உள்ளடக்கத்துக்குச் செல்

பாலைப்புறா/அத்தியாயம் 34

விக்கிமூலம் இலிருந்து

ந்த விழிப்புணர்வு கொட்டகையும், சிறிது விழித்துப் பார்ப்பது போல் தோற்றம் காட்டியது. சாணித் தரை, சிமெண்ட் தளமானது. மண்ணும், கல்லுமாய் உள்ள சுவர்கள், ஆடைகளைப் போட்டுக் கொண்டன. கொட்டகைத் தளம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, இடையே ஒரு வாசல் வந்தது. முன் பாதி அறையில், பேனர்கள், சுவரொட்டிகள் போன்ற தட்டு முட்டுச் சாமான்கள்… பின் பாதி அறையில், பக்கவாட்டில் ஒன்றின் மேல் ஒன்றாய் வைக்கப்பட்ட பிளாஸ்டிக் நாற்காலிகள். இந்த அறையே, தேவைப்படும் போது, ஒரு ஆலோனைக் கூடமாகும்.

டாக்டர் அசோகன், எதிரே பிளாஸ்டிக் நாற்காலிகளில் உட்கார்ந்திருந்த சுமார் ஐம்பது பேருக்கு உபதேசம் செய்ய போனான். இதில் நாற்பது பேர் பெண்கள்; இந்த நாற்பதில், பதினைந்து பேர், சுமதியிடம் இருந்து கலைவாணியிடம் சேர்ந்த மனச்சாட்சிக்காரிகள்; பத்துப் பெண்கள், மத்திய அரசின் நேரு இளைஞர் மன்றத்தில் பகுதி நேர ஒருங்கிணைப்பாளர்களாய் பணியாற்றிவர்கள்; மாதம் எழுநூறு ரூபாய் சம்பளம் வாங்கியவர்கள்; இப்போது, சட்டப்படியான இரண்டாண்டு கால பதவிக்குப் பிறகு, மீண்டும் வேலையில்லாமல் போனவர்கள்; இவர்களை, கலைவாணிதான், இங்கே பிடித்துப் போட்டிருக்கிறாள்; மற்றும் பலர், சந்திராவின் துண்டுதலில், சந்தா செலுத்தியவர்கள். ஆண்கள்… அசோகனின் வார்ப்புகள்.

அசோகன், பக்கத்து நாற்காலியில் உட்கார்ந்தபடி, மேசையில் கையூன்றி, அதில் முகம் போட்டுக் கிடந்த கலைவாணியைப் பெருமிதமாய்ப் பார்த்து விட்டு, பேச்சைத் துவக்கினான். அநாவசியமான. ‘அவர்களே’ சொல்லாமல், நேரடியாய் விஷயத்துக்கு வந்தான்.

“நல்லது நினைப்பவர்களுக்கு நல்லதே நடக்கும்… அதே சமயம், நல்லது, கெட்டது மூலம் வரலாம்… கெட்டது நல்லது மூலமும் வரலாம்… டாக்டர் சந்திரா, நல்லது நினைத்தார். ஆனால் நடந்தது என்னமோ கெட்டது. சுமதி, கெட்டது நினைத்தாள். ஆனால், நல்லதே நடந்தது. இது போர் அடிக்கும் பேச்சுத்தான். ஆனாலும் உண்மை… நேர்மைக்கும், நெஞ்சில் உரத்திற்கும் வெற்றி கிட்டும் என்பதற்கு, கலைவாணியே எடுத்துக்காட்டு. கோவை தொழிலதிபர், தனிப்பட்ட முறையில் கொடுத்த ஐந்து லட்சம் ரூபாய் நன்கொடையை, இந்த அமைப்பிற்கு, நன்கொடையாய் கொடுத்து விட்டார். வழக்கமாய் எல்லோரும் செய்வது போல் செய்யாமல், இந்தப் பணத்தை நமது அமைப்பிற்கு சொத்தாக்கி, நமக்கும் உரிமை கொடுத்து விட்டார். தயவு செய்து, கை தட்ட வேண்டாம். கை தட்டித் தட்டியே, பேச்சாளர்களை வெறும் கைத்தட்டலுக்காக பேச வச்சிட்டோம். அவர்களும் ஜோக் அடித்து அடித்தே, கூட்டத்தை ஜோக்கிற்காகவே வர வைத்து விட்டார்கள். சரி விஷயத்துக்கு வாறேன்…”

“இந்த விழிப்புணர்வு, அமைப்பு ஒரு வித்தியாசமான அமைப்பு. எய்ட்ஸ் திருமணத்தை தடுப்பதே, இதன் பிரதான நோக்கம். இதனாலேயே, இதற்கு பல திசைகளில் இருந்தும் எதிரிகள் முளைப்பார்கள். நாம் அடிபட வேண்டியது வரும். பிடிபட வேண்டியதும் வரும். ஆனாலும், நமது நோக்கம் நல்லதாக இருப்பதால், நல்லதாகவே நடக்கும்… என்றாலும், நாம் குதிக்கிறதுக்கு முன்னால குனிந்து பார்க்கணும்.”

“டாக்டர்… அசோகன்! நீங்க இப்படியே பேசிட்டுப் போனால், நான் குனிந்து பார்க்காமலே, குதிக்க வேண்டியது வரும். என்ன இது? சப்ஜக்டுக்கு வராமல்…”

கலைவாணி மட்டும், கூட்டத்தின் சிரிப்பில் கலந்து கொள்ளவில்லை. களங்கமில்லாமல் சிரித்தவனைப் பார்த்தபடியே, சந்திராவைப் பார்த்தாள். இந்த டாக்டரம்மாவுக்கு, அசோக், எப்போ டாக்டர் அசோகன்.ஆனார்…?

அசோகன் தொடர்ந்தான்…

“நீங்கள்லாம் எய்ட்ஸ் நோயாளிகளோட பழகப் போறீங்க. அவர்களை எப்படி அணுகணும், எப்படிப் பழகணும் என்பதை என் அனுபவம் மூலம் சொல்கிறேன். முதலாவதாய், ஹெச்.ஐ.வி. வந்ததாய் தெரிஞ்சவங்க, அதை நம்ப மறுப்பாங்க. அப்புறம் அதிர்ச்சி அடைவாங்க… கோபப்படுவாங்க… நம் மேல் எரிஞ்சி விழுவாங்க. கோவில், குளங்களோட பேரம் பேசுவாங்க… இதைப் புரிந்து, அவர்களை அணுகணும். எடுத்த எடுப்பிலேயே, அவர்கள் கருத்தை தவறானது என்று, நிரூபிக்க முயற்சி செய்யப்படாது. இரண்டாவது கட்டமாய், இவங்க பயப்படுவாங்க… தனிமைப்படுவாங்க. தங்களை உதவாக்கரைன்னு தானாய் திட்டிக்குவாங்க. ஒரு சிலர், தனக்கு வநதது எல்லோருக்கும் வரட்டுமுன்னு நினைப்பாங்க; கலைவாணி மாதிரி, சென்னை சேகர் மாதிரி, ஒரு சிலர்தான் ‘எனக்கு வந்தது யாருக்கும் வரப்படாது’ன்னு நினைப்பாங்க, இந்த விதி விலக்குகளை விட்டு விட்டு, பொதுப்டையா பார்த்தால், ஹெச்.ஐ.வி. நோயாளிகள், தனிமைத் துயரில் தவிப்பார்கள். இவர்களை அன்பாய் அரவணைத்து ‘நீங்க மட்டும் தனியா இந்த நோயை வாங்கல. உங்களை மாதிரி லட்சக் கணக்கானவங்க, உலகம் முழுவதும் ஊர்,ஊராவும் இருக்காங்க’ன்னு சொல்லணும்…

“இளம் வயது நோயாளிகளை, வித்தியாசமாய் அணுகணும். மொதல்ல அவர்களை முழுமையாய் பேச விடுங்க. அவங்க பேசுறதை நீங்க உன்னிப்பாய் கவனிக்கிறதாய், அவர் கிட்ட ஒரு அபிப்ராயத்தை ஏற்படுத்துங்க. இதுக்கு பாவலா பலிக்காது. முழுமையான ஈடுபாடும், விசுவாசமுமே முக்கியம். இவங்களோட வார்த்தைகளை மட்டும் கேட்காமல், இவங்களோட வார்த்தைகளில் இழையோடும் உணர்வுகளை மதியுங்கள். உங்களை அவங்க கிட்ட புரிய வைக்கிறதுக்கு முன்னால், அவங்களப் புரிந்து கொள்ளுங்க, ஒரு ஹெச்.ஐ.வி. இளைஞன் திருமணம் செய்ய போவதாய் சொன்னால், முதலில் அவனது எதிர்கால மனைவிக்கு ஏற்படுகிற கஷ்ட, நஷ்டங்களை அடக்கி வாசித்து, அவனுக்கும், அவன் சந்ததிக்கும் ஏற்படப் போகிற அபாயத்தை எடுத்துச் சொல்லுங்க. பிள்ளை, பிறந்த உடனே இறக்கணுமா…? மனைவி ஓடிப் போகணுமான்னு கேளுங்க. இதையும் அவன் கேட்காவிட்டால், அவனை எச்சரியுங்க. இந்த எச்சரிக்கையை செயல்படுத்த, இருக்கவே இருக்குது… நம் அமைப்பு…”

“கடைசியாய்… ஹெச்.ஐ.வி. முற்றின எய்ட்ஸ் நோயாளியை மரணத்திற்கு தயாராக்குங்க. மரணத்தை எதிர் நோக்கி, சொத்து, பத்து, குழந்தை, குடும்பம் போன்றவற்றை செட்டில் செய்யச் சொல்லுங்க. ஒரு எய்ட்ஸ் நோயாளியோட அவஸ்தைக்கு, மரணம் முற்றுப் புள்ளி வைக்கும் என்று சொல்லுங்க. கடைசிக் கட்டத்தில, கை கால் விழுந்தோ, ரத்தமாய் வாந்தியெடுத்தோ, குணப்படுத்த முடியாத சயரோகத்தில் தவித்தோ, கொப்புளம், கொப்புளமாய் வெடித்தோ… துள்ளத் துடிக்கக் கிடக்கிற எய்ட்ஸ் நோயாளிகளை, என்னோட மன்னிக்கவும், நம்மோட மருத்துவ மனைக்கு கொண்டு வாங்க…”

அசோகன், பேசிக் கொண்டே போனான். பேசி முடித்து விட்டுப் பார்த்தால், கலைவாணியை காணவில்லை. அது, அவனுக்குப் பெரிதாகவும் தெரியவில்லை. பேச்சுக்கு பிறகு, கேட்கப்பட்ட சில சந்தேகங்களுக்கு சந்திராவையே விளக்கமளிக்கச் சொன்னான்…

ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும், சந்திரா அந்தப் பெண்களோடு பேசிக் கொண்டிருந்தாள். அசோகன், அலுவலக அறைக்குள் போனான். அங்கே-

கலைவாணி, நாற்காலியில் உட்கார்ந்தபடி மேசையில் குப்புறக் கிடந்தாள். இரண்டு கரங்களும் மேசையில் வியாபித்துக் கிடந்தன. அந்த மேசையில், அவள் முகம் பதிந்த இரு பக்கமும் ஈரம்… அவள் முதுகு குலுங்கியது… தோள்கள் ஆடின.

அசோகன், அவள் தலையைத் தொட்டு, ‘கலைம்மா’ என்றான். அப்படியும் நிமிராதவளை, முகம் பிடித்துத் தூக்கினான். கண்கள், ரத்தக் கட்டிகளைக் காட்டின. முகம் கழுவப்பட்டு, துவட்டப்படாத ஈரக் கசிவோடு இருந்தது. உதடுகள் பிதுங்கின.

“கலைம்மா…”

கலைவாணி, அசோகனை, நிமிர்ந்து பார்த்தாள். அவன் கையைப் பிடித்துக் கொண்டு விம்மினாள்.

“முப்பது வயதுக்குள்ளே… முடியப் போகிற நான்… கடைசி நேரத்தில என்ன பாடுபடப் போறனோ… என்னை இப்பவே மரணத்துக்கு ஆயத்தப்படுத்துங்க டாக்டரய்யா…! கடைசி நேரம் வரைக்கும் என்னை விட்டுப் பிரியாமல், நீங்களும், சந்திராக்காவும் என்னை வழியனுப்பி வைக்கணும் டாக்டரய்யா…”

வாசல் பக்கம் நின்ற சந்திரா ஓடி வந்து, கலைவாணி மேல் சரிந்தாள்; அசோகனைச் சாடினாள்.

“இதுக்குத்தான் கலைவாணி… கிட்டே எய்ட்ஸ் வார்டை காட்டா தீங்கன்னு கரடியாய் கத்தினேன்…”

அசோகன், சந்திரா பேச்சைக் காதில் வாங்காதது போல், கலைவாணிக்கு ஆறுதல் சொன்னான்…

“என்ன கலைம்மா… குழந்தை மாதிரி நீ அழப்படாது. வழிகாட்டிகள் அழுதால், அப்புறம் வழியே அடைபட்டுடுமே. அழாதம்மா…. நீ வாழப் பிறக்கல்லன்னாலும், மற்றவங்களை வாழ வைக்கப் பிறந்தவம்மா! ராமலிங்க சுவாமியும், ஆதிசங்கரரும், விவேகானந்தரும், முத்துக்குட்டி சுவாமியும் சின்ன வயதிலேதான் இறந்தாங்க. இந்த மகான்கள் எவ்வளவு பெரிய பாரம்பரியத்தை, விட்டுட்டுப் போயிருக்காங்க… மரணம், எப்போது வருமுன்னு முன் கூட்டியே தெரிந்து வைத்த, இந்த மகான்கள் மரணத்தைப் பற்றி கவலைப்பட்டிருந்தால், நம் பாரம்பரியம் என்ன ஆகியிருக்கும்?”

“ஆமாம்… கலை… டாக்டர் அசோகன் சொன்னது மாதிரி… நீ மரணத்தைப் பார்த்து, அதுக்கு அடைக்கலம் கொடுக்கிற பெருமிதத்தில் சிரிக்கணும். பொதுவாய், எல்லோரும், ஒவ்வொரு நாளாய் சாகும் போது, நீ ஒவ்வொரு வினாடியாய் வாழ்ந்து காட்டணும்… அதோட, பத்து ஆண்டுகளுக்குப் பிறகு வருவதைப் பற்றி இப்போ ஏன் நினைக்கே?… அதுக்குள்ளே, எய்ட்ஸ்க்கு மருந்து, மாத்திரை கண்டு பிடித்து விடலாம். இப்பவே ஆராய்ச்சி பலமாய் நடக்குது.”

“சந்திரா, கலைக்கு பிகாசில் கொடுத்தியா…?”

அந்த அலுவலக பீரோவைத் திறந்து, ஒரு காகிதக் கவரில் இருந்த மாத்திரையை எடுத்து, சந்திராவே, கலைவாணிக்கு ஊட்டுவது போல், அவள் வாயில் போட்டாள். பிறகு, மேசையில் நீரோடு நின்ற டம்ளரை, அவள் வாய் ஓரம் வைத்தாள்.

கலைவாணி, அவர்களைப் பார்த்து சங்கடமாய் சிரித்தாள். பிறகு “ரொம்பத்தான் லூட்டி அடிச்சிட்டேன்” என்றாள் தலை கவிழ்ந்து. உடனே சந்திரா, அவள் கவிழ்ந்த தலையை நிமிர்த்தி “செயலாளரம்மா… இனி மேல், நீங்க. அழப்படாது” என்றாள் படபடப்பான புன்னகையோடு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பாலைப்புறா/அத்தியாயம்_34&oldid=1641720" இலிருந்து மீள்விக்கப்பட்டது