்கலாம். பத்து மில்லி மருந்துக்கு தேறும்… சொர்க்க லோகத்தை, பேரின்ப பெரு உலகை சிருஷ்டித்துக் கொள்ளலாம்.
அந்த நூறு ரூபாய் நோட்டை இடது கைக்கு மாற்றி, வலது கையை பேன்டுக்குள் நீட்டியவள், திடுக்கிடுகிறாள். “அய்யோ! ஆயிரம் ரூபாய் பர்ஸ். பர்ஸக் காணோண்டா… காணோண்டா…”
எஸ்தர், குத்து காலிட்டு உட்கார்ந்தாள். தலையில் கை வைத்தாள். வெடிக்கப் போனது போல், சிதறப் போன தலையைப் பிடித்துக் கொண்டாள். அந்தத் தலையை, பம்பரமாய் ஆட விட்டாள். வாயை ‘மோசம் போயிட்டனே… போயிட்டனே…’ என்று புலம்ப விட்டாள். கரங்களை, மண் தரையில் போட்டு போட்டு அடிக்க விட்டாள்.
மனோகர், கீழே குனிந்து, அவளை தூக்கி நிறுத்தினான். மண் பட்ட அவள் உடம்பைத் தட்டி விட்டான்.
“மனோ…என்னை நம்புறியாடா… ஆயிரம் ரூபாய்… அந்த ரெளடிப் பசங்கதாண்டா அபேஸ் பண்ணிட்டாங்க… மனோ… மனோ… என்னை நம்புறியாடா…?”
“ஒன்னை… நம்புறேன்னு சொல்ல மாட்டேன் எஸ்தர்… சந்தேகப்பட் டால்தானே… நம்புறதுக்கு? கலைவாணியை எப்படி மதிக்கேனோ… அப்படித்தான் ஒன்னையும் மதிக்கேன் எஸ்தர்…”
எஸ்தர், எந்த வித உடல் தாகமும் இல்லாமல், அவனை அப்படியே இறுகப் பிடித்துக் கொள்கிறாள். இருவரும் தொலைவில் கிடக்கும் தோஸ்துக்களையும் மறந்து, இருட்டின் நிழல்களாக இணைந்து நிற்கிறார்கள். கனைப்புச் சத்தம் கேட்டு நிமிர்கிறார்கள். அன்புமணி, சகாக்களோடு நிற்கிறான்…
“என்ன எஸ்தர்… எவ்வளவு தேறிச்சு…”
“அதை ஏன் கேட்கிற…? மனோகர் கொடுத்து வச்ச ஆயிரம் ரூபாய பொறுக்கிப் பசங்க… பிடுங்கிட்டுப் போயிட்டாங்க…”
“இதுக்குத்தான் நம்ம கிட்டே ஒளிவு மறைவு கூடாது என்கிறது. இந்த சசிகுமார், ஒனக்கும், எனக்கும் எவ்வளவு பணம் போட்டிருப்பான். இந்த சேகர் பயல் பணத்தில… எவ்வளவு ரூபாய தின்னுருப்போம்… எங்களை விட, ஒனக்கு ஆயிரம் ரூபாய் பெரிசா போயிட்டு பாரு…”
“தப்புத்தாண்டா. தப்புத்தான். கை மேல் பலன் கிடச்சிட்டு… ஆனாலும் நூறு ரூபாய் எறிஞ்சிட்டு போனாங்கடா… வாடா… ஊசி போடலாம்”
மனோகர், பித்துப் பிடித்து நின்றான். எஸ்தரின் மனம், இப்போது மாறி விட்டது போல் தோன்றியது. போகிற போக்கைப் பார்த்தால், இவளே அந்த லாக்கர் நகைகளை கேட்பாள் போல் தோணுதே… இவங்க சாவகாசத்தை அறுத்தால், நான்தானே அறுந்து போவேன்… கள்ளி மரத்தில இருந்து ஒடிஞ்சி விழுந்த கிளையாக போவேனே…
அன்புமணி, மனோகர் பக்கமாய் வந்தான். அவன் முதுகைத் தட்டிக் கொடுத்தான். அவன் கையோடு, தன் கையைக் கோர்த்து ‘லாக்’ செய்தான். பின்னர் அவனை, இதமாக நடத்திக் கொண்டு போனான். இவர்களை, இடைமறிப்பது போல் ஒரு பேட்டரி வெளிச்சம்… நிலவு பூமிக்கு வந்து, மூன்றடி உயரத்தில் நின்று, அவர்களைப் பார்ப்பது மாதிரியான வட்ட வெளிச்சம். அந்த வெளிச்சத்தில், ஒரு கருப்பனும், இன்னொரு சிவப்பனும் முகம் காட்டினார்கள். அன்புமணிக்கு அடையாளம் தெரிந்தது…
“அடடே… சலீம்… அண்ணனா… இவரு…?”
“இவருக்கும், என் வேலதான்… பெயரு… தர்மராஜா”
“நல்லா இருங்க… என்ன விஷயமாய்…?”
“அதை ஏன் கேக்குறே…? குவாய்த்துல இருந்து ஒரு கொழுத்த பணக்காரன் வந்திருக்கான். அவனுக்கு அழகான ஒரு பையன் வேணுமாம். அறிவு கெட்டவன்… இப்பவே வேணுங்குறான். பகலாய் இருந்தால், செட்டப் பண்ணிடலாம். நட்சத்திரப் பசங்க… எத்தனையோ பேர் இருக்காங்க”
சலீம் பேசிக் கொண்டிருந்த போது, தர்மராஜா, ஒவ்வொருவர் முகமாய் பேட்டரி வெளிச்சத்தில் பார்த்தான். எவனும் சரிப்பட்டதாய் தெரியல. ஆனால், இவன், கிராமப்புற சாயல்…
“ஒன் பேரு என்னப்பா…?”
“மனோகர்…”
“இந்தாப் பாரு… மனோகர்! நாளைக்கு எப்படியோ… இன்னிக்கி, நீ மகாராஜா… நட்சத்திர ஹோட்டலுல தங்க. விஸ்கி, பிராண்டி, பிரியாணி, காலையில் கைலயே ஆயிரம் ரூபாய். அதுல எனக்கு இருநூறு… சலீம் அண்ணாத்தைக்கு முந்நூறு. அப்படியும் சொளையா ஐநூறு ரூபாய் கிடைக்கும்… ஆனால் அந்த ஷேக் என்ன செய்தாலும்… என்ன செய்யச் சொன்னாலும், நீ சம்மதிக்கணும்…”
மனோகர், இலை மறைவாய், காய் மறைவாய் கேள்விப்பட்டிருக்கிறான். இங்கே கிடப்பவர்கள், தங்களது அனுபவத்தை இவனிடம் சொல்ல முயற்சி செய்து இருக்கிறார்கள். அப்போதெல்லாம், இவன் காதுகளை மூடிக் கொள்வான். நினைத்தாலே வாந்தி வரும்… ஆனால், இப்போதோ வாழ்க்கையே வாந்தியாகி விட்டது. இனி மேலும், இந்த கடற்கரையிலும், அந்த போலீஸ் நிலையத்திலும் சீரழிய முடியாது. எவளைப் பிடிப்பாக நினைத்தானோ… அந்த பிடிப்பே, ஒரு பிடியாகி விட்டது. எஸ்தர்… எதை நினைத்துச் சொன்னாளோ, இனி மேல் இந்த சகவாசம் கூடாது… இது சகவாசம் அல்ல… சாகப் பயப்படுவதால் ஏற்பட்ட வாசம். இருந்த பணமும் போயிற்று. ஒரு லட்சம் ரூபாயும்… கலைவாணி பெயரில் போடாமலே போயிட்டு. பேங்கில் இருந்ததை சிறுகச் சிறுக எடுத்துச் சிறுத்துப் போயிற்று. இனி இருப்பது, அந்த லாக்கர் நகைதான்! எஸ்தர் சொன்னது போல, இந்த அன்புமணி லாக்கர் கதவுதான், ‘சொர்க்கத்திற்கு வாசல்’ என்று அடம் பிடிப்பான்… இந்த இரண்டு லட்சம் ரூபாயை, எப்படி போக்கினானோ… அப்படிப் போக்கி விடுவான்…
மனோகருக்குள், ஒரு வெறி ஏற்பட்டது. உடம்பை எவ்வளவு தூரம் கெடுக்க வேண்டுமோ… அவ்வளவு தூரம் கெடுக்க வேண்டும். எவ்வளவு சீக்கிரமா சாக வேண்டுமோ, அவ்வளவு சீக்கிரமாய் சாக வேண்டும்…
“என்னப்பா… பேசாமல் நிற்கே…? ஒன்னை விட்டால்… வேற ஆள் இல்லன்னு நெனைச்சியா?”
“அப்படி இல்ல சார்… வாங்க போகலாம்”
சலீம், அன்பு மணியின் பைக்குள் பத்தோ, நூறோ, ஒரு நோட்டைத் திணித்தான். தர்மராஜா, மனோகரின் தோளைப் பிடித்து, கழுத்தைத் தொட்டான். மனோகர், இருவர் கரங்களையும் பிடித்துக் கொண்டு, திரும்பிப் பாராமலே நடந்தான்…
மனோகர், இப்படி தானாய் ஒரு முடிவெடுத்து, தானே போனதில், அன்புமணி அசந்து விட்டான். ஆனாலும், மறுநாள், தன்னந்தனியாய் அவனை மடக்கி விடலாம் அல்லது மயக்கி விடலாம் என்ற நம்பிக்கை. ஆனால், எஸ்தரால் தாள முடியவில்லை. எந்த விஷயத்திலும், தன்னிடம் யோசனை கேட்கும் மனோகர், இப்போது ஏறெடுத்துப் பார்க்காமலே போவது அவளுக்கு அதிர்ச்சியானது…
எஸ்தர், சிறிது விலகிப் போய் நின்றாள். அவள் ஒதுங்குவதாக சகாக்கள் அனுமானித்த போது, அவள் மாங்கு மாங்கென்று அழுது கொண்டிருந்தாள். வேலூரிலேயே கண்களை நீரில் கரைய விட்டவள், இப்போது கரையாத கண்களை, மீண்டும் குளிப்பாட்டினாள். அழுகையையே அழ வைக்கும் நிலைக்கு வந்து விட்டவள், இப்போது குமுறிக் குமுறி அழுதாள். தனக்காக அழாமல், தானாக அழுதாள். எந்த நட்சத்திர ஹோட்டலில் மனோகர் தங்குவானோ… எங்கே தங்கி, பல்வேறு கம்பெனிகளிடம் பேச்சு நடத்தினானோ… அந்த மாதிரியான நட்சத்திர ஹோட்டலுக்கு, அந்த மனோகர் போகிறான். எந்த மாதிரி…!
எஸ்தருக்கு, கண்கள் கடலானது… கண்ணீர் அலையானது… நெஞ்சுக்குள் வெடித்த விம்மல், அந்தக் கடலுக்குக் குரலானது.