உள்ளடக்கத்துக்குச் செல்

பாலைப்புறா/அத்தியாயம் 8

விக்கிமூலம் இலிருந்து


பொன் வைக்க வேண்டிய இடத்தில் பூ வைக்காமல், பூ வைக்க வேண்டிய இடத்தில் கூட பொன் வைக்கப்பட்டிருந்தது.

மணமேடையில் மனோகரோடு, நாற்காலியில் உட்கார்ந்திருந்த கலைவாணியும், அவளது நகை நட்டுக்களும் ஒன்றை ஒன்று பிரகாசப்படுத்தின. கழுத்தில் எலும்பு முக்கோணத்தை மறைக்கும் வைர நெக்லஸ். அதற்குக் கீழேயும், பக்கவாட்டிலும், படர்ந்த காசுமாலை… ஒரு ஜோசியர் அவள் ராசிப்படி தேர்ந்தெடுத்த ஊதாக் கல்… இந்த தோட்டோடு தலை முடியில் ஏறிய ‘நோட்டலு’… உச்சி முதல் பிடரி வரை எடுக்கப்பட்ட வகிட்டை மறைக்கும் கங்கு… கவுண் கம்பு போன்ற கை வளை… மூக்கை அடைக்கும் வைர மூக்குத்தி… மார்பகம் மறைக்கும் ஆரம்… அகலப்பட்ட சங்கிலிகள்… ஆக மொத்தத்தில், அத்தனையும் அரை கிலோவிற்கு மேலே போகலாம்… மாமனார் தவசி முத்தை அழ வைத்த மாப்பிள்ளை வீட்டாரின் பதினைந்தாயிரம் ரூபாய்க்கும் அதிகமான அகலப் பட்டை ஜரிகைப் பட்டு… ஒவ்வொரு இழையிலும் ஊடுருவிய ஜரிகை… மனோகரையும் சும்மா சொல்லப்படாது. பெரிய இடத்து வழக்கப்படி, சூட்டும் கோட்டுமாய் நாற்காலியில் உட்கார்ந்திருந்தான். பெண்ணின் அண்ணன் கமலநாதன் எதிர்மாலையாய் போட்ட எட்டு பவுன் சங்கிலி டாலடித்தது. அத்தான் மோகன்ராம் போட்ட தங்கக் கடிகாரச் செயின்… ஒளியடித்தது.

கலைவாணியை, வாடாப்பூ, தேனம்மா வகையறாக்கள் மொய்த்து நின்றன. ஆனந்தியைத்தான் காணவில்லை. ஏழைப் புடவையாலும், எவளும் போடாத பாம்படத்தாலும் சங்கடப்பட்டு வெளியேறப் போன கனகம்மாவை, கலைவாணி, கையோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். சு. சமுத்திரம் 81

கலைவாணியின் பக்கத்தில் பெண்ணுக்குத் தோழியாய் குழலாமொழி என்று அழைக்கப்படும் அவளது அண்ணி குழல்வாய் மொழி... சந்தடிச் சாக்கில் பலராமனிடம் வலிய வலியப் பேசும் மீரா...

இந்த மேடைவாசிகளின் எதிர்ப்புறம் முன் வரிசையில் போடப் பட்ட மெத்தையிட்ட நாற்காலிகளில், போலீஸ் இன்ஸ்பெக்டர். தாசில்தார்... வட்டார வளர்ச்சி அதிகாரி... நேரு மைய ஒருங்கிணைப்பாளர்... மத்திய அரசின் செய்தி விளம்பர அதிகாரி முதலியோர் இவர்களுக்கு அடுத்த வரிசையில் டாக்டர் முஸ்தபா, டாக்டர் சந்திரா, சுகாதாரப் பார்வையாளர் சுலேகா... போலீஸ் இன்ஸ்பெக்டரும், தாசில்தாரும், டாக்டர்களும், மோகன்ராம் உபயம்... எஞ்சிய வி.ஐ.பி.க்கள் கலைவாணிக்காக வந்தவர்கள்; இதற்கு பக்கத்து வரிசையில் சென்னையில் இருந்து, மெனக்கெட்டு 'சார்ட்டட்’ பேருந்தில் வந்த மனோகரின் சகாக்கள்... கண்ணைக் கூசும் பெல் பாட்டங்களாகவும் ஸ்போர்ட்பேண்டுகளாகவும் இருந்தார்கள்.

கலைவாணியின் பெற்றோரான சுப்பையாவும், சீனியம்மாவும், மகளை அள்ளிப் பருகிக் கொண்டிருந்தார்கள். 'சுகந்தானே’ என்பது போல் நேயம் காட்டும் கண்கள்; சிரிக்கப் போவதுபோல், ஒரு இழையின் இடைவெளி கொண்ட உதடுகள்... தங்கத்தகட்டை உருட்டியது போன்ற மேனி... பூவரசுப் பூவின் உட்காம்பின் நிறம் - இவர்கள், இப்படி மகளை விழுங்கிக் கொண்டிருந்த போது, மாப்பிள்ளையின் பெற்றோரான தவசிமுத்துவுக்கும், மனைவி சீதாலட்சுமிக்கும் அங்கேயும் சண்டை... கல்யாண வீட்டிலேயே, சாப்பாடு போடுவதால் மணமக்களோடு மாப்பிள்ளை வீட்டுக்கு வரும் ஊரார்க்கு ஒரு காபி மட்டும் கொடுத்தால் போதும் என்பதில் இருவருக்கும் சம்மதமே... ஆனால் அதில் சர்க்கரை போட வேண்டும் என்கிறாள் சீதாலட்சுமி. கருப்பட்டி போதும் என்கிறார் தவசிமுத்து.

மனோகரின் மச்சான் மோகன்ராம், மாமனார் தவசிமுத்து வாங்கிக் கொடுத்த நரைத்த வேட்டியையும், ‘ரெடிமேட்' சட்டையையும், பெண்டாட்டி மேல் எறிந்துவிட்டு, ஒரு மாறுதலுக்காக, பட்டு ஜிப்பாவோடும், ஜரிகை வேட்டியோடும் அங்கும் இங்குமாய் சுற்றினார்... அவரது கண்கள் அவ்வப்போது டாக்டர் சந்திராவை நோட்டமிட்டன. சில சமயம் நேருக்கு நேராய்ப் பார்த்து எச்சரிப்பது போல் உருண்டன. சினிமாக்களில் தாலி கட்டும் நேரத்தில், தலைகால் புரியாமல் நடக்குதே, அப்படி அவள், வீரவசனம் பேசி கல்யாணத்தை நிறுத்திவிடக் கூடாதே என்கிற முன்னெச்சரிக்கை...

கலைவாணியும், மனோகரும், முகம் தெரிந்த முதல் மூன்று வரிசைக்காரர்களையும், அடிக்கடி பார்த்து சிரித்துக் கொண்டார்கள். 82 பாலைப்புறா

சந்திராவின் முகம் படும்போது மட்டும், மனோகரின் முகத்திற்கு வலிப்பு வந்தது.

அதே சமயம், முன்னால் இடம் கிடைக்காமலும், பின்னால் போய் உட்கார மனமில்லாமலும் நின்ற நாட்டு வைத்தியர் பேச்சிமுத்துவைச் சுட்டிக்காட்டி, மனோகர், பலராமனிடம் சொல்ல, அவன் கீழே இறங்கி, அவரை கைக்குட்டை கிடந்த நாற்காலியில் உட்காரவைத்தான்; இந்தப் பிரிவினை கூட ஊழ்வினையாக நினைத்து, மேடையில் நின்ற மீரா துடிதுடித்துப் போனாள்.

கிட்டத்தட்ட அனைவருமே, மணமக்களை, அரைகுறை நிர்வாணமாக்கி ஜோடி சேர்த்தபோது, கடைக்கோடி வரிசையில் ஒரு தத்துவ விசாரம்... வி.ஐ.பி.யாகக் கருதி கொண்டு முன் வரிசைக்குப் போன வெளியூர் சொந்தம் ஒன்றை, பின்னுக்கு அனுப்பி விட்டார்கள். இதனால் ஐபி கொடுத்தவர் போலான அந்த வெளியூர் வி.ஐ.பி. பக்கத்து இருக்கைக்காரரிடம், தனக்கு நேர்ந்ததை, அவருக்கு வந்ததுபோல் சொன்னார்.

"ஒருத்தருக்கு... இன்னொருத்தர் எவ்வளவு மரியாதை வச்சிருக்காங்க என்கிறது, இந்த மாதிரி பொது இடத்துலதான் துலங்குமுன்னு ஒமக்குத் தெரியுமா...? நம்ம வீட்டுக்கு, கல்யாண நோட்டீஸ் கொண்டு வரும்போது நாம கலந்துக்காட்டால், கல்யாணமே நடக்காது என்பது மாதிரி பேசுவாங்க. ஆனால், வந்த பிறகுதான் தெரியும்; ஒம்மப் பார்த்துட்டு தலையக் கூட ஒப்புக்கு ஆட்டமாட்டாங்க. இதனால்தான் தராசும் படியும் ஊர்லன்னான்... இதுதான் உலக நடப்பு... புரியுதாவே!”

“எப்படி புரியாம இருக்கும்? ஒம்மைப் பார்த்துட்டு, உடனடியாய் கையப்பிடிச்சு கூட்டிட்டுப் போன கலைவாணியின் அண்ணன்- கமலநாதன், இன்ஸ்பெக்டரை ... பார்த்ததும் ஒம்ம அப்படியே விட்டுட்டு, போலீஸ் அதிகாரியைப் பார்த்து ஓட மட்டுமா செய்தாரு.. முன் நாற்காலியில் உட்கார்ந்த ஒம்மை எழுந்திருக்கச் சொல்லி, இன்ஸ்பெக்டரை உட்காரச் சொன்னாரே... நானும் பார்த்தேன்!”

‘இவ்வளவுக்கும் கமலநாதன்... என் அண்ணன் மருமகன்’

‘அண்ணன் ஏதடா... தம்பி ஏதடா.. அவசரமான உலகத்திலே... கண்ணதாசன் வாயில் சர்க்கரை போடணும். அப்போக்கூட, தவசிமுத்து உப்பு போதும்பார்.’

எல்லாமே, அவசர அவசரமாய் இயங்கிக் கொண்டிருந்தன. முக்கனிகளில் மூன்றாவது கனியான பலாவிற்குப் பதிலாக ஆப்பிளையும், சு. சமுத்திரம் 83

மத்தியில் தேங்காயையும், அதற்கு மேல், பூக்குவியலில் வைக்கப்பட்ட பதினைந்து பவுன் தாலிக் கொடியையும் சுமந்த தாம்பாளம் கூட்டத்தினரிடம் சுற்றுலாவாய்ப் போனபோது, எல்லோருமே அதை தொட்டு, கண்களில் ஒற்றி மனமார வாழ்த்தினார்கள். ஆனாலும் இளவட்டங்களிடம் ஒரு கருத்துப் பரிமாற்றம். சைட் அடிக்க முடியாத சமயத்தில்தான்...

"வீடியோக்காரங்களை காணோமே!”

‘வராம இருக்கிறதே மேலு... நம்ம பொண்ணுகளை மறைப்பான். முடியுமுன்னால் முறைப்பான்.... தாலி கட்டுன பிறகும் ஒன்ஸ்மோர் கேட்பான்’

கலைவாணி, மீண்டும் ஒரு தடவை, டாக்டர் சந்திராவைப் பார்த்து, சாப்பிட்டு விட்டுப் போக வேண்டும் என்பது போல், வலது கையை வாய் வரைக்கும் கொண்டு போய், தனக்குத் தானே ஊட்டிக் கொள்வது போல் சமிக்ஞை செய்தாள். டாக்டர் சந்திரா மறுபுறமாய்த் திரும்பி, முகத்தை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டாள். அந்த ஈரத்துணியால் முகம் கழுவி தேய்த்தாள். எல்லோரும். அந்த மணமக்களை, சினிமா பார்ப்பது போல், பார்த்த போது, இவள் மட்டும், அவர்களை சதை நீக்கி, எலும்புக் கூடுகளாகப் பார்த்தாள். அவள் தலைக்கு மேல் கத்தி... கலைவாணியின் தலைக்கு மேல் வெள்ளம்...இனிமேல் அவளால் ஆகக்கூடியது ஏதுமில்லை.

திடீரென்று ‘புரோகிதரான' நாவிதர் கையாட்ட, மேளம் உச்சக் குரலில் ஒலிக்க, கனகம்மாவின் தலைமையில் பழைய தாய்க்குலம் குலவையிட, புதிய மகளிர் கைதட்ட, மனோகர், அந்தத் தங்கத்தாலியை கலைவாணியின் தலைவழியாக, கழுத்தில் போடப் போனான். கடைசி நேர உச்சக்கட்டமாக டாக்டர் சந்திரா கத்திவிடக் கூடாதே என்ற பயத்தோடு, கலைவாணியைப் பார்ப்பதற்குப் பதிலாய், சந்திராவையே கிலி பிடித்துப் பார்த்தான். அந்தத் தங்கத்தாலி, அவள் மூக்குத்தியை இழுத்து, இழுத்து தோட்டலைச்சாடி, கழுத்திற்குப் போனது. லிங்க உருவம் பொறித்த அந்த டாலர் செயின், கழுத்தைச் சுற்றியபோது, கலைவாணியின் மூக்கிலும், உதட்டிலும், காதுகளிலும் ரத்தத் துளிகள்; ஆனாலும் மணமகள், அதையும் மீறி மேடை கீழே விழப்போவது போல் நின்ற இயக்கப் பெண்களைப் பார்த்து நாணத்தோடு சிரித்தாள். அவள் மூக்கைத் துடைக்கப் போன குழல்வாய்மொழி, நீட்டிய கையை எடுத்துக் கொண்டாள். ரத்தம் தானாக உறையட்டும்... துடைத்தால் பொலபொலன்னு கொட்டும்.கூட்டத்தினர் வரிசையாக எழுந்து நின்றனர். சிறுவர் சிறுமியர் மாடியில் போடப்பட்ட வாழை இலைகளுக்கு முண்டியடித்தனர். இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 84 பாலைப்புறா

அத்தனை புள்ளிகளும், பரிசு கொடுக்காமலே, மேடைக்குப் போய், மணமக்களை வாழ்த்திவிட்டு இறங்கினார்கள். ஆனால், டாக்டர் சந்திரா மட்டும்... கையோடு கொண்டு வந்த ஒரு பார்சலை, அவர்களிடம் பொதுப்படையாய் நீட்டினாள், பேசியபடியே கொடுத்தாள்.

"இதைப் பெட்ரூம்ல, போய் பிரிச்சுப்பாருங்க... அங்கேதான் பிரிக்கணும். ஒரு பரிகாரம்”.

மேடை ஏறிவிட்டு, கீழே நின்ற டாக்டர் முஸ்தபா, சந்திராவைக் கையாட்டிக் கூப்பிட்டார். அவளும், அவருக்குக் கட்டுப்பட்டவள் போல் பெட்டிப்பாம்பாய்க் கீழே இறங்கினாள். இதற்குள் சுற்றமும் நட்பும் பரிசுகளோடும், பணச் கவர்களோடும் மேடை ஏறினார்கள். பொதுவாக கிராமத்துக் கல்யாணங்களில், பெண்ணுக்குக் கொடுக்கப்படும் பணக்கவர்கள், அவளுடைய பிறந்த வீட்டிற்கும், மாப்பிள்ளைக்குக் கொடுக்கப்படுபவை அவன் வீட்டுக்கும் போகும். இந்த ஊர்விதிக்கு விலக்காய், தவசிமுத்து, மருமகள் பக்கமாய் முண்டியடித்துப் போய், கலைவாணியிடம் நீட்டிய பார்சல்களையும், கவர்களையும், வெடுக் வெடுக்கென்று பிடுங்கினார். மனைவி சீதாலட்சுமி, மகன் பக்கம் நின்று கொண்டு, அவனிடம் நீட்டப்பட்டதை வாங்கி வாங்கி, மனதுக்குள்ளே எண்ணி எண்ணி, மோகன்ராம் மனைவியும் பெரிய மகளுமான 'ஆந்தைக் கண்ணி' சகுந்தலாவிடம் 'பத்திரம் பத்திரம்’ என்றபடியே கொடுத்தாள். இதைப் பார்த்துவிட்டு, கணவரிடம், சீனியம்மா கிசுகிசுத்தபோது, அவரோ "‘ஆசைக்கு வெட்கமில்ல’ என்கிற பழமொழி சும்மாவா வந்திருக்கும்... விட்டுத் தள்ளு. மாப்பிள்ளை முகத்துக்காக கொடுத்தோம்... கையில் எட்டாயிரம் ரூபாய்... இந்தியா முழுசும் ஏரோப்பிளேன்ல சுத்துறது...இதை மாதிரி வேலை... இந்த வயசுல யாருக்கும் கிடைக்காது" என்றார். உடனே சீனியம்மா ‘அப்போ நம்ம ஆசைக்கும் வெட்கமில்லாமப் போயிட்டு, தராதரம் தெரியாதவங்களை... சம்பந்தி ஆக்கிட்டோம்... இங்க பாருங்க... ஊர் ஜனமே சிரிக்கு என்றாள்; சுப்பையா, மனைவியின் முதுகைத் தட்டிக் கொடுத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பாலைப்புறா/அத்தியாயம்_8&oldid=1639228" இலிருந்து மீள்விக்கப்பட்டது